வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Saturday, July 27, 2013

ஏன் இந்த ஆரிய திராவிட, இந்து இசுலாம், தலீத் சாதி இந்து அரசியல்?


நம்மில் பல பிரிவுகளை உண்டாக்கி நம்மை நாம் அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது கூட தெரியாத தலைவர்களையும் மக்களையும் எண்ணி எமக்கு வேதனையே மிஞ்சுகிறது.

ஆரிய  -திராவிட அரசியல் செய்து  பிராமணர்களின் மனதை புண்ணாக்கி விட்டோம், இன்றும் இது தொடர்கிறது .

இந்து- இசுலாம் அரசியல் செய்து இந்தியாவை உடைத்து விட்டோம், இப்பொழுது இது வேறு உருவம் எடுக்கின்றது.இந்து இசுலாம் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்து விட்டோம்.

தலீத் -சாதி இந்து அரசியல் செய்து இப்பொழுது இரு சமுதாயத்தினர் மனதிலும்  புண்ணை விதைக்கின்றோம்.

அடுத்து என்ன செய்யலாம்?
கவுண்டர்-உடையார் -படையாட்சி-கள்ளர்-மறவர்-தேவர்-பிள்ளை அரசியல் செய்வோமா?
தேவேந்திர குல வேளாளர்-பள்ளர்- பறையர்-அருந்ததியர் அரசியல் செய்வோமா?
சொல்லுங்கள் என் சொந்தங்களே எந்த மாதிரி அரசியல் அடுத்தது நாம் செய்யலாம்?
நம்மை நாமே அழித்துக்கொள்வோம் வாருங்கள்.

நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா?
ஒன்று: ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  ஒட்டு மொத்த சமுதாயத்தையும் நாம் தவறாக பார்க்கிறோம்.

இரண்டு:ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  அச்சமூகத்தை சார்ந்த பலரும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.

இதை மாற்றி மாற்றி நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
இது ஒரு கொடிய குற்றம். இதுவே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.
எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்  என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.


ஜாதி,மதங்கள் இருக்கும் வரை அதனால் நமக்கு பிரச்சனை இருக்கும்.
கேட்டால்  என் ஜாதிக்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள். 
என் மதத்திற்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள்.

இன்று ஜாதியை ஒழிக்கிறேன் பேர்வழிகள் சில மதங்களை ஆதரித்தும் சில மதங்களை எதிர்த்துமே செயல்படுகிறார்கள்.

ஜாதிக்கொரு சுடுகாட்டை எதிர்க்க தெரிந்தவர்களுக்கு மதத்திற்கு ஒரு சுடுகாடு ஏன்? என்ற பகுத்தறிவு கேள்வி எழாமல் போனது ஏன்?

ஜாதி கலப்பு திருமணம் பற்றி பேசுபவர்கள், மதங்களுக்குள் கலப்பு மணம் பற்றி பேச மறுப்பது ஏன்?

ஜாதியை விட மிகவும் கொடுமையான மதத்தை இவர்கள் எப்படி ஆதரிக்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.

ஜாதியை விட மதம் பன்மடங்கு கொடுமையானது என்ற தொலை நோக்கு பார்வை நம்மிடம் இல்லை .காரல் மார்க்ஸ் பெயரால் கட்சி  நடுத்துபவர்களுக்கு கூட இது தெரியாமல் போன மாயம் என்ன?

ஜாதியையும் மதத்தையும் ஒழிப்போம் என்று கூற இங்கே எந்த தலைவருக்கும் மனதில்லை. ஏன் என்றால் அப்படி கூறினால் அரசியல் செய்யமுடியாதே.

ஜாதியையும் மதத்தையும் காட்டாமல் இட ஒதுக்கீட்டிற்கு சரியான முறையை கண்டுபிடிக்க வேண்டும்.முடியாததில்லை... முயற்சிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு ஜாதி,மத  மக்களுக்காகவும் போராட நினைக்கும் தலைவர்களின்  எண்ணம் நல்லதுதான். ஆனால் ஒரு ஜாதி,மத  மக்கள் நலுனுக்கான போராட்டத்தில் பிற ஜாதி,மத மக்களை நாம் எதிரியாக்கி விடுகிறோம்  
என்பதை இவர்கள் மறந்துவிடக்  கூடாது.

நம் சமுதாய நலனும் பேண வேண்டும் அதை பிற   சமூதாயத்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களையும் இதில் ஈடுபடுத்தி செயலாற்ற வேண்டும். இது முடியாததல்ல முடியும்.

இதைவிட சிறப்பான வழி அனைவரயும் மனிதனாக பார்ப்பதுதான்.
மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர ஒருவனது ஜாதி மதத்தை பார்க்க கூடாது என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும்.என் ஜாதி,என் இனம்,என் மதம் என்று பாராமல் அனைவரயும் மக்கள் என்ற பொதுப் பார்வையில் பார்த்து  திட்டங்களை நாம் வகுக்க வேண்டும,.  ஜாதி மதங்கள்  இருந்ததற்கான தடம் கூட தெரியாமல்  இவற்றை அழித்தொழிக்க வேண்டும்.

ஜாதியை நேசிப்பவர்களும்,மதத்தை நேசிப்பவர்களும்,அறியாமையில் இருப்பவர்களும்  இதற்க்கு முட்டு கட்டை போடுவார்கள் தான். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.புரிதலே மனிதத்தின் ஆணிவேர்.

எல்லா ஜாதி மதங்களிலும் ஏழைகளும் உள்ளனர் பணக்காரர்களும் உள்ளனர். எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்.  அனைத்து ஜாதி மத ஏழை மக்களுக்காகவும் நாம் பாடுபடவேண்டும்.அனைத்து ஜாதி மத நல்லவர்களையும் நாம் கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.கெட்டவர்களை சீர்திருத்த வேண்டும்.  இதை செய்தால் இந்தியா,உலகம்  அமைதியாக இருக்கும் இல்லையேல்.................

9 comments:

 1. மதத்தை ஒழிக்க ஒரே வழி மத அடிப்படையிலான எந்த பாகுபாட்டையும் ஆதரிக்க கூடாது, மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடயம், அதனால் மத அடையாளம், மத அடிப்படையிலான கட்சிகள், மத அடிப்படையிலான சலுகைகள் எவற்றையும் எந்த மதத்துக்கும் அளிக்கக் கூடாது. மத அடிப்படையிலான கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை எந்த மத அடிப்படையிலான தேவைகளுக்கும் ஒதுக்கக் கூடாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வியாசன்,
   சரியாக சொன்னீர்கள்.
   மனிதம் இருந்தால் மதங்கள் இருக்கலாம் தவறில்லை . ஆனால் மனிதம் இல்லாத சமுதாயத்தில் மதங்கள் மக்களை கொன்று குவிக்கும் என்பதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 2. சகோ மணி
  நலமா?. நல்ல பதிவு.

  சாதி,மதம்,இனம் சார்ந்த முரண்கள்தான் வரலாற்றில் போர்கள்,கலவரங்கள் என அழைக்கப் படுகின்றன.

  ஒரு நாட்டின் பொருளாதார சிக்கலைத் தீர்க்க அண்டை நாட்டின் மீது படை எடுத்து கொள்ளை அடித்து ,அப்பொருள் கொண்டு தன் மக்களுக்கு நலனும், கோயிலும் கட்டியவர்களே சிறந்த அரசர்களாக ,மத த்லைவர்களாக அறியப் படுகிறார்கள்.

  இவை சாதி,மதம்,இனம் சார் முரண் போல் வெளீப்படையாக தெரிந்தாலும் உண்மையான காரணம் இயற்கை வளங்கள் சார்ந்த வாழ்வாதாரத்திற்கான போட்டியே.

  இந்தப் போட்டியில் முதன்மை பெற சில ஆதிக்க வாதிகளால் எழுதப்ப்ட்டவையே மத புத்தகங்கள்.

  வலிய மதம்[இனம்], பிற மத[இன]ங்களை ஒழித்தலும் பல மதப் புத்தகங்களில் நியாயம் என வலியுறுத்தப் படுகிறது.

  1.ஆகவே மத புத்தகங்கள் ஒழிய வேண்டும்.இல்லையேல் விளக்கம் நாகரிகமான விள்க்கம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

  2. மக்கள் தொகைக் கட்டுப்படுத்தப் பட வேண்டும். ஒரு மனைவி, இருகுழைந்தைகள் மட்டுமே.

  3. தனி மனித சொத்துடமைக்கு எல்லை வேண்டும். விவசாயம் சார் பொருளாதாரம் ,ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு மட்டுமே,18 வயதுக்கு மேலான ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்ச மாத வருமானம் கிடைக்கும் வேலை,அதிக பட்ச வருமான வரம்பு போன்றவை பலன் தரும்.

  ஆனால் இவை அனைத்தும் மூன்றாம் உலகப் போரின் பின்பே சாத்தியம்.

  அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆபிரஹாம் லிங்கன் பெற்ற வெற்றியால்
  அடிமை முறை ஒழிந்தது.

  இரண்டாம் உலக்ப் போரின் முடிவில்தான் பல நாடுகளுக்கு சுதந்திரம்.

  அதே வகையில்
  மூன்றாம் உலகப் போரின் முடிவில்தான் அனைவருக்கும் வாழ்வாதார தீர்வு!!!

  புயலுக்கு பின்னே அமைதி இதுவே உலக நியதி ஆகும்!!

  நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ,
   நலம்.உங்கள் ஆன்மா பதிவு அருமை. அதன் தேடலில் அவப்போது நானும்,அதனால் தான் அதற்கு இன்னும் என் கருத்தை பதியவில்லை.

   உண்மையில் அன்றைய சூழலை விட நாம் இன்று நல்ல நிலையில் உள்ளோம்.
   வரலாற்றை உற்றுப்பார்த்தால் சில விடயங்கள் நடந்தது நன்மைக்கே என்று தோன்றுகிறது.

   உங்கள் சட்டங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றத்திற்கு உள்ளானால் பிரச்சனை இலலை. மாற்றத்திற்கு உள்ளாக மதவாதிகள் விரும்புவதில்லை என்பதாலேயே இன்று பல பிரச்சனைகள்.

   இன்று ஓர் உலகப்போர் வந்தால் மனித குலத்தில் ஒரு சதவீதம் கூட பிழைக்க முடியாது.
   மூன்றாம் உலகப்போருக்கு மதங்கள் தான் வழிவகுக்கும் என நினைக்கின்றேன்.
   அது நிகழாமல் தடுக்க நாம் மக்களுக்கு மனிதத்தை புரிய வைக்க வேண்டும்.எந்த வேதமும் இறை வேதம் இல்லை என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 3. //மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர ஒருவனது ஜாதி மதத்தை பார்க்க கூடாது என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும்.என் ஜாதி என் இனம் என் மதம் என்று பாராமல் அனைவரயும் மக்கள் என்ற பொதுப் பார்வையில் பார்த்து திட்டங்களை நாம் வகுக்க வேண்டும்//
  உண்மை தான் நண்பர் புரச்சிமணி. ஆனால் என்ன நடைபெறுகிறது. ம.க.இ.க என்ற வினவு புரச்சி?! கூட அரபு ஆக்கரமிப்பு நம்பிக்கைகள், முயற்சிகளுக்கு எந்த பாதிப்பும் வராம, அவர்கள் மனம் நொந்துவிடாம பெரும்பான்மை மக்களுக்கு எப்படி எல்லாம் ஆப்படிக்லாம் என்றே முயற்சிக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வேகநரி,

   ஒற்றை பகுத்தறிவாளர்களுக்கு அவர்கள் பரவாயில்லை என்றாலும் பிற மதங்களை அவர்கள் மென்மையாகவே விமர்சிக்கிறார்கள் என்பது உண்மைதான். இதற்க்கு காரணம் அவர்கள் அறியாமையாக கூட இருக்கலாம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 4. மதமில்லாத உலகம் சாத்தியமா என்று தெரியவில்லை.ஆனால் மதங்களை நெற்றியிலும் கழுத்திலும் அணிந்து கொள்ளாமல் மனதில் மட்டும் வைத்துக் கொண்டால் பல வன்முறைப் பாதைகள் அடைக்கப்பட்டுவிடும்.

  ReplyDelete
 5. வாங்க காரிகன்,

  மதங்களை விட மனிதமே முக்கியம் என்ற புரிதலே இந்த பிரச்னையை தீர்க்கும் என நினைக்கின்றேன் .

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 6. சலுகைகள் இருக்கும் வரை சாதிஒழியாது சாதிவாரியாக கணக்கெடுப்பது மீண்டும் ஒருமுறை சாதியத்தை தினிப்பதற்குத்தான்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...