எந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்பதை ஒரு குட்டிக் கதையின் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்.இந்த கதையை எங்கோ எப்பொழுதோ படித்தது. அதை இங்கு பயன்படுத்துகிறேன். அந்தக் கதையை எழுதியவருக்கு நன்றி.
ஒரு நாள் மனிதனின் உறுப்புகளுக்குள் சண்டை வந்தது. யார் உயர்ந்தவன் என்பதே அந்த சண்டை.
இதயம்- நான் துடிப்பதை நிறுத்தி விட்டால் மனிதன் இறந்துவிடுவான் எனவே நானே உயர்ந்தவன் என்றது.
மூளை - நானே பல உறுப்புகளுக்கு கட்டளையிடுகிறேன் நான் செயலிழந்தால் மனிதன் பிணத்திற்கு ஒப்பானவன் எனவே நானே உயர்ந்தவன் என்றது.
இவ்வாறே கண், காது, மூக்கு, வாய், கை, கால் என பல
உறுப்புகளும் தங்கள் செயல்பாட்டை வைத்து நானே உயர்ந்தவன் என்று
கூறிக்கொண்டன.ஒரு சில உறப்புகள் ஒரு சில உறுப்பின் பயன்பாட்டை அங்கீகரித்து
ஏற்று கொண்டன.
கடைசியில் மலப்புழை மலத்தை வெளியேற்ற மட்டுமே பயன்படுகிறது எனவே அதுவே தாழ்ந்தது என்று பிற உறுப்புகள் முடிவு செய்துவிட்டன.
இதனால் சினம் கொண்ட மலப்புழை மலத்தை வெளியேற்ற அனுமதியாமல் இறுக்கி மூடிக்கொண்டது.
மலத்தை வெளியேற்ற முடியாததால் உடல் உப்பி மனிதன் வெடித்து சிதற அனைத்து உறுப்புகளும் அழிந்துபோயின.
இப்ப சொல்லுங்க எந்த உறுப்பு உயர்ந்த உறுப்பு, சிறந்த உறுப்பு?
எந்த உறுப்பு தாழ்ந்த உறுப்பு?
மனித உறுப்புகளைப் போல் தான் நாமும் உயர்வு தாழ்வு பேசிக்கொண்டு நம்மை நாமே அழித்துக்கொல்கிறோம்.
அந்த காலத்தில் ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலை செய்து மனித குலம் தழைக்க உதவிக் கொண்டன.
இதில் இந்த தொழிலை செய்தவன் உயர்ந்தவன் என்றோ இந்த தொழிலை செய்தவன் தாழ்ந்தவன் என்றோ கூறிக்கொள்ளுதல் சரியா?
தொழிலை வைத்து ஒரு ஜாதி உயர்ந்தது ஒரு ஜாதி தாழ்ந்தது என்பது அறிவுடமையாகாது.
என்றும் மனிதமுடன்
இராச.புரட்சிமணி