வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 24 ஜனவரி, 2018

மொத்தமிழ் என்றால் என்ன?


என்னுடைய பொங்கல் வாழ்த்து கவிதையில் மொத்தமிழ் வாழ்க என்று எழுதியிருந்தேன். நண்பர் ஒருவர் முத்தமிழை தவறுதலாக மொத்தமிழ் என்று எழுதியுள்ளதாக கூறினார். தவறுதலாக அவ்வாறு எழுதவில்லை. தெரிந்தேதான் மொத்தமிழ் என்று எழுதினேன். முத்தமிழ் இயல், இசை, நாடகம் எனும் மூன்று தமிழைக் குறிக்கும். மொத்தமிழ் என்பது கிரந்த எழுத்துத் தமிழ் தவிர்த்து  அனைத்துத் தமிழையும் குறிக்கும்.

-----------------
இயற்கை வாழ்க
இறைவன் வாழ்க

உழவு வாழ்க
உழைப்போர் வாழ்க

மனிதம் வாழ்க
மக்கள் வாழ்க

மொழிகள் வாழ்க
மொத்தமிழ் வாழ்க

மகிழ்ச்சி பொங்க
மங்களம் தங்க

இயற்கைத் திருநாள்
இத்தமிழர் திருநாளில்
இராச.புரட்சிமணியின்
இனிய நல்வாழ்த்துக்கள். 🌞⛈🎋🌾🥥🥕🌽🍇🍊🍎🍛🍲🍚😊

சனி, 4 நவம்பர், 2017

கமல் இந்துத் தீவிரவாதம் என்று கூறியது சரியா?

ஒரு மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை அடையாளப்படுத்துவது சரியான செயல் அல்ல. அவர் கூறிய கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் "இந்து தீவிரவாதம்"  என்று கூறியது தவறு. "இந்துத்துவா  தீவிரவாதம்" என்பதே சரி.

இந்து என்பது வேறு இந்துத்துவா என்பது வேறு. இந்து என்பது இந்து மதத்தை சார்ந்த அனைத்து மக்களை குறிக்கும் சொல்.  சட்டப்படி அது சீக்கியர்களையும், சமணர்களையும் குறிக்கும் சொல். இந்துத்துவா என்பது ஒரு கருத்தியல். அந்த  கருத்தியலை நிறைவேற்ற சிலர் வன்முறைகளிலும், தீவிரவாதத்திலும்  ஈடுபடுகின்றனர். இந்த வித்தியாசம் கமலுக்கு தெரிந்திருக்கும். அவர் பிழையாக இந்து தீவிரவாதம் என்று கூறி இருக்கலாம். அது பிழையாக இருப்பின் அதை கூறி வருத்தம் தெரிவிப்பது நன்றாக இருக்கும்.

காந்தியை கொன்றது இந்துத்துவா தீவிரவாதம். 
இன்று பல கொலைகளை கொண்டாடுவது இந்துத்துவா தீவிரவாதம். 
கமலை கொல்ல வேண்டும் என்பதுவும் இந்துத்துவா தீவிரவாதமே. 
ஏன் இந்தியை திணிப்பதுமே இந்துத்துவா தீவிரவாதத்தின் ஒரு அங்கமே. 

இந்துத் தீவிரவாதம், இசுலாமிய தீவிரவாதம், பௌத்த தீவிரவாதம் என்ற சொற்றோடர்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எது, யார் காரணமோ அதை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும். தீவிரவாதத்தை பொதுமைப்படுத்தினால் அது மற்றவர்கள் மனதை புண்படுத்தும். மற்றவர்களையும் தீவிரவாதம் பக்கம் தள்ளும் வாய்ப்புண்டு என்பதை அனைவரும் புரிந்து இவற்றை தவிர்ப்போம். அதே நேரத்தில் தீவிரவாதங்களுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவோம்.

என்றும் மனிதமுடன் 
இராச.புரட்சிமணி 

புதன், 4 அக்டோபர், 2017

தமிழை சிதைப்பது சரியா?


நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழை சிதைக்கின்றோம். பிற மொழி சொற்களை தமிழில் ஏற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிற மொழி எழுத்துக்களை தமிழில் ஏற்பது என்பது தமிழை சிதைக்கும் செயலாகும்.

பிற மொழி வார்த்தைகளை  தமிழில் எழுதும் பொழுது நாம்  '', '', 'க்ஷ', '' ,'ஸ்ரீ', ''  என்ற கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.

சமசுகிருத, பிராகிருத வார்த்தைகளுக்கு ஏற்ற ஒலியோசை கிடைக்க நாம் அந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். இது அவசியம் அற்றது. நீங்கள் ஆங்கிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் பிற மொழி எழுத்துக்களை அவர்கள் ஏற்பதில்லை. நாம்  கிரந்த எழுத்துக்களை எழுதி தமிழை சிதைக்க வேண்டாம் என்று அனைவரையும்  கேட்டுக்கொள்கிறேன்.

சமஸ்கிருதம்  என்று எழுதாமல் சமசுகிருதம்  என்றே எழுதலாம்
மஹாத்மா என்று எழுதாமல் மகாத்மா என்றே எழுதலாம் 
ஜப்பான் என்று எழுதாமல் சப்பான் என்றே எழுதலாம் 
 ஸ்ரீ ரங்கம் என்று எழுதாமல் திருவரங்கம் என்றே எழுதலாம்
பக்ஷி என்று எழுதாமல் பட்சி என்றே எழுதலாம்
ஹரி என்று எழுதாமல் அரி  என்றே எழுதலாம்
ஆயிஷா என்று எழுதாமல் ஆயிசா என்றே எழுதலாம்

நன்றி 

புதன், 29 மார்ச், 2017

எங்கே என் தலைவன்? பகுதி 2

மக்கள் எப்படிப்பட்ட தலைவனை எதிர்பார்க்கின்றனர்?

ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள்  ஒரு நல்ல தலைவனை எதிர்பார்க்கிறார்கள். அதாவது அவன் நல்லவனாக இருக்கவேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், ஊழல் செய்யாதவனாக இருக்க வேண்டும், மக்கள் (தங்கள்) பிரச்சனைகளை  தீர்ப்பவனாக இருக்க வேண்டும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இன்று இப்படிப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. அதே நேரத்தில் தவறு செய்பவர்களையும், ஊழல் செய்பவர்களையும், சாதி மத அரசியல் செய்பவர்களையும்  ஆதரிக்கும் மக்களும் இருக்கின்றனர். ஒரு நல்ல தலைவன் வரும்பொழுது இவர்களில் பலரும் நல்ல தலைவனுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


இதை கருத்தில் கொண்டுதான் இப்பொழுது இருக்கும் சில தலைவர்களும்  கறை படிந்த தங்கள் கட்சியை சீர்திருத்தம் செய்வதாக தெரிகிறது. ஆனால் மக்கள் இவர்களை  ஏற்றுக்கொள்வார்களா எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் என்ன செய்வது?

தாங்கள் எதிர்பார்க்கும்  தலைவன் இல்லாதபொழுது இருக்க்கின்ற ஒருவனை தலைவனாக ஏற்பது அல்லது அரசியலில் நம்பிக்கை இழப்பது என்பதுதான் மக்களின் முன்னே இருக்கும் இரு வாய்ப்புகள்.

இது இரண்டுமே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. வேறு என்னதான் செய்வது?

அது தானாகவே தலைவனாக முற்படுவது. ஆம் நல்லது செய்ய நினைப்பவன் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.


பணம் படைத்த, பிரபலாமான ஒருவனால்தான் ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்த முடியும். பிறருக்கு இது மிகவும் கடினம். பணம் படைத்த பிரபலமான ஒருவன் நல்லவனாக, நல்ல கொள்கைகளை உடையவனாக இருக்கும்  பட்சத்தில் அவனை  மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அப்படிப்பட்டவன்  இங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லை. 

பணம் இல்லாத பிரபலமாகதவன் அமைதியாக இருந்துவிடலாமா?
கூடாது அவனும் அதற்கான முயற்சியில் இறங்கவேண்டும். இது சாதாரண விடயம் அல்ல. அதே நேரத்தில் வேறு வழியும் இல்லை.அப்படி ஒருவன் வந்தாலும் மக்களின் ஆதரவு இல்லை என்றால் அவன் கதியும் மக்கள் கதியும் கேள்விக்குறிதான். இங்கே மக்கள் தான் மாபெரும் சக்தி. அவர்கள் ஆதரித்தால் தான் மாற்றம் நிகழும்.


யாராவது ஒருவன் வருவான் என எதிர்பார்ப்பதை விட ஏன் நாமே அந்த முயற்சியை எடுக்க கூடாது?. நல்லவனாகவும் நல்ல கொள்கைகளையுடவன் யாராகினும் மக்கள் ஏற்பார்கள் என்றே எண்ணுகிறேன். 

நாம் நினைக்கும் மாற்றத்திற்காக ஏன் நாமே களம் காண கூடாது?
நல்லவன் வருவான் நல்லாட்சி தருவான் என்று கனவு காண்பதைவிட ஏன் அந்த நல்லவனாக நல்லாட்சி தருபவனாக  நாம் இருக்க கூடாது?

உண்மையான, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை நம்மால் தர முடியாதா?

சாதி மத இன  வேறுபாடுகளை கடந்த ஒரு நல்லாட்சியை தரமுடியாதா?

முடியும் என்பவர்கள் களத்தில் குதித்து ஒரு கட்சியை ஆரம்பியுங்கள் அல்லது எம்மோடு  இணையுங்கள்.

செவ்வாய், 21 மார்ச், 2017

எங்கே என் தலைவன்?

தமிழகத்தில்  தலைவனுக்கான தேடல் இருப்பதாக இன்று பேசப்படுகிறது.சமீபத்திய விகடன் சர்வேயில் 44.4% இளைஞர்கள் இதில் இருப்பவர்கள் யாரும் எங்கள் தலைவர் இல்லை என்று கூறியுள்ளனர். இங்கே தலைவர்களுக்கா பஞ்சம்? அப்படி இருந்தும் ஏன் இந்த தேடல்? 

தமிழர்கள் பெரும்பாலும் அம்மா அல்லது கலைஞர் என்று வாக்களித்து வந்துள்ளனர். அம்மாவின் இறப்பும் கலைஞரின் ஓய்வும் தமிழகத்தில் தலைவனுக்கான  வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.


ஒருசில பிரபலங்கள் தலைவருக்கான வெற்றிடம் தமிழகத்தில் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் சிலரை ஆதரிப்பதால் அவ்வாறு கூறுகின்றனர்.  ஏன் இனில்  தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் ஆதரவளிப்பவர்கள் உள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் இன்று இருக்கும் எந்த தலைவரையும் ஆதரிக்க விரும்பவில்லை 

இன்று தமிழகத்தில் இருக்கும் எந்த ஒரு  தலைவர் பற்றி சிந்தித்தாலும் ஒரு சில நல்லவிடயங்கள் தோன்றினாலும் ஒரு சில கெட்ட விடயங்களும் கண் முன் வருகிறது. இதனால் தான் பெரும்பாலானவர்கள் வேறு தலைவரை தேடுகின்றனர்.

வாரிசு அரசியலை சிலர் எதிர்க்கின்றனர், திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதை சிலர் எதிர்க்கின்றனர்.  இவர்கள் தான் சுலபமாக அரசியலுக்கு வர முடிகிறது. 

இவர்களை தவிர யார் அரசியலுக்கு வரமுடியும்? மாபெரும் பணக்காரர்கள் அரசியலுக்கு வரமுடியும்.பிறரால் அரசியலுக்கு வரமுடியுமா என்றால் மிகவும் கடினம் என்றே சொல்லவேண்டும்.

ஏன் எனில் அரசியலுக்கு தேவை பணம். பணம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது.  அரசியல் என்பதே பணம் படைத்தோருக்கு என்றாகிவிட்டது.இதனால் தான் வசதியற்றவர்கள் அரசியலுக்கு வருவதில்லை.

யார் வேண்டுமானாலும் ஒரு கட்சியில் சேரலாம் ஆனால் ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்பது பிரபலங்கள் மற்றும் பணம் படைத்தவர்கள் தவிர்த்து பிறருக்கு மிக மிக கடினம். 

பணம் படைத்தவர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் பிரபலம் அல்லாத பட்சத்தில் அவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்கள் பிரபலங்களை விலைக்கு வாங்கும் பொழுது அவர்களுக்கும் வெற்றி சாத்தியமே.

மக்கள் எப்படிப்பட்ட தலைவனை எதிர்பார்க்கின்றனர்?
அப்படிப்பட்ட தலைவன் வர வாய்ப்புள்ளதா?

சனி, 12 நவம்பர், 2016

மோடி செய்தது சாதனையா? மோசடியா?


மோடி கருப்புப்  பணத்தை ஒழித்தார் என்று நினைக்கிறீர்களா? அவர் கருப்புப்  பணத்தை வைத்திருந்தவர்களை தப்பிக்க வைத்திருக்கிறார் என்பதே  மாபெரும் உண்மை.  அதைவிட ஒரு மாபெரும் உண்மை கீழே.

கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் உழைத்து சம்பாதிக்கவில்லை. ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி சம்பாதித்தனர். அரசாங்கத்தை ஏமாற்றி பதுக்கினர்.அவர்கள் பணத்தை பணமாக மட்டும் வைத்திருக்கவில்லை நகை, வீடு, நிலம் என மாற்றி விட்டனர். சிலப்பலர் வெளி நாட்டிற்கும் கொண்டு சேர்த்துவிட்டனர். இப்பொழுது பணத்தை செல்லாததாக மாற்றியதால் அவர்களுக்கு குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும். அரசியல்வாதிகளும் பெரு வியாபாரிகளும் தான் கருப்பு பணத்தை வைத்துள்ளனர்.

ஒருவன் தவறு செய்தால் என்ன செய்யவேண்டும்? தண்டனை தர வேண்டும் (திருந்தவாவது). இங்கே இவர்களுக்கு தண்டனை தரப்பட்டதா என்றால் இல்லை.

 பதுக்கிய பணம் செல்லாததாக மாறியதே அவர்களுக்கு தண்டனை என்று நினைக்காதீர்கள்.பதுக்கிய கருப்பு பணத்தையும் சிலபலர் வெள்ளையாக மாற்றிவிடுவர். வெள்ளையாக  மாற்றாதவர்களுக்கு நட்டம் மட்டுமே.  இந்த நட்டத்தை அவர்கள் விரைவில் இலாபமாக மாற்றிவிடுவர்.

இப்பொழுது சொல்லுங்கள் மோடி என்ன செய்துள்ளார். தவறு செய்தவர்களுக்கு தண்டனை தராமல் தப்பிக்க வைத்துவிட்டார். இப்படி தவறு செய்தவர்கள் குறைந்த பட்சம் 2% முதல் மிக மிக அதிக பட்சமாக 20%. இவர்கள் அனைவரையும் தப்பிக்க வைத்ததோடு குறைந்தபட்சம் 80% முதல் 98% மக்களுக்கு தண்டனை அளித்து விட்டார்.  (உண்மையில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் அந்த2% முதல்  20% தான்)

இன்று சாப்பாட்டிற்கு வழியில்லாமல், செலவுக்கு காசில்லாமல், மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க முடியாமல்,  கல்யாணம் பண்ண முடியாமல் எத்தனை பேர் படாத பாடு படுகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.

ஆனால் இந்த தண்டனை அளிக்கப்பட மக்களில் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால்  கருப்பு பணம் ஒழிந்தது. கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் ஒழிந்துவிட்டார்கள் என்று. அது உண்மையல்ல என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.இவர்களை பாராட்ட வேண்டும். கருப்பு பணம் ஒழிந்தால் நாடு முன்னேறிவிடும் என்று நம்பிக்கையில் இவர்கள் படும் சிரமத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.


கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் இத்துடன் திருந்துவார்களா என்றால் இல்லை. இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவர். எதிர்காலத்திலும் இதே போலவே தொடருவர். ஏன் எனில் கருப்பு பணத்தால் அவர்கள் இழந்ததை விட அடைந்ததே அதிகம்.


 மோடி மக்களை நன்றாக  முட்டாளாக்கி விட்டார். தவறு செய்தவர்களை தப்பவிட்டுவிட்டு தவறு செய்யாதவர்களை தண்டித்ததோடு மட்டுமல்லாமல் இருவர் மனதிலும் நல்ல பெயரை வாங்கி விட்டார். தப்பித்தவனுக்குத்தான் தெரியும் அப்பாடா மோடி நம்மள விட்டுட்டாரு என்று. பொதுமக்கள் அப்பாடா கருப்பு பணத்தை மோடி ஒழித்துவிட்டார் என்று தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் ஏமாளியாக.

இப்பொழுது இருவர் ஓட்டுமே மோடிக்குத்தான்.  அதுமட்டுமல்லாமல் பல கோடி ரூபாய் பாஜகவிற்கு நன்கொடையாக போக வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் இந்த நடவடிக்கையின் மூலம் மோடி ஒழித்தது கருப்பு பணத்தை என்பதை விட கள்ள நோட்டுக்களை என்பதே சரி. இது அவர்களுக்கும் தெரியும் இந்த நடவடிக்கையால் முற்றிலும் ஒழிய போவது  கள்ள நோட்டுக்கள் என்பது  (அதுவும் சிலபல மாதங்களுக்கு)

கள்ள நோட்டுக்களை ஒழித்தோம் என்று கூறுவதை விட கருப்பு பணத்தை ஒழித்தோம் என்று கூறினால் தான் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும் என்பதால் தான் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டது என்று அவர்கள் விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள்.

 உண்மையை உரக்க கூறாமல் பொய்யுரைப்பது சரியா? அதோடு நிற்காமல் இவர்கள் நேர்மையோடு இல்லாமல் மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்ப்புடையதா?

கருப்பு பணம் வைத்திருந்தவர்களை தப்ப வைத்ததும், கள்ளநோட்டுக்களை ஒழித்ததை விளம்பரப்படுத்தாமல் கருப்பு பணத்தை ஒழித்தோம், கருப்பு பணம் வைத்திருந்தவர்களை தண்டித்து விட்டோம் என்பதும் மோசடியா இல்லையா?


உங்களில் சிலர் இது கொஞ்சம் காலத்துக்குத்தான் அப்புறம் மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை என்று நினைப்பீர்கள். அப்படி இருந்தால் இதை எழுத வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. நாட்டின் நலனிற்காக மக்களின் நலனிற்காக இந்த சிரமங்களை அனைவரும் பொறுத்துக்கொள்வோம் எனலாம். இவ்வளவு சிரமங்களுக்குப்பிறகும் பழைய குருடி கதவை திறடி என்பதை போல கள்ள நோட்டும் வரும், கருப்பு பணமும் பெருகும்,மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்று தெரிந்தும் மோடி அரசு தன்னுடைய சுய நலத்திற்காக,ஓட்டுக்காக இவ்வாறு செய்து மக்களை முட்டாளாக்குவது சாதனையா  அல்லது   மோசடியா?

 உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

(சிலபல கருத்துக்களை நீளம் கருதி இப்பதிவில் தவிர்த்துள்ளேன்.)

மக்களுக்கு இது  நன்மையளிக்கும் செயல் என்பது ஒரு மாயை.உண்மையில் மக்களுக்கு பாதிப்பே. அடுத்த பதிவில் உங்கள் மாயை விலகும்....நீங்கள் விரும்பினால். இந்த நடவடிக்கையால் என்ன நன்மைகள் கிடைக்க உள்ளன என்று நீங்கள் கூறினால் கலந்துரையாட வாய்ப்பாக அமையும். 

குறை கூறுவது எளிது இதற்க்கு என்ன மாற்று உங்களிடம் உள்ளது என்று கேட்டால் மடை திறந்த வெள்ளம் போல் மாற்று வழியும் அதற்க்கு அடுத்த பதிவில் வரும்...நீங்கள் விரும்பினால் மட்டும். உங்களிடம் மாற்று வழி இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.


என்றும் மனிதமுடன் 
இராச.புரட்சிமணி 

புதன், 18 மே, 2016

திமுகவிற்கு சாதகமாக 2016 தேர்தல் அமையுமானால் என்ன காரணம்?

அதிமுகவின் மீது பெரிய அதிருப்தி  இல்லையென்றாலும் நடந்து முடிந்த 2016 தேர்தலில்  பெரும்பாலான கருத்து கணிப்புகள்  திமுகவிற்கு முன்னிலை கிடைக்கும் என்றே கூறுகின்றன. ஒருவேளை திமுக முன்னிலை பெற்றால் அல்லது  ஒரளவு அதிக சீட்டுக்கள் பெற்றால் அதற்க்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிவது:
என்னுடைய கணிப்பில் ஆளும் கட்சிக்கு இருப்பதை விட திமுகவிற்கே அதிக எதிர்ப்புகள் உள்ளன.
ஈழத்தமிழர் படுகொலை, 2G ஊழல்  இந்த இரண்டையும் இன்னும்  மக்கள் மறக்கவே இல்லை.இந்த திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிமுகவிற்கு சென்றிருந்தால் அதிமுகவிற்கே முன்னிலை கிடைக்கவேண்டும்.
ஆனால் இந்த எதிர்ப்பு ஓட்டுக்களை சீமான், மக்கள் நல கூட்டணி,பாமக, பாஜக  போன்றோரும் கைப்பற்றுவதாகே தெரிகிறது,

அதிமுக ஓட்டுக்களை இழப்பது:
 மாற்றத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அதிமுகவிற்கு கிடைக்கவேண்டிய ஓட்டுக்களை சேர்த்தே பிரிக்கின்றனர். திமுக அதிமுக இருமுனை போட்டியாக இருப்பின் இவர்கள் அதிமுகவிற்கே வாக்களித்திருப்பார்கள்.

-அன்புமணியால் வன்னியர் ஓட்டுக்கள் பிரிகின்றன.
-விஜயகாந்த்-திருமாவளவன் கூட்டணி கவர்ச்சி மற்றும்  தாழ்த்தப்பட்டவர்களின் ஓட்டுக்களை பிரிக்கின்றது.
- சென்னையில் மற்றும் பிற பகுதிகளில்  பாஜக, மற்றும் மக்கள் நல கூட்டணிக்கு ஓட்டுக்கள் பிரிகின்றது
இது அதிமுகவிற்கு பாதகமாகவும், திமுகவிற்கு சாதகமாகவும் அமைகிறது

இனவாத மதவாத ஓட்டுக்கள்:
-திமுகவின் பலமான திராவிட இனவாத அரசியல் தெலுங்கு மக்களின் பெரும்பாலான ஓட்டுக்களை பெறுகிறது.அதிமுக அரசின் தெலுங்கு வழி கல்வி நிறுத்தமும் தெலுங்கு ஓட்டுக்களை திமுக பெற வழிவகுக்கிறது.நாம் தமிழரின் தமிழ் இனவாதமும் சில தெலுங்கர்களை  திமுக பக்கம் நகர்த்தி இருக்க வாய்ப்புண்டு.

-தன்னுடைய  இசுலாமிய கிருத்துவ மதவாதம் மூலம் அந்த மக்களில் பெரும்பாலானவர்களின் ஓட்டுக்களை பெறுகிறது.

அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள்:
பிற கட்சியினரும் இந்த ஓட்டுக்களை பெற்றாலும் திமுகவிற்கும் இது செல்கிறது. குறிப்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளில்,சென்னையில், பொதுவாக பெரும்பாலனா அரசாங்க ஊழியர்களின் ஓட்டுக்கள் திமுகவிற்கு செல்லவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

 நான் சென்ற பதிவில் கூறியது போல அதிமுக தவிர பிற கட்சிகளுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் திமுகவிற்கு  சாதமாகத்தான் போகின்றது.

இவ்வாறாக ஓட்டுக்கள் பிரிந்தும்  அதிமுக ஆட்சியை தக்க வைக்குமானால் அல்லது அதிக இடங்களை கைப்பற்றுமானால் அது அதிமுகவின் நல்லாட்சிக்கு  கிடைத்த வெற்றியே.

வெள்ளி, 13 மே, 2016

இவர்களுக்கா ஓட்டு போட போறீங்க? சிந்திப்பீர்களா?

நீங்கள் யாருக்கு ஒட்டு போட போகிறீர்கள் என்பதில் தான் தமிழ் நாட்டின் தலையெழுத்து உள்ளது. 

நாம் தமிழர்:
புதிய கட்சி. ஆனால் அதே பழைய பிரித்தாளும் எண்ணம். வாய்ப்பு கொடுக்க எண்ணினால் கடலூரில் மட்டும் நாம் தமிழருக்கு ஓட்டளிக்கலாம். 

பாஜக:

வாஜ்பாய் பாஜக வேறு மோடி பாஜக வேறு. பிரித்தாளும் எண்ணம் கொண்ட இந்த கட்சி வளர கூடாது. 

பாமக:
இருக்கின்ற கட்சிகளிலே வளர்ச்சியை பற்றி அதிகம் பேசும் கட்சி. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதீத அங்கீகாரம் கொடுத்த கட்சி. சாதிமுலாம் பூசப்பட்ட கட்சி.   கட்சியில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இது நிரந்தர மாற்றமாக இருப்பின் அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட வேண்டிய கட்சி. இப்பொழுது பென்னாகரத்தில் அன்புமணிக்கு  வாக்களிக்கலாம்.

தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா :

கூட்டணி அமையாததால் இவர்களாகவே அமைத்துக்கொண்ட கூட்டணி. 
கூட்டணியின்  நடசத்திர வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்.

திமுக-காங் :

இது ஒரு கொலைகார கொள்ளைக்கார கூட்டணி. இதற்க்கு தயவு செய்து வாக்களிக்காதீர்கள். தந்தைக்கும் தனயனுக்கும் மட்டும் வேண்டும் என்றால் ஓட்டு போடுங்கள். 

நல்ல வேட்பாளர்கள்:
எல்லா கட்சியிலும் நல்லவர்கள் சிலர் இருப்பார்கள். சுயேட்சையாக கூட சிலர் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்க தவறவே கூடாது. இவர்களே நாளைய நல்லரசியலை முன்னெடுப்பார்கள்.

நோட்டா: 
தயவு செய்து இதற்க்கு உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள்.

அதிமுக:

ஊழல் குற்றச்சாட்டு உள்ள கட்சி என்றாலும் திமுக அளவிற்கு இல்லை. எதிர்பாராத வெள்ளத்தின் போது செயல்பாடு விமர்சனத்திற்குள்ளானாலும் மீட்டெடுப்பதில் சிறப்பாக செயல்பட்டது.
திமுக கொண்டுவந்த மின்வெட்டை அறவே நீக்கியது அதிமுக. இது ஒன்றுக்கே அதிமுகவிற்கு வாக்களிக்கலாம். அதிமுக மீது குறைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும் திமுகவை விட பரவாயில்லை என்பதே என் கருத்து.

அதிமுக, திமுக வேண்டாம் மாற்றம் வேண்டும் என்று நீங்கள் பிறருக்கு வாக்களித்தால் அது திமுகவிற்கே சாதகமாக அமையும். மற்றவர்களுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் திமுகவிற்கு போடுவதற்கு சமமாகும்.

மாற்றம் நிச்சயம் வேண்டும் ஆனால் இத்தேர்தல் அதற்க்கான தருணம் அல்ல. அதிமுகவிற்கு வாக்களித்து திமுகவிற்கு மூடு விழா நடத்துவோம். சிந்தித்து வாக்களியுங்கள். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவியுங்கள்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

மதவாதம் மற்றும் தேசியவாதம் என்னய்யா நடக்குது நாட்டுல?

உலகில், நாட்டில் நடப்பவை அச்சத்தையும் வருத்தத்தையும் தருகின்றது. ஒருபுறம் உலகெங்கும் இசுலாமின் பெயரால்  குண்டு வெடிப்புகள், போர்கள். மறுபுறம் இந்தியாவில் இந்துமதத்தின், நாட்டுப்பற்றின்  பெயரால் வெறுப்புகளை வன்முறைகளை தூண்டும்படியான பேச்சுகள், செயல்பாடுகள்.

மதாவதம் தவறு என்று இங்கே பலர் உணர்ந்துள்ளனர். அதேபோல தேசியவாதம் என்பதும் தவறு என்பதே என்னுடைய கருத்து. மதம் மற்றும் தேசியத்தின் உண்மையான நோக்கம் ஒற்றுமையாக வாழ்வதுதான். இவைகளால் ஒற்றுமைக்கு கேடு வரும்பொழுது ஒன்று அவற்றை சீர்திருத்த வேண்டும் அல்லது தூக்கி எறியவேண்டும்.


கழுத்தில் கத்தி வைத்தாலும் பாரத் மாதா கி ஜே சொல்லமாட்டேன் என்பதும், சட்டம் இல்லையென்றால் பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்களின் தலையை வெட்டுவேன் என்பதும், பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்பதும்  வெறுப்பையும், ஒற்றுமையின்மையையும் உருவாக்கும் பேச்சுக்களே. இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தால் அதற்காக வருந்தி மன்னிப்புக் கோரி இருக்கலாம். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இவர்கள்  தண்டண்டைக்குரியவர்களே.

தானாகவே வீடியோ தயாரித்து தேசத்திற்கு எதிராக, காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக  குரல் எழுப்பியதாக குற்றம் சாட்டி தேச துரோக சட்டத்தில் கைது செய்வதும் காலம் காலமாக இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரிக்க என்னும் சக்திகளோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதும்  அருவருக்கத்தக்க  தேசியவாதம்  அல்லாமல் வேறு என்ன?

ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் மனிதம்  இருக்கவேண்டும், ஒவ்வொரு தலைவனுக்குள்ளும் மனிதம் இருக்கவேண்டும், ஒவ்வொரு அரசாங்கமும் மனிதமோடு இருக்க வேண்டும். மனிதம் இல்லையென்றால் அங்கே அழிவுதான் இருக்கும்.

மனிதத்தை கட்டி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இதை நாம் செய்யாவிடில் நாளைய தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியே. மதவாதத்திற்கும்,தேசியவாதத்திற்கும் மற்றும் எந்த ஒரு பிரிவினை வாதத்திற்கும் உங்கள் நெஞ்சில் இடம் தராதீர்கள். இவற்றிற்கு எதிராக குரல் எழுப்புங்கள். சிந்தித்து செயல்படுங்கள்.

என்றும் மனிதமுடன்
இராச.புரட்சிமணி 

சனி, 8 ஆகஸ்ட், 2015

சமணம் என்பது ஏன் ஜைன மதம் அல்ல?

தமிழகத்தில் பலர்  சமணம் என்பது ஜைன (Jainism) மதத்தை குறிப்பதாகவே எழுதி வந்திருக்கின்றனர்..வருகின்றனர். ஆனால் இது ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழை. இந்தப்பிழையை சமணமும் தமிழும் என்ற நூல் எழுதிய  மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களும் செய்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் 

//இந் நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.//

தன்னுடைய பௌத்தமும் தமிழும் என்ற நூலில் 

//வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும். சமணமதம் என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது.// என்று கூறுகிறார்.

இவர் கூறியதிலிருந்து இங்கே நாம்  நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பௌத்த,ஜைன மதத்தை குறிக்க பயன்படுத்தப்பட்ட பொது சொல்தான் சமணம் எனபது. சமணம் எனபது தனி ஒரு மதம் அல்ல. அவர் சமணம் என்ற சொல்லை  "ஜை"  எனும்  வட மொழி அச்செழுத்துக்கள் இல்லாததால் தான் பயன்படுத்தியுள்ளார்.

மயிலை, சீனி. வேங்கடசாமி ஐயா செய்த தவறு என்னவெனில் 
முதல் தவறு : சமணம் எனபது பௌத்த ஜைன மதங்களை குறிக்க பயன்படும் பொது சொல் என்றுணர்ந்தும் ஜைன மதத்திற்கு சமணம் என்ற சொல்லை பயன்படுத்தியது.

இரண்டாம் தவறு: சமணம் என்ற சொல் ஆசீவக மதத்தையும் உள்ளடக்கியது என்பதை அறியாதது. ஆம் உண்மையில் சமணம் என்ற சொல் ஆசீவக மதத்தையும் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல்.

 ' சாவகர் அருகர் சமணர் ஆகும் ;
           ஆசீ வகரும் அத்தவத் தோரே ' -  என்று சேந்தன் திவாகரம் கூறுகிறது. 

 இந்த இடத்தில்  அவர் சமணம் என்பதற்கு ஜைனம் என்று பொருள் கொண்டு  ஆசீவக மதம் ஜைன மதத்தின் ஒரு பகுதியாக கொள்ளப்படுகிறது இது தவறு என்கிறார். 


ஆனால் சேந்தன் திவாகரம்  ஜைன மதம் என்றோ ஜைன மதத்தை குறிக்கும் ஆருகத மதம் என்றோ குறிப்பிடவில்லை. அது தெளிவாக சமணர் என்று குறிப்பிடுகிறது.  இந்த இடத்தில் நாம் எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும் எனில் ஆசீவக மதமும் சமண மதம் என்று புரிந்து கொள்ளவேண்டும். 
ஐயா அவர்கள் ஆசீவக மதமும் ஜைன மதம் என்று கூறியுள்ளதாக புரிந்து கொண்டார் இதுதான் அவர்  செய்யும் இரண்டாம் தவறு.


--------------------------------------------------------------------------------------------------
சமணம் என்ற சொல் ஜைனம், ஆசீவகம், பௌத்தம் என்ற மதங்களை குறிக்கும் என்றாலும் பெரும்பாலும்  சமணம் என்ற சொல்லை ஜைனம் அல்லது ஆசீவக மதத்தை  அல்லது இரண்டையும் குறிக்கவே பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

பௌத்தத்தை சமணம் என்று அதிகமாக அழைக்கவில்லை.


"உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்"
         "கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே"
        "குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்"
        "சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்" 
        "மண்டை கொண்டுழல் தேரர் 
         மாசுடை மேனிவன் சமணர் "

என்ற தேவார திருப்பதிகங்களில்  பௌத்த மதம் தனியாக சொல்லப்படுவதை காணலாம்.. 

இங்கே சமணம் எனபது உண்மையில் ஜைனர்களை குறிக்கின்றதா அல்லது ஆசீவகர்களை குறிக்கின்றதா அல்லது இருவரையும் குறிக்கின்றதா எனபது உண்மையில் இதை பாடியவருக்கு மட்டுமே தெரியும்.இருவரையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கின்றேன். ( "கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே" என்ற இடத்தில் பௌத்தத்தை மட்டும் குறிக்கின்றதா என்பதிலும் எனக்கு சிறு குழப்பம் உண்டு.ஏன் எனில் பௌத்தமும் ஒரு சமண மதம்தானே?)


பௌத்த மதத்தை சமணம் என்று சொல்லியதுண்டா என்றால் பெரும்பாலான இடங்களில் சொல்லவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் 

"துவருறு விரிதுகி லுடையரு மமணரும்" என்ற தேவார திருப்பதிக பாடல் இங்கு சமணர் என்று கூறி பௌத்தர்களை கூறுகிறது.
இதற்கு உரை எழுதியவர்கள்
  //துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும்// என்று கூறுகிறார்கள்.


இப்பதிவின் மூலம் நான் சொல்ல நினைத்தது என்னவெனில் 

1.சமணம்  என்ற சொல் வட இந்தியாவை பொறுத்தவரை வைதீக (பார்ப்பன) மதம் அல்லாத பிற மதங்களை குறிக்க பயன்படுத்திய சொல் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.இதற்க்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.  ஒன்று சமண என்பதற்கு தேடுபவர் என்ற பொருள் பாளி மொழியில் உள்ளதாகவும். இவர்கள் யாவரும் தவம் மூலம் உண்மையை கண்டறிய முயல்வதால் இவர்களை குறிக்க  சமண என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்றும்  இவர்கள் கடுமையான நடைமுறைகளை மேற்க்கொள்வதால் இவர்களை சிராவண-சிராமண  என்ற சொல்லால் குறித்தனர் என்றும் சொல்லப்படுகிறது. ஜைன, ஆசீவக, பௌத்த மற்றும் வேறு சில மதங்களை சிராமண மதங்கள் என்று அழைத்துள்ளனர். 


2. தமிழகத்தை பொருத்தவரை சமணம் என்ற சொல் ஜைன மற்றும் ஆசீவகமதத்தை  குறிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பௌத்தத்தையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

3. சமணம் என்ற சொல்லை ஜைனத்துக்கு  மட்டுமே எடுத்துகொண்டு பல ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில் அந்த இடத்தில் சமணம் என்ற சொல் ஜைன, ஆசீவக, பௌத்த மதங்களில் எதை குறிக்கின்றது என்று  தமிழ் அறிஞர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

4. ஜைன (சைன )மதத்தையோ அல்லது ஆசீவக மதத்தையோ தனியாக  குறிக்க சமணம் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும் 
Related Posts Plugin for WordPress, Blogger...