வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 4 நவம்பர், 2017

கமல் இந்துத் தீவிரவாதம் என்று கூறியது சரியா?

ஒரு மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை அடையாளப்படுத்துவது சரியான செயல் அல்ல. அவர் கூறிய கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் "இந்து தீவிரவாதம்"  என்று கூறியது தவறு. "இந்துத்துவா  தீவிரவாதம்" என்பதே சரி.

இந்து என்பது வேறு இந்துத்துவா என்பது வேறு. இந்து என்பது இந்து மதத்தை சார்ந்த அனைத்து மக்களை குறிக்கும் சொல்.  சட்டப்படி அது சீக்கியர்களையும், சமணர்களையும் குறிக்கும் சொல். இந்துத்துவா என்பது ஒரு கருத்தியல். அந்த  கருத்தியலை நிறைவேற்ற சிலர் வன்முறைகளிலும், தீவிரவாதத்திலும்  ஈடுபடுகின்றனர். இந்த வித்தியாசம் கமலுக்கு தெரிந்திருக்கும். அவர் பிழையாக இந்து தீவிரவாதம் என்று கூறி இருக்கலாம். அது பிழையாக இருப்பின் அதை கூறி வருத்தம் தெரிவிப்பது நன்றாக இருக்கும்.

காந்தியை கொன்றது இந்துத்துவா தீவிரவாதம். 
இன்று பல கொலைகளை கொண்டாடுவது இந்துத்துவா தீவிரவாதம். 
கமலை கொல்ல வேண்டும் என்பதுவும் இந்துத்துவா தீவிரவாதமே. 
ஏன் இந்தியை திணிப்பதுமே இந்துத்துவா தீவிரவாதத்தின் ஒரு அங்கமே. 

இந்துத் தீவிரவாதம், இசுலாமிய தீவிரவாதம், பௌத்த தீவிரவாதம் என்ற சொற்றோடர்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எது, யார் காரணமோ அதை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும். தீவிரவாதத்தை பொதுமைப்படுத்தினால் அது மற்றவர்கள் மனதை புண்படுத்தும். மற்றவர்களையும் தீவிரவாதம் பக்கம் தள்ளும் வாய்ப்புண்டு என்பதை அனைவரும் புரிந்து இவற்றை தவிர்ப்போம். அதே நேரத்தில் தீவிரவாதங்களுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவோம்.

என்றும் மனிதமுடன் 
இராச.புரட்சிமணி 

புதன், 4 அக்டோபர், 2017

தமிழை சிதைப்பது சரியா?


நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழை சிதைக்கின்றோம். பிற மொழி சொற்களை தமிழில் ஏற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிற மொழி எழுத்துக்களை தமிழில் ஏற்பது என்பது தமிழை சிதைக்கும் செயலாகும்.

பிற மொழி வார்த்தைகளை  தமிழில் எழுதும் பொழுது நாம்  '', '', 'க்ஷ', '' ,'ஸ்ரீ', ''  என்ற கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.

சமசுகிருத, பிராகிருத வார்த்தைகளுக்கு ஏற்ற ஒலியோசை கிடைக்க நாம் அந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். இது அவசியம் அற்றது. நீங்கள் ஆங்கிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் பிற மொழி எழுத்துக்களை அவர்கள் ஏற்பதில்லை. நாம்  கிரந்த எழுத்துக்களை எழுதி தமிழை சிதைக்க வேண்டாம் என்று அனைவரையும்  கேட்டுக்கொள்கிறேன்.

சமஸ்கிருதம்  என்று எழுதாமல் சமசுகிருதம்  என்றே எழுதலாம்
மஹாத்மா என்று எழுதாமல் மகாத்மா என்றே எழுதலாம் 
ஜப்பான் என்று எழுதாமல் சப்பான் என்றே எழுதலாம் 
 ஸ்ரீ ரங்கம் என்று எழுதாமல் திருவரங்கம் என்றே எழுதலாம்
பக்ஷி என்று எழுதாமல் பட்சி என்றே எழுதலாம்
ஹரி என்று எழுதாமல் அரி  என்றே எழுதலாம்
ஆயிஷா என்று எழுதாமல் ஆயிசா என்றே எழுதலாம்

நன்றி 

புதன், 29 மார்ச், 2017

எங்கே என் தலைவன்? பகுதி 2

மக்கள் எப்படிப்பட்ட தலைவனை எதிர்பார்க்கின்றனர்?

ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள்  ஒரு நல்ல தலைவனை எதிர்பார்க்கிறார்கள். அதாவது அவன் நல்லவனாக இருக்கவேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், ஊழல் செய்யாதவனாக இருக்க வேண்டும், மக்கள் (தங்கள்) பிரச்சனைகளை  தீர்ப்பவனாக இருக்க வேண்டும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இன்று இப்படிப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. அதே நேரத்தில் தவறு செய்பவர்களையும், ஊழல் செய்பவர்களையும், சாதி மத அரசியல் செய்பவர்களையும்  ஆதரிக்கும் மக்களும் இருக்கின்றனர். ஒரு நல்ல தலைவன் வரும்பொழுது இவர்களில் பலரும் நல்ல தலைவனுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


இதை கருத்தில் கொண்டுதான் இப்பொழுது இருக்கும் சில தலைவர்களும்  கறை படிந்த தங்கள் கட்சியை சீர்திருத்தம் செய்வதாக தெரிகிறது. ஆனால் மக்கள் இவர்களை  ஏற்றுக்கொள்வார்களா எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் என்ன செய்வது?

தாங்கள் எதிர்பார்க்கும்  தலைவன் இல்லாதபொழுது இருக்க்கின்ற ஒருவனை தலைவனாக ஏற்பது அல்லது அரசியலில் நம்பிக்கை இழப்பது என்பதுதான் மக்களின் முன்னே இருக்கும் இரு வாய்ப்புகள்.

இது இரண்டுமே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. வேறு என்னதான் செய்வது?

அது தானாகவே தலைவனாக முற்படுவது. ஆம் நல்லது செய்ய நினைப்பவன் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.


பணம் படைத்த, பிரபலாமான ஒருவனால்தான் ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்த முடியும். பிறருக்கு இது மிகவும் கடினம். பணம் படைத்த பிரபலமான ஒருவன் நல்லவனாக, நல்ல கொள்கைகளை உடையவனாக இருக்கும்  பட்சத்தில் அவனை  மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அப்படிப்பட்டவன்  இங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லை. 

பணம் இல்லாத பிரபலமாகதவன் அமைதியாக இருந்துவிடலாமா?
கூடாது அவனும் அதற்கான முயற்சியில் இறங்கவேண்டும். இது சாதாரண விடயம் அல்ல. அதே நேரத்தில் வேறு வழியும் இல்லை.அப்படி ஒருவன் வந்தாலும் மக்களின் ஆதரவு இல்லை என்றால் அவன் கதியும் மக்கள் கதியும் கேள்விக்குறிதான். இங்கே மக்கள் தான் மாபெரும் சக்தி. அவர்கள் ஆதரித்தால் தான் மாற்றம் நிகழும்.


யாராவது ஒருவன் வருவான் என எதிர்பார்ப்பதை விட ஏன் நாமே அந்த முயற்சியை எடுக்க கூடாது?. நல்லவனாகவும் நல்ல கொள்கைகளையுடவன் யாராகினும் மக்கள் ஏற்பார்கள் என்றே எண்ணுகிறேன். 

நாம் நினைக்கும் மாற்றத்திற்காக ஏன் நாமே களம் காண கூடாது?
நல்லவன் வருவான் நல்லாட்சி தருவான் என்று கனவு காண்பதைவிட ஏன் அந்த நல்லவனாக நல்லாட்சி தருபவனாக  நாம் இருக்க கூடாது?

உண்மையான, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை நம்மால் தர முடியாதா?

சாதி மத இன  வேறுபாடுகளை கடந்த ஒரு நல்லாட்சியை தரமுடியாதா?

முடியும் என்பவர்கள் களத்தில் குதித்து ஒரு கட்சியை ஆரம்பியுங்கள் அல்லது எம்மோடு  இணையுங்கள்.

செவ்வாய், 21 மார்ச், 2017

எங்கே என் தலைவன்?

தமிழகத்தில்  தலைவனுக்கான தேடல் இருப்பதாக இன்று பேசப்படுகிறது.சமீபத்திய விகடன் சர்வேயில் 44.4% இளைஞர்கள் இதில் இருப்பவர்கள் யாரும் எங்கள் தலைவர் இல்லை என்று கூறியுள்ளனர். இங்கே தலைவர்களுக்கா பஞ்சம்? அப்படி இருந்தும் ஏன் இந்த தேடல்? 

தமிழர்கள் பெரும்பாலும் அம்மா அல்லது கலைஞர் என்று வாக்களித்து வந்துள்ளனர். அம்மாவின் இறப்பும் கலைஞரின் ஓய்வும் தமிழகத்தில் தலைவனுக்கான  வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.


ஒருசில பிரபலங்கள் தலைவருக்கான வெற்றிடம் தமிழகத்தில் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் சிலரை ஆதரிப்பதால் அவ்வாறு கூறுகின்றனர்.  ஏன் இனில்  தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் ஆதரவளிப்பவர்கள் உள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் இன்று இருக்கும் எந்த தலைவரையும் ஆதரிக்க விரும்பவில்லை 

இன்று தமிழகத்தில் இருக்கும் எந்த ஒரு  தலைவர் பற்றி சிந்தித்தாலும் ஒரு சில நல்லவிடயங்கள் தோன்றினாலும் ஒரு சில கெட்ட விடயங்களும் கண் முன் வருகிறது. இதனால் தான் பெரும்பாலானவர்கள் வேறு தலைவரை தேடுகின்றனர்.

வாரிசு அரசியலை சிலர் எதிர்க்கின்றனர், திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதை சிலர் எதிர்க்கின்றனர்.  இவர்கள் தான் சுலபமாக அரசியலுக்கு வர முடிகிறது. 

இவர்களை தவிர யார் அரசியலுக்கு வரமுடியும்? மாபெரும் பணக்காரர்கள் அரசியலுக்கு வரமுடியும்.பிறரால் அரசியலுக்கு வரமுடியுமா என்றால் மிகவும் கடினம் என்றே சொல்லவேண்டும்.

ஏன் எனில் அரசியலுக்கு தேவை பணம். பணம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது.  அரசியல் என்பதே பணம் படைத்தோருக்கு என்றாகிவிட்டது.இதனால் தான் வசதியற்றவர்கள் அரசியலுக்கு வருவதில்லை.

யார் வேண்டுமானாலும் ஒரு கட்சியில் சேரலாம் ஆனால் ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்பது பிரபலங்கள் மற்றும் பணம் படைத்தவர்கள் தவிர்த்து பிறருக்கு மிக மிக கடினம். 

பணம் படைத்தவர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் பிரபலம் அல்லாத பட்சத்தில் அவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்கள் பிரபலங்களை விலைக்கு வாங்கும் பொழுது அவர்களுக்கும் வெற்றி சாத்தியமே.

மக்கள் எப்படிப்பட்ட தலைவனை எதிர்பார்க்கின்றனர்?
அப்படிப்பட்ட தலைவன் வர வாய்ப்புள்ளதா?
Related Posts Plugin for WordPress, Blogger...