வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 12 மார்ச், 2013

ஈழப்பிரச்சனையில் இந்தியாவிற்கு என்ன தண்டனை? இனி போராட்டம் எப்படி இருக்க வேண்டும்? இந்தியா ஈழப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை  என்றே நான் கூறுவேன். இந்தியா  நடந்த போரில் இலங்கைக்கு உதவியது என்பது உண்மையானால் இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் போர்க் குற்றத்திற்கான  தண்டனையை பெற வேண்டும் அல்லவா? அதுதானே முறை?

கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கு  அதிக தண்டனை என்று கூறுவார்கள் அப்படி பார்க்கையில் இந்தியாவிற்கும்தானே தண்டனை தரவேண்டும்?

உண்மையில் இந்தியாவிற்கு தண்டனை தரவேண்டும். ஆனால் இந்தியா என்ன தவறு செய்தது? நாட்டு மக்கள் என்ன தவறு செய்தார்கள்? தவறை செய்ததெல்லாம் இந்தியாவை ஆண்டவர்கள் செய்தது.  

எனவே இந்தியாவிற்கு தண்டனை என நான் கூறுவது அப்பொழுது ஆட்சியில் இருந்த தலைவர்களுக்கு தண்டனை தரப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.

இந்த கருத்தை வழிமொழிய தமிழகத்தில் ஒரே ஒரு அரசியல் கட்சிக்காவது துணிவுண்டா?

இலங்கையை குற்றம் சொல்லும் அரசியல்கட்சிகள் ஏன் இந்திய தலைவர்களை குற்றம் சொல்ல தயங்குகின்றன? 

போராட்டம் செய்தால் உணமையாக போராடவேண்டும். மனிதத்திற்காக போராடவேண்டும்.  அதை விடுத்து ஒருபுறம் இந்திய அரசு போருக்கு உதவியது என்று கூறிக்கொண்டு மறுபுறம் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது என்னைப்பொருத்தவரை முட்டாள்தனம். 

மனிதத்திற்கு முன்பு நாடோ,மொழியோ,இனமோ எதுவும் முக்கியமல்ல. மனிதகுலத்திற்கு எது  நல்லதோ அது மட்டுமே முக்கியம்.

என்னைப் பொருத்தவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை தரவேண்டும் அதேபோல இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கும் தண்டனை தரவேண்டும். அதுமட்டுமா தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் இருந்து கொண்டு நாடகம் ஆடிய தலைவர்களுக்கும் தண்டனை தரப்பட வேண்டும் அல்லவா?

இந்த தண்டனையை வேறொரு அமைப்பு தரவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் மறுபுறம் மக்களான  நாமே இத்தண்டனையை தரவேண்டும்.  அரசியலில் உள்ளவர்களை அரசியலில் தனிமைப்படுத்தவேண்டும்.....அவர்கள் தவறை உணர்ந்து கதறி அழும் வரை....பிராயச்சித்தம் தேடும்வரை.

முதலில் ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தர முயல்வோம். 

சரி இப்பொழுது என்ன செய்யலாம்?
மாணவர்கள் போராட்டம் சூடுபிடித்து விட்டது. உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதமாக இருக்கவேண்டுமே  ஒழிய சாகும்வரை உண்ணாவிரதம் என்பது ஏற்ப்புடையதல்ல.  அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் தமிழகத்தில் இருக்க கூடாது. டெல்லியில் பாராளுமன்றத்திற்கு  முன்பு இருக்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் பொழுது அது ஒட்டுமொத்த இந்தியாவையும் சென்றடையும். 

காங்கிரஸ் அரசு இலங்கைக்கு உடந்தையாய் இருந்திருந்தாலும்  ஒட்டுமொத்த இந்தியர்களின் ஓட்டுக்கு,கேள்விக்கு பயந்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி அழுத்தத்தை ஏற்ப்படுத்த வேண்டும். இது நடக்க  ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நம்மால் முடிந்தவரை விரைவில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவேண்டும். அனைத்து ஊடகங்களின் உதவியை நாடுங்கள்.....உங்களை தேடிவரும்படி செய்யுங்கள். 

எனவே மாணவர்களே உங்களுக்கு உண்மையில் போராடவேண்டும் என்ற அக்கறை இருந்தால் பாராளுமன்றத்திற்கு முன்பும்,ஐநா சபை முன்பும், ஒவ்வொரு நாட்டு தூதரகத்தின் முன்பும் போராட்டம் நடத்துங்கள்.ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை தரவேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு சம உரிமை,நல்வாழ்வு கிடைக்க துரிதமாக நடவடிக்கை கிடைக்க வேண்டும் என்று போராடுங்கள். விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள். இதுவே எனக்கு தோன்றும் சிறு எண்ணம்.....சிந்தித்து செயல்படுங்கள்.....உங்கள் கருத்தையும் கூறுங்கள்.....

மாணவர்கள் மட்டும்தான் போராடவேண்டும் என்றும்  அல்ல பொதுமக்களும் போராடலாம். எங்கோ நடந்ததற்கு இங்கு ஏன் போராடாவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், இனி எங்கும் இதுபோல் நடக்ககூடாது என்பதை புரியவைக்க வேண்டும் எனபதை மனதில் வையுங்கள்.  போராட  அனைவரும் சாலையில் இறங்க வேண்டுமென்பது அல்ல...உங்களது கருத்தை முடிந்தவரை முடிந்த இடங்களில் பதிவு செய்யுங்கள்....இப்பிரச்சனையை உங்களால் முடிந்த சில பேருக்காவது கொண்டு சொல்ல முயலுங்கள்.

  சரி நான் என்ன செய்யப்போகிறேன் என்றால் இந்த பதிவை எழுதுவது மட்டுமே என்னால் இப்பொழுது இரவு இரண்டு மணிக்கு முடிந்தது....

நாம் போராடுவது இன்று  தமிழர்களுக்காக என்றாலும் இனி நாம் தமிழினத்தையும் தாண்டி  மனிதத்தை முன்னிறுத்தி போராடவேண்டும் எனபதையும் மனதில் வையுங்கள். 

என்றும் மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 

சனி, 9 மார்ச், 2013

ஏன் இந்த முஸ்லீமுக்கு இவ்வளவு பாராட்டு?


பலரும்  இந்த முஸ்லீமை பாராட்டுகின்றனர். அவர் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

சில  முஸ்லிம்கள் அச்சத்திலும்,சில முஸ்லிம்கள் ஆதரித்தும்,பல முஸ்லிம்கள் ஒன்றும் அறியாமலும் இருக்கின்ற பொழுது பாகிஸ்தான் ராணுவத்தினர்  இரண்டு இந்திய ராணுவ வீரர்களின் தலையை துண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் பிரதமர் அஜ்மீர் தர்காவிற்கு (இன்று) வரும் பொழுது வரவேற்ப்பு தரமாட்டேன் என்று தைரியமாக கூறியுள்ளார் அஜ்மீர் தர்காவின் தலைமை பொறுப்பில் உள்ள  திவான் சையத் ஜைனுல் அபெதீன் அலி கான்.

இவருக்குத்தான் இப்பொழுது பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். 

ராணுவ வீரரின்  தலையை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும், இந்தியர்களிடமும்,சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடமும் பாகிஸ்தான் பிரதம மந்திரி மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும், அதை செய்யாததால் அவரை நான் வரவேற்க போவதில்லை என்று சுபி வழியை பின்பற்றும் திவான் தெரிவித்துள்ளார்.  

திவான் தான் பிற நாட்டு தலைவர்களை வரவேற்ப்பது  வழக்கம். இவரின் இந்த முடிவு இசுலாம்  என்று சொல்லி இந்திய முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை பாக்கிஸ்தானிற்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.

இவர் இப்படி பேசியது  பொதுமக்கள் மத்தியில் இவருக்கு நற்பெயரை வாங்கிதந்துள்ளது. அமைதியாக இருக்கும் பல நல்ல முஸ்லிம்களின் குரலாகவே இதை பலரும் பார்க்கின்றனர். 

முஸ்லிம்கள் பலரும் தங்கள் மனிதநேய,மதச் சார்பற்ற  கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க வேண்டும்.மதத்தையே கட்டிக்கொண்டு அழாமல் மனித நேயத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

திவான் சையத் ஜைனுல் அபெதீன் அலி கான் அவர்களின் இந்த செயல் அவரின் தனிப்பட்ட எதிர்ப்பாக இருந்தாலும் இது பாரட்டுக்குரியது. நமது  பாராட்டையும் அவருக்கு  பதிவு செய்வோம்.

என்று மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 


Related Posts Plugin for WordPress, Blogger...