வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 27 ஜூலை, 2013

ஏன் இந்த ஆரிய திராவிட, இந்து இசுலாம், தலீத் சாதி இந்து அரசியல்?


நம்மில் பல பிரிவுகளை உண்டாக்கி நம்மை நாம் அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது கூட தெரியாத தலைவர்களையும் மக்களையும் எண்ணி எமக்கு வேதனையே மிஞ்சுகிறது.

ஆரிய  -திராவிட அரசியல் செய்து  பிராமணர்களின் மனதை புண்ணாக்கி விட்டோம், இன்றும் இது தொடர்கிறது .

இந்து- இசுலாம் அரசியல் செய்து இந்தியாவை உடைத்து விட்டோம், இப்பொழுது இது வேறு உருவம் எடுக்கின்றது.இந்து இசுலாம் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்து விட்டோம்.

தலீத் -சாதி இந்து அரசியல் செய்து இப்பொழுது இரு சமுதாயத்தினர் மனதிலும்  புண்ணை விதைக்கின்றோம்.

அடுத்து என்ன செய்யலாம்?
கவுண்டர்-உடையார் -படையாட்சி-கள்ளர்-மறவர்-தேவர்-பிள்ளை அரசியல் செய்வோமா?
தேவேந்திர குல வேளாளர்-பள்ளர்- பறையர்-அருந்ததியர் அரசியல் செய்வோமா?
சொல்லுங்கள் என் சொந்தங்களே எந்த மாதிரி அரசியல் அடுத்தது நாம் செய்யலாம்?
நம்மை நாமே அழித்துக்கொள்வோம் வாருங்கள்.

நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா?
ஒன்று: ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  ஒட்டு மொத்த சமுதாயத்தையும் நாம் தவறாக பார்க்கிறோம்.

இரண்டு:ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  அச்சமூகத்தை சார்ந்த பலரும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.

இதை மாற்றி மாற்றி நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
இது ஒரு கொடிய குற்றம். இதுவே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.
எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்  என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.


ஜாதி,மதங்கள் இருக்கும் வரை அதனால் நமக்கு பிரச்சனை இருக்கும்.
கேட்டால்  என் ஜாதிக்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள். 
என் மதத்திற்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள்.

இன்று ஜாதியை ஒழிக்கிறேன் பேர்வழிகள் சில மதங்களை ஆதரித்தும் சில மதங்களை எதிர்த்துமே செயல்படுகிறார்கள்.

ஜாதிக்கொரு சுடுகாட்டை எதிர்க்க தெரிந்தவர்களுக்கு மதத்திற்கு ஒரு சுடுகாடு ஏன்? என்ற பகுத்தறிவு கேள்வி எழாமல் போனது ஏன்?

ஜாதி கலப்பு திருமணம் பற்றி பேசுபவர்கள், மதங்களுக்குள் கலப்பு மணம் பற்றி பேச மறுப்பது ஏன்?

ஜாதியை விட மிகவும் கொடுமையான மதத்தை இவர்கள் எப்படி ஆதரிக்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.

ஜாதியை விட மதம் பன்மடங்கு கொடுமையானது என்ற தொலை நோக்கு பார்வை நம்மிடம் இல்லை .காரல் மார்க்ஸ் பெயரால் கட்சி  நடுத்துபவர்களுக்கு கூட இது தெரியாமல் போன மாயம் என்ன?

ஜாதியையும் மதத்தையும் ஒழிப்போம் என்று கூற இங்கே எந்த தலைவருக்கும் மனதில்லை. ஏன் என்றால் அப்படி கூறினால் அரசியல் செய்யமுடியாதே.

ஜாதியையும் மதத்தையும் காட்டாமல் இட ஒதுக்கீட்டிற்கு சரியான முறையை கண்டுபிடிக்க வேண்டும்.முடியாததில்லை... முயற்சிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு ஜாதி,மத  மக்களுக்காகவும் போராட நினைக்கும் தலைவர்களின்  எண்ணம் நல்லதுதான். ஆனால் ஒரு ஜாதி,மத  மக்கள் நலுனுக்கான போராட்டத்தில் பிற ஜாதி,மத மக்களை நாம் எதிரியாக்கி விடுகிறோம்  
என்பதை இவர்கள் மறந்துவிடக்  கூடாது.

நம் சமுதாய நலனும் பேண வேண்டும் அதை பிற   சமூதாயத்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களையும் இதில் ஈடுபடுத்தி செயலாற்ற வேண்டும். இது முடியாததல்ல முடியும்.

இதைவிட சிறப்பான வழி அனைவரயும் மனிதனாக பார்ப்பதுதான்.
மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர ஒருவனது ஜாதி மதத்தை பார்க்க கூடாது என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும்.என் ஜாதி,என் இனம்,என் மதம் என்று பாராமல் அனைவரயும் மக்கள் என்ற பொதுப் பார்வையில் பார்த்து  திட்டங்களை நாம் வகுக்க வேண்டும,.  ஜாதி மதங்கள்  இருந்ததற்கான தடம் கூட தெரியாமல்  இவற்றை அழித்தொழிக்க வேண்டும்.

ஜாதியை நேசிப்பவர்களும்,மதத்தை நேசிப்பவர்களும்,அறியாமையில் இருப்பவர்களும்  இதற்க்கு முட்டு கட்டை போடுவார்கள் தான். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.புரிதலே மனிதத்தின் ஆணிவேர்.

எல்லா ஜாதி மதங்களிலும் ஏழைகளும் உள்ளனர் பணக்காரர்களும் உள்ளனர். எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்.  அனைத்து ஜாதி மத ஏழை மக்களுக்காகவும் நாம் பாடுபடவேண்டும்.அனைத்து ஜாதி மத நல்லவர்களையும் நாம் கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.கெட்டவர்களை சீர்திருத்த வேண்டும்.  இதை செய்தால் இந்தியா,உலகம்  அமைதியாக இருக்கும் இல்லையேல்.................
Related Posts Plugin for WordPress, Blogger...