வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 12 நவம்பர், 2016

மோடி செய்தது சாதனையா? மோசடியா?


மோடி கருப்புப்  பணத்தை ஒழித்தார் என்று நினைக்கிறீர்களா? அவர் கருப்புப்  பணத்தை வைத்திருந்தவர்களை தப்பிக்க வைத்திருக்கிறார் என்பதே  மாபெரும் உண்மை.  அதைவிட ஒரு மாபெரும் உண்மை கீழே.

கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் உழைத்து சம்பாதிக்கவில்லை. ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி சம்பாதித்தனர். அரசாங்கத்தை ஏமாற்றி பதுக்கினர்.அவர்கள் பணத்தை பணமாக மட்டும் வைத்திருக்கவில்லை நகை, வீடு, நிலம் என மாற்றி விட்டனர். சிலப்பலர் வெளி நாட்டிற்கும் கொண்டு சேர்த்துவிட்டனர். இப்பொழுது பணத்தை செல்லாததாக மாற்றியதால் அவர்களுக்கு குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும். அரசியல்வாதிகளும் பெரு வியாபாரிகளும் தான் கருப்பு பணத்தை வைத்துள்ளனர்.

ஒருவன் தவறு செய்தால் என்ன செய்யவேண்டும்? தண்டனை தர வேண்டும் (திருந்தவாவது). இங்கே இவர்களுக்கு தண்டனை தரப்பட்டதா என்றால் இல்லை.

 பதுக்கிய பணம் செல்லாததாக மாறியதே அவர்களுக்கு தண்டனை என்று நினைக்காதீர்கள்.பதுக்கிய கருப்பு பணத்தையும் சிலபலர் வெள்ளையாக மாற்றிவிடுவர். வெள்ளையாக  மாற்றாதவர்களுக்கு நட்டம் மட்டுமே.  இந்த நட்டத்தை அவர்கள் விரைவில் இலாபமாக மாற்றிவிடுவர்.

இப்பொழுது சொல்லுங்கள் மோடி என்ன செய்துள்ளார். தவறு செய்தவர்களுக்கு தண்டனை தராமல் தப்பிக்க வைத்துவிட்டார். இப்படி தவறு செய்தவர்கள் குறைந்த பட்சம் 2% முதல் மிக மிக அதிக பட்சமாக 20%. இவர்கள் அனைவரையும் தப்பிக்க வைத்ததோடு குறைந்தபட்சம் 80% முதல் 98% மக்களுக்கு தண்டனை அளித்து விட்டார்.  (உண்மையில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் அந்த2% முதல்  20% தான்)

இன்று சாப்பாட்டிற்கு வழியில்லாமல், செலவுக்கு காசில்லாமல், மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க முடியாமல்,  கல்யாணம் பண்ண முடியாமல் எத்தனை பேர் படாத பாடு படுகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.

ஆனால் இந்த தண்டனை அளிக்கப்பட மக்களில் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால்  கருப்பு பணம் ஒழிந்தது. கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் ஒழிந்துவிட்டார்கள் என்று. அது உண்மையல்ல என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.இவர்களை பாராட்ட வேண்டும். கருப்பு பணம் ஒழிந்தால் நாடு முன்னேறிவிடும் என்று நம்பிக்கையில் இவர்கள் படும் சிரமத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.


கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் இத்துடன் திருந்துவார்களா என்றால் இல்லை. இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவர். எதிர்காலத்திலும் இதே போலவே தொடருவர். ஏன் எனில் கருப்பு பணத்தால் அவர்கள் இழந்ததை விட அடைந்ததே அதிகம்.


 மோடி மக்களை நன்றாக  முட்டாளாக்கி விட்டார். தவறு செய்தவர்களை தப்பவிட்டுவிட்டு தவறு செய்யாதவர்களை தண்டித்ததோடு மட்டுமல்லாமல் இருவர் மனதிலும் நல்ல பெயரை வாங்கி விட்டார். தப்பித்தவனுக்குத்தான் தெரியும் அப்பாடா மோடி நம்மள விட்டுட்டாரு என்று. பொதுமக்கள் அப்பாடா கருப்பு பணத்தை மோடி ஒழித்துவிட்டார் என்று தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் ஏமாளியாக.

இப்பொழுது இருவர் ஓட்டுமே மோடிக்குத்தான்.  அதுமட்டுமல்லாமல் பல கோடி ரூபாய் பாஜகவிற்கு நன்கொடையாக போக வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் இந்த நடவடிக்கையின் மூலம் மோடி ஒழித்தது கருப்பு பணத்தை என்பதை விட கள்ள நோட்டுக்களை என்பதே சரி. இது அவர்களுக்கும் தெரியும் இந்த நடவடிக்கையால் முற்றிலும் ஒழிய போவது  கள்ள நோட்டுக்கள் என்பது  (அதுவும் சிலபல மாதங்களுக்கு)

கள்ள நோட்டுக்களை ஒழித்தோம் என்று கூறுவதை விட கருப்பு பணத்தை ஒழித்தோம் என்று கூறினால் தான் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும் என்பதால் தான் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டது என்று அவர்கள் விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள்.

 உண்மையை உரக்க கூறாமல் பொய்யுரைப்பது சரியா? அதோடு நிற்காமல் இவர்கள் நேர்மையோடு இல்லாமல் மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்ப்புடையதா?

கருப்பு பணம் வைத்திருந்தவர்களை தப்ப வைத்ததும், கள்ளநோட்டுக்களை ஒழித்ததை விளம்பரப்படுத்தாமல் கருப்பு பணத்தை ஒழித்தோம், கருப்பு பணம் வைத்திருந்தவர்களை தண்டித்து விட்டோம் என்பதும் மோசடியா இல்லையா?


உங்களில் சிலர் இது கொஞ்சம் காலத்துக்குத்தான் அப்புறம் மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை என்று நினைப்பீர்கள். அப்படி இருந்தால் இதை எழுத வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. நாட்டின் நலனிற்காக மக்களின் நலனிற்காக இந்த சிரமங்களை அனைவரும் பொறுத்துக்கொள்வோம் எனலாம். இவ்வளவு சிரமங்களுக்குப்பிறகும் பழைய குருடி கதவை திறடி என்பதை போல கள்ள நோட்டும் வரும், கருப்பு பணமும் பெருகும்,மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்று தெரிந்தும் மோடி அரசு தன்னுடைய சுய நலத்திற்காக,ஓட்டுக்காக இவ்வாறு செய்து மக்களை முட்டாளாக்குவது சாதனையா  அல்லது   மோசடியா?

 உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

(சிலபல கருத்துக்களை நீளம் கருதி இப்பதிவில் தவிர்த்துள்ளேன்.)

மக்களுக்கு இது  நன்மையளிக்கும் செயல் என்பது ஒரு மாயை.உண்மையில் மக்களுக்கு பாதிப்பே. அடுத்த பதிவில் உங்கள் மாயை விலகும்....நீங்கள் விரும்பினால். இந்த நடவடிக்கையால் என்ன நன்மைகள் கிடைக்க உள்ளன என்று நீங்கள் கூறினால் கலந்துரையாட வாய்ப்பாக அமையும். 

குறை கூறுவது எளிது இதற்க்கு என்ன மாற்று உங்களிடம் உள்ளது என்று கேட்டால் மடை திறந்த வெள்ளம் போல் மாற்று வழியும் அதற்க்கு அடுத்த பதிவில் வரும்...நீங்கள் விரும்பினால் மட்டும். உங்களிடம் மாற்று வழி இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.


என்றும் மனிதமுடன் 
இராச.புரட்சிமணி 

Related Posts Plugin for WordPress, Blogger...