ஒரு மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை அடையாளப்படுத்துவது சரியான செயல் அல்ல. அவர் கூறிய கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் "இந்து தீவிரவாதம்" என்று கூறியது தவறு. "இந்துத்துவா தீவிரவாதம்" என்பதே சரி.
இந்து என்பது வேறு இந்துத்துவா என்பது வேறு. இந்து என்பது இந்து மதத்தை சார்ந்த அனைத்து மக்களை குறிக்கும் சொல். சட்டப்படி அது சீக்கியர்களையும், சமணர்களையும் குறிக்கும் சொல். இந்துத்துவா என்பது ஒரு கருத்தியல். அந்த கருத்தியலை நிறைவேற்ற சிலர் வன்முறைகளிலும், தீவிரவாதத்திலும் ஈடுபடுகின்றனர். இந்த வித்தியாசம் கமலுக்கு தெரிந்திருக்கும். அவர் பிழையாக இந்து தீவிரவாதம் என்று கூறி இருக்கலாம். அது பிழையாக இருப்பின் அதை கூறி வருத்தம் தெரிவிப்பது நன்றாக இருக்கும்.
காந்தியை கொன்றது இந்துத்துவா தீவிரவாதம்.
இன்று பல கொலைகளை கொண்டாடுவது இந்துத்துவா தீவிரவாதம்.
கமலை கொல்ல வேண்டும் என்பதுவும் இந்துத்துவா தீவிரவாதமே.
ஏன் இந்தியை திணிப்பதுமே இந்துத்துவா தீவிரவாதத்தின் ஒரு அங்கமே.
இந்துத் தீவிரவாதம், இசுலாமிய தீவிரவாதம், பௌத்த தீவிரவாதம் என்ற சொற்றோடர்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எது, யார் காரணமோ அதை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும். தீவிரவாதத்தை பொதுமைப்படுத்தினால் அது மற்றவர்கள் மனதை புண்படுத்தும். மற்றவர்களையும் தீவிரவாதம் பக்கம் தள்ளும் வாய்ப்புண்டு என்பதை அனைவரும் புரிந்து இவற்றை தவிர்ப்போம். அதே நேரத்தில் தீவிரவாதங்களுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவோம்.
என்றும் மனிதமுடன்
இராச.புரட்சிமணி