இந்தியா ஈழப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை என்றே நான் கூறுவேன். இந்தியா நடந்த போரில் இலங்கைக்கு உதவியது என்பது உண்மையானால் இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் போர்க் குற்றத்திற்கான தண்டனையை பெற வேண்டும் அல்லவா? அதுதானே முறை?
கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கு அதிக தண்டனை என்று கூறுவார்கள் அப்படி பார்க்கையில் இந்தியாவிற்கும்தானே தண்டனை தரவேண்டும்?
உண்மையில் இந்தியாவிற்கு தண்டனை தரவேண்டும். ஆனால் இந்தியா என்ன தவறு செய்தது? நாட்டு மக்கள் என்ன தவறு செய்தார்கள்? தவறை செய்ததெல்லாம் இந்தியாவை ஆண்டவர்கள் செய்தது.
எனவே இந்தியாவிற்கு தண்டனை என நான் கூறுவது அப்பொழுது ஆட்சியில் இருந்த தலைவர்களுக்கு தண்டனை தரப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.
இந்த கருத்தை வழிமொழிய தமிழகத்தில் ஒரே ஒரு அரசியல் கட்சிக்காவது துணிவுண்டா?
இலங்கையை குற்றம் சொல்லும் அரசியல்கட்சிகள் ஏன் இந்திய தலைவர்களை குற்றம் சொல்ல தயங்குகின்றன?
போராட்டம் செய்தால் உணமையாக போராடவேண்டும். மனிதத்திற்காக போராடவேண்டும். அதை விடுத்து ஒருபுறம் இந்திய அரசு போருக்கு உதவியது என்று கூறிக்கொண்டு மறுபுறம் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது என்னைப்பொருத்தவரை முட்டாள்தனம்.
மனிதத்திற்கு முன்பு நாடோ,மொழியோ,இனமோ எதுவும் முக்கியமல்ல. மனிதகுலத்திற்கு எது நல்லதோ அது மட்டுமே முக்கியம்.
என்னைப் பொருத்தவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை தரவேண்டும் அதேபோல இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கும் தண்டனை தரவேண்டும். அதுமட்டுமா தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் இருந்து கொண்டு நாடகம் ஆடிய தலைவர்களுக்கும் தண்டனை தரப்பட வேண்டும் அல்லவா?
இந்த தண்டனையை வேறொரு அமைப்பு தரவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் மறுபுறம் மக்களான நாமே இத்தண்டனையை தரவேண்டும். அரசியலில் உள்ளவர்களை அரசியலில் தனிமைப்படுத்தவேண்டும்.....அவர்கள் தவறை உணர்ந்து கதறி அழும் வரை....பிராயச்சித்தம் தேடும்வரை.
முதலில் ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தர முயல்வோம்.
சரி இப்பொழுது என்ன செய்யலாம்?
மாணவர்கள் போராட்டம் சூடுபிடித்து விட்டது. உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதமாக இருக்கவேண்டுமே ஒழிய சாகும்வரை உண்ணாவிரதம் என்பது ஏற்ப்புடையதல்ல. அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் தமிழகத்தில் இருக்க கூடாது. டெல்லியில் பாராளுமன்றத்திற்கு முன்பு இருக்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் பொழுது அது ஒட்டுமொத்த இந்தியாவையும் சென்றடையும்.
காங்கிரஸ் அரசு இலங்கைக்கு உடந்தையாய் இருந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியர்களின் ஓட்டுக்கு,கேள்விக்கு பயந்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி அழுத்தத்தை ஏற்ப்படுத்த வேண்டும். இது நடக்க ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நம்மால் முடிந்தவரை விரைவில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவேண்டும். அனைத்து ஊடகங்களின் உதவியை நாடுங்கள்.....உங்களை தேடிவரும்படி செய்யுங்கள்.
எனவே மாணவர்களே உங்களுக்கு உண்மையில் போராடவேண்டும் என்ற அக்கறை இருந்தால் பாராளுமன்றத்திற்கு முன்பும்,ஐநா சபை முன்பும், ஒவ்வொரு நாட்டு தூதரகத்தின் முன்பும் போராட்டம் நடத்துங்கள்.ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை தரவேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு சம உரிமை,நல்வாழ்வு கிடைக்க துரிதமாக நடவடிக்கை கிடைக்க வேண்டும் என்று போராடுங்கள். விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள். இதுவே எனக்கு தோன்றும் சிறு எண்ணம்.....சிந்தித்து செயல்படுங்கள்.....உங்கள் கருத்தையும் கூறுங்கள்.....
மாணவர்கள் மட்டும்தான் போராடவேண்டும் என்றும் அல்ல பொதுமக்களும் போராடலாம். எங்கோ நடந்ததற்கு இங்கு ஏன் போராடாவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், இனி எங்கும் இதுபோல் நடக்ககூடாது என்பதை புரியவைக்க வேண்டும் எனபதை மனதில் வையுங்கள். போராட அனைவரும் சாலையில் இறங்க வேண்டுமென்பது அல்ல...உங்களது கருத்தை முடிந்தவரை முடிந்த இடங்களில் பதிவு செய்யுங்கள்....இப்பிரச்சனையை உங்களால் முடிந்த சில பேருக்காவது கொண்டு சொல்ல முயலுங்கள்.
சரி நான் என்ன செய்யப்போகிறேன் என்றால் இந்த பதிவை எழுதுவது மட்டுமே என்னால் இப்பொழுது இரவு இரண்டு மணிக்கு முடிந்தது....
நாம் போராடுவது இன்று தமிழர்களுக்காக என்றாலும் இனி நாம் தமிழினத்தையும் தாண்டி மனிதத்தை முன்னிறுத்தி போராடவேண்டும் எனபதையும் மனதில் வையுங்கள்.
என்றும் மனிதத்துடன்
இராச.புரட்சிமணி