மக்கள் எப்படிப்பட்ட தலைவனை எதிர்பார்க்கின்றனர்?
ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள் ஒரு நல்ல தலைவனை எதிர்பார்க்கிறார்கள். அதாவது அவன் நல்லவனாக இருக்கவேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், ஊழல் செய்யாதவனாக இருக்க வேண்டும், மக்கள் (தங்கள்) பிரச்சனைகளை தீர்ப்பவனாக இருக்க வேண்டும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இன்று இப்படிப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. அதே நேரத்தில் தவறு செய்பவர்களையும், ஊழல் செய்பவர்களையும், சாதி மத அரசியல் செய்பவர்களையும் ஆதரிக்கும் மக்களும் இருக்கின்றனர். ஒரு நல்ல தலைவன் வரும்பொழுது இவர்களில் பலரும் நல்ல தலைவனுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இதை கருத்தில் கொண்டுதான் இப்பொழுது இருக்கும் சில தலைவர்களும் கறை படிந்த தங்கள் கட்சியை சீர்திருத்தம் செய்வதாக தெரிகிறது. ஆனால் மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்வார்களா எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாம் என்ன செய்வது?
தாங்கள் எதிர்பார்க்கும் தலைவன் இல்லாதபொழுது இருக்க்கின்ற ஒருவனை தலைவனாக ஏற்பது அல்லது அரசியலில் நம்பிக்கை இழப்பது என்பதுதான் மக்களின் முன்னே இருக்கும் இரு வாய்ப்புகள்.
இது இரண்டுமே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. வேறு என்னதான் செய்வது?
அது தானாகவே தலைவனாக முற்படுவது. ஆம் நல்லது செய்ய நினைப்பவன் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.
பணம் படைத்த, பிரபலாமான ஒருவனால்தான் ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்த முடியும். பிறருக்கு இது மிகவும் கடினம். பணம் படைத்த பிரபலமான ஒருவன் நல்லவனாக, நல்ல கொள்கைகளை உடையவனாக இருக்கும் பட்சத்தில் அவனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அப்படிப்பட்டவன் இங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லை.
பணம் இல்லாத பிரபலமாகதவன் அமைதியாக இருந்துவிடலாமா?
கூடாது அவனும் அதற்கான முயற்சியில் இறங்கவேண்டும். இது சாதாரண விடயம் அல்ல. அதே நேரத்தில் வேறு வழியும் இல்லை.அப்படி ஒருவன் வந்தாலும் மக்களின் ஆதரவு இல்லை என்றால் அவன் கதியும் மக்கள் கதியும் கேள்விக்குறிதான். இங்கே மக்கள் தான் மாபெரும் சக்தி. அவர்கள் ஆதரித்தால் தான் மாற்றம் நிகழும்.
யாராவது ஒருவன் வருவான் என எதிர்பார்ப்பதை விட ஏன் நாமே அந்த முயற்சியை எடுக்க கூடாது?. நல்லவனாகவும் நல்ல கொள்கைகளையுடவன் யாராகினும் மக்கள் ஏற்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
நாம் நினைக்கும் மாற்றத்திற்காக ஏன் நாமே களம் காண கூடாது?
நல்லவன் வருவான் நல்லாட்சி தருவான் என்று கனவு காண்பதைவிட ஏன் அந்த நல்லவனாக நல்லாட்சி தருபவனாக நாம் இருக்க கூடாது?
உண்மையான, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை நம்மால் தர முடியாதா?
சாதி மத இன வேறுபாடுகளை கடந்த ஒரு நல்லாட்சியை தரமுடியாதா?
முடியும் என்பவர்கள் களத்தில் குதித்து ஒரு கட்சியை ஆரம்பியுங்கள் அல்லது எம்மோடு இணையுங்கள்.