பல குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் பொழுது மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய குரல் கொடுக்கும் பொழுது ஏன் அஜ்மல் கசாப் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது? நாமெல்லாம் மனிதர்கள் தானே? காட்டு மிராண்டிகள் இல்லையே?
உணர்ச்சிவசப்படாதீங்க தோழர்களே, மேற்கூறியது நான் கூறியது அல்ல. இந்த தொனியில் ஒரு மனிதாபமுல்லவர் பதிவிட்டுள்ளார்.
தூக்கு தண்டனை குற்றத்தை பொறுத்து அமையவேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தவன்தான் நான். பேரறிவாளன் உட்பட மூன்று தமிழர்கள் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் எழுந்த பொழுது.
மனதளவில் மிகவும் பாதிப்படைந்தேன். சரியான முடிவிற்கு என்னால் வரவில்லை.
அவர்கள் குற்றம் புரிந்திருக்கவில்லை குற்றத்திற்கு தன்னை அறியாமல் உடந்தையாக இருந்தார்கள் என்று சிலர் வாதிடும்பொழுதுதான் இந்த உண்மையை நீதிமன்றத்தில் உறுதிசெய்து அவர்களது தூக்கு தண்டனையை யாராவது தடுக்க வேண்டும் என்று மனதளவில் ஒரு முடிவிற்கு வந்தேன்.
மீண்டும் சொல்கிறேன் அவர்கள் தங்களை அறியாமல் கொலைக்கு உடந்தையாக இருந்திருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை வழங்கக்கூடாது.
அஜ்மல் கசாப் விடயம் முற்றிலும் வேறானது. அவன் தான் செய்வது என்ன என்பதை தெரிந்தே பல இந்தியர்களை கொன்று குவித்தான். அவன் கொலை செய்தான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு. அதை அவனும் ஒப்புக்கொண்டான். அவன் இந்தியாவின் மீது போர் புரிந்ததாகத்தான் தீர்ப்பு கூறுகிறது. மேலும் இது அவர்களைப்பொறுத்த வரை புனிதப்போர்.
அவர்கள் வரும்பொழுதே தெரியும் அவர்கள் இங்கே இறப்பார்கள் என்று. அவர்கள் தற்கொலைப் படைகள்தான். இந்தப் புனித்தப்போரில் இறந்தால் சுவனத்தில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றே அவர்கள் வந்திருப்பார்கள். அவன் புனிதப்போருக்கு செல்வதாக தன் தாயிடம் கூறி ஆசி கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
எனவே அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது எனபது அவனது உல்லாச வாழ்க்கைக்கு இந்தியா தடையாக இருக்கும் என்பதாகவே நான் கருதுகிறேன்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றாலும் நடைமுறையில் உண்மையில் அப்படி இல்லை.
ஜாதி ரீதியாக, மத ரீதியாக சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் இந்தியருக்கு ஒரு சட்டம் வெளி நாட்டினருக்கு ஒரு சட்டம் என்றே நமது சட்டம் உள்ளது.
பேரறிவாளன் உட்பட அந்த மூன்று பேர் இந்தியர்கள் தானே அப்படி இருக்க இவர்களை அஜ்மல் கசாபினுடன் ஒப்பிடுதல் முற்றிலும் தவறானது. ( சரி இதே தவறை ஒரு இந்தியன் செய்திருந்தால்? குற்றைத்தினை பொறுத்து அவனுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். அது தூக்கா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். )
மேலும் நான் ஏற்க்கனவே குறிப்பிட்டதுபோல் குற்றத்திற்கு தன்னையறியாமல் உடந்தையாய் இருந்ததற்கும் களத்தில் இறங்கி குற்றம் புரிந்த வெளி நாட்டவனுக்கும் வித்தியாசம் உண்டு.
தீர்ப்பு என்ன கூறுகிறது. கசாப் போர் குற்றம் புரிந்ததாக. மனிதாபிமானம் பற்றி பேசுபவர்களிடம் நான் கேட்கிறேன் கசாபிர்க்கு தூக்கு என்பது காட்டு மிராண்டித்தனம் என்றால் நமது நாட்டின் எல்லையைக்கடந்து நம்மை தாக்க வரும் எதிரிகளை கொல்லாமல் விட்டுவிடலாமா? அல்லது நமது வீரர்களை பலி கொடுத்தாவது அவர்களை பிடித்து ஆயுள் தண்டை வழங்க வேண்டுமா? கொலை செய்ய வரும் எதிரிகளிடம் மனிதாபிமானம் பற்றி பேசி புரிய வைக்க முடியுமா?
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கொலை என்பது வேறு போர் என்பது வேறு.
இது நமது தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட போர். கொலைக்கும் போருக்குமான வித்தியாசத்தை புரிந்து கொண்டால் யாரும் கசாபிர்க்கு வக்காலத்து வாங்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.உங்கள் மனிதாபிமானத்தை நான் மெச்சுகிறேன்.அதே நேரத்தில் நீங்கள் இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் கருத்து இருந்தால் தெரியப்படுத்துங்கள் தெரிந்துகொள்வோம்.
ஜாதி, மதம், இனம், மொழி, நாடு இவற்றை கடந்து மனிதம் (முடிந்தால் உயிர்கள்) என்ற ஒரு புள்ளியில் நாம் அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது (மனித நேயம் விரும்பும் அனைவரது) ஆசை. அனைத்து நாட்டையும் ஒன்றாக இணைக்கும் பொழுது போர் என்பதே இருக்காது. (குறைந்த பட்சம் விரோதம் இல்லாமல் இருக்கும் பொழுது)அப்பொழுது போர் பொருட்டு எந்த உயிர்களும் கொல்லப்படாது. அதுவரை போர் நடக்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு நாட்டின் கடமை.
மனிதேயம் ஓங்கி ஒலிக்கட்டும்.....மனித நேயம் காப்பதற்கு மட்டும்.... போரை ஊக்குவிப்பதற்கு அல்ல.
எல்லா உயிர்களுக்கும் மனம் இறங்குவதுபோல் எனது(பலரது) மனம் க்சாபிர்க்காகவும் மனம் இறங்குகிறது. ஆயிரம் தான் இருந்தாலும் அவனும் ஒரு மனிதன், ஒரு உயிர், அவனுக்கும் குடும்பம் உண்டு.அவன் இறப்பும் பலருக்கு துன்பம் தரும் என்பதை மறுப்பதற்கில்லை. புனிதப்போரால் பல கோடி இந்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை தடுப்பது யார் கடமை. சிந்தித்து செயல் படுத்த வேண்டியவர்கள் சிந்திப்பார்களா...புனிதப்போரை தடை செய்வார்களா?
என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி