வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 11 செப்டம்பர், 2014

திருமந்திர விநாயகர் காப்பை ஆறு சமயங்களை ஏற்ப்பதில் என்ன குழப்பம்?


சென்ற பதிவில் திருமந்திரத்தில் ஆறு சமயம் என்ற வரிகள் விநாயகரின் சமயத்தை உள்ளடக்கியது என்று எழுதி இருந்தேன். நண்பர் கோடாங்கி அது தவறானது  திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள்  சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று கூறி உள்ளார்.

திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள் எவை?
நண்பர் கூறுவது போல சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் தான் திருமந்திரம் ஆறு சமயங்களா என்றால் அதற்க்கு என்னுடைய பதில் இல்லை என்பதே.

திருமூலர் உட்சமயம் என்பதில் ஆறு சமயங்களும் புறச்சமயம் என்பதில் ஆறு சமயங்களும் கூறுகிறார். நண்பர் கூறும் ஆறு சமயங்கள் புற சமயங்களில் சிலவாக இருக்கலாம்.

 சரி அந்த ஆறு புற சமயங்கள் எவை என்று கேள்வி எழுகிறது. 

வைணவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனியவாதம் என்று ஒரு உரையாசிரியர் கூறுகிறார்.  இல்லை பைரவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனிய வாதம் அந்த ஆறு சமயங்கள் என்போரும் உளர்.

எனக்கு இவர்கள் கூறியதோடு உடன்பாடு இல்லை.இவைகள் முழுமையான உண்மை இல்லை.
ஏன் எனில் பைரவம் என்பதும் ஒரு வகையில் சிவ வழிபாடே. 

மேலும் வைணவம்,பாஞ்சராத்திரம் சமயங்களும் புறச்சமயங்கள் ஆகா என்றே நினைக்கின்றேன்.என்னைப்பொருத்த வரை சமணம், பௌத்தம் மற்றும் சில சமயங்களை புறச்சமயங்களாக திருமூலர் கூறி இருக்க  வேண்டும். அவை எவை என்பதை மேலும் தேடினால் தான் கண்டறிய முடியும்.

----------------------------------------------------------------------------------------------
திருமந்திரம் கூறும் உட்சமயங்கள் அல்லது அகச் சமயங்கள் எவை?

திருமந்திரம் கூறும் உட்சமயங்களாக  சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் ஆகியவை இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

திருமூலர் உட்சமயம் என்ற அத்தியாயத்தில் ஆறு   சமயங்களை பற்றி கூறுகிறார். இச்சமயங்களை ஒன்றோடொன்று தொடர்புடைய சமயங்களாக, சிவனோடு தொடர்புடைய சமயங்களாக  கூறுகிறார். இவற்றை அவர் அங்கீகரித்து உட்சமயம் என்கிறார்.  

"இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமையம் குழல் கின்ற ஆதி பிரானே"

மேலும் இந்த ஆறு  சமயங்களும்  ஒரே ஊருக்குத்தான் வழி காட்டுகிறது எனவே இந்த ஆறு சம்யங்களுக்குள் இது நல்லது இது  கெட்டது என்று சண்டை வேண்டாம் அவ்வாறு சண்டை இடுவது  நாய் குரைப்பதற்கு சமம்   என்று பின்வரும் பாட்டில் கூறுகிறார்.

ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச் சமயமும்
நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

இதன் மூலம் ஆறு உட்சம்யங்களுக்குள் பூசல் இருந்ததை அறிய முடிகிறது. சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் ஆகிய சம்யங்களுக்குள் பூசல்  இருந்ததா என தெரியவில்லை.  

மேலும் இவைகள் சமயங்கள் தானா என்ற சந்தேகமும் எனக்கு  எழுகிறது. இவையாவும் தத்துவங்களாக தெரிகிறதே தவிர சமயங்களாக அல்ல. சமயம் என்றால் ஒருவரை வணங்குவார்கள், அவர்களுக்கு கோயில் இருக்கும். யோகத்தை தந்த பதஞ்சலியை இன்றளவும் வணங்கும் வழக்கம் உண்டு. ஆனால் பிற தத்துவங்களை தந்தவர்களை வணங்கும் பழக்கம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. மேலும் இவைகளை பெரும்பாலான மக்கள் சமயங்களாக பின்பற்றியதாகவும் தெரியவில்லை.


"இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர்"

என்று திருமூலர் கூறுகிறார். இந்த ஆறு தேவர்கள் மேற்கூறிய தத்துவத்தை தந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அதற்க்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. முற்றிலும் மறுப்பதற்கில்லை.

இந்த தேவர்கள் என்போர் ருத்ரன்,திருமால்,முருகன், கணபதி,சக்தி, ஐயப்பனாக  இருக்கவே வாய்ப்புகள் உண்டு. ஏன் எனில் இவர்களை வணங்கும் சமயங்கள் சிவனை ஏற்றுக்கொள்கின்றன. இவர்கள் சிவனோடு தொடர்புடையவர்கள்.இவர்களை வணங்குபவர்கள் முன்பு இவர் தான் பெரியவர் அவர் தான் பெரியவர் என்று சண்டையிட்டதுமுண்டு.


திருமந்திரம் கூறும் ஆறு அகச்சமயங்கள்
பாசுபதம், மாவிரதம், வைரவம்,சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்று சிலரும் 

சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` என்று சிலரும்

வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்,சௌமியம் என்று சிலரும் கூறுகின்றனர். 

ஆதிப் பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக் கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

என்ற உட்சமய  பாடலின் மூலம் ஹரியையும், சக்தியையும் அங்கீகரிக்கிறார் என்பது புரியும். இதன் மூலம் வைணவமும், சாக்தமும் நிச்சயமாக உட்சமயங்கள் என்ற முடிவிற்கு வரலாம்.

இவற்றோடு தொடர்புடைய பிற சமயங்கள் எவை எனும் பொழுதுதான் கௌமாரம்- கந்தன், காணாபத்தியம்-கணபதி, சௌரம்- சூரியன், சௌமியம்- ஐயப்பன்  என்பவைகளாக இருக்க கூடும் என்ற முடிவிற்கு வரமுடிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------
சரி விநாயகரை வணங்கும் பழக்கம் தமிழகத்தில் திருமந்திர காலத்தில் இருந்ததா என்றால் இல்லை என்பதற்கு வலுவான கரணங்கள் இல்லை.   ஆறு சமயங்களில் விநாயகருடையதும்  நிச்சயமாக ஒன்றா என்றால் வாய்புகள் நிறைய உண்டு.இருக்கு என்பதற்கு நான் ஆறு சமயங்களை உதாரணமாக காட்டியுள்ளேன்.

மேலும் திருமந்திரமானது 

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

என்ற பாடலை முதலில் கொண்டு துவங்குகிறது. சிலர் இப்பாடலை இடைச்சொருகல் எனலாம். இடைச்சொருகல் என்பதற்கு தகுந்த ஆதாரம் என்ன?


திருமந்திர காலத்தில் விநாயகர் வழிபாடு தமிழத்தில் இருக்கவில்லை என்று கூறுவோர்கள் 

1. விநாயகர் காப்பு இடைச்சொருகல் என்று நிரூபிக்க வேண்டும்.
2. ஆறு சமயங்களுள் விநாயகர் இல்லை என்றும் நிரூபிக்க வேண்டும். செய்வார்களா?

இது இரண்டிற்கும் விடை கிடைக்காதவரை திருமந்திர காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது என்று கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

மாற்றுக்கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
-----------------------------------------------------

கொசுறு1:அகத்தியர் தன்னுடைய "அகத்திய வாத சௌமியம்" என்ற நூலில் கணபதியை பற்றி குறிப்பிடுகிறார்.இவர் எக்கால அகத்தியர் என்று அறிய வேண்டும்.

கொசுறு2:சேயோன்-முருகன், மாயோன்-திருமால் என்ற தமிழ் பெயர்களை ஒரு பெருத்த சந்தேகத்தினால்  ஆறு சமயங்களோடு வேண்டும் என்றே நான் இணைக்கவில்லை.   

2 கருத்துகள்:

  1. தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சிகாலத்தில்தான் விநாயகர் வந்தார் என்று கூறும் கட்டுரைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன் ஐயா.

    சோழர்களின் தலைநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டிணத்தில், தம் காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த தெய்வங்களை, இளங்கோ அடிகள் அவர்கள், தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் வரிசைப் படுத்திக் கூறுவதைப் பாருங்கள்.

    பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்
    அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
    வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
    நீல மேனி நெடியோன் கோயிலும்
    மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
    மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
    நான்மறை மரபிற் றீமுறை யொருபால்
    நால்வகைத் தேவரு மூவாறு கணங்களும்
    பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
    வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்
    அறவோர் பள்ளியு மறனோம் படையும்
    புறநிலைக் கோட்டத்துப் புண்ணிய தானமும்
    துறவோ ருதைக்குஞ் செயல்சிறந் தொருபால்

    இப்பாடலில் விநாயகர் பற்றிய குறிப்பே கிடையாது
    இக்கருத்தினையும் பாடலினையும், வரலாற்று அறிஞர் ஒருவரின் கட்டுரையின் கண்டேன் ஐயா
    நீல கண்ட சாஸ்திரி என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. ஐயா,
    விநாயகர் பற்றிய இரு பதிவுகளின் முக்கிய நோக்கம் திருமந்திர காலத்தில் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் இருந்ததா இல்லையா என்பது பற்றித்தான். மற்றபடி அவர் எப்பொழுது இங்கு வந்தார் என்பதில் கவனம் செலுத்தவில்லை. சிலப்பதிகார பாடலை தந்து என்னை மேலும் ஆய்வு செய்ய தூண்டி விட்டுள்ளீர்கள்.

    //மூவாறு கணங்களும்// //வேறுவேறு கடவுளர்// என்ற வரிகள் யாரை குறிக்கின்றது என்பதை அறிய ஆவல். தங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். இதில் கணங்களின் தலைவன் கணபதி இருக்கலாம்...இல்லாமல் போகலாம்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...