வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 8 ஆகஸ்ட், 2015

சமணம் என்பது ஏன் ஜைன மதம் அல்ல?

தமிழகத்தில் பலர்  சமணம் என்பது ஜைன (Jainism) மதத்தை குறிப்பதாகவே எழுதி வந்திருக்கின்றனர்..வருகின்றனர். ஆனால் இது ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழை. இந்தப்பிழையை சமணமும் தமிழும் என்ற நூல் எழுதிய  மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களும் செய்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் 

//இந் நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.//

தன்னுடைய பௌத்தமும் தமிழும் என்ற நூலில் 

//வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும். சமணமதம் என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது.// என்று கூறுகிறார்.

இவர் கூறியதிலிருந்து இங்கே நாம்  நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பௌத்த,ஜைன மதத்தை குறிக்க பயன்படுத்தப்பட்ட பொது சொல்தான் சமணம் எனபது. சமணம் எனபது தனி ஒரு மதம் அல்ல. அவர் சமணம் என்ற சொல்லை  "ஜை"  எனும்  வட மொழி அச்செழுத்துக்கள் இல்லாததால் தான் பயன்படுத்தியுள்ளார்.

மயிலை, சீனி. வேங்கடசாமி ஐயா செய்த தவறு என்னவெனில் 
முதல் தவறு : சமணம் எனபது பௌத்த ஜைன மதங்களை குறிக்க பயன்படும் பொது சொல் என்றுணர்ந்தும் ஜைன மதத்திற்கு சமணம் என்ற சொல்லை பயன்படுத்தியது.

இரண்டாம் தவறு: சமணம் என்ற சொல் ஆசீவக மதத்தையும் உள்ளடக்கியது என்பதை அறியாதது. ஆம் உண்மையில் சமணம் என்ற சொல் ஆசீவக மதத்தையும் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல்.

 ' சாவகர் அருகர் சமணர் ஆகும் ;
           ஆசீ வகரும் அத்தவத் தோரே ' -  என்று சேந்தன் திவாகரம் கூறுகிறது. 

 இந்த இடத்தில்  அவர் சமணம் என்பதற்கு ஜைனம் என்று பொருள் கொண்டு  ஆசீவக மதம் ஜைன மதத்தின் ஒரு பகுதியாக கொள்ளப்படுகிறது இது தவறு என்கிறார். 


ஆனால் சேந்தன் திவாகரம்  ஜைன மதம் என்றோ ஜைன மதத்தை குறிக்கும் ஆருகத மதம் என்றோ குறிப்பிடவில்லை. அது தெளிவாக சமணர் என்று குறிப்பிடுகிறது.  இந்த இடத்தில் நாம் எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும் எனில் ஆசீவக மதமும் சமண மதம் என்று புரிந்து கொள்ளவேண்டும். 
ஐயா அவர்கள் ஆசீவக மதமும் ஜைன மதம் என்று கூறியுள்ளதாக புரிந்து கொண்டார் இதுதான் அவர்  செய்யும் இரண்டாம் தவறு.


--------------------------------------------------------------------------------------------------
சமணம் என்ற சொல் ஜைனம், ஆசீவகம், பௌத்தம் என்ற மதங்களை குறிக்கும் என்றாலும் பெரும்பாலும்  சமணம் என்ற சொல்லை ஜைனம் அல்லது ஆசீவக மதத்தை  அல்லது இரண்டையும் குறிக்கவே பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

பௌத்தத்தை சமணம் என்று அதிகமாக அழைக்கவில்லை.


"உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்"
         "கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே"
        "குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்"
        "சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்" 
        "மண்டை கொண்டுழல் தேரர் 
         மாசுடை மேனிவன் சமணர் "

என்ற தேவார திருப்பதிகங்களில்  பௌத்த மதம் தனியாக சொல்லப்படுவதை காணலாம்.. 

இங்கே சமணம் எனபது உண்மையில் ஜைனர்களை குறிக்கின்றதா அல்லது ஆசீவகர்களை குறிக்கின்றதா அல்லது இருவரையும் குறிக்கின்றதா எனபது உண்மையில் இதை பாடியவருக்கு மட்டுமே தெரியும்.இருவரையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கின்றேன். ( "கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே" என்ற இடத்தில் பௌத்தத்தை மட்டும் குறிக்கின்றதா என்பதிலும் எனக்கு சிறு குழப்பம் உண்டு.ஏன் எனில் பௌத்தமும் ஒரு சமண மதம்தானே?)


பௌத்த மதத்தை சமணம் என்று சொல்லியதுண்டா என்றால் பெரும்பாலான இடங்களில் சொல்லவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் 

"துவருறு விரிதுகி லுடையரு மமணரும்" என்ற தேவார திருப்பதிக பாடல் இங்கு சமணர் என்று கூறி பௌத்தர்களை கூறுகிறது.
இதற்கு உரை எழுதியவர்கள்
  //துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும்// என்று கூறுகிறார்கள்.


இப்பதிவின் மூலம் நான் சொல்ல நினைத்தது என்னவெனில் 

1.சமணம்  என்ற சொல் வட இந்தியாவை பொறுத்தவரை வைதீக (பார்ப்பன) மதம் அல்லாத பிற மதங்களை குறிக்க பயன்படுத்திய சொல் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.இதற்க்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.  ஒன்று சமண என்பதற்கு தேடுபவர் என்ற பொருள் பாளி மொழியில் உள்ளதாகவும். இவர்கள் யாவரும் தவம் மூலம் உண்மையை கண்டறிய முயல்வதால் இவர்களை குறிக்க  சமண என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்றும்  இவர்கள் கடுமையான நடைமுறைகளை மேற்க்கொள்வதால் இவர்களை சிராவண-சிராமண  என்ற சொல்லால் குறித்தனர் என்றும் சொல்லப்படுகிறது. ஜைன, ஆசீவக, பௌத்த மற்றும் வேறு சில மதங்களை சிராமண மதங்கள் என்று அழைத்துள்ளனர். 


2. தமிழகத்தை பொருத்தவரை சமணம் என்ற சொல் ஜைன மற்றும் ஆசீவகமதத்தை  குறிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பௌத்தத்தையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

3. சமணம் என்ற சொல்லை ஜைனத்துக்கு  மட்டுமே எடுத்துகொண்டு பல ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில் அந்த இடத்தில் சமணம் என்ற சொல் ஜைன, ஆசீவக, பௌத்த மதங்களில் எதை குறிக்கின்றது என்று  தமிழ் அறிஞர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

4. ஜைன (சைன )மதத்தையோ அல்லது ஆசீவக மதத்தையோ தனியாக  குறிக்க சமணம் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும் 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இவர்கள் ஏன் போலி மது ஒழிப்பு போராளிகள்?

எந்த அரசியல் கட்சி தலைவராவது  தன்னுடைய தொண்டர்களை பார்த்து மது அருந்தாதீர்கள் என்று கூறியது உண்டா? மது அருந்துவதின் பாதகங்களை எடுத்துரைத்தது உண்டா? மதுவிற்கு அடிமையாக உள்ளவர்களை எப்படி மீட்பது என்று சிந்தித்து சொன்னதுண்டா?  இதை எதையும் செய்யாமல் போராட்டம் நடத்துபவரை போலி மது ஒழிப்பு போராளிகள் என்றுதானே சொல்லவேண்டும்?

எனக்கு தெரிந்து ஒரு சில அரசியல் தலைவர்கள் உண்மையாகவே மது ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வருகின்றனர். அதில் முக்கியாமானவர் மருத்துவர் ஐயா அவர்கள். இவர் அவப்பொழுது  போராட்டங்களும் அறிக்கைகளும் விட்டு வருகின்றார். அடுத்ததாக வைகோ அவர்களை சொல்லலாம். இவர் மது விலக்கை வலியுறுத்தி நடைபயணம் செய்துள்ளார்.  நடை பயணத்திற்கு பிறகு இவர் இதில் எந்த அளவு அக்கறை காட்டினர் என்பது தெரியவில்லை.(இப்பொழுது நடத்தும் போராட்டங்கள் தவிர்த்து). 

மது விலக்கு வேண்டிய இந்த தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு தன்னுடைய கருத்தை எடுத்து கூறி இருக்கின்றனரா? குடிக்கின்ற எத்தனை பேரை இவர்கள் திருத்தியுள்ளனர்? முதலில் ஒருவன் ஏன் குடிக்கின்றான் என்ற உளவியல் காரணம் இவர்களுக்கு தெரியுமா? மது கிடைக்காவிட்டால் ஒருவனின் மனநிலை என்னவாகும் என்று இவர்களுக்கு தெரியுமா?மதுவால் அடிமை பட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது எப்படி என்ற திட்டத்தை முன் வைத்துள்ளனரா?

எனக்கு தெரிந்து இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடவில்லை என்றே நினைக்கின்றேன். இவர்களிடம் இதற்கான திட்டங்கள் இருக்கலாம். ஆனால் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. இதுவரை திட்டங்கள் இல்லை எனில் இனி சிந்தித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.செயல்படுத்த வேண்டும். இவர்களை தவிர்த்து இன்று தமிழகத்தில் நடக்கும் மது ஒழிப்பு போராட்டங்களில் பல போலியானது. பலர் இதை அரசியலாக்கவே முற்படுகின்றனர்.

மதுவிலக்கு பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது. அம்மாவின் ஆட்சியில் குறை சொல்ல ஏதுமில்லை என்பதால் மது விலக்கு என்று நாடகம் ஆடுகின்றனர். இதர உதிரி கட்சிகளும் அரசியல் லாபத்திற்காகவே  போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

ஐயா சசி பெருமாள் அவர்களின்  மரணம் வேதனையானது. அவர் கோபுரத்தில் ஏறி இருக்க கூடாது. அவரை தூண்டிவிட்டவர்கள்  மீது ஏன் எந்த வழக்கும் போடவில்லை?

மது விலக்கு போராட்டம் என்று வன்முறையில் இறங்காமல் அமைதியான முறையில் போராடவேண்டும். இவ்விடயத்தில் போராட்டத்தை விட விழிப்புணர்வே அவசியம். கட்சிக்காரகர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.

திரைப்படங்களில் வரும் மது, புகைபிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். 

படிப்படியாகத்தான் மது விலக்கை அமுல் படுத்த வேண்டும். நிச்சயம் மதுவிலக்கு சாத்தியம். எப்படி என்பதை மற்றும் ஒரு பதிவில் பார்க்கலாம். 

வியாழன், 30 ஜூலை, 2015

கலாம் மற்றும் யாக்குபின் வாழ்க்கை நமக்கு சொல்வது என்ன?

இருவருமே பிறப்பால் இசுலாமியர்....
இருவருமே நன்கு கல்வி கற்றவர் ...
இருவருமே குரானை படித்தவர்கள் தான்....
கலாம் அனைத்து மக்களையும் நேசித்தார்....
யாக்குப் மக்களை கொன்றான் ...
கலாம் மதத்ததை கடந்தவர்...யாக்குப் மதத்தால் மரணித்தவன்
மதத்தை கடந்தால் மகானாகலாம் என்று கலாம் வாழ்க்கை சொல்கிறது
மதவெறி பழிவாங்கும் வெறி கொண்டு மக்களை கொன்றால் கொல்லப்படலாம் என்று யாக்குப் வாழ்க்கை சொல்கிறது

கலாமின் வாழ்க்கையும் யாக்குபின் வாழ்க்கையும் நிச்சயம் படிப்பினைதான்...இதை சரியாக புரிந்து கொண்டால் நீங்களும் மகானாகலாம் தவறாக புரிந்து தவறாக நடந்தால் கொல்லப்படலாம்.

கலாமின் மரணம் எனக்கு வருத்தத்தை தரவில்லை .....
அவர் கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக உழைத்து கொண்டிருந்தார் என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.வருத்தமும் கொஞ்சம் உண்டு...இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கலாமே என்று.

யாக்குபின் மரணம் எனக்கு சற்று வருத்தத்தை தந்தது இந்தியா நீதி தவறி விட்டதோ என்று...
--------------------------------------------------

கலாம் பற்றிய சில எதிர்மறை விமர்சனங்களை  படிக்க நேரிட்டது...அவை அர்த்தமற்றவை....அவர்களில் ஒரு சிலர் அடுத்த யாகூபாக கூட மாறலாம் எனபது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே எனக்கு பதில் சொல்ல தெரியும். என்னுடைய கருத்துக்கள் பிற நல்ல இசுலாமியர்கள் மனதையும் புண்படுத்தும் என்பதால் என்னுடைய  எதிர்வாதத்தை இங்கு தவிர்க்கிறேன்.

 கலாம் கூடங்குளம் குழுவினரை சந்தித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டிருக்கலாம். மற்றபடி அவர் கூடங்குளம்  விடயத்தில் தவறு செய்தார் என்பதற்கில்லை.

யாக்குப் பற்றி சில நேர்மறை விமர்சனங்களை படிக்க நேர்ந்தது...அவற்றில் பாதி அர்த்தமற்றவை....பாதி அர்த்தம் உள்ளவை.
யக்குப் நிரபராதி அல்ல ...அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தும் மரணதண்டனை அளித்தது என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

இனி ஒரு யாக்குப்  இந்த மண்ணில் பிறக்க கூடாது...யாரும் யாக்குபாக மாறக்கூடாது
இனி பல கலாம்கள் பிறக்க வேண்டும்...பலரும் கலாம்களாக மாற வேண்டும்
அதற்க்கு எல்லாம் வல்ல இறைவன்,கடவுள், இயற்கை துணை நிற்கட்டும்.

என்றும் மனிதத்துடன்
இராச.புரட்சிமணி 

வெள்ளி, 17 ஜூலை, 2015

பாகுபலி படம் மெய்யாலுமே நல்லா இருக்கா?

எல்லோரும் ஆகா ஓகோ என்றதால் இப்படத்திற்கு நேற்று சென்றேன். இல்லாவிட்டாலும் சென்று இருப்பேன் சில நாட்கள் கழித்து. படம் எப்படி இருக்கு என்றால் முதல் பாதியில் பாதி செம மொக்கை என்பேன்.  அதற்க்கு பிறகு கொஞ்சம் பரவாயில்லை. இரண்டாம் பாதி நன்றாகவே உள்ளது. மொத்தத்தில் பார்க்கலாம்.

படம் பார்க்காதவர்கள் இனி படிக்க விரும்பினால் படியுங்கள். 


படத்தின் முதல் காட்சியை இயக்குனர் இப்படி கோட்டை விடுவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பிரம்மாண்டமான அருவி அருமை. சிவகாமி ஆற்றில் அடித்து செல்லப்படுகிறாளா  அல்லது நடக்கிறாளா என்று  தெரியாத மாதிரி ஒரு இயக்கம். ஏன் இப்படி? இந்த காட்சி மனதில் ஒரு படபடப்பை உருவாக்க வேண்டாமா? 

காப்பாற்ற  வருபவர் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை காப்பாற்ற முயலாலதும் நன்றாகவே இல்லை.

இருபத்து ஐந்து வரை மலையேறி ஏறி கீழே விழுகிறார் நாயகன். ஆனால் மிகப்பெரும் சிவலிங்கத்தை அசால்ட்டாக தூக்குகிறார். 
பிறந்த குழந்தையாய் இருக்கும் பொழுதே சிவகாமியின் விரலை பலமாக பிடிப்பதால் தான் பாகுபலி என்று பெயர் பெறுகிறார். அவரால் ஏன் இதற்க்கு முன் மலை ஏற முடியவில்லை என்பதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. 
மலை ஏறுவதற்கு உந்து சக்தியாக ஒரு பெண்ணை தேடி நாயகன் செல்வதாக காட்சி படுத்தியுள்ளார்கள்.  இப்படி சிலபல காட்சிகள் சிறுபிள்ளைத்தனமாக சினிமாத்தனமாக உள்ளது.

அடிமை கட்டப்பா இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவசேனாவை காப்பாற்ற முயலாமல் திடீரென் ஒருநாள் விடுவிக்க நினைப்பது எல்லாம் கதையோடு பொருந்தாதவை.

நாயகன் உடைத்து கொண்டு குதிரையில் வருவதும், வில்லன் நாயகனை காணும் பொழுது தீப்பிழம்பு ஏற்படுவதும், மரம் பற்றி எரியும் காட்சியும் இவரின் மகதீரா படத்தை நினைவு படுத்துகிறது.

பல்லனின் சிலை நிறுவும் காட்சியில் உயிர் இல்லாமல் கலைஞர்கள் ஆடுவதும் பாடுவதும் பிறகு பாகுகுபலியின்  பெயரை கேட்டதும் ஆடல் பாடல் களை கட்டுவதும் அருமை. இதை இன்னும் கொஞ்சம் கூட அமர்க்களப்படுத்தி இருக்கலாம்.

அவந்திகாவை நூற்றுக்கணக்கான எதிரிகளிடமிருந்து பனிமலையை சறுக்கி காப்பாற்றுவதும் பிறகு பாறையை ஓடாமாக பிளந்து சறுக்குவதும் கண் கொள்ளா காட்சி. இவ்வாறு சிலபல காட்சிகள் அருமை.

பாகுபலி போரில் கையாளும் உக்திகள்  அருமை. 
நடிப்பை பொருத்தவரை அனைவரும் அருமை. 

நான் படித்த  வரை அருவி காட்சி, படத்திற்கு அமைக்கப்பட்ட செட், போர்க்காட்சிகளை பற்றி பலரும் புகழ்ந்துள்ளனர்.
இவையாவும் அருமை என்றாலும் இதுவரை நாம் காணாதது என்றெல்லாம் கூற முடியாது.  


படத்தின் பலம் காட்சியமைப்புகளும் சண்டைக்காட்சிகளும்.
முதல் பாதி என்னடா இது என்ற முணுக வைத்தாலும் இரண்டாம் பாதி சற்று விறு விறுப்பாக செல்வதால் படம் தப்பிக்கின்றது. 

நடைமுறையில் சாத்தியமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் உலகத்தரம் என்று கொண்டாடி இருக்கலாம். 

Related Posts Plugin for WordPress, Blogger...