வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 18 மே, 2012

இறைவன்களும் இறைத்தூதர்களும் இதுவரை சாதித்தது என்ன?



பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன
என்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும்  அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது.

முதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.
௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக
நாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர்.
இன்று இந்த வேலையைத்தானே நமது காவல் துறையும் , நீதித்துறையும்  செய்கிறது.

௨ .நல்ல நீதிகளை, போதனைகளை கூறினர்.
 நம்மால் இவற்றை கூற முடியாதா? வள்ளுவர் கூறவில்லையா, ஒளவையார் கூறவில்லையா?

௩  . சமூகத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தினார்.
நல்ல சமூக சீர்திருத்தவாதிகள் சமூகத்தில் மாற்றங்களை  ஏற்ப்படுத்தவில்லையா?

உலகில் அடிமை முறையை எந்த இறைவனாவது இறைத்தூதராவது  எதிர்த்தார்களா?  ஒழித்தார்களா? . அதை முற்றிலும் ஒழித்தது யார் மனிதர்கள்  தானே?

உலக நாடுகள் போர் புரிய கூடாது என்று எந்த இறைவனாவது  இறைத்தூதராவது   எதிர்த்தார்களா?
மனிதர்கள் தானே அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சதி, பலதார மணம், குழந்தைத்திருமணம், தீண்டாமை,  இவற்றை எதிர்த்தது ஒழித்தது யார்? மனிதர்களே.
.
சமூக மாற்றத்தையும் நல்ல போதனையும் தந்தவர்கள் இறைதூதர்கள் என்றால் நல்ல காரியங்கள் பல செய்த இவர்களை என்னவென்று கூறுவது. இவர்களும்   இறைவன்கள்தானே இறைத்தூதர்கள் தானே.

பல உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தை கண்டுபிடித்தது இறைவனோ இறைதூதர்களோ அல்ல மனிதர்களே.

நான் கூறுவது என்னவெனில் இதுவரை இது இறைவன் செய்தது, இது இறைதூதன் செய்தது என்று எவையெல்லாம் கூறப்படுகிறதோ,அது உண்மையாக செய்யப்பட்டிருப்பின் அவற்றை நம்மாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்ல இறைவன்களும் இறைதூதர்களும் செய்யாததையும் நம்மால் செய்யமுடியும்.

இறைவனும் இறைதூதர்களும் உண்மை என்று வாதிடுபவர்கள்
முதல் உலகப்போரின் போதோ , இரண்டாம் உலகப்போரின் போதோ, இஸ்ரேல் பாலஸ்தீன சண்டையின் போதோ, யூதர்கள் அழிக்கப்பட்ட போதோ, இலங்கையில் தமிழர்கள் அழிக்கபட்டபோதோ ஏன் இறைவன் வரவில்லை? ஏன் இறைத்தூதர்களை அனுப்பவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்வார்களா?

இதைவிட என்ன பெரிய கொடுமை நடக்கவேண்டும் அவன் வருவதற்கு?. இதுவரை அவன் என்ன
சாதித்து விட்டான் இனி இறைதூதர்களை அனுப்பக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு?

இன்றும் பட்டினியால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள், சிசுக்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது, நோயால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்,  நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.  
இறைவன் இறைவன் என்று சொல்லி அவன்பெயராலும் எத்தனை கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா?

சற்று சிந்தித்து பாருங்கள் நான் சொல்ல வரும் உண்மை உங்களுக்கு புலப்படும்.
(உங்களில் பலருக்கு இந்த தெளிவு ஏற்க்கனவே இருக்கும் என்பது வேறு விடயம் :)  )

இவற்றை பலரும் ஒப்புக்கொண்டாலும் இறைவன்கள், இறைதூதர்கள் என்று
கூறப்படுபவர்கள் செய்த அற்புதங்களை மனிதனால் செய்ய முடியுமா என்ற எண்ணம் சிலபலருக்கும் வரலாம். சில சிந்திக்க  தெரிந்த மனிதர்கள் கூட இது கட்டுக்கதை தவறு என்று எண்ணலாம்.(அவற்றில் பல கதைகளும் கலந்து மனிதனுக்கு தீமைகள் விளைந்ததுதான் காரணமோ? )  அற்புதங்களை பற்றி அறிய பகுத்தறிவு போதாது. அதற்கு தேவை அகத்தறிவு.

ஆம் அகத்தறிவு உடையவனே தன்னை உணர்ந்தவன், இறைவனை உணர்ந்தவன், பிரபஞ்சத்தை உணர்ந்தவன்.இவனால் பல ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்த முடியும். யோகத்தினால் பெரும் அறிவைத்தான் நான் அகத்தறிவு என்கிறேன்.
(ஆன்மீக பாதையில் செல்லும் அனைவரும் மக்களுக்கு நன்மை தான் செய்வார்கள் என்பது ஒரு தவறான கருத்து. அரை குறையாக அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு  ஆன்மீக பாதையிலிருந்து விலகியவர்களால் வரும் பிரைச்சனை மிகவும் அதிகம்) .

அற்புதத்தை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. அவர்கள் செல்லும் யோக பாதையை பொறுத்து சக்திகள் வேறுபாடும்.(இதுவும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையே என நினைக்கின்றேன் அதற்கு பிறகு ஒருவனால் எல்லாம் செய்ய முடியும்.  அதே நேரத்தில் அவன் எல்லாமாகவும் மாறிவிடுவான்).

இது உண்மை என்று உணர ஒரு வினாடிதான் தேவை. ஆனால் அந்த ஒரு வினாடி அனைவருக்கும் கிடைப்பதில்லை அல்லது பலர் அந்த உண்மையை உணர எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.

புறத்தறிவு (அறிவியல்) மூலமும் பல விடயங்களை நம்மால் சாதிக்க முடியும்.  சாதிக்கிறோம். சாதிப்போம். ஆனால் புறத்தறிவை விட அகத்தறிவே மேலானது, சுலபமாக டையக்கூடியது. (தக்க வழிகாட்டியுடன். சரியான வழிகாட்டி இல்லாததால் இது இன்று பொய் என்ற அளவில் உள்ளது )

பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ அது நம்மிலும் உள்ளது. நம்மில் என்னென்ன உள்ளதோ அது பிரபஞ்சத்திலும் உள்ளது.இதைத்தான் அன்று அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.  உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களோடும், உயிர்களோடும் அனைத்து
உயிர்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இதை பயன்படுத்திதான் உண்மையான
ஆன்மீகவாதிகள், சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்.  இதை நாளை அறியவியல் நன்று விளக்கும்.

ஆம் சொந்தங்களே நம்மாலும் இறைவனாகவும்,  இறைதூதர்களாகவும் மாறமுடியும். அவர்கள் புரிந்த அற்புதங்களை நல்ல செயல்களை நாமும்   புரிய முடியும். அவர்கள் செய்யாத நல்ல விடயங்களையும் செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு.


குறிப்பு: மனிதர்களும் இறைவனாகவும் இறைதூதனாகவும் மாற முடியும் என்பது தான் என் நிலைப்பாடு. மற்றபடி இறைவன் அவதாரம் எடுத்தான், இறைதூதனை அனுப்பினான்,  இனி அனுப்ப மாட்டான்,கடைசியாக இறைவன் அவதரிப்பான் எனபதில் எனக்கு நம்பிக்கை
இல்லை. ஆன்மீகத்தின் படி பார்த்தாலும் இதுவரை பலர் இறைவனை உணர்ந்தார்கள் இனியும் பலர் இறைவனை உணர்வார்கள். (அதாவது இறைவன் என்றால் என்ன? அப்படி ஒன்னு இருக்கிறதா என்ற உண்மையை).
ஏற்கனவே இறைவன் இறைதூதன் என்று கூறப்படுவபவர்களும் ஓரளவிற்காவது இறைவனை உணர்ந்திருப்பார்கள் அல்லது அந்த பாதையில் ஓரளவிற்கு    பயணம் செய்திருப்பார்கள் எனபதை மறுப்பதற்கில்லை.  

தனக்கு மிஞ்சிய சக்தியை இறைவன் என்று வணங்குவதில் எந்த தவறும் இல்லை. மாறாக இதில் நன்மைகளே உண்டு. பிறருக்கு பிரச்சனை வராமல் இந்த வழிபாடு இருக்க வேண்டும்.   ஆனால் இவனே உண்மையான  இறைவன், இதுவே உண்மையான மதம், மார்க்கம்,  என்ற வார்த்தைகள் தான் உண்மையில் உண்மையற்றது. இறைவனுக்காக சண்டையிடுவதை
விட மிகப்பெரிய மடமை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.  எல்லா
உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி வாழாவிட்டாலும், பிற உயிர்களுக்கு முடிந்த வரை துன்பம் விளைவிக்காமல், உண்மையுடனும் , நேர்மையுடனும்   வாழவதே இறைவனுக்கு செய்யும் உண்மையான வழிபாடாகும்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு வலைப்பூவிற்கு விடுமுறை. வந்தவுடன் இறைவனை பற்றிய, இயற்கையை பற்றிய உண்மையை தொடர்ந்து ஆய்வோம்.

என்னுடைய கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக  நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்திலும் அனைவரின் மனம் புண்படாத கருத்துக்களையே எழுதுவேன். இப்பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.

 மதத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் ஒதுக்காமல் பார்த்தாலும் நமது மூலம்
ஒன்றே. நாம் மனிதர்கள் மனதில் அன்பையும், நல்ல சிந்தனையையும்  மட்டும் வளர்ப்போம்.

என்பதிவை படித்த, படிக்கும், ஆதரவு அளித்த, அளிக்கும் சொந்தங்கள்  அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் :)


வியாழன், 26 ஏப்ரல், 2012

இசுலாமிய பெண்மணியின் மிரட்டல்களுக்கு பதில் சொல்வோமா?



சமீபத்தில் ஒரு இசுலாமிய பெண்மணி சில மிரட்டல்களை விடுத்திருந்தார். அதற்கடுத்து பெண்களை அடிமைபடுத்தும் இசுலாம் என்ற தலைப்பில் இசுலாமில் பெண்கள் அடிமையில்லை என்ற அழகிய பதிவை தந்திருந்தார். அவர் பதிவில் கூறியிருந்தது யாவும் உண்மை என்பதை குரான் வசனங்கள்  மூலமும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலமும் விளக்கியிருந்தார். இவையாவும் இசுலாமிய நூல்களில்  இருக்கின்றது என்பதில் எந்த மாற்று கருத்தும்  இருக்க முடியாது. அப்புறம் ஏன் இந்த பதிவு என்று நீங்கள் கேட்கலாம். இவையாவையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தந்தது இசுலாம் என்று அந்த பெண்மணி கூறுகிறார். ஆனால் இந்த உரிமைகளை  முதலில் தந்தது இசுலாம் அல்ல இசுலாமிற்கு முன்பே இவை யாவும் அரேபியாவில் இருந்தது. இதை தந்தது இந்து மதம்,இந்திய சிந்தனை  (சரிவிடுங்க இத பத்தி அப்புறம் பார்ப்போம்)  அல்லது சிலையை வழிபட்டவர்கள் வழங்கியது என்ற உண்மையை கூறுவதே இப்பதிவின் நோக்கம். 

அந்த பதிவில் திருமண சம்மதம், மறுமண உரிமை ஆகியவற்றை இசுலாமே தந்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் பெண்களுக்கு விரும்பியவர்களுக்கு திருமணம் செய்யும் உரிமையும், மறுமண உரிமையும் இசுலாமுக்கு முன்பே அரேபியாவில் இருந்தது. 

அதற்கு மறுக்க முடியாத உதரணமாக கதீஜா என்ற பெண்மணியை குறிப்பிடலாம். இந்த கதீஜா என்பவரின் மூன்றாவது கணவர் தான் முகமது நபி அவர்கள். இவர் தான் முகமது நபியை மணமுடிக்க முடிவு செய்கிறார். அவருக்கு ஏற்க்கனவே இரண்டாவது திருமணம் நடந்தது என்பதன் மூலம் மறுமண உரிமை இசுலாமிற்கு முன்பே அரேபியாவில் இருந்தது தெரியவருகிறது.   

இந்த கதீஜா ஒரு மிகப்பெரிய செல்வந்தர். இவர் வியாபாரமும் செய்துவந்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமையும் மேலும் பல உரிமைகளும் இசுலாமிற்கு முன்பே அராபியாவில் இருந்தது என்பதை  இது காட்டுகிறது. ஆனால் இன்று சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை கூட கிடையாது என்பது வருத்தமான விடயம். 

அந்தபதிவில் பெண்கல்வியையும்  இசுலாமே 1400 வருடங்களுக்கு முன்பு தந்தது என்று கூறுகிறார். இசுலாமுக்கு முன்பே அங்கு பெண் கல்வி இருந்ததாகத்தான் தெரிகிறது . கதிஜா கல்வி கற்றிருந்தார்களா   என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்ததால்  அவரும் கல்வி கற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.


இசுலாமின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவராக கருத்தப்படுபவர் உமர்.இவர் முகமது நபியை கொல்ல நினைத்தவர். இவரின் சகோதரி இசுலாமிற்கு மாறியதை அறிந்து கோபம் கொள்ளும் அவர் சகோதரிய அடித்து விட்டு, குற்றத்தை உணர்ந்து பிறகு நீ ஓதி கொண்டிருப்பதை என்னிடம் காட்டு என்கிறார். அவரின் சகோதரி குரானின் ஒரு அத்தியாத்தின் வசனங்கள்  அடங்கிய தாளை அவரிடம் தருகிறார்.  ("asked his sister to give him what she was reciting. She gave him the paper on which was written the verses of the chapter Ta-Ha." அதை படித்து அதில் மயங்கும் உமர் இசுலாமிற்கு மாறினார் என்று வரலாறு கூறுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த பெண் ஓதிக்கொண்டிருந்தார் என்பது, அவர் தாளை படித்து கொண்டிருந்தார் என்ற பொருள் தருகிறது. அவர் கல்வி கற்றிருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை அதே நேரத்தில் அவர் கல்வி கற்றிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்க்கில்லை.

சில காலங்களுக்கு முன்புவரை இந்தியாவில் நிலவி வந்த உடன்கட்டை ஏறுதல், விதவை  திருமணத்தை எதிர்த்தல் போன்ற தீய விடயங்கள் பண்டைய அரேபியாவில் இருந்ததாக தெரியவில்லை. அராபிய இந்து மதத்தை, இந்திய சிந்தனையை ஏற்று கொண்ட நாடு என்பதை பிறகு பார்ப்போம். இந்தியாவில் இந்த தீய விடயங்கள் எப்பொழுது ஏன் வந்தது என்பதையும் நாம் ஆய்வு செய்யவேண்டும்.

 பண்டைய இந்தியாவில்  பல பெண்கள் அரசர்களை எதிர்த்து போர் புரிந்ததாகவும் வரலாறு உண்டு. 

அந்த காலத்தில் பெண்கள் சகல உரிமைகளோடுதான் இருந்துள்ளனர். தமிழகத்திலும் ஒளவையார் என்ற புலவர் செய்யுள்கள் பல  இயற்றி உள்ளார் என்பதை நாம் அறிவோம்.  பல பெண் பால் புலவர்கள் ஒளவையார் என்ற புனைப்பெயரில் இருந்ததாகவும் படித்த ஞாபகம். 

இன்றும் பெண்களை மையாமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை. ஆனால் அன்றே மணிமேகலை என்ற பெண்ணை மையமாக கொண்டு காப்பியம் படைத்தவன் தமிழன். அந்த பெண்ணிற்கு மதம் மாறும் உரிமையும், சந்நியாச வாழ்வை ஏற்கும் உரிமையும் இருந்தது.  இந்தியாவை, தமிழகத்தை பொறுத்த வரை பெண்கள் அடிமை பட காரணம் ஆணாதிக்கம் என்பதைவிட அந்நிய படை எடுப்புகள் தான் காரணம் என்று நினைக்கின்றேன். 

ஏற்க்கனவே இருந்த உரிமைகளைத்தான் இசுலாம் அங்கீகரிக்கின்றது என்பதன் மூலம் இசுலாமை நான் களங்கப்படுத்துவதாக சகோதரர்கள் என்ன வேண்டாம். உண்மையை நேர்மையான இசுலாமியர்கள்  ஏற்றுக்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன். 
இசுலாம் பெண்களுக்கு வழங்கும் இந்த உரிமைகள் போற்றத்தகுந்தது என்பதில்  யாருக்கும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. 

இப்பதிவில் தவறு இருப்பின், இது இசுலாமியத்தை தவறாக விமர்சனம் செய்வது போல் இருந்ததாலும் சகோதரர்கள் சுட்டிகாட்டுங்கள்.  இப்பதிவில் இருக்கும் விடயங்கள் பெரும்பாலும் இசுலாமியர்கள் அறிந்திருப்பார்கள் என்பதால் தான் நிறைய ஆதாரங்கள் தரவில்லை. எதற்கு ஆதாரம் வேண்டும் என்று  கேட்டால் கண்டிப்பாக தருகிறேன். மீண்டும் கூற விரும்புகிறேன் இப்பதிவின் நோக்கம் நான் உண்மையாக நினைப்பவற்றை கூறுவதுதானே தவிர இசுலாமை விமர்சிப்பது அல்ல.

அனைத்து பெண்களுக்கும் (ஆண்களுக்கும்)  நான் கூற விரும்புவது ஒன்றுதான் உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை ஊற்றி வளர்க்காமல் மனிதத்தை ஊற்றி வளருங்கள். நீங்கள் மதத்தை ஊட்டி வளர்த்தால்  உங்கள் குழந்தை மதவாதியாக, மனிதவெடிகுண்டாக மாறலாம். நீங்கள் மனிதத்தை ஊற்றி வளர்த்தால் உங்கள் குழந்தை மனிதநேயம் உள்ளவராக, மகாத்மாவாக வரலாம் .  முடிவு உங்கள் கையில். 

வியாழன், 19 ஏப்ரல், 2012

இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?



இருப்பதிலேயே மிகவும் சுலபமானதும் சிக்கலானதும் இதற்க்கான பதில்தான். இந்து மதம் என்றால் என்ன அதற்க்கான இலக்கணத்தை வகுப்போமா?

நான் படித்த வரை சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் இப்பால் இருந்தவர்களை :) , சிந்து நதியோரம் வசித்தவர்களை ,  அன்றைய அகண்ட பாரதத்தை சேர்ந்தவர்களை இந்து என்று அழைத்தனர். அதாவது ஆரம்பத்தில்  இந்து என்பது மதம் சார்ந்த பெயர் அல்ல. இந்து என்று ஒரு மதமும் அன்று இல்லை. அது நிலப்பரப்பையும் இங்குள்ள  மக்களையும்  குறிக்கும் சொல்லாகத்தான் இருந்து வந்துள்ளது. இது ஒரு வாதம். அனைவருக்கும் தெரிந்த மற்றும் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்ட வாதம். 

சமஸ்கிருத சொல்லான சிந்து பெர்சியாவில்  இந்து என்று உருமாற்றம் கொண்டது என்பது சிலரின் கருத்து.  அன்றைய அராபியர்கள் அல்-ஹிந்த் என்றே அன்றைய அகண்ட பாரதத்தின்  பகுதியினையும், இங்குள்ள மக்களையும் குறிப்பிட்டுள்ளனர். அராபிய அல்-ஹிந்த் ஐரோப்பிய மொழியில் இந்து என்று உருமாறியது என்பது சிலரின் கருத்து.(மூலம்)
இந்த கருத்துக்களின் அடிப்படையில் தான் மேற்கூறிய  வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த வாதத்தின்படி அன்றைய அகண்ட பாரதத்தில் வாழ்ந்த அனைவரும் இந்துக்கள்.
இந்தியாவில் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவன் வெளி நாட்டவரால் இந்து என்றே அறியப்படான்.

இங்கே இருந்த அனைத்து மதங்களையும் அவன் இந்து மதம் என்று அழைத்துள்ளான். இந்த நிலபரப்பை சார்ந்த அனைவரின் மதங்களும் இந்து மதம் என்று பெயர் பெற்றது  இப்படித்தான்.

சமண புத்த மதங்கள் உருவாக பல காரணங்கள் இருந்தாலும்  வேதங்களும், பிராமணர்களும் ஒரு காரணம். வேதம் வேதம் என்று அதையே கட்டி கொண்டு மனிதத்திற்கு  முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஆன்மீகத்திற்கு, மனிதத்திற்கு, உயிர்களுக்கு  முக்கியத்துவம் தரும் சமணமும், புத்தமும் பிறந்தது. 

இன்றைய இசுலாமிய, கிருத்தவ மதவாதிகளும் அன்றைய  பிராமண மதவாதிகள்  போல மனிதத்திற்கு முக்கியத்துவம் தராமல் தங்களுடைய மத புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்.

அன்றைய இந்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (பிரிக்கிறேன்  :) )

1.  வேதங்களுக்கு, உபநிடதங்களுக்கு, மனுவிற்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள் பிராமணர்கள்.
2. வேதங்களுக்கு எதிராக கிளம்பியவர்கள் சமண, புத்த மதத்தினர் 
3. வேதங்களுக்கு முக்கியத்துவம் தராதவர்களும் , அதற்கு எதிராக கிளம்பாதவர்களும் இவர்களுக்கு  இடையே வாழ்ந்து வந்துள்ளனர்.  இவர்கள் பிராமணர் அல்லாத இதர வர்ணங்களையும், புத்த சமண மதத்தை சாராதவர்களும் ஆவர்.

இந்து என்ற சொல்லானது முதலில் இவர்கள் மூவரையும் குறிக்க பயன்பட்டது.

பிறகு வேதத்திற்கு எதிராக இருந்தவர்களை சமணம்,புத்தம் என்று தனியாக  குறிப்பிட ஆரம்பித்தனர். அதனால் மீதம் இருந்த இரண்டு  பிரிவினரும் தொடர்ந்து இந்துக்கள் என்றே அழைக்கப்பட்டனர் ...அழைக்கப்படுகின்றனர்.

தொடரும்......................
தமிழர்களின் நிலையையும் , இந்து மதத்திற்கு இலக்கணத்தையும் அடுத்த பதிவில் காண்போம் 

புதன், 4 ஏப்ரல், 2012

சமணமே உன்னை என்னவென்று சொல்ல?


உலக உயிர்களுக்கு   துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறும் உன்னத மதம் சமணம். பல மனிதர்கள் ஆடு, மாடு,கோழி.பன்றி,மீன் என்று சாப்பிடும் பொழுது வெங்காயத்தையும், பூண்டையும் கூட சாப்பிடகூடாது என்று கூறும் மதம் சமணம். (வெங்காயம், பூண்டு போன்றவற்றை பிடுங்குவதன் மூலம் அது கொல்லப்படுகிறது ஆதலால் அதை உண்ணக்கூடாது என்று கூறுகிறார்கள். )

இன்றுவரை காட்டுமிராண்டியாக வாழும் மனிதனை கிருத்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட அறுநூறு முதல் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி மனிதனை  தெய்வமாக்க முயற்சி செய்த மதம் சமணம். 

ஒரு காலத்தில் மாட்டுகறியை உண்ட  பிராமணர்களை சைவம் பக்கம் திரும்ப வைத்தது சமணம். 

இன்றும் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்கள் அடித்து கொண்டு சாகும் பொழுது பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து உயிர்களையும்  தம்முயிர் போல் கருதி  துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறிய மதத்தை என்னவென்று புகழ்வது?

மனிதர்களை கொன்று மதத்தை வளர்த்த மதங்கள் இன்று நம்மிடையே இருக்க, மனிதனை இறைவனாக்க  முயன்ற மதம் செல்வாக்கு இழந்தது ஏனோ? 

ஒரு இறைவனா பல பல இறைவனா  என்று இன்றும்  அடித்து கொள்ளும் பொழுது இறைவனை பொருட்படுத்தாத மதத்தை என்னவென்று புகழ்வது?

நல்ல கொள்கைகள் பல தந்த சமண மத துறவி மகாவீர் அவர்களின் பிறந்த நாளை உயிர்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டாமா? குறைந்த பட்சம் அவரை மனதில் வைத்து பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ முயற்சி செய்வோம். உயிர்களை நேசிக்க மதம் ஒரு தடை என்றால் நாம் மனிதர்களா மிருகங்களா?

குறிப்பு: இப்பதிவானது நான் ஏற்க்கனவே படித்த, கேள்வி பட்ட விடயங்களை  வைத்து எழுதியது. இதில் எதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் அதற்கு மட்டும் ஆதாரத்தை தேடி தருகிறேன்.
மேலும் படிக்க :http://en.wikipedia.org/wiki/Jainism

வெள்ளி, 30 மார்ச், 2012

ஆபிரகாம் இந்துவா, சிவபக்தரா?


யூத, கிருத்துவ, இசுலாமிய மதங்களால் முக்கிய நபியாக கருதப்படும் ஆபிராகாம் ஒரு இந்துவாக இருந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

இன்று ஆபிரகாம் என்று அவரை அழைத்தாலும் அவர் பெயர் அப்ரம் என்றே பல மொழிகளில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த அப்ரம் என்பது பிரம்மனின் பெயரை  குறிப்பதாக கூறுகிறார்கள். 

இவரின் மனைவியின் பெயர் சாரா, சராயு என்று கூறுகிறார்கள். இது பிரம்மனின் மனைவி பெயரான சரஸ்வதியை குறிப்பதாக கூறுகிறார்கள்.  சராயு என்று அயோத்தியில் ஒரு நதி இருந்துள்ளது. ஆபிரகாமின் மனைவியின் பெயர் இந்த நதியின் பெயரை ஒட்டி கூட அமைந்திருந்திருக்கலாம் என்பது எண் கணிப்பு. 

ஆபிரகாமின் ஒரு சகோதரரின் பெயர் ஹரன். இது சிவனை குறிக்கும் சொல்லாகும்.

அபிரகாமும் சாராவும் உர் என்ற ஊரில் வாழ்கிறார்கள். இந்த ஊரிலும் பண்டைய இந்து மதம் இருந்ததாக தெரிகிறது.  பிறகு இவர்கள்  கனான் (Kana‘ān) என்ற பகுதியில் குடியேறுகிறார்கள். இந்த கனான் என்பது கண்ணனின்  பெயரை குறிப்பதாக சிலர் கூறுகிறார்கள். (மேலும் உங்கள் பார்வைக்கு ....காந்தகார் என்று  ஆப்கானிஸ்தானில்   ஒரு இடம் உண்டு...இது காந்தாரியின் பெயரை குறிக்கின்றது , லாகூர் என்று பாகிஸ்தானில் ஒரு இடம் உண்டு இது ராமனின் மகன் லவனை குறிக்கின்றது. லவவூர் என்பது லாகூராக திரிந்துள்ளதாக தெரிகிறது) 

ஆபிராகமிற்கு குழ்ந்தை இல்லாததால் வேலைக்காரியை இவருக்கு இவர் மனைவி மணம் முடிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிடுகின்றனர்..  இது தமிழில் ஈசனின் பெயரோடு ஒத்து வருகிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் உயர்ந்த சிவன் என்று பொருள் கூறுகிறார்கள்.

பிறகு சில காலங்கள் கழித்து இவரது மனைவிக்கு குழந்தை பிறக்கின்றது. அக்குழந்தைக்கு இவர் ஈசாக் - ஈசாக்கு என்று பெயரிடுகிறார். இதுவும் ஈசனின் பெயரை  அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளகாதாக தெரிகிறது.  இதற்கு சிவனின் நண்பன் என்று பொருள் தருவதாக கூறுகிறார்கள்.
தங்களுடைய குழந்தைகளுக்கு  ஈசனின் பெயரை இடுவதன் மூலம் இவர் ஒரு சிவ பக்தர் என்று கூறலாம் அல்லவா?

இவர்களின் பெயரில் சிவன், ஈசன் இருக்கும் பொழுது அவர்களின் மதத்தில் இல்லாமல் போகுமா?

ஆபிரகாமிய மதங்கள் எனப்படும் யூதம், கிருத்துவம், இசுலாம் ஆகியவற்றின் மூலம் இந்து மதமாகத்தான் தெரிகிறது.  ஈஸ்வரன், ஈசன், சிவன் என்ற சொற்களின் திரிபுகளை  இந்த மத நூல்களில் நம்மால்  காண முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பண்டைய இந்து மதமானது இருந்துள்ளதாக தெரிகிறது.

நேரம் கிடைக்கும் பொழுது விரிவாகவோ சுருக்கமாகவோ பார்ப்போம்.:)

வரலாறு காணாத மின்வெட்டினால் எந்த வேலையையும் சரிவர செய்ய இயலவில்லை.

குறிப்பு: இப்பதிவின் நோக்கம் இந்து, யூத, கிருத்துவ, இசுலாமிய மதத்தை களங்கப்படுத்துவது அல்ல.
இவ்வாறு ஆய்வுகள் நடகின்றது, இப்படி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுவதே என் நோக்கம். இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். 

மீண்டும் கூறுகிறேன் பரிணாமத்தின் படி பார்த்தாலூம், ஆதாம் ஏவாள் கதைப்படி பார்த்தாலும் நாம் அனைவரும் சொந்தங்களே. மதத்தின் படி பார்த்தாலும் எல்லா மதங்களுக்கும்  மூலம் ஒன்றுதான். நமக்குள் மதத்தின் பெயரால் பூசல் கொள்வது சரியானது அல்ல. நம் அனைவரின் மூலம் ஒன்றுதான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு அன்போடு பழகுதலே இறைவனுக்கு செய்யும் மிக சிறந்த வழிபாடாகும்.


மேலும் படிக்க: http://www.hermetics.org/Abraham2.html

வெள்ளி, 23 மார்ச், 2012

இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா?


இசுலாமியர்கள் தினமும் ஐந்து வேளை வணங்குகிறார்கள் அல்லது தொழுகை செய்கிறார்கள் என்று தெரியும். அப்படி தொழுகை செய்யும் பொழுது அவர்கள் மெக்காவில் உள்ள காபாவை நோக்கி தொழுகிறார்கள். அந்த காபாவில்  அப்படி என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் அங்கே இருப்பது  ஒரு சிவலிங்கம் என தெரியவருகிறது. இந்த சிவலிங்கத்தை அவர்கள் கருப்புக்கல் என்கின்றனர். இந்த கல்லை மிகவும் புனிதமாக இசுலாமியர்கள்  கருதுகிறார்கள்.


ஆபிரகாமிய   மதங்களின்  முன்னோடியாகவும் முக்கிய நபியாகவும் கருதப்படும்   ஆபிரகாம் தான் இந்த காபாவை கட்டினார்.  இக்கல்லை அல்லது சிவலிங்கத்தை நிறுவினார்.இந்த கல் ஒரு சிவலிங்கமாக இருக்ககூடும் என்று ரவி ஷங்கர் ஒரு முறை கூறியிருந்தார் அதை  சாகிர் நாயக் மறுத்தார் என நினைக்கின்றேன்.  இருப்பினும் திறந்த மனதுடன் இதை ஆராயும் பொழுது அது ஒரு சிவலிங்கமாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

இந்த கல் வானிலிருந்து கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த கல்லைத்தான் காலம் காலமாக அங்குள்ள மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர்.  இந்த காபாவில் இந்த கல்லை தவிர்த்து 360 சிலைகளையும் அங்குள்ள மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். முகமது நபியால் இங்குள்ள சிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால் அவர் அந்த கல்லை மட்டும் ஒன்றும்  செய்யவில்லை. காரணம் அந்த கல் அவ்வளவு புனிதமாக கருதப்பட்டது. 

இன்றும் அந்த கல் இசுலாமியர்கள் செல்லும் ஹஜ் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்த கல்லை முகமது நபி முத்தமிட்டார் என்பதால் ஹஜ் அல்லது புனித யாத்திரை செல்லும் இசுலாமியர்களும் அந்த கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர். கூட்ட நெரிசலால் முத்தமிட முடியாததால் தனது வலது கரத்தால் அக்கல்லை  தொட  முயற்சிக்கின்றனர். 

இசுலாமியத்தில் சிலை வழிபாடு கிடையாது. இந்த கல்லை அவர்கள் புனிதமாக கொண்டாலும் அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்கின்றனர் இசுலாமியர்கள்.

ஆனால் முகமது நபியோ இக்கல்லை "அல்லாவின் வலது கரம்" என்கிறார்.  இந்த ஒன்றே அவர் இக்கல்லிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளார் என்பதை காட்டுகிறது. 

இக்கல்லை அவர் ஏன் அல்லாவின் வலது கரம் என்றார் ...அல்லாவின் வலது கரம் என்றால் சும்மாவா ?

மேலும் இன்றும் அக்கல்லை  ஹஜ் யாத்திரையில் முத்தமிட முடியாத இசுலாமியர்கள்  "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே  )என்று கூறுகிறார்கள்.  இந்த கல்லுக்கு இசுலாமில் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை இது  தெள்ள தெளிவாக காட்டுகிறது. 

இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும்  தோன்றி தன்னை பக்தியுடன்  முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும்  சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர்.
("the Stone will appear on the Day of Judgement (Qiyamah) with eyes to see and a tongue to speak, and give evidence in favor of all who kissed it in true devotion, but speak out against whoever indulged in gossip or profane conversations during his circumambulation of the Kaaba"..  Source:wikipedia).

இவர்கள் சொல்வது அம்மன் சிலைக்கு கண்ணும் நாக்கும் வைத்து இருக்கும் சில சிலைகளை ஞாபக படுத்துகிறது.

அவர்கள் வணங்குவது சிவனையோ அல்லது அம்மனையோ அல்லது அல்லாவையோ அல்லது பண்டைய அராபிய கடவுளோ அது இறைவனுக்கு  மட்டுமே தெரியும். இருப்பினும் இந்து மதத்தின் தாக்கம் அல்லது இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை எந்த அளவிற்கு  உள்ளது என்பதை நேரம் கிடைக்கும் பொழுது பார்ப்போம்.

நன்றி: http://en.wikipedia.org/wiki/Black_Stone

வெள்ளி, 16 மார்ச், 2012

உங்களின் உண்மையான பிறந்த நாள் எப்பொழுது தெரியுமா?



பெரும்பாலோர் தங்களது ஆங்கில தேதியை மையமாக கொண்டு பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.
ஆனால் இது முற்றிலும் தவறானது. இது வெறும் நினைவாகவோ அல்லது வயதை கணக்கில் வைத்து கொள்வதற்கோ  பயன்படலாம்.

ஆனால் உண்மையில் நீங்கள் இயற்கையோடு இணைந்து  உங்கள் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் எனில் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தையும் , நீங்கள் பிறந்த அன்று சந்திரன் நின்ற நட்சத்திரத்தையும் கணக்கில் கொள்ள  வேண்டும். 

இவ்வாறு நீங்கள் பிறந்த நாளை கணக்கில் கொள்ளும் பொழுது, சூரியனும் சந்திரனும் நீங்கள் பிறந்த நிலையில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் இருக்கும். 

அதாவது இன்று ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதன் விபரம்: ஆங்கில மாதப்படி பிப்ரவரி இருபது. தமிழ் மாதப்படி மாசி மாதம், எட்டாம் தேதி, திருவோணம் நட்சத்திரம்.

நீங்கள் இந்த குழந்தைக்கு ஆங்கில தேதிப்படி  அடுத்த வருடம் பிப்ரவரி இருபதாம் தேதி பிறந்த நாள் கொண்டாடினால் அது இயற்கையோடு எந்த வித இணைப்பையும் ஏற்ப்படுத்தாது. சூரியனின் நிலை ஓரளவிற்கு பிறந்த நாளோடு ஒத்துப்போகும். ஆனால் சந்திரன் முற்றிலும் வேறு இடத்தில் இருக்கும்.

அப்பொழுது மாசி மாதம் எட்டாம் தேதி பிறந்த நாள் கொண்டாடலாமா என்றால்...அதுவும் கூடாது.
ஏன் எனில் சூரியனின் நிலை சரியாக இருந்தாலும் சந்திரன் வேறு நிலையில் இருக்கும்.

இந்த குழந்தைக்கு இயற்கையோடு இணைந்து நீங்கள் பிறந்த  நாள் கொண்டாடவேண்டும் எனில் அடுத்த வருடம் மாசி மாதம் திருவோணம்  நட்சத்திரத்தில் பிறந்த நாள் கொண்டாடவேண்டும். 

இந்த நாளில் சூரியனும் சந்திரனும் பிறந்த ஆண்டு/நாளில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் இருக்கும். இதே போல தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் மற்றும் அந்த மாதத்தில் சந்திரன் அந்த நட்சத்திரத்திற்கு வரும் நாள் என பிறந்த நாள் கொண்டாடலாம்.

இதுவே இயற்கையோடு இணைந்து பிறந்த நாள் கொண்டாடுதலாகும்.

சனி, 10 மார்ச், 2012

யார் நேர்மையானவன்? பகுத்தறிவாதியா? கம்யுனிஸ்ட்டா?


இது முழுக்க முழுக்க மதத்தை கருத்தில் கொண்டு எழுதப்படும் பதிவு.
மதங்களை விமர்சிக்கும் பொழுது யார் நேர்மையாளராக உள்ளார் என்பதே என் தேடல்.

பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை தவிர பிற மதங்களை விமர்சிப்பதாக தெரியவில்லை.


அந்த காலத்தில் பிராமணிய ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அவர்கள் அவ்வழியை தேர்ந்தெடுத்தார்கள். அது சரியானதே.

ஆனால் இன்றும் பெரியார் தளங்கள் அதே இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கின்றன. ஏன் இவர்களுக்கு மற்ற மதங்களில் உள்ள குறைகள் தெரியவில்லை. அதை படிப்பதில்லையா? இல்லை அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்கிறார்களா? அல்லது பிற மதங்கள் பகுத்தறிவானது என்று ஏற்றுக்கொள்கிறார்களா?


மதத்தை உண்மையாக எதிர்ப்பவனாக  இருந்தால் அவன் அனைத்து மதங்களையும் எதிர்க்க வேண்டும் ஆனால் ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை உண்மையான பகுத்தறிவாளர்கள் உணரவேண்டும்.

இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பவர்கள் சுயநலவாதிகளாக இருப்பர்களோ என எண்ணுகிறேன். அவர்கள் சுயநலவாதிகள் அல்ல என்பதை பிற மத புத்தகங்களையும், வழக்கங்களையும் விமர்சித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.

கம்யுனிஸ்ட்டுகள் இந்து மதத்தை மட்டுமலாமல் ஓரளவிற்கு பிற மதங்களையும் விமர்சிக்கின்றனர்.குறிப்பாக வினவு தளம்.


 ஆதலால் இந்த தேடலின் முடிவில் தன்னை பகுத்தறிவாளன் என்று கூறுபவனை விட கம்யுனிஸ்ட் என்று கூறுபவன் ஓரளவிற்கு மத விமர்சனத்தில் நேர்மையாக இருப்பதாக தெரிகிறது.


மீண்டும் சொல்கிறேன் இது மதத்தை மட்டுமே அளவுகோலாக கொண்டு எழுதப்பட்ட பதிவு. மற்றபடி எனக்கு சில பகுத்தறிவாளர்கள் சிந்தனையும் பிடிக்கும், சில கம்யுனிஸ்ட் சிந்தனைகளில் மாற்று கருத்தும் உண்டு.

பகுத்தறிவாளர்கள் பிற மதங்களை விமர்சிக்காததன் காரணத்தை கூறினால் (அல்லது விமர்சித்து இருந்தால் அந்த சுட்டிகள்  தந்தால் ) அதை நானும் பிறரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

வெள்ளி, 9 மார்ச், 2012

மதங்கள் உருவாக உண்மையான காரணம் என்ன தெரியுமா?


உலகில் முதன் முறையாக  உங்களுக்கு ஒரு சின்ன அல்லது பெரிய   உண்மையை சொல்லப்போகிறேன்.  இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உரிமை. இப்பதிவின் நோக்கம் யாரயும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. நான் உண்மையாக நினைப்பதை பகிர்ந்து கொள்வது மட்டுமே.

என்னைப்பொருத்த வரை மதங்கள் உருவாக ஒரு மிக முக்கிய  காரணம் ஆர்வக்கோளாறு :).
ஆமாங்க ஆர்வக்கோளாறு தான் காரணம்.

மதங்களை  உருவாக்கியவர்கள் அனைவரும் இறைவனை கண்டவர்கள், உணர்ந்தவர்கள், இறை வெளிப்பாடு பெற்றவர்கள். ஆனால்  இறைவனை கண்டவர்கள், உணர்ந்தவர்கள், இறை வெளிப்பாடு பெற்றவர்கள் அனைவரும் மதங்களை உருவாக்கவில்லை. ஏன்?

மதங்களை உருவாக்கியவர்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை உண்டு. அந்த ஓற்றுமை என்னவெனில் இவர்கள் பெரும்பாலும் தங்களது சுய முயற்சியினால் இறை தரிசனம் பெறுகிறார்கள். கண்டவுடன், ஏதோ உலகத்திலேயே இவர்தான் ஏதோ சாதித்து விட்டதாகவும், இறைவன் இவருக்கு மட்டுமே காட்சி தந்ததாவும் நினைத்து கொண்டு கருத்து சொல்ல கிளம்பிவிடுகின்றனர்.

ஒன்று இருந்திதிருந்தால் அவர்களுக்கு இந்த ஆர்வக்கோளாறு வந்திருக்காது. அந்த ஒன்று தான் "குரு".  

இன்று உள்ள மதத்தை  நிறுவிய பலருக்கும் சொல்லிக்கொள்ளும்படி குரு யாரும் இல்லை. குரு யாரும் இல்லாததால் இவர்கள் கண்டதை,உணர்ந்ததை  பெரிதாக நினைத்துவிட்டனர்(அது உண்மையில் பெரிது என்பது வேறு :) ). குரு இருந்திருந்தால் மண்டையில் ஒரு தட்டு தட்டி இதெல்லாம் ஒரு பெரிய விடயமே இல்லை என்று கூறி இருப்பார். :)

ஆதலால் தான் பெரும்பாலும் குரு முகமாக தியானத்தை கற்கும் யாரும் மதத்தை உருவாக்குவதில்லை. குருவில்லாமல் தியானத்தை கற்று இறை தரிசனம் பெறுபவர்களே பெரும்பாலும் மதத்தை உருவாக்குகின்றனர். 


ஆக, குருவில்லாமல் இறை தரிசனம் கிடைக்கும்  பொழுது, சில உண்மைகள் விளங்கும் பொழுது, ஆர்வம் மிகுதியாகி, ஆர்வ கோளாறால் மதங்கள் உருவாகிறது என்பதை நீங்களும் ஏற்ப்பீர்கள் என எண்ணுகிறேன்.. 

இது கிருத்துவர்கள் சதியா? இசுலாமியர்கள் சதியா?இந்துக்கள் சதியா? அல்லது வேறு சதியா?


எனக்கு ஒன்னும் புரியல..என்னுடையா தளத்தை யாரோ சுட்டு விட்டார்கள். இது கிருத்துவர்கள் சதியா? அல்லது இசுலாமியர்கள் சதியா? அல்லது வேறு சதியா? என எனக்கு தெரியவில்லை.

கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றை விமர்சித்து  சில பதிவுகள் தான் இட்டுள்ளேன் அதற்கே இவ்வளவு பெரிய சதியா?

நான் கிருத்துவம், இசுலாம், இந்து மத ஒற்றுமைகளை பற்றி எழுதியவற்றை இவர்கள் படிக்கவில்லையா?

அல்லது அதற்கு தண்டனையாகத்தான் என் தளப்பெயரை திருடிவ்ட்டார்களோ?

ஆமாங்க முதலில் .com போட்டு தளத்தை திறந்தாள், என்னுடைய தளத்தை காணவில்லை. அது கிருத்துவ தளத்திற்கு செல்கிறது.  இங்கே போய்  பாருங்க 

ரொம்ப சிரமமா போச்சு....
பிறகு ஏதேதோ செய்து பார்க்க .in போட்டு  பார்க்க என்னுடைய தளம் வருகிறது.

இது யார் செய்த சதி..எதற்கு செய்த சதி என்று ஒன்றும்  புரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் நண்பர்களே.
போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் .in இட்டு என்னுடைய தளத்தை திறக்க முயலுங்கள்.
நன்றி

பிற்சேர்க்கை: இப்பொழுது சில நேரங்களில்  .in கூட வேறு தளத்திற்கு இட்டு செல்கிறது :( 
Related Posts Plugin for WordPress, Blogger...