வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 10 ஜனவரி, 2012

இனி பண்ருட்டி பலாப்பழம் , முந்திரி கிடைக்காது தெரியுமா?


பண்ருட்டி என்றால் பலாப்பழம் என்று பலரும் கூறுவார்கள். அதற்க்கு அடுத்த படியாக முந்திரியும் பண்ருட்டியின் சிறப்புதான். ஆனால் இவை இரண்டும் இனி இங்கே கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

தானே  புயலால் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று  வட்டாரத்தில் உள்ள முந்திரி மரங்கள் மற்றும் பலா மரங்கள் வேரோடு விழுந்துவிட்டன. விழுந்த மரங்கள் ஐம்பது சதவீதம் முதல் எழுபது சதவீதம் வரை இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மிஞ்சியிருக்கும் மரங்களிலும் கிளைகள் இல்லாமல் மொட்டையாகவே இருக்கின்றது.

புதிதாக செடி வைத்து உண்டாக்கினால் அவை வளர்ந்து பலன் கொடுக்க  மிக குறைந்த பட்சமாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆகும். அதுவரை இங்குள்ள மக்களின்  கதி? :(

பெரும்பாலான மக்கள் முந்திரி, பலாவை நம்பியே இந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். இதுதான்  அவர்களுக்கு சோறு போட்டது.  எந்த ஒரு நல்ல காரியம் ஆனாலும் அது முந்திரி விளைச்சலுக்கு பிறகு தான் இங்கு நடக்கும்.  முந்திரி பலாவில் வரும் பணத்தை வைத்து தான் தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்வார்கள், படிக்க பணம் கட்டுவார்கள். இனி இவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. 


முந்தரி  கொட்டை  உடைத்து, முந்திரி பயிர் உரித்துதான் இங்குள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர் இனி அவர்களுக்கு அந்த வருவாய் கிடைக்கப்போவதில்லை. 

தமிழக அரசு முந்திரி பலாவிற்கு ஹெக்டேருக்கு ஒன்பதாயிரம் ரூபாய் அளிப்பதாக கூறியுள்ளது. இப்பணம் விழுந்த மரங்களை  அப்புறப்படுத்த தரும் கூலிக்கு கூட போதாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

யாருக்கு சில மரங்கள் தப்பிபிழைத்துள்ளதோ  அவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவார்கள் என்றே நினைக்கின்றேன். முந்திரி மற்றும் பலாவின் விலை இனி விண்ணைத்தொட போகிறது.  

முக்கனியான பலா இனி தமிழனுக்கு எட்டாக்கனிதான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...