வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 26 அக்டோபர், 2012

சின்மயி கைது செய்யப்படுவாரா?

சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் யாரோ புகார் தெரிவித்துள்ளார். அது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சின்மயி புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம். இப்பொழுது சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் யாரோ புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா அல்லது வெறும் விசாரணையோடு நின்று விடுமா என்று தெரியவில்லை.

சின்மயி செய்த தவறுதான் என்ன?
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ப்படையினரால்  சுடப்படுவது சம்பந்தமாக  அவரிடம்  சிலர் தொடர்ந்து ஆதரவு  கோரியபோது சின்மயி   "பைத வே மீனவர்கள் மீன்களை கொல்வது  பாவம் இல்லையா? " என்று டுவிட்டியதாக  தெரிகிறது.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக டுவிட்டும் பொழுது "சோ கால்டு தாழ்த்தப்பட்டவர்கள்"  என்றும் டுவிட்டியுள்ளார் என்றும் தெரிய வருகிறது. தாழ்த்தப்பட்ட சமுதாய  மக்கள் மனதும் மீனவ சமுதாய மக்கள் மனதும் புண்படும்படி அவர் கூறியுள்ளார் என  அவர் பேரில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

இணையத்தில் ஆபாச கருத்து மட்டுமல்ல நல்ல வார்த்தையில் மோசமான சிந்தனையை வெளிப்படுத்தினாலும் பிரச்சனை தான் எனபது இதன் மூலம் தெரியவருகிறது.

எனவே இணையத்தை உபயோகிப்பவர்கள் தங்கள் கருத்தில் கண்ணியத்தை கடைபிடிப்பது  நல்லது.

சின்மயி என்ன செய்யலாம்?
நான் ஏதோ ஒரு ஆவேசத்தில் அறியாமல் செய்துவிட்டேன் எனவே மக்கள் என்னை மன்னிக்கவும் என்பதுபோல பொது மன்னிப்பு கேட்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
அதேபோல சின்மயி பற்றி ஆபாசமாக பேசியது உண்மை எனும் பட்சத்தில் கைதானவர்களும்  மன்னிப்பு கேட்க வேண்டும்.

இருவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மனிப்பு வழங்கிக்கொண்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கும் என நினைக்கின்றேன். அவர்களை தெரிந்தவர்கள் அதை செய்ய அறிவுறுத்த வேண்டுகிறேன்.



புதன், 24 அக்டோபர், 2012

சின்மயி விவகாரம் சின்மயி, பதிவர்கள், காவல்துறையினர் செய்ய வேண்டியது என்ன?



இது சற்று கவனத்துடன் கையாள வேண்டிய சிக்கலான  பிரச்சனை. எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டியது இங்கே அவசியம் என கருதுகிறேன்.

ஆபாசமான வார்த்தைகள் என்பது தமிழகத்தில் சில இடங்களில் மிகவும் சர்வ சாதரணமாக பேசக்கூடிய ஒன்று.

சில நண்பர்களுக்கு மத்தியில் இவைகள் சர்வ சாதாரணம். நண்பர்களுக்கு மத்தியில்  எந்த ஒரு பிரபலத்தை பற்றியும் எப்படியும் பேசுவார்கள்.இவர்களை எல்லாம் தண்டிக்க நினைத்தால் அது சாத்தியம்  இல்லை. அப்படி ஒரு சட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 

இப்படி நண்பர்களுக்கு மத்தியில் ஆபாசமாக பேசிக்கொள்பவர்கள் இணையத்தில் கருத்து பரிமாறிக்கொள்ளும் பொழுதும்  அதே சொல்லாடல்களை அவர்களுக்குள்  பயன்படுத்துகின்றனர். இது தவறுதான்.

சின்மயி: தன்னை நேரிடையாக ஆபாசமாக பேசியவர்களை காவல் துறையின்  உதவியுடன் தண்டிக்கும் உரிமை அவருக்கு  உண்டு. ஆனால் பல பிரபலங்களை பற்றி ஆபாசமாக பேசியதை அவர்கள் படம்  எடுத்து காட்டுவது என்பது தங்களுக்கு சாதகமாக பலரை திரட்ட வேண்டும், அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற  உள்  நோக்கத்தில் செய்யப்படுவதாக எனக்கு தோன்றுகிறது. . இதை செய்தது சின்மயியா அல்லது அவர்களது ஆதரவாளர்களா எனபது தெரியவில்லை.  
யார் செய்திருந்தாலும் இது சரியான செயல் அல்ல. ஏன் எனில் பல பிரபலங்களை பற்றி பலரும் ஆபாசமாக எழுதியுள்ளனர். எனவே அது பற்றி இவர்கள் தற்பொழுது  கவலைப்பட வேண்டாம். 

இங்கே சின்மயியும் சரி காவல் துறையினரும் சரி சிந்திக்க விடயம் ஒன்று உள்ளது.

அதாவது சின்மயியை  நேரிடையாக தாக்கியதற்கு உரியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கலாம் தவறில்லை ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் ஆபாசமாக  சின்மயியை  பற்றி  பேசியதற்கு நடவடிக்கை எடுக்கலாமா எனபது தெரியவில்லை.ஏன் எனில் இது சில நண்பர்களுக்குள் பேசிக்கொண்டது.  

இங்கே அடுத்து வைக்கப்படும் வாதம் என்னவெனில் இணையம் என்பது பொது அங்கே பேசினால் அதை பலரும் அல்லது அவர்களில் நண்பர்கள் பலரும் படிக்க நேரிடும். இது தவறில்லையா? 

இது சரியான கேள்விதான்.

இங்கே ஒரு கேள்வி கேட்கிறேன் (சிந்திக்க மட்டுமே :) )
இணையம் அல்லாமல் தனியில் வெளியே  
இரண்டு நண்பர்கள் ஒரு பிரபலத்தை  பற்றி ஆபாசமாக பேசிக்கொள்கின்றனர். அங்கே இருக்கும் மூன்றாவது நண்பர் இவர்கள்  பேசியதை ஒலி /ஒளி  பதிவு செய்து அந்த பிரபலத்திடம் கொடுத்து விடுகிறார் அல்லது அதை இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.. இப்பொழுது அந்த பிரபலத்தின் மனம் புண்படும் தான் மறுப்பதற்கில்லை.ஆனால் இதை ஆதாரமாக வைத்து அந்த இருவரின் மீதும் நடவடிக்கை எடுப்பது சரியா?

சட்டத்தை உருவாக்குபவர்களும் நடைமுறை படுத்துபவர்களும்,பாதிக்கப்படுபவர்களும்  இதை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது எதிர்காலத்தில் பல வழக்குகளுக்கு தீர்ப்பாக அமையும். 

மீண்டும் சொல்கிறேன் சின்மயியை  நேரிடையாக ஆபாசமாக பேசிய ஆதாரங்கள் இருக்குமானால் சம்பந்தப்பட்டவர்களின்  மீது நடவடிக்கை எடுக்க சின்மயிக்கு சகல உரிமையும் உண்டு. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கருணையின் அடிப்படையில் 
அவர்களை மன்னித்து விடவும் உரிமை உண்டு. எந்த முடிவையும் அவர்தான் எடுக்க வேண்டும். 

சின்மயி  மனம் எந்த அளவிற்கு  புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  சம்பந்தப்பட்டவர்கள் தங்களது தவறை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அவர்களின் செயல் இவ்வுலகிற்க்கே தெரிந்து விட்டது. இந்த கறை  அவர்களை விட்டு சீக்கிரம் மறையப்போவதில்லை. எனவே இதுவரை எடுத்த நடவடிக்கையே பெருமளவு தண்டனையை கொடுத்தது விட்டது. இனியும் அவர்களுக்கு தண்டனை வேண்டுமா எனபதை சின்மயிதான்  தீர்மானிக்க வேண்டும்.அவர் நல்ல முடிவை எடுக்கட்டும்.

காவல்துறையினர்,நீதிபதிகள்  செய்ய வேண்டியது: 
நான் முன்பே கூறியது போலநேரிடையாக பேசியதற்கு தண்டனை அளிப்பது  தவறல்ல. ஆனால் பல பிரபலங்களை பற்றி பேசியதற்கும், நண்பர்களுக்குள் சினமயியை பற்றி ஆபாசமாக பேசியதற்கும் நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா எனபதை ஆழ்ந்து சிந்தித்து செயல் படவேண்டும்.

மிக முக்கியமாக இணையத்தில் எந்த மாதிரியான வார்த்தைகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று ஒரு குழு அமைத்து, கலந்தாலோசித்து அதை வெளியிட வேண்டும். அதை பின்பற்றி பலரும்  ஆபாசமான  வார்த்தைகளை தவிர்க்க இயலும். 

கைதானவர்கள் செய்ய வேண்டியது: அவர்கள்  உண்மையாக தவறு செய்திருப்பின் சின்மயிடம் மன்னிப்பு கோர வேண்டும்.இந்த மன்னிப்பு சின்மயி  இவர்களை மன்னிக்க உதவும்.  தவறு செய்யவில்லை என்று நினைத்தால் துணிந்து போராடலாம்.

கலைத்துறையினர் செய்யவேண்டியது: ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவதையும், ஆபாசமான காட்சிகளை வைப்பதையும் தவிர்க்க  ேண்டும். ஆபாசம் சமுதாயத்தில் பல பிரச்சனைகளை ஏற்ப்படுத்துகிறது. இதற்க்கு கலைத்துறையும் ஒரு காரணம் என்பதை இவர்கள் உணரவேண்டும். 

அரசியல்வாதிகள் செய்யவேண்டியது: மேடைக்கு மேடை நீங்கள் எதிர் கட்சியினரை ஆபாசமாக பேசிவிட்டு இணையத்தில் ஆபாசமாக பேசுபவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வருதல் சரியாகுமா?  மேடையில் என்ன பேச வேண்டும் என்று  ஒரு நாகரிகம் தெரிய வேண்டாமா?  ஒரு தலைவன் எப்படி செயல்படுகிறானோ அப்படியே தொண்டனும். நல்லொழுக்கங்களை கடைபிடிக்க முயலுங்கள். 

பதிவர்கள் செய்ய வேண்டியது: எந்நேரத்திலும் எங்கும்  எப்பொழுதும் யாரை பற்றியும் ஆபாசமாக பேசுவதை தவிர்த்தல் நல்லது. இணையத்தில் மட்டுமல்ல தங்கள் வாழ்விலும் இதை கடைபிடித்தல்  நல்லது.. 

சிறு விமர்சனம்: ஏற்க்கனவே இணையத்தில் ஆபாசமாக எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு கைதானவர்களை விமர்சிக்க என்ன உரிமை உள்ளது?

குறிப்பு: எனக்கு சின்மயியையும் தெரியாது, கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் தெரியாது. ஒரு பதிவராக எனது கருத்தை பதிவு செய்கிறேன் அவ்வளவே. இதில் தவறான கருத்துக்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

ஆபாசமான வார்த்தைகளை அனைவரும் அறவே தவிர்க்க வேண்டும். இணையத்திலும் சரி, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி. இதுவே நாட்டிற்கும், வீட்டிற்கும், தமிழிற்கும் நல்லது. 
என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

திங்கள், 22 அக்டோபர், 2012

ஜாதியை ஒழிப்பது எப்படி?

இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஜாதி. ஜாதி அமைப்பு இன்றைய  கால கட்டத்திற்கு தேவையற்றது. தீண்டாமையை ஒழிக்க ஜாதியை ஒழிக்க வேண்டும். 

ஜாதியை ஒழிக்க எனக்கு தெரிந்து சில் வழிகள். உங்களது கருத்துக்களையும் கூறுங்கள்.

கல்வி கல்வி கல்வி.....மனிதத்தை பற்றிய கல்வி. இதுவே பல சமுதாய, உலக பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாகும்.   

ஜாதி பிரச்சனயை  மனிதம் ரீதியில் அணுக வேண்டும்.
நாம் அனைவரும் மனிதர்களே  நம்மில் ஏற்றத்தாழ்வு பார்க்க கூடாது என்று மக்களுக்கு  புரிய வைத்தல் வேண்டும். கலை, கல்வி மற்றும் ஒவ்வொரு மனிதனின் ஈடுபாடு இதில் இன்றியமையாதது. 


கிராமங்கள் இருக்கும் வரை ஜாதி இருக்கும். நகர்மயமாக்கலை (விவசாயத்தை பாதிக்காமல்) துரிதப்படுத்துவதன் மூலம் ஜாதி வேறுபாட்டை குறைக்கலாம். இன்று நகரங்களில் ஜாதி பிரச்சனை இல்லை. 


ஜாதி சான்றிதழ் என்ற ஒன்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அரசாங்கம்  ஜாதி சான்றிதழ்களை வழங்ககூடாது.

அந்நிய துணி எரிப்பு போராட்டம் நடந்தது போல் ஜாதி சான்றிதழ் எரிப்பு போராட்டம் நடத்த வேண்டும். அனைவரது ஜாதி  சான்றிதழ்களையும் தீயிட்டு கொலுத்த    வேண்டும்.


ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டை  நிறுத்திவிட்டு விட்டு பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை  செயல்படுத்த வேண்டும்.


கல்வியில் இட ஒதுக்கீடு   ஏழைகளுக்கும், பணக்காரர்களாக இருந்தும் கல்வி கற்காத குடும்பத்தினருக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்திடல் வேண்டும்.

வேலை வாய்ப்பில் ஏழைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்.

இவற்றில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் அதை களைய நாம் முற்ப்பட வேண்டும். 




யாரும் எந்த விதத்திலும் ஜாதி பெயர்களை உபயோகிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

 திருமணம் செய்யும் பொழுதும் யாரும் ஜாதி பார்க்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

இதன் மூலம்  சில தலைமுறைகளுக்கு பிறகு ஒருவன்  எந்த  ஜாதியை சார்ந்தவன் என்று அவனே அறிய முடியாத நிலை ஏற்ப்படும்.  இதன் மூலம் ஜாதியானது முற்றிலும் ஒழிக்கப்படும்.

ஆனால் சுய நலவாத அரசியல் கட்சிகள் இதை செய்யப்போவதில்லை. ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு வேறு எடுத்து விட்டார்கள்.

 ஜாதி கணக்கெடுப்பு இன்றும் நடந்து கொண்டிருந்தாள் அதை நிறுத்த நீதிமன்றத்தை அணுகலாம் என்று நினைக்கின்றேன்.  ஜாதி கணக்கெடுப்பு எடுத்திருந்தாலும் அதை வெளியிட கூடாது என்று உயர், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வேண்டும்.  உங்களுக்கு தெரிந்து ஏதாவது வழக்கறிஞர் தெரிந்தால் சொல்லுங்கள். முதல் வேலையாக ஜாதி கணக்கெடுப்பு  கணக்கை முடிப்போம். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்.

யாரெல்லாம் ஜாதி கணக்கெடுப்பை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் தீண்டாமையை  ஆதரிப்பதாகத்தானே அர்த்தம்?

மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்க வேண்டுமே ஒழிய அவனது ஜாதி,  மதம் இவற்றை பார்க்க கூடாது. ஜாதியும் மதமும் கண்டிப்பாக இந்தியாவில் அழிக்கப்பட  வேண்டியவை .இவற்றை அழிக்காத வரை இந்தியாவில் இந்தியர்களுக்கு மத்தியில் ஒற்றுமை என்பதை கொண்டு வருதல் சாத்தியம் இல்லை. மதங்களை ஒழிப்பது எப்படி என்று மற்றொரு பதிவில் பார்ப்போம். 

குறிப்பு: சட்டங்களை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். ஒரே இரவில் செயல்படுத்தினால்  ஒட்டு மொத்த மக்களும் எதிர்க்க செய்வார்கள். மக்கள் மனதில்  மாற்றத்தை,புரிதலை ஏற்ப்படுத்திக்கொன்டே சட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

இன்றும் தீண்டாமைக்கு விதை எவ்வாறு தூவப்படுகிறது?


சில அடுக்குமாடி குடியிருப்புகளில்  தீண்டாமைக்கான விதை தெரிந்தோ தெரியாமலோ இன்று தூவப்படுகிறது. இந்த தீண்டாமைக்கான அடிப்படை ஜாதியோ,மதமோ, இனமோ அல்ல. 

சென்னையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மின்தூக்கிக்கு அருகே ஒரு வாசகம்   எழுதப்பட்டிருந்தது. எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியையே   தந்தது.
அந்த வாசகம் என்ன சொல்கிறது எனில்  வியாபாரிகளும், தண்ணீர் கொண்டுவருபவர்களும், சிலிண்டர்  கொண்டு வருபவர்களும்  மின் தூக்கியை பயன்படுத்த கூடாதாம்.  மூன்று மாடி உள்ள கட்டிடத்தில் எப்படி அவர்கள் அவ்வளவு எடையை தூக்கிக்கொண்டு வருவார்கள் எனபதை ஏன் இவர்கள் சிந்திக்க வில்லை? 

மேலும் அந்த குடியிருப்புகளில்  வேலை செய்யும் வேலைக்கார  பெண்களும் மின் தூக்கியை உபயோகிக்க கூடாதாம்.  இன்று வேலைக்காரிக்கு மின்தூக்கி மறுக்கப்படுகிறது. நாளை இந்த வேலைக்காரியின் மகனுக்கும், மகளுக்கும் கூட இதே குடியிருப்பில் மின்தூக்கி மறுக்கப்படலாம். இதை தீண்டாமை என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

கவனிக்க இங்கே சிலிண்டர் கொண்டுவருபவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள்  என்ன ஜாதி, மதம் என்று  யாருக்கும் தெரியாது. அதேபோல்  அடுக்குமாடிகளில்  குடியிருப்பவர்கள் எல்லா ஜாதியையும் மதத்தையும் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 
இருப்பினும் ஏன் இந்த தீண்டாமை என்றால் அவர்கள் சாதாரண வேலைக்காரர்கள்  என்ற மனப்பான்மைதானே? அல்லது வேறு காரணமா? காரணம் என்ன என்பதை உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். சென்னையில் இந்த மாதிரி பல இடங்களில் மின்தூக்கி தீண்டாமை நிலவுவதாக அறிகிறேன். 

மும்பையில் ஒரு 27 மாடி அடுக்கு குடியிருப்பு, நல்லவேளை இங்கே அவர்களை மின்தூக்கியை பயன்படுத்தக்  கூடாது என்றெல்லாம்  சொல்லவில்லை மாறாக இந்த மாதிரி  வேலை செய்பவர்களுக்கு என்று தனி மின்தூக்கி அமைத்திருந்தார்கள். இதிலும் வேலை  செய்பவர்களின் குழ்தைகளுக்கு பொது மின்தூக்கி அனுமதியில்லை என்றே நினைக்கின்றேன். வீட்டு வேலை  செய்பவர்களுக்கு  தனி மின்தூக்கி எனபதும் தீண்டாமைதானே? அல்லது வேறு என்ன என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

இவைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா  அல்லது எதிர்க்கிறீர்களா என்பது எனக்கு தெரியாது .இதில் சில நியாங்கள் இருப்பதாக சிலர் உணரலாம். சிலர் இது தவறு என்று என்னலாம். 

இந்தமாதிரி அந்தகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில செயல்கள் கூட  சில   தீண்டாமைக்கு அடிகோலியிருக்கும் என நான் எண்ணுகிறேன். 

இன்று செய்யப்படும் இந்தமாதிரி செயல்கள்  எதிர்காலத்தில்   தீண்டாமையாக  பார்க்கப்படலாம்,ஒருவேளை இன்று இவைகள் தீண்டாமையாக பலரால் பார்க்கப்படாத பட்சத்தில்.

ஏன் நமது அரசியல் கட்சிகள் இவற்றை கண்டுகொள்வதில்லை. இவற்றை தீண்டாமையாக அவர்கள் கருதுவதில்லையா? அல்லது அடுக்கு மாடிகளில்  குடியிருப்பவர்களின் ஓட்டுக்கள் கிடைக்காது என்பதாலா? அல்லது வேலை செய்பவர்கள் எல்லா ஜாதியிலும் இருக்கிறார்கள் எந்த ஜாதி பேரை சொல்லி ஒட்டு வாங்குவது என்று தெரியவில்லையா?

தீண்டாமைக்கான விதை எவ்வாறு தூவப்படுகிறது எனபதை நான் மறைவாகவே சொல்லியுள்ளேன்.

இவற்றை எப்படி ஒழிப்பது என்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்றே நினைக்கின்றேன்.

இவற்றை எதிர்க்கும் எண்ணம் எனக்கு இருந்தாலும் அந்த நிலையில் இன்று  நான் இல்லை.  நான் சொல்லி இவற்றை யார் திருத்த முன்வருவர்? உங்களால் இவைகளை ஒழிக்க முடியும் என்று எண்ணினால் துணிந்து செய்யுங்கள்.என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்கள் கருத்துக்களையும்  பதிவு செய்யுங்கள். தீண்டாமையை ஒழிப்பது எப்படி என்பது பற்றி கொஞ்சம் நாட்களுக்கு பிறகு பதிவிடுகிறேன்.  ஜாதி,மதம் என்பது பிரிவினைவாதிகளின் சதியே இவற்றை அழிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றி சிந்தியுங்கள். 

என்றும் அன்புடனும் உண்மையுடனும் 
இராச.புரட்சிமணி 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?


 இந்து மத புத்தகங்களில் வர்ணாசிரமம் பற்றி  இருக்கிறது அதனால் தான் இந்தியாவில் ஜாதி/தீண்டாமை   பிரச்சனை என்று  பல அறிவாளிகள்   கூறுகின்றனர்.  என்னைப்பொறுத்தவரை இது ஒரு அறிவிலித்தனமான கூற்று.

இந்தியாவில் இருந்த/ இருக்கும் பிரச்சனைகளில்  ஒன்று ஜாதி. இந்த ஜாதி பிரச்சனைகளுக்கு காரணம் இந்து மதம் தான் என்று ஒரு சிலர் அல்லது பலர்  கூறலாம்.

இந்த மாதிரி ஜாதி பிரச்சனைகளில்/தீண்டாமையில் ஈடுபடும் எவனும் இது இந்து மதம் சொல்கிறது அதனால் இதை செய்கிறேன் என்று சொல்லமாட்டன்.  


வர்ணாசிரமம் பற்றி கூறும் ஒரு சில குறிப்புகள் கொண்ட  நூலை பற்றி ,அந்த வசனங்கள் பற்றி தீண்டாமையில் ஈடுபடுபவர்களுக்கும்   சரி,  ஈடுபடாதவர்களுக்கும் சரி ஒன்றும் தெரியாது எனபதே உண்மை. (வர்ணாசிரமம் பற்றி அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி பிறகு பார்ப்போம்.)

ஏன் எனில்பெரும்பாலான இந்திய மக்கள்   இவற்றை  இந்து மத நூல்களாக ஏற்று இரவும் பகலும் படித்து  இறைவன் தந்த வேதம் என்று போற்றுவதில்லை.  கிருத்துவமானாலும் சரி, இசுலாமானாலும் சரி குறைந்தது வீட்டிற்கு ஒரு புனித நூல், அதிக பட்சம் ஆளுக்கு  ஒரு நூல் வைத்திருப்பார்கள்.  ஆனால் மேற்கூறிய இந்த ஜாதி பற்றி கூறும்  இந்து மத நூல்கள் ஊருக்கு ஒன்று இருப்பதே அபூர்வம்.   அப்படி இருக்க  இந்த  மத  நூல்களால் தான் சில பல   இந்தியர்கள் / இந்துக்கள்   தீண்டாமையில் ஈடுபடுகின்றனர் என்பதை எப்படி ஏற்க இயலும்?


தீண்டாமை  ஒரு பெருங்குற்றம் தான் . மனிதத்தன்மையற்ற செயல்தான் அதில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால்  தண்டனை யாருக்கு தரப்பட வேண்டும்  தீண்டாமையில் ஈடுபட்டவர்களுக்குத்தானே ? அவர்களை மட்டும் தானே  குற்றவாளிகளாகப்  பார்க்க வேண்டும்? அதை விடுத்து   ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஜாதி வெறி பிடித்த  இந்துக்கள்  என்று சொல்வது எப்படி முறையாகும்?

எப்படி ஒரு மதத்தை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த மதத்தையும், ஒரு நாட்டை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த நாட்டையும் குறை செல்வது தவறோ அதைப்போலத்தான்  ஒருவன்  செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த இந்தியாவையும், இந்துக்களையும் குறை சொல்வதும் தவறாகும். 

உலகில் எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும் உள்ளது போல் இந்தியாவிலும் எல்லா மதங்களிலும்  தீண்டாமை இருப்பதை மறுப்பதற்கில்லை. இவைகள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டியவை.  தீண்டாமையை ஒழிக்கும் வழிகளை ஆராயும் முன் தீண்டாமைக்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்க்க வேண்டும்.


நீங்கள் தீண்டாமையில் ஈடுபடவில்லையா? 

இன்றைய சூழ்நிலையில் உலகில் பெரும்பாலானோர் குற்றமாக கருதப்படும் தீண்டாமையில் ஈடுபடவில்லை என்றாலும் குற்றமாக கருதப்படாத, ஏன் தீண்டாமை என்றே அறியாமல் பல தீண்டாமைகளை  இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் செய்துகொண்டுதான் வருகின்றோம். 

நான் என்ன சொல்கிறேன் நீங்களும் தீண்டாமையில் தான் ஈடுபடுகிறீர்கள் ஆனால் என்ன அது சட்டத்தால், சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இந்த தீண்டாமைக்கு மூல காரணம் என்னவெனில் ஒரு மனிதன் தன்னை விட மற்றொருவனை தாழ்வாக நினைப்பதுதான். நான் இந்த விதத்தில் உயர்ந்தவன் அவன் அந்த விதத்தில் தாழ்ந்தவன் என்று நாம் ஒவ்வொருவரும் ஒரு அளவுகோலை  வைத்துள்ளோம்.

இல்லை நான் தீண்டாமையில் ஈடுபடுபவன் இல்லை என்கிறீர்களா?
இதோ என்  கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...பின்வரும் கேள்விக்கு ஒரு கேள்விக்கு நீங்கள் இல்லை என்று பதில் சொன்னாலும் நீங்கள் தீண்டாமையில் ஈடுபடுகின்றீர்கள் என்று தான் பொருள். கேள்விக்கு தயாரா? 

உங்கள் மகளை நீங்கள் ஒரு பிச்சைக்காரனுக்கு  மணம் முடித்து  வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா? 

உங்கள் மகனுக்கு   பிச்சைக்கார  பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?

 நீங்கள் உண்ணும் தட்டில் பிச்சைக்காரனுக்கு உணவளித்துள்ளீர்களா ?  உணவளிப்பீர்களா?

பிச்சைக்காரன் உண்ட தட்டில் நீங்கள் உணவு உண்டுள்ளீர்களா? உண்பீர்களா?


அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் இல்லை என்றுதான் பதில் சொல்லி இருப்பீர்கள். ஏன் எனில் நீங்கள் அவர்களை மனிதர்களாக மதிக்கவில்லை.
நீங்கள் பிச்சைக்காரனைவிட  உங்களை உயர்வாக எண்ணுகிறீர்கள்.
இதற்க்கு காரணம் பல. இதற்க்கு  என்ன காரணம் என்று உங்கள் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.

 எந்த வகையான தீண்டாமையையும்  எந்த வகையிலும் நான் நியாப்படுத்த வில்லை.மாறாக காரணத்தைத்தான் அலசுகிறேன் என்பதை மனதில் வையுங்கள்.


இன்றைய இணைய உலகத்திலேயே, பெரிய படிப்பெல்லாம் படித்து விட்ட  நீங்களே, தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசும் நீங்களே  தீண்டாமையில் ஈடுபடும்பொழுது பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தீண்டாமையில் ஈடுபட்டிருப்பதில்   என்ன வியப்பு? என்ன அசிங்கம்? 
சரி இதை விடுங்கள்....

பணமும் தீண்டாமைக்கு வித்திடுகிறதா இல்லையா? 

என்னதான் உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று இருந்தாலும் அவர்களுக்கு மத்தியிலும்  தீண்டாமை உண்டா இல்லையா?
ஒரே ஜாதியில் இருந்தாலும்  பணக்காரன் ஏழைக்கு பெண் தரமாட்டான்
ஒரே ஜாதியில் இருந்தாலும்  பணக்காரன்  ஏழையை  வீட்டிற்கு   கூப்பிட்டு தன்னுடைய தட்டில் உணவளிக்க மாட்டான்.
உண்மையா இல்லையா? இதுவும் தீண்டாமை தானே? என்ன இது குற்றமற்ற தீண்டாமை.


மிருகங்களிடத்திலும் தீண்டாமையா? 
அறிவியல் படித்திருப்பவர்களுக்கு  தெரியும். ஒரு மிருகம் இனப்பெருக்கத்திற்கு எப்படி தன்னுடைய  இணையை தேர்ந்தெடுக்கின்றது என்று. எல்லா விதத்திலும் உயர்ந்த,சிறந்த  ஒரு ஆண் மிருகத்தைத்தான்  பெண் மிருகங்கள்  தேர்ந்தேடுக்குமாம். இங்கே சிறந்தது என்பது  வீரமாக இருக்கலாம், உடல் பலமாக  இருக்கலாம்,அழகாக இருக்கலாம், தனக்கு பிடித்த மாதிரியான  உடல் வாசனையாக  இருக்கலாம், நோயற்ற தன்மையாக  இருக்கலாம். (ஆண் தேர்ந்தெடுக்கும் பொழுதும் அப்படித்தான்......வன்புணர்ச்சிகள் எனபது  வேறு). தன்னுடைய எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான்  இப்படி மிருகங்கள் கூட இனையைத்தேர்ந்தேடுக்கும் பொழுது  சில அளவுகோலை வைத்துள்ளது. இதுவும் யாரை தீண்டக்கூடாது என்பதற்கான ஒன்றுதான். இதுவும் தீண்டாமைதான்.

காதல் கலப்பு மணத்தில் தீண்டாமை ?
இன்றும் மனிதர்களுக்கு மத்தியில்  என்னதான் கலப்பு மனங்கள் காதல் மனங்கள் நடக்கின்றது என்றாலும். தன்னுடைய வசதிக்கு,அழகிற்கு  படிப்பிற்கும் தகுந்த முறையில் தான் நடக்கின்றதே தவிர எவனும் அல்லது எவளும் எதையும் பார்க்காமல் காதலிப்பதில்லை.இதிலும் தீண்டாமை இன்றளவும் உண்டு.  (ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்? ).

நண்பர்களுக்கு மத்தியில் தீண்டாமை ?
ஏன் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் பொழுதும் கூட இன்று ஜாதியை பார்க்காமல் இருக்கலாம் ஆனால் வசதி, படிப்பு, ஒத்த  சிந்தனை, பழகும் விதம், பேசும் விதம், ஒழுக்கம்   என பல அளவுகோல்கள் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தப்படுகிறது.  இதுவும் ஒரு தீண்டாமை  தானே?

ஜாதி வீட்டு ஜாதி திருமணம் செய்ய மறுக்கிறார்கள் ஜாதி வெறியர்கள் என்று குரல் கொடுக்கின்றனர். இதுபோல் தான்  யாரும் மதம் விட்டு மதம் யாரும் திருமணம் செய்வதில்லை. இதுவும் ஒரு தீண்டாமைதானே?


இந்தியாவில் இந்து மதத்தில் இதுவும் தீண்டாமையா?

இந்து மதத்தில் ஜாதிக்கு ஒரு மயானம் - இது தீண்டாமையாக பார்க்கப்படுகிறது.
ஏன் பல தெய்வங்கள்/இறைவன்கள் இருப்பதையும் சிலர் குறை கூறுகின்றனர்.
சிலர் சில கோயிலுக்கு போவதே இல்லை 

இதை விளக்க ஒரு குட்டி கதை சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

"தீடிரென்று  இன்று வேற்று கிரகத்தில் இருந்து சிலர் பூமிக்கு வந்துவிடுகின்றனர். அவர்கள் உலகின் பல நாட்டு அரசியல்வாதிகளை சிறையில் அடைத்துவிட்டு, இவ்வுலகையே அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகின்றனர்.
அவர்கள் பின்பற்றுவது புண்ணாக்கு மதம். இந்த பூமியில் பின்பற்றப்பட்ட பிறமதங்களை அவர்கள் பூமி மதம் என்று பெயரிட்டு விடுகின்றனர்.

சில  தலைமுறைகள் கடந்துவிட்டன  வேற்று கிரக வாசிகள் தங்களை அடிமைபடுத்தியுள்ளதால் பூமியை சேர்ந்தவர்கள், பூமி மதத்தினர் ஒட்டுமொத்தமாக அவர்களை எதிர்க்கின்றனர். (இப்பொழுது இவர்கள் பல மதங்களை சார்ந்தவர்கள் எனபதே அவர்களுக்கு தெரியாது) 
  இவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்தால் தான், அவர்களுக்கு இடையே சண்டை உருவானால் தான் நாம் நிம்மதியாக சுரண்ட முடியும் வாழ முடியும் எனபதை  வேற்று கிரக புண்ணாக்கு  மதத்தினர் உணர்கிறார்கள். வேற்று கிரக வாசிகள் பூமி மதத்தில் இருக்கும் வேறுபாடுகளை பார்க்கின்றனர். இவற்றை பல தந்திரங்கள் மூலமாக பெரிதாக்குகின்றனர். பூமி மதத்தினரின் ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர். 

 இப்பொழுது புண்ணாக்கு மதத்தினர் "எங்கள் மதமே சிறந்தது, உங்கள் மதத்தில்  பல தீண்டாமைகள் உள்ளன. உங்கள் மதத்தில்  சிவனுக்கு ஒரு கோயில், அல்லாவுக்கு ஒரு கோயில், ஏசுவுக்கு ஒரு கோயில். அல்லாவை வழிபடுபவர்கள் அந்த கோயிலுக்குள் பிற கடவுளை வணங்குபவர்களை அனுமதிப்பதில்லை. அதுபோலவே பிற இறைவன் கோயிலுக்கும் பிறர் போவதில்லை. தீண்டாமை  எப்படி தலை விரித்தாடுகிறது பாருங்கள்.

அதுமட்டுமா சிவனை வணங்குபவர்கள் பிணத்தை தனியாக ஒரு மயானத்தில் எரிக்கின்றனர். அல்லாவை வணங்குபவர்களுக்கு தனியாக பிணத்தை புதைக்க ஒரு மயானம், கர்த்தரை வணங்குபவருக்கு தனியாக ஒரு மயானம். உங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவு தீண்டாமை.எத்தனை இறைவன்கள். எனவே இந்த தீண்டாமையிலிருந்து தப்பிக்க நீங்கள் எங்கள் புண்ணாக்கு மதத்திற்கு மாறுங்கள்" என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர்.



இந்த  கதையில் நீங்கள் பூமியை இந்தியாவிற்கும், பூமி மதத்தை இந்து மதத்திற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் பல உண்மைகள் உங்களுக்கு தெரியும்.  நூற்றுக்கு நூறு இக்கதை பொருந்த விட்டாலும் பெருமளவிற்கு பொருந்தும். 


இன்றைய இந்து மதம் என்பது பல சமயங்களின் சங்கமம், பல மதங்களையும் ஏதோ ஒரு காரணத்தால் யாரோ இந்து மதம் என்று அழைத்து விட்டனர்.அதனால் தான் பல வித்தியாசங்கள், சிக்கல்கள்  இந்து மதத்தில் உள்ளது

பூமி மதத்தில் எப்படி தீண்டாமை உருவானதோ அப்படித்தான் இந்தியாவிலும் தீண்டாமை உருவாகி இருக்க வேண்டும். 

என்னதான் தீண்டாமைக்கு காரணம் கூறினாலும். இரட்டை குவளை முறை, தாழ்த்தப்பட்டவர்களை பஞ்சாயத்து தலைவர்களாக ஏற்க்க மறுத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு புரிய வைக்க முயல வேண்டும்(பல கிரமாங்களில் இந்நிலை இல்லை சில கிராமங்களில் மட்டுமே குறிப்பாக மதுரை பக்கத்தில் இது இருப்பதாக கேள்வி).  வேண்டும் என்றே புரிந்து கொள்ள மாட்டேன் என்று தீண்டாமையை ஆதரிக்கும் செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றமான தீண்டாமையை உடனடியாக ஒழிக்க வேண்டும்.

குற்றமான தீண்டாமையையும் குற்றமற்ற தீண்டாமையையும் அழிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும். அது எப்படி என்பதை பற்றி  மற்றொரு பதிவில் பார்ப்போம். 


இப்பதிவின் நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல, மாறாக என்னுடைய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதே, தீண்டாமையின் மூலத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே.   இப்பதிவில் எங்கு தவறு இருந்தாலும் சுட்டி காட்டுங்கள் உடனடியாக திருத்திக்கொள்கிறேன். தீண்டாமைக்கான காரணங்களை அலசியுள்ளதால் தீண்டாமைக்கு நான்  ஆதரவு என்று யாரும் எண்ண  வேண்டாம். தீண்டாமை, ஜாதி, மதம் இவற்றை கண்டிப்பாக அழித்தே ஆக வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். தீண்டாமைக்கு காரணம் இந்தியாவும் அல்ல இந்து மதமும் அல்ல மனிதர்களே என்று நான் உறுதியாக  கூறுகிறேன். இதை நீங்களும் ஏற்ப்பீர்கள் என நம்புகிறேன். 

இவன்
 உங்களைப்போலவே சில இடங்களில் தீண்டாமையால் பாதிக்கப்படுபவனும்,   சில இடங்களில் தீண்டாமையில் ஈடுபடுபவனும், தீண்டாமையை அழிக்க விரும்புபவனுமாவான். 

என்றும் அன்புடனும்  உண்மையுடனும்
இராச.புரட்சிமணி


Related Posts Plugin for WordPress, Blogger...