வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 9 அக்டோபர், 2012

இன்றும் தீண்டாமைக்கு விதை எவ்வாறு தூவப்படுகிறது?


சில அடுக்குமாடி குடியிருப்புகளில்  தீண்டாமைக்கான விதை தெரிந்தோ தெரியாமலோ இன்று தூவப்படுகிறது. இந்த தீண்டாமைக்கான அடிப்படை ஜாதியோ,மதமோ, இனமோ அல்ல. 

சென்னையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மின்தூக்கிக்கு அருகே ஒரு வாசகம்   எழுதப்பட்டிருந்தது. எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியையே   தந்தது.
அந்த வாசகம் என்ன சொல்கிறது எனில்  வியாபாரிகளும், தண்ணீர் கொண்டுவருபவர்களும், சிலிண்டர்  கொண்டு வருபவர்களும்  மின் தூக்கியை பயன்படுத்த கூடாதாம்.  மூன்று மாடி உள்ள கட்டிடத்தில் எப்படி அவர்கள் அவ்வளவு எடையை தூக்கிக்கொண்டு வருவார்கள் எனபதை ஏன் இவர்கள் சிந்திக்க வில்லை? 

மேலும் அந்த குடியிருப்புகளில்  வேலை செய்யும் வேலைக்கார  பெண்களும் மின் தூக்கியை உபயோகிக்க கூடாதாம்.  இன்று வேலைக்காரிக்கு மின்தூக்கி மறுக்கப்படுகிறது. நாளை இந்த வேலைக்காரியின் மகனுக்கும், மகளுக்கும் கூட இதே குடியிருப்பில் மின்தூக்கி மறுக்கப்படலாம். இதை தீண்டாமை என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

கவனிக்க இங்கே சிலிண்டர் கொண்டுவருபவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள்  என்ன ஜாதி, மதம் என்று  யாருக்கும் தெரியாது. அதேபோல்  அடுக்குமாடிகளில்  குடியிருப்பவர்கள் எல்லா ஜாதியையும் மதத்தையும் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 
இருப்பினும் ஏன் இந்த தீண்டாமை என்றால் அவர்கள் சாதாரண வேலைக்காரர்கள்  என்ற மனப்பான்மைதானே? அல்லது வேறு காரணமா? காரணம் என்ன என்பதை உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். சென்னையில் இந்த மாதிரி பல இடங்களில் மின்தூக்கி தீண்டாமை நிலவுவதாக அறிகிறேன். 

மும்பையில் ஒரு 27 மாடி அடுக்கு குடியிருப்பு, நல்லவேளை இங்கே அவர்களை மின்தூக்கியை பயன்படுத்தக்  கூடாது என்றெல்லாம்  சொல்லவில்லை மாறாக இந்த மாதிரி  வேலை செய்பவர்களுக்கு என்று தனி மின்தூக்கி அமைத்திருந்தார்கள். இதிலும் வேலை  செய்பவர்களின் குழ்தைகளுக்கு பொது மின்தூக்கி அனுமதியில்லை என்றே நினைக்கின்றேன். வீட்டு வேலை  செய்பவர்களுக்கு  தனி மின்தூக்கி எனபதும் தீண்டாமைதானே? அல்லது வேறு என்ன என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

இவைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா  அல்லது எதிர்க்கிறீர்களா என்பது எனக்கு தெரியாது .இதில் சில நியாங்கள் இருப்பதாக சிலர் உணரலாம். சிலர் இது தவறு என்று என்னலாம். 

இந்தமாதிரி அந்தகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில செயல்கள் கூட  சில   தீண்டாமைக்கு அடிகோலியிருக்கும் என நான் எண்ணுகிறேன். 

இன்று செய்யப்படும் இந்தமாதிரி செயல்கள்  எதிர்காலத்தில்   தீண்டாமையாக  பார்க்கப்படலாம்,ஒருவேளை இன்று இவைகள் தீண்டாமையாக பலரால் பார்க்கப்படாத பட்சத்தில்.

ஏன் நமது அரசியல் கட்சிகள் இவற்றை கண்டுகொள்வதில்லை. இவற்றை தீண்டாமையாக அவர்கள் கருதுவதில்லையா? அல்லது அடுக்கு மாடிகளில்  குடியிருப்பவர்களின் ஓட்டுக்கள் கிடைக்காது என்பதாலா? அல்லது வேலை செய்பவர்கள் எல்லா ஜாதியிலும் இருக்கிறார்கள் எந்த ஜாதி பேரை சொல்லி ஒட்டு வாங்குவது என்று தெரியவில்லையா?

தீண்டாமைக்கான விதை எவ்வாறு தூவப்படுகிறது எனபதை நான் மறைவாகவே சொல்லியுள்ளேன்.

இவற்றை எப்படி ஒழிப்பது என்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்றே நினைக்கின்றேன்.

இவற்றை எதிர்க்கும் எண்ணம் எனக்கு இருந்தாலும் அந்த நிலையில் இன்று  நான் இல்லை.  நான் சொல்லி இவற்றை யார் திருத்த முன்வருவர்? உங்களால் இவைகளை ஒழிக்க முடியும் என்று எண்ணினால் துணிந்து செய்யுங்கள்.என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்கள் கருத்துக்களையும்  பதிவு செய்யுங்கள். தீண்டாமையை ஒழிப்பது எப்படி என்பது பற்றி கொஞ்சம் நாட்களுக்கு பிறகு பதிவிடுகிறேன்.  ஜாதி,மதம் என்பது பிரிவினைவாதிகளின் சதியே இவற்றை அழிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றி சிந்தியுங்கள். 

என்றும் அன்புடனும் உண்மையுடனும் 
இராச.புரட்சிமணி 

20 கருத்துகள்:

 1. புரட்சி மணி,

  கருத்தியல் அடிப்படையில் எதனை சமூக தீண்டாமை என சொல்லப்படுகிறதோ அதனை தவிர மற்றவற்றை தீண்டாமை என்று சொல்வதில் ஒரு தனி ஆர்வம் தெரிகிறதே ஏன்?

  சிலப்பதிவுகளை படித்த போது எழுந்த அவதானிப்பு, நான் தவறாக கூட கணித்திருக்கலாம்.

  -------

  நீங்கள் சொல்வது போல சென்னையில் பல அடுக்கங்கள் ,பலவிதமான கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு இருக்கிறது.

  நீங்கள் கண்ட அறிவிப்பு ஒரு அல்பமான சிந்தனை, உயர் வர்க்க பேதம் என சொல்லலாம்.இது கண்டிக்க வேண்டிய ஒன்று, ஆனால் நீங்கள் அதற்கு வேறு வர்ணம் கொடுக்கிறீர்கள்.

  அனைத்து அடுக்கத்திலும் விருந்தினர் வாகனம் உள்ளே வரக்கூடாது என அறிவிப்பு பலகை இருக்கும். அடுத்து அதனை தீண்டாமை என்ற வரையறைக்குள் கொன்டு வருவீர்கள் என நினைக்கிறேன் :-))  பதிலளிநீக்கு
 2. வாங்க வவ்வால்,
  எந்த இடத்திலும் நான் இன்று சமூக தீண்டாமையாக கருதப்படுபவைகளை தீண்டாமை அல்ல என்று சொல்லவில்லை.
  தீண்டாமை எவ்வாறு உருவாகிறது என்பதை மட்டுமே நான் சுட்டிகாடுகிறேன். ஆனால் அதை புரிந்துகொள்ளும் மன நிலை இங்கே பலருக்கும் இல்லை என்றே நினைக்கின்றேன்.நான் கூறியவற்றை தாண்டி சிந்தித்தால் தான் இதன் உண்மை புரியும். சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கைகள் தீண்டாமையாக பார்க்கப்படலாம். அவ்வாறே அந்த காலத்தில் , இன்று நாம் சமூகத் தீண்டாமையாக கருதப்படுபவைகள் தீண்டாமையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.( தங்கள் கருத்தை இது பற்றிய அறிய விரும்புகிறேன். ) இந்த புரிதல் சமூகத்தில் சில சிக்கல்களை தீர்க்க உதவும்.


  எல்லோரும் லாடம் கட்டிய குதிரையாக தீண்டாமையை ஒரு குறுகிய பார்வையில் பார்க்கின்றனர். தீண்டாமை காலத்திற்கு தகுந்தாற்போல் மாறுகிறது. அதை நீக்குவதற்கான வழிமுறைகளும் காலத்திற்கு ஏற்றார்போல மாற்றப்படவேண்டும்,அதே நேரத்தில் தீண்டாமை எவ்வாறு உருவாகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 3. மனிதர்கள் குடும்பமாக வசிக்கும் உயரடுக்கு கட்டிடங்களில் உள்ள மின் ஏற்றியானது முக்கியமாக அங்கு வாழும் திடகாத்திர வாலிபர்கள் மட்டுமல்லாது குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், கற்பவதிகள், நோயாளிகள் போன்றவர்கள் அடங்கிய அனைத்து ரக மனிதர்களையும் ஏற்றி இரக்க உதவும் கருவியாகும். இம்மின் ஏற்றிகளில் குறிப்பிட்ட ஒரு அளவுக்கு அதிகமாக பளுவை ஏற்றினால், பிறகு அது பழுதாகிவிடும். இதனால் அங்கு வசிக்கும் அனைவருக்கும் அவதிதான். (உயிர்)ஆபத்து அவசரத்திற்கு உதவாமல் இது இடஞ்சலாக இருக்கும். இந்த நோக்கத்திற்காகத்தான் நீங்கள் கவனித்த அந்த "நவீன தீண்டாமை" குறிப்பு வைத்திருப்பார்கள். தயவு இதை புரிந்து கொள்ளுங்கள் புரட்சிமணி.

  உங்கள் அடிப்டை எண்ணமமும் நோக்கமும் நல்லதொரு விருப்பத்தின் பேர் அமைந்திருதாலும், இங்கு உங்கள் கணிப்பு கொஞ்சம் பாதை தவறிவிட்டது என தோன்றுகிறது புரட்சிமணி. இதில் சாதி மதங்களை உள் இழுத்து இல்லாத புது பிரச்சினைகளை பற்றி பேசுவதை தவிர்க்கலாம்.

  நட்புடன் மாசிலா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மாசிலா,
   எடை பளுவான பொருட்கள் பற்றிய தங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில் அங்கே வீட்டு வேலை செய்பவர்களுக்கு மின்தூக்கி அனுமதி இல்லையே இதற்க்கு என்ன காரணம் எனபதையும் தாங்கள் கூறினால், இதற்க்கு தீண்டாமை என்ற பதத்தை உபயோகிக்கலாமா வேண்டாமா எனபதை பற்றி எனக்கு (நமக்கு) ஒரு தெளிவு பிறக்கும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 4. மன்னிக்க வேண்டும்! தீண்டாமை என்று சொல்ல வேண்டாம்; வேறு பெயர் உபயோகப் படுதிக்க் கொள்ளுங்கள்; ஆனால், எடை தூக்கி வருபவர்கள் மின் தூக்கியை உபயோகப் படுத்தக்கூடாது என்பது தவறு!

  அடிப்படையில் மூன்று மாடி (எத்தனை மாடி என்ற விதி இந்தியாவில் எனக்குத் தெரியாது) இருந்தால் மின்தூக்கி உபயோகிப்பதை யாரும் தடுக்கக் கூடாது; அவர்களுக்கு செய்யும் சேவையை (காஸ் சிலின்டர் ) நிருத்தலாம்; (காஸ் சிலின்டர் வாங்குபவர்களை கீழே வந்து எடுத்துக் கொள்ள சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நம்பள்கி,
   ஏன் தீண்டாமை என்ற சொல் வேண்டாம், அதற்க்கு வேறு என்ன பெயர் வழங்கலாம் எனபதையும் தாங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
   வீட்டு வேலை செய்பவர்களுக்கு மின்தூக்கி ஏன் அனுமதி இல்லை. இதை நீங்கள் வரவேற்க்கிரீர்களா?
   இதை தீண்டாமை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல?

   பளுவான பொருட்கள் பற்றிய தங்கள் கருத்தை வரவேற்கிறேன். இப்படி செய்தால் பாராயில்லை மின்தூக்கியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
  2. நண்பர் புரட்சிமணி,
   நல்ல பதிவு.சக மனிதர்களை நம்போல் நடத்தாமைதான் தீண்டாமை என்பது என் கருத்து.அந்தவகையில் மின் தூக்கியை நம் பணிக்காக வரும் பணியாளர்களை பயன்படுத்தக் கூடாது என்பது நியாயம் அல்ல. இதுவும் ஒரு வகை மேட்டிமைக் குணம்,கஞ்சத் தனம்[மின்சாரம் செல்வு ஆகுமாம்] ஒரு வகை தீண்டாமை என்று கூட சொல்லலாம்.
   இத்னை ச‌ட்ட‌ம் போட்டுத் த‌டுக்க‌ முடியுமா?

   தீண்டாமை என்ப‌து எப்ப‌டி ஏற்ப‌ட்ட‌து என்ப‌து குறித்த‌ ச‌ரியான‌ ஒரே க‌ருத்து இல்லை.ப‌ல் முர‌ண்ப‌டும் க‌ருத்துக‌ளே உண்டு.

   எனினும் இதுவும் ஒருவ‌கைத் தீண்டாமையே. இப்ப‌டி தீண்டாமை என்ப‌து முன்பு உருவாகி இருக்க்லாமோ என்னும் உங்க‌ளின் க‌ருத்தும் ஆய்வு செய்ய‌ப்ப‌ட‌வேண்டிய‌தே.
   ப‌ல வ‌கையாக‌ தீண்டாமையை பார்ப்ப‌தும்,விவாதிப்ப‌தும் அதனை ஒழிக்க‌ முத‌ல் ப‌டி.ந‌ல்ல‌து தொட‌ருங்க‌ள்!!!

   ந‌ன்றி

   நீக்கு
  3. வாங்க நண்பர் சார்வாகன் அவர்களே,
   //சக மனிதர்களை நம்போல் நடத்தாமைதான் தீண்டாமை என்பது என் கருத்து.//
   சரியான கருத்து,புரிதல்.

   //இத்னை ச‌ட்ட‌ம் போட்டுத் த‌டுக்க‌ முடியுமா?//
   சட்டத்தாலும் முடியும். ஏற்க்கனவே இருந்த தீண்டாமையை சட்டத்தால் ஒழிக்க முடிந்ததல்லவா?
   ஆனால் அது முடிவல்ல வேறு சில வழிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும்.

   //தீண்டாமை என்ப‌து எப்ப‌டி ஏற்ப‌ட்ட‌து என்ப‌து குறித்த‌ ச‌ரியான‌ ஒரே க‌ருத்து இல்லை.ப‌ல் முர‌ண்ப‌டும் க‌ருத்துக‌ளே உண்டு.//
   வெள்ளையன் வருவதற்கு முன்பு தீண்டாமை பற்றி பேச்ச்சு இருந்ததா என்பது சந்தேகமே.
   அன்றும் தீண்டாமை இருந்திருக்கும் ஆனால் அது மக்களால் தீண்டாமையாக பார்க்கப்படாமல் இருந்திருக்கும்.
   அன்று அடிமை முறை இருந்தது. அதை இறைதூதர்கள் கூட எதிர்க்க வில்லை ஏன் எனில் அது தீண்டாமையாக அன்று பார்க்கப்படவில்லை. இருப்பினும் இன்று நாம் பார்க்கும் பொழுது அது தீண்டாமைதானே?

   //எனினும் இதுவும் ஒருவ‌கைத் தீண்டாமையே. இப்ப‌டி தீண்டாமை என்ப‌து முன்பு உருவாகி இருக்க்லாமோ என்னும் உங்க‌ளின் க‌ருத்தும் ஆய்வு செய்ய‌ப்ப‌ட‌வேண்டிய‌தே.//
   நிச்சயமாக சகோ. ஏன் எனில் அன்று இருந்த பழக்க வழக்கங்களை அன்று இருந்தவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். பின்னாள் மக்கள் நாகரிகம் அடையும்பொழுது அவர்களுக்கு அன்று நடந்தது தவறாக தோன்றுகின்றன. உதாரணத்திற்கு குழந்தைகள் திருமணம்.

   //ப‌ல வ‌கையாக‌ தீண்டாமையை பார்ப்ப‌தும்,விவாதிப்ப‌தும் அதனை ஒழிக்க‌ முத‌ல் ப‌டி.ந‌ல்ல‌து தொட‌ருங்க‌ள்!!!//
   தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பா :)

   நீக்கு
 5. தங்களின் தொடர் கட்டுரைகளை வாசிக்கும்போது தோன்றுவது என்னவெனில் வேறு ஏதோ ஒன்றை நியாயப்படுத்த முயல்வதாக தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க Barari,
   நான் எதை நியாயப்படுத்த விரும்புகிறேன் அதில் அப்படி என்ன நியாயம் அல்லது அநியாயம் உள்ளது எனபதை கூறினால் அதை நானும் பிறரும் அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
   என்னுடைய நோக்கமெல்லாம் தீண்டாமை பற்றிய ஒரு புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும் மற்றும் அதை ஒழிக்க வேண்டும் என்பதே.
   இந்த தொடர் பலரின் மனசாட்சியோடு விளையாடுகிறது என்பதை நான் நன்கு அறிவேன்.
   தொடர்ந்து வாசித்தால் நீங்களும் இந்த நன்னோக்கத்தில் பங்குபெருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)

   நீக்கு
 6. இது மாதிரி தடை போடுவது அந்த அப்பர்ட்மென்ட்ஸ் குடியிருப்போர் விருப்பம். காரணம், லிஃப்ட்கள் அவர்கள் தங்களுக்காக போட்டிருக்கின்றனர். அதன் மின்சாரத்திற்கு செலவு செய்பவர்கள் அவர்கள். அதனால், அது அவர்கள் உரிமை.

  இதற்கு தீர்வு? தண்ணீர் சிலிண்டர் கொண்டுவருபவர்கள், அவற்றை கீழ் தளத்திலேயே வைத்துவிடலாம். வேண்டுமானால், வீட்டு ஓனர்கள் வந்து எடுத்துக் கொள்ளட்டும். இவர்கள் ஒரு குரலில் 'நாங்கள் எடுத்து வர முடியாது' என்று சொல்லவேண்டும். அப்புறம் ஆட்டோமேட்டிக்கா வழிக்கு வருவாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சீனு,
   உங்களின் ஆலோசனை சரிதான். வீட்டு வேலை செய்பவர்கள் மின்தூக்கியை பயன்படுத்த கூடாது என்கிறார்கள். இதற்கும் ஒரு சிறந்த ஆலோசனை தந்தால் நன்றாக இருக்கும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 7. சாதியம் என்பதே வர்க்க முரண்பாடு மற்றும் இனப் பரம்பலில் இருந்து தோன்றியது தான் .. இந்தியாவில் சாதியம் என்பது நீண்ட ஆழ ஊடுருவலைக் கொண்டுள்ளது .. அதற்கு விதை வருணாசிரமம் என்பதில் ஐயமில்லை .. ஆனால் இன்று வருணாசிரமத்தையும் தாண்டி நன்கு வேரூன்றப்பட்டு விட்டது ..

  சாதியத்தில் முதல் அறிகுறி நிறம்.. வெள்ளை நிறம் என்றால் பொதுவாக உயர்வர்க்கம் என்ற எண்ணம் உண்டு, தலித்களில் கூட வெள்ளை நிறத்தவர் உண்டு .. ஆனால் அவர்கள் தலித் என்று தெரியாத வரை நன்கு பழகுவார்கள் ..

  அடுத்து வர்க்கம் / வசதி வாய்ப்பு .. சாதியத்தின் அடுத்த பிரிவு வர்க்கம் என்பேன் .. பெரும்பாலான ஆதிக்கச் சாதியினர் வசதிப் படைத்தவர்கள் .. வசதி நிறைந்த தலித்கள் பல சமயம் புறக்கணிக்கப்படுவதுண்டு. ஆனால் தலித் அடையாளத்தை மறைத்துக் கொண்டால் . நன்கு புழங்குவார்கள் ..

  வசதி என்பதிலே கல்வி, உடை, வேலை, உறையுள் எல்லாம் அடங்கிவிடுகின்றது ..

  மொழி என்பது சாதியத்தின் அடுத்த நிழல் .. சமஸ்கிருதம் கலந்தோ, ஆங்கிலம் கலந்தோ , சில இடங்களில் தெலுங்கு, மலையாளம் ... பேசினால் அவர் ஆதிக்கசாதி என்ற நிலையும் உள்ளது .. அத்தோடு வட்டார வழக்குகள் சாதியம் பேணுவதில் முன்னணியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

  என்னைப் பொறுத்தவரை சாதியம் குறைந்து வருகின்றது ... இருந்தாலும் முழுமையாக மறையவில்லை.. தலித்கள் வீடுகளுக்கு நாம் சென்றால் நம்மை அவர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் ஆதிக்கச் சாதியினர் வீட்டுக்கு அவர்கள் வந்தால் கொஞ்சம் கரடு முரடாகப் பார்ப்பது வழக்கம் ...

  இங்கு திருந்த வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்துக் கொள்ளுங்கள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இக்பால் செல்வன்,
   தங்களது கருத்துக்கள் அருமை
   // என்னைப் பொறுத்தவரை சாதியம் குறைந்து வருகின்றது ... இருந்தாலும் முழுமையாக மறையவில்லை..//
   உண்மை தான். சாதியம் ஒழிந்தாலும் தீண்டாமை வேறு ஒரு வடிவில் வரும் என்பதே எனது கணிப்பு. இருப்பினும் சாதியை ஒழிக்க வேண்டும்.

   //இங்கு திருந்த வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்துக் கொள்ளுங்கள் ..//
   மேல்சாதியினர் என்று நீங்கள் சொல்கிறீர்கள் உண்மைதான் அதே நியத்தில் ஒட்டுமொத்தமாக மனிதர்கள் என்றும் நான் சொல்கிறேன்....இது பற்றி கொஞ்சம் பிறகு பார்ப்போம்

   நீக்கு
 8. இப்படி உள்ளே வராதே. லிப்டில் வராதே, தண்ணீர் குடிக்காதே, காலைக் கழுவாதே என்று சொல்வது நம் பெற்றோராக இருந்தாலும், தட்டிக் கேட்க வேண்டும் இன்றைய இளைஞர்கள் .. என்பது தான் எனது வேண்டுகோள் .. மிதிக்க மிதிக்க அம்மியும் நகரும் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெற்றோர்களை சுலபமாக திருத்திவிடலாம் நவீன சமுதாயமே அப்படி மாறுவதுதான் வேதனையானது.
   தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 9. நான் சொல்ல நினைத்ததை சரியாக சொல்லவிலலை; அல்லது சொல்லத் தெரியவில்லை...எனது பதிவுகளைப் படியுங்கள்...பிறகு நான் யாருக்கு வாதாடுகிறேன் என்று புரியும்.

  பெயரில் என்ன இருக்கு என்று சொன்னதிற்கு காரணம்...தீண்டாமை என்ற வார்த்தையை ஒட்டி விவாதம் திசை திரும்பும். அதைத் தவிர்க்கவே அப்படி சொன்னேன்.

  பேரில் என்ன இருக்கு; இப்ப காந்தி அவர்களை ஹரிஜன் என்று சொன்னதால் மாட்டும் அவர்களை ஒட்டிய தீண்டாமை போய்விட்டதா. இல்லையே...ஆகவே பெயரைப் பற்றிய விவாதத்தை விட்டு விட்டு...எப்படி அவர்களை வழிக்கு கொண்டுவரவேணும் என்று மட்டும் யோசிக்கனும்.

  காஸ் சிலிண்டரை கீழே வைத்து விடவேண்டும்; இல்லை மாடிக்கு தூக்க்கிக்கொண்டு வந்தா அதுக்கு, ரூபாய் . 50 தனிக் கட்டணம்; [50 என்று போட்டத்தான் 25 ரூபாயாவது கொடுப்பானுங்க!) இப்படி ஆடர மாட்டை ஆடிக் கறக்கணும். அது தான் நான் சொல்லவந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் நம்பள்கி
   //பெயரில் என்ன இருக்கு என்று சொன்னதிற்கு காரணம்...தீண்டாமை என்ற வார்த்தையை ஒட்டி விவாதம் திசை திரும்பும். அதைத் தவிர்க்கவே அப்படி சொன்னேன்.//
   விவாதம் நல்லதுதானே :)

   //பேரில் என்ன இருக்கு; இப்ப காந்தி அவர்களை ஹரிஜன் என்று சொன்னதால் மாட்டும் அவர்களை ஒட்டிய தீண்டாமை போய்விட்டதா. இல்லையே...ஆகவே பெயரைப் பற்றிய விவாதத்தை விட்டு விட்டு...எப்படி அவர்களை வழிக்கு கொண்டுவரவேணும் என்று மட்டும் யோசிக்கனும். //
   மிகச்சரியான அணுகுமுறை

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 10. If an apartment has separate "Service Lift" it is fine. The reason is that these lifts will have more space and easily accessible for large items like gas cylinders, water cans.
  Also they may be strong enough to handle heavy weight items.

  Several hotel and office buildings have separate service lifts

  If the general lift prohibit people movement based on their
  status / nature of work / birth, it is punishable.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...