வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 5 அக்டோபர், 2012

இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?


 இந்து மத புத்தகங்களில் வர்ணாசிரமம் பற்றி  இருக்கிறது அதனால் தான் இந்தியாவில் ஜாதி/தீண்டாமை   பிரச்சனை என்று  பல அறிவாளிகள்   கூறுகின்றனர்.  என்னைப்பொறுத்தவரை இது ஒரு அறிவிலித்தனமான கூற்று.

இந்தியாவில் இருந்த/ இருக்கும் பிரச்சனைகளில்  ஒன்று ஜாதி. இந்த ஜாதி பிரச்சனைகளுக்கு காரணம் இந்து மதம் தான் என்று ஒரு சிலர் அல்லது பலர்  கூறலாம்.

இந்த மாதிரி ஜாதி பிரச்சனைகளில்/தீண்டாமையில் ஈடுபடும் எவனும் இது இந்து மதம் சொல்கிறது அதனால் இதை செய்கிறேன் என்று சொல்லமாட்டன்.  


வர்ணாசிரமம் பற்றி கூறும் ஒரு சில குறிப்புகள் கொண்ட  நூலை பற்றி ,அந்த வசனங்கள் பற்றி தீண்டாமையில் ஈடுபடுபவர்களுக்கும்   சரி,  ஈடுபடாதவர்களுக்கும் சரி ஒன்றும் தெரியாது எனபதே உண்மை. (வர்ணாசிரமம் பற்றி அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி பிறகு பார்ப்போம்.)

ஏன் எனில்பெரும்பாலான இந்திய மக்கள்   இவற்றை  இந்து மத நூல்களாக ஏற்று இரவும் பகலும் படித்து  இறைவன் தந்த வேதம் என்று போற்றுவதில்லை.  கிருத்துவமானாலும் சரி, இசுலாமானாலும் சரி குறைந்தது வீட்டிற்கு ஒரு புனித நூல், அதிக பட்சம் ஆளுக்கு  ஒரு நூல் வைத்திருப்பார்கள்.  ஆனால் மேற்கூறிய இந்த ஜாதி பற்றி கூறும்  இந்து மத நூல்கள் ஊருக்கு ஒன்று இருப்பதே அபூர்வம்.   அப்படி இருக்க  இந்த  மத  நூல்களால் தான் சில பல   இந்தியர்கள் / இந்துக்கள்   தீண்டாமையில் ஈடுபடுகின்றனர் என்பதை எப்படி ஏற்க இயலும்?


தீண்டாமை  ஒரு பெருங்குற்றம் தான் . மனிதத்தன்மையற்ற செயல்தான் அதில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால்  தண்டனை யாருக்கு தரப்பட வேண்டும்  தீண்டாமையில் ஈடுபட்டவர்களுக்குத்தானே ? அவர்களை மட்டும் தானே  குற்றவாளிகளாகப்  பார்க்க வேண்டும்? அதை விடுத்து   ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஜாதி வெறி பிடித்த  இந்துக்கள்  என்று சொல்வது எப்படி முறையாகும்?

எப்படி ஒரு மதத்தை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த மதத்தையும், ஒரு நாட்டை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த நாட்டையும் குறை செல்வது தவறோ அதைப்போலத்தான்  ஒருவன்  செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த இந்தியாவையும், இந்துக்களையும் குறை சொல்வதும் தவறாகும். 

உலகில் எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும் உள்ளது போல் இந்தியாவிலும் எல்லா மதங்களிலும்  தீண்டாமை இருப்பதை மறுப்பதற்கில்லை. இவைகள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டியவை.  தீண்டாமையை ஒழிக்கும் வழிகளை ஆராயும் முன் தீண்டாமைக்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்க்க வேண்டும்.


நீங்கள் தீண்டாமையில் ஈடுபடவில்லையா? 

இன்றைய சூழ்நிலையில் உலகில் பெரும்பாலானோர் குற்றமாக கருதப்படும் தீண்டாமையில் ஈடுபடவில்லை என்றாலும் குற்றமாக கருதப்படாத, ஏன் தீண்டாமை என்றே அறியாமல் பல தீண்டாமைகளை  இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் செய்துகொண்டுதான் வருகின்றோம். 

நான் என்ன சொல்கிறேன் நீங்களும் தீண்டாமையில் தான் ஈடுபடுகிறீர்கள் ஆனால் என்ன அது சட்டத்தால், சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இந்த தீண்டாமைக்கு மூல காரணம் என்னவெனில் ஒரு மனிதன் தன்னை விட மற்றொருவனை தாழ்வாக நினைப்பதுதான். நான் இந்த விதத்தில் உயர்ந்தவன் அவன் அந்த விதத்தில் தாழ்ந்தவன் என்று நாம் ஒவ்வொருவரும் ஒரு அளவுகோலை  வைத்துள்ளோம்.

இல்லை நான் தீண்டாமையில் ஈடுபடுபவன் இல்லை என்கிறீர்களா?
இதோ என்  கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...பின்வரும் கேள்விக்கு ஒரு கேள்விக்கு நீங்கள் இல்லை என்று பதில் சொன்னாலும் நீங்கள் தீண்டாமையில் ஈடுபடுகின்றீர்கள் என்று தான் பொருள். கேள்விக்கு தயாரா? 

உங்கள் மகளை நீங்கள் ஒரு பிச்சைக்காரனுக்கு  மணம் முடித்து  வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா? 

உங்கள் மகனுக்கு   பிச்சைக்கார  பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?

 நீங்கள் உண்ணும் தட்டில் பிச்சைக்காரனுக்கு உணவளித்துள்ளீர்களா ?  உணவளிப்பீர்களா?

பிச்சைக்காரன் உண்ட தட்டில் நீங்கள் உணவு உண்டுள்ளீர்களா? உண்பீர்களா?


அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் இல்லை என்றுதான் பதில் சொல்லி இருப்பீர்கள். ஏன் எனில் நீங்கள் அவர்களை மனிதர்களாக மதிக்கவில்லை.
நீங்கள் பிச்சைக்காரனைவிட  உங்களை உயர்வாக எண்ணுகிறீர்கள்.
இதற்க்கு காரணம் பல. இதற்க்கு  என்ன காரணம் என்று உங்கள் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.

 எந்த வகையான தீண்டாமையையும்  எந்த வகையிலும் நான் நியாப்படுத்த வில்லை.மாறாக காரணத்தைத்தான் அலசுகிறேன் என்பதை மனதில் வையுங்கள்.


இன்றைய இணைய உலகத்திலேயே, பெரிய படிப்பெல்லாம் படித்து விட்ட  நீங்களே, தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசும் நீங்களே  தீண்டாமையில் ஈடுபடும்பொழுது பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தீண்டாமையில் ஈடுபட்டிருப்பதில்   என்ன வியப்பு? என்ன அசிங்கம்? 
சரி இதை விடுங்கள்....

பணமும் தீண்டாமைக்கு வித்திடுகிறதா இல்லையா? 

என்னதான் உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று இருந்தாலும் அவர்களுக்கு மத்தியிலும்  தீண்டாமை உண்டா இல்லையா?
ஒரே ஜாதியில் இருந்தாலும்  பணக்காரன் ஏழைக்கு பெண் தரமாட்டான்
ஒரே ஜாதியில் இருந்தாலும்  பணக்காரன்  ஏழையை  வீட்டிற்கு   கூப்பிட்டு தன்னுடைய தட்டில் உணவளிக்க மாட்டான்.
உண்மையா இல்லையா? இதுவும் தீண்டாமை தானே? என்ன இது குற்றமற்ற தீண்டாமை.


மிருகங்களிடத்திலும் தீண்டாமையா? 
அறிவியல் படித்திருப்பவர்களுக்கு  தெரியும். ஒரு மிருகம் இனப்பெருக்கத்திற்கு எப்படி தன்னுடைய  இணையை தேர்ந்தெடுக்கின்றது என்று. எல்லா விதத்திலும் உயர்ந்த,சிறந்த  ஒரு ஆண் மிருகத்தைத்தான்  பெண் மிருகங்கள்  தேர்ந்தேடுக்குமாம். இங்கே சிறந்தது என்பது  வீரமாக இருக்கலாம், உடல் பலமாக  இருக்கலாம்,அழகாக இருக்கலாம், தனக்கு பிடித்த மாதிரியான  உடல் வாசனையாக  இருக்கலாம், நோயற்ற தன்மையாக  இருக்கலாம். (ஆண் தேர்ந்தெடுக்கும் பொழுதும் அப்படித்தான்......வன்புணர்ச்சிகள் எனபது  வேறு). தன்னுடைய எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான்  இப்படி மிருகங்கள் கூட இனையைத்தேர்ந்தேடுக்கும் பொழுது  சில அளவுகோலை வைத்துள்ளது. இதுவும் யாரை தீண்டக்கூடாது என்பதற்கான ஒன்றுதான். இதுவும் தீண்டாமைதான்.

காதல் கலப்பு மணத்தில் தீண்டாமை ?
இன்றும் மனிதர்களுக்கு மத்தியில்  என்னதான் கலப்பு மனங்கள் காதல் மனங்கள் நடக்கின்றது என்றாலும். தன்னுடைய வசதிக்கு,அழகிற்கு  படிப்பிற்கும் தகுந்த முறையில் தான் நடக்கின்றதே தவிர எவனும் அல்லது எவளும் எதையும் பார்க்காமல் காதலிப்பதில்லை.இதிலும் தீண்டாமை இன்றளவும் உண்டு.  (ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்? ).

நண்பர்களுக்கு மத்தியில் தீண்டாமை ?
ஏன் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் பொழுதும் கூட இன்று ஜாதியை பார்க்காமல் இருக்கலாம் ஆனால் வசதி, படிப்பு, ஒத்த  சிந்தனை, பழகும் விதம், பேசும் விதம், ஒழுக்கம்   என பல அளவுகோல்கள் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தப்படுகிறது.  இதுவும் ஒரு தீண்டாமை  தானே?

ஜாதி வீட்டு ஜாதி திருமணம் செய்ய மறுக்கிறார்கள் ஜாதி வெறியர்கள் என்று குரல் கொடுக்கின்றனர். இதுபோல் தான்  யாரும் மதம் விட்டு மதம் யாரும் திருமணம் செய்வதில்லை. இதுவும் ஒரு தீண்டாமைதானே?


இந்தியாவில் இந்து மதத்தில் இதுவும் தீண்டாமையா?

இந்து மதத்தில் ஜாதிக்கு ஒரு மயானம் - இது தீண்டாமையாக பார்க்கப்படுகிறது.
ஏன் பல தெய்வங்கள்/இறைவன்கள் இருப்பதையும் சிலர் குறை கூறுகின்றனர்.
சிலர் சில கோயிலுக்கு போவதே இல்லை 

இதை விளக்க ஒரு குட்டி கதை சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

"தீடிரென்று  இன்று வேற்று கிரகத்தில் இருந்து சிலர் பூமிக்கு வந்துவிடுகின்றனர். அவர்கள் உலகின் பல நாட்டு அரசியல்வாதிகளை சிறையில் அடைத்துவிட்டு, இவ்வுலகையே அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகின்றனர்.
அவர்கள் பின்பற்றுவது புண்ணாக்கு மதம். இந்த பூமியில் பின்பற்றப்பட்ட பிறமதங்களை அவர்கள் பூமி மதம் என்று பெயரிட்டு விடுகின்றனர்.

சில  தலைமுறைகள் கடந்துவிட்டன  வேற்று கிரக வாசிகள் தங்களை அடிமைபடுத்தியுள்ளதால் பூமியை சேர்ந்தவர்கள், பூமி மதத்தினர் ஒட்டுமொத்தமாக அவர்களை எதிர்க்கின்றனர். (இப்பொழுது இவர்கள் பல மதங்களை சார்ந்தவர்கள் எனபதே அவர்களுக்கு தெரியாது) 
  இவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்தால் தான், அவர்களுக்கு இடையே சண்டை உருவானால் தான் நாம் நிம்மதியாக சுரண்ட முடியும் வாழ முடியும் எனபதை  வேற்று கிரக புண்ணாக்கு  மதத்தினர் உணர்கிறார்கள். வேற்று கிரக வாசிகள் பூமி மதத்தில் இருக்கும் வேறுபாடுகளை பார்க்கின்றனர். இவற்றை பல தந்திரங்கள் மூலமாக பெரிதாக்குகின்றனர். பூமி மதத்தினரின் ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர். 

 இப்பொழுது புண்ணாக்கு மதத்தினர் "எங்கள் மதமே சிறந்தது, உங்கள் மதத்தில்  பல தீண்டாமைகள் உள்ளன. உங்கள் மதத்தில்  சிவனுக்கு ஒரு கோயில், அல்லாவுக்கு ஒரு கோயில், ஏசுவுக்கு ஒரு கோயில். அல்லாவை வழிபடுபவர்கள் அந்த கோயிலுக்குள் பிற கடவுளை வணங்குபவர்களை அனுமதிப்பதில்லை. அதுபோலவே பிற இறைவன் கோயிலுக்கும் பிறர் போவதில்லை. தீண்டாமை  எப்படி தலை விரித்தாடுகிறது பாருங்கள்.

அதுமட்டுமா சிவனை வணங்குபவர்கள் பிணத்தை தனியாக ஒரு மயானத்தில் எரிக்கின்றனர். அல்லாவை வணங்குபவர்களுக்கு தனியாக பிணத்தை புதைக்க ஒரு மயானம், கர்த்தரை வணங்குபவருக்கு தனியாக ஒரு மயானம். உங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவு தீண்டாமை.எத்தனை இறைவன்கள். எனவே இந்த தீண்டாமையிலிருந்து தப்பிக்க நீங்கள் எங்கள் புண்ணாக்கு மதத்திற்கு மாறுங்கள்" என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர்.இந்த  கதையில் நீங்கள் பூமியை இந்தியாவிற்கும், பூமி மதத்தை இந்து மதத்திற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் பல உண்மைகள் உங்களுக்கு தெரியும்.  நூற்றுக்கு நூறு இக்கதை பொருந்த விட்டாலும் பெருமளவிற்கு பொருந்தும். 


இன்றைய இந்து மதம் என்பது பல சமயங்களின் சங்கமம், பல மதங்களையும் ஏதோ ஒரு காரணத்தால் யாரோ இந்து மதம் என்று அழைத்து விட்டனர்.அதனால் தான் பல வித்தியாசங்கள், சிக்கல்கள்  இந்து மதத்தில் உள்ளது

பூமி மதத்தில் எப்படி தீண்டாமை உருவானதோ அப்படித்தான் இந்தியாவிலும் தீண்டாமை உருவாகி இருக்க வேண்டும். 

என்னதான் தீண்டாமைக்கு காரணம் கூறினாலும். இரட்டை குவளை முறை, தாழ்த்தப்பட்டவர்களை பஞ்சாயத்து தலைவர்களாக ஏற்க்க மறுத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு புரிய வைக்க முயல வேண்டும்(பல கிரமாங்களில் இந்நிலை இல்லை சில கிராமங்களில் மட்டுமே குறிப்பாக மதுரை பக்கத்தில் இது இருப்பதாக கேள்வி).  வேண்டும் என்றே புரிந்து கொள்ள மாட்டேன் என்று தீண்டாமையை ஆதரிக்கும் செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றமான தீண்டாமையை உடனடியாக ஒழிக்க வேண்டும்.

குற்றமான தீண்டாமையையும் குற்றமற்ற தீண்டாமையையும் அழிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும். அது எப்படி என்பதை பற்றி  மற்றொரு பதிவில் பார்ப்போம். 


இப்பதிவின் நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல, மாறாக என்னுடைய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதே, தீண்டாமையின் மூலத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே.   இப்பதிவில் எங்கு தவறு இருந்தாலும் சுட்டி காட்டுங்கள் உடனடியாக திருத்திக்கொள்கிறேன். தீண்டாமைக்கான காரணங்களை அலசியுள்ளதால் தீண்டாமைக்கு நான்  ஆதரவு என்று யாரும் எண்ண  வேண்டாம். தீண்டாமை, ஜாதி, மதம் இவற்றை கண்டிப்பாக அழித்தே ஆக வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். தீண்டாமைக்கு காரணம் இந்தியாவும் அல்ல இந்து மதமும் அல்ல மனிதர்களே என்று நான் உறுதியாக  கூறுகிறேன். இதை நீங்களும் ஏற்ப்பீர்கள் என நம்புகிறேன். 

இவன்
 உங்களைப்போலவே சில இடங்களில் தீண்டாமையால் பாதிக்கப்படுபவனும்,   சில இடங்களில் தீண்டாமையில் ஈடுபடுபவனும், தீண்டாமையை அழிக்க விரும்புபவனுமாவான். 

என்றும் அன்புடனும்  உண்மையுடனும்
இராச.புரட்சிமணி


42 கருத்துகள்:

 1. புரட்சி மணி ,

  ஹி...ஹி புரட்சி கரமாக சொல்றேன்னு காமெடி பண்றிங்களே?

  பேருந்தில் அருகே அமரக்கூடாது.

  இரட்டைக்குவளை,

  ஒரே கிணற்றில் நீர் எடுக்க கூடாது.

  தெருவில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது, சைக்கிளில் செல்ல கூடாது.

  இன்னும் பிற.

  ஒருவர் தனி வாழ்வில் என்ன வேண்டுமானாலும் கடைப்பிடிக்கட்டும் அதனை தீண்டாமை,அதில சமத்துவம் கொடுன்னு யாரும் சொல்லவில்லை.

  திருமணம், ஒரே தட்டில் சாப்பிடுவது .அப்படியானது.

  ஆனால் பொதுவில் இருப்பதை சிலருக்கு மறுப்பது தான் தீண்டாமை.

  ஏழையாய் இருந்தாலும் , உயர் சாதி எனில் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கலாம், ஆனால் தலித் எடுக்க முடியாது.

  இதே போல கோயில் தேர்வடம் பிடிப்பது.

  எனவே பொதுவாழ்வில் மறுக்கப்படுவது ,விலக்கப்படுவதனை தனி வாழ்வில் கொண்டு வந்து முடிச்சுப்போட்டு என்ன தான் புரட்சியோ :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வாங்க வவ்வால் :),
   //ஹி...ஹி புரட்சி கரமாக சொல்றேன்னு காமெடி பண்றிங்களே?//
   காமெடியா இருக்கா நல்ல வேளை யாராவது சீரியஸா எடுதுப்பாங்கலோனு நின்சைச்சேன் :)

   //பேருந்தில் அருகே அமரக்கூடாது.//
   //ஒரே கிணற்றில் நீர் எடுக்க கூடாது.//
   //தெருவில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது, சைக்கிளில் செல்ல கூடாது.//
   இவைகள் இன்றளவும் உள்ளதா?

   நான் சொல்ல வருவது தீண்டாமைக்கு காரணம் மனிதர்கள் தான்.

   //எனவே பொதுவாழ்வில் மறுக்கப்படுவது ,விலக்கப்படுவதனை தனி வாழ்வில் கொண்டு வந்து முடிச்சுப்போட்டு என்ன தான் புரட்சியோ :-))//
   பல தனிமனிதர்களின் ஒத்த சிந்தனைகள் அல்லது அதிகாரம் உள்ளவனின் சிந்தனை தான் பொதுவாழ்வில் சில விடயங்கள் மறுக்கப்பட காரணம்.
   சில விடயங்களுக்கான காரணத்தை கூறியுள்ளேன். .
   என்னதான் காரணம் சொன்னாலும் அந்த காரணம் என்னவாக இருக்கும் எனில் "உயர்ந்தவன் தாழ்ந்தவன்" என்ற எண்ணம் தான். இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்திற்கு காரணம் செல்வமாக இருக்கலாம், பழக்க வழக்கமாக இருக்கலாம் இப்படி பல இருக்கலாம்.

   நான் எந்த விதத்திலும்
   தீண்டாமைக்கு சப்பை கட்டு கட்டவில்லை,என்ன காரணமாக இருக்கும் என்ற சிந்தனைதான்.....அதை எப்படி அழிக்கலாம் என்பதை பிறகு பார்ப்போம்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
  2. புரட்சி மணி,

   //இவைகள் இன்றளவும் உள்ளதா?
   //

   நீங்க எந்த ஒரு ஊடகமும் கவனிப்பதில்லை என நினைக்கிறேன்.

   யோகன் பாரிஸ் வெளிநாட்டில் இருக்கிறார் அவருக்கே அறிய வந்திருக்கிறது.

   நடப்பதை அறியாமல், பிச்சைக்காரனுக்கு பொண்ணு கொடுப்பீங்கலா, ஒரே தட்டில் சாப்பிடுவீங்களானு , திசை திருப்புறிங்க.

   நீங்க ஆதரிக்கவில்லை என்பதை ஏற்கிறேன்,ஆனால் சரியான வகையில் ப்பிரச்சினையை அணுகவில்லை என்பேன்.

   அண்ணன்,தம்பியாக இருப்பவர்கள் கூட ஒரே தட்டில் சாப்பிடாமல் இருக்கலாம், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்,ஆனால் அது போன்ற செயல் தான் தீண்டாமைக்கு வழி வகுக்குது என "கண்டுப்பிடிச்சு " சொல்றிங்களே :-))

   இந்து மதத்தின் மேல் அடுக்கில் இருக்கும்(சொல்லிக்கொள்ளும்) பார்ப்பனன் அவனுக்கு அடுத்து உள்ளவர்களை எல்லாம் கீழானவன் என்கிறான், அதே போல அடுத்தடுத்த சாதியினர் செய்கின்றார்கள்.

   இதற்கு மூல காரணம் வர்ணாசிரமம்.

   மத்திய சாதியினர் பார்ப்பனரின் ஆதிக்கம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனின் ஆதிக்கத்தினை விடுவதில்லை , இதுவே இப்போதைய பிரச்சினை.

   இதனை நீங்கள் புரிந்து கொண்டிருந்தும், வேறுமாதிரி ஒன்றை முன்னிறுத்துகிறீர்கள், இதெல்லாம் புதுசா என்ன?

   சர்க்கரத்தினை புதுசா கண்டுப்பிடிப்பது அனைவருக்கும் வழக்கமா போச்சு :-))

   நீக்கு
  3. @வவ்வால்
   ////பேருந்தில் அருகே அமரக்கூடாது.//
   //ஒரே கிணற்றில் நீர் எடுக்க கூடாது.//
   //தெருவில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது, சைக்கிளில் செல்ல கூடாது.//

   இவைகள் இன்றளவும் உள்ளது எனபதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு சந்தேகமாக உள்ளது.
   இது என்னுடைய அறியாமையாக கூட இருக்கலாம். இது எங்கே நடக்கின்றது என்று கூறுங்கள்.

   //ஆனால் சரியான வகையில் ப்பிரச்சினையை அணுகவில்லை என்பேன்.//
   உண்மைதான். பல விடயங்களை நான் பதிவில் கூறவில்லை, பல விடயங்களை கருத்தில் கொள்ளவில்லை. ஏன் எனில் அனைத்தையும் ஒரு பதிவில் எழுதுவது எனக்கு சாத்தியமாக தெரியவில்லை. புத்தகம் அளவிற்கு எழுத வேண்டும். எனக்கு அதற்க்கான நேரமும் இல்லை வசதியும் இல்லை.


   //இதற்கு மூல காரணம் வர்ணாசிரமம்.//
   வர்ணாசிரமம் பற்றி கிராமங்களில் பெரும்பாலானவர்களுக்கு குறிப்பாக இன்று தீண்டாமையில் ஈடுபடுபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அவன் பிறரை விட உயர்ந்தவன் என்று எண்ணுகிறான் அதுதான் பிரச்னைக்கு காரணம்.

   //இந்து மதத்தின் மேல் அடுக்கில் இருக்கும்(சொல்லிக்கொள்ளும்) பார்ப்பனன் அவனுக்கு அடுத்து உள்ளவர்களை எல்லாம் கீழானவன் என்கிறான், அதே போல அடுத்தடுத்த சாதியினர் செய்கின்றார்கள்.//
   மத்தியில் இருக்கும் சாதியினரும், தான் பிராமணனை விட ஒரு விதத்தில் உயர்ந்தவன் என்றே எண்ணுகிறான்.

   //மத்திய சாதியினர் பார்ப்பனரின் ஆதிக்கம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனின் ஆதிக்கத்தினை விடுவதில்லை , இதுவே இப்போதைய பிரச்சினை.//

   சரியாக சொன்னீர்கள். இது உண்மைதான். ஏன் எனில் தான் தான் உயர்ந்தவன் என்ற நினைப்பு அந்த குறிப்பிட்ட மக்களுக்கு வந்துள்ளது என்பதுதானே இதற்க்கு காரணமாக இருக்க முடியும்.

   //சர்க்கரத்தினை புதுசா கண்டுப்பிடிப்பது அனைவருக்கும் வழக்கமா போச்சு :-))//
   சக்கரத்த அந்த காலத்துல கண்டுபிடிச்ச மாதிரியா வச்சிருக்கோம் எவ்வளவு மாறுதல் :) (சும்மா காமெடிக்கு :) )

   நான் புரியவைக்க நினைத்தது, நான் புரிந்து கொண்டுள்ளது என்னவெனில் நாம் ஒவ்வோவ்ருவரும் தீண்டாமைக்கு காரணம். இதில் ஒரு ஜாதியை, மதத்தை மட்டும் குறை சொல்வது எனக்கு ஏற்ப்புடையதில்லை.
   தங்கள் கருத்தக்கு மிக்க நன்றி வௌவால் :)

   நீக்கு
 2. மிகவும் உண்மை சிறப்பான பதிவு நண்பா.
  இஸ்லாமியர்கள் குரானை படித்து அதன்படி அதன் காட்டுமிராண்டிதனங்கள், பெண்ணடிமைதனங்கள் செய்வது போல,ஏதோ இந்துக்களும் இந்து மத நூல்படித்து ஜாதி பிரிவுகள் கொடுமைகள் செய்வதாக சொல்லி திரிகிறார்கள்.ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகளுக்கு இந்து என்றால் ஆகாது.அப்படியிருக்க இந்து மதம் சொன்ன ஜாதியை வைத்து ஏன் அவர்கள் பிழைப்பு நடத்த வேண்டும்?
  சகோ சார்வாகன் ஜாதியை நிராகரிப்போம் அதனாலே ஜாதி கணக்கெடுப்பை நிராகரிப்போம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அங்கே வந்த இஸ்லாமியர் சுவனபிரியன் சகோ சார்வாகனை பார்ப்பான் என்று சாதி சொல்லி திட்டினார். ஜாதியை நிராகரிக்க சொன்னவுடன் இஸ்லாமியர் பதறிபோனார்.
  நண்பா, இந்து மதத்தால் சாதி இருக்கிறது என்று சொல்வது பலருக்கு மிக வசதியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வேக நரி :)
   //நண்பா, இந்து மதத்தால் சாதி இருக்கிறது என்று சொல்வது பலருக்கு மிக வசதியாக இருக்கிறது.//

   மிகவும் சரியாக சொன்னீர்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)

   நீக்கு
 3. நீங்களும் இஸ்லாமியர்கள்போல காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டீங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராபின் :)
   இந்த பதிவு தவறாக பார்க்கப்படும் (அல்லது நானே சொல்லவருவதை சரியாக சொல்லமுடியாமல் போகலாம்)
   என்பதை நான் உணர்ந்தேன். அவர்கள் காமெடி செய்து தங்கள் மதத்தை வளர்க்க பார்க்கிறார்கள். நான் காமெடி செய்து
   மனிதத்தை வளர்க்க பார்க்கிறேன். இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இறைவன் விரும்பினால் மதங்களை அழிக்க பல முயற்சிகளை நான் மேற்கொள்வேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 4. //பேருந்தில் அருகே அமரக்கூடாது.//
  //ஒரே கிணற்றில் நீர் எடுக்க கூடாது.//
  //தெருவில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது, சைக்கிளில் செல்ல கூடாது.//
  இவைகள் இன்றளவும் உள்ளதா? //


  இது மகாத்மா காந்தி செத்துட்டாரா? என்பதிலும் கேவலமாகவுள்ளது.
  அப்பப்போ " நீயா -நானா" பார்க்கவும். பல கண்ணீர்க் கதைகளைக் கேட்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் யோகன், இது பற்றி உண்மையில் எனக்கு ஏதும் தெரியாது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த அறியாமையை நினைத்து நான் வெட்கப்படத்தான் வேண்டும்.
   இது பற்றி நிச்சயம் சில நடவடிக்கைகளில் இறங்கியே ஆகவேண்டும்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 5. சகோ புரட்சிமணி அவர்களுக்கு,
  "இசுலாமிய சவுதியில் தீண்டாமை இல்லையா?"
  என்ற தங்களது பதிவில்... எனது பின்னூட்டம்....

  "தீண்டாமை" என்ற பதத்திற்குரிய சரியான அர்த்தம் என்ன என்பதை சற்று விளக்குவீர்களா??

  என்றும் அன்புடன்
  அ. ஹாஜாமைதீன்.September 29, 2012 1:18 AM
  October 1, 2012 9:22 PM

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வாங்க அ. ஹாஜாமைதீன் :),
   உங்கள் கேள்விக்கு சென்ற பதிவில் சார்வாகன் பதில் கொடுத்ததால் நான் பதில் கூறவில்லை.
   சார்வாகன் கொடுத்த பதிலையும் பாருங்கள், இப்பதிவையும் பாருங்கள். இவையெல்லாமே என்னைப்பொருத்த வரை தீண்டாமைதான். தனிமனிதன் செய்தாலும் தீண்டாமைதான், ஒரு குழுவினர் செய்தாலும் தீண்டாமை தான், அரசாங்கம் செய்தாலும் தீண்டாமைதான்.
   எப்பொழுதும் இசுலாம் பற்றியும், இசுலாமியர்கள் பற்றியும் மட்டுமே கவலைப்படாதீர்கள் சகோ. அதை தாண்டி வாருங்கள் என்பது எனது அன்பு வேண்டுகோள்.
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)

   நீக்கு
 6. புரட்சிமணி இங்கே தெளிவாக தான் சொல்லியுள்ளார்.
  ஜாதி வேற்றுமைகள்,மனிதர்களிடம் தீண்டாமை காட்டுபவர்கள் எவருமே இந்து மத புத்தகம் படித்து தான் ஜாதி வேறுபாடுகள் காட்டவில்லை.தங்கள் தங்களது சுய வக்கிரக புத்தியாலேயே அப்படி நடக்கின்றனர்.
  யேசுவின் பாதைக்கு மாறியவர்களை சிலரை எனக்கு தெரியும். அவர்கள் அறையில் பெரிய பைபிள் புத்தகம் இருக்கும். அந்த பெரிய புத்தகம் போதாது என்று வெள்ளிக் கிழமைகளில் Bible study.
  சனிக்கிழமைகளில் Special Prayer
  ஞாயிறு வழக்கமான Prayer
  இவ்வளவும் செய்து கொண்டு ஜாதி வேறுபாடுகள் பார்ப்பார்கள். இந்து மத புத்தகம் படித்தா/இந்து மத புத்தகம் சொன்னபடி நடக்க வேண்டும் என்பதிற்கா இவர்கள் ஜாதி பார்க்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுடைய சரியான புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா :)

   நீக்கு
  2. ஜாதி வேறுபாடுகள் எப்படி பார்ப்பார்கள்?

   Full details please...

   நீக்கு
 7. மணியான வாதம் மற்றும் கருத்துக்கள்!

  தீண்டாமை தலைமுறையாகத் தொடர்வது..
  இதைத்தான் எதிர்க்கிறார்கள்..சரிசெய்யப்பட வேண்டிய விஷயம் இது!
  மற்ற சாமனியர்களைக் கண்டால் வரும் ஒவ்வாமை தனி மனிதனுடையது..!

  அதற்கு தீர்வு கிடையாது..கிடைக்காது!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரமேஷ் வெங்கடபதி :),
   தலைமுறையாய் தொடர்வதையும் தனி மனித ஒவ்வாமையையும் நிச்சயமாக தவிர்க்க முடியும்.
   இது பற்றி வரும் பதிவுகளில் சிறிது அலசுவோம். தங்கள் கருத்தையும் பதியுங்கள்.
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 8. //உங்கள் மகளை நீங்கள் ஒரு பிச்சைக்காரனுக்கு மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?

  உங்கள் மகனுக்கு பிச்சைக்கார பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?

  நீங்கள் உண்ணும் தட்டில் பிச்சைக்காரனுக்கு உணவளித்துள்ளீர்களா ? உணவளிப்பீர்களா?

  பிச்சைக்காரன் உண்ட தட்டில் நீங்கள் உணவு உண்டுள்ளீர்களா? உண்பீர்களா?//
  பிச்சைக்காரன் பணக்காரன் ஆகி விட்டால் மேற்கண்ட எல்லாம் நடக்கும் ! .....ஆனால் கீழ்சாதிக்காரன் பணக்காரன் ஆனாலும் மேற்கண்ட எதுவும் நடக்காது ! பார்பனர்கள் நண்மைக்காக இந்தியா என்று ஒரு நாடு எவ்வாறு இட்டுகட்டி உருவாக்க பட்டதோ....... அது போலவே பார்பனியத்தின் வாள்வதரதிற்காக இந்து மதமும் உருவாக்க பட்டதே........ பூர்வ குடி மக்களின் ஒடுக்கு முறையில் தான் இன்று இருக்கும் இந்தியாவும் இந்து மதமும் உயிர் வாழ்கின்றன ! உங்களுக்கு பிரம்மதேயங்களியும் வடபதிமங்கலங்களியும் தெரியுமா தெரியாவிட்டால் வரலாற்றை தெரிந்து கொண்டு இந்த பிரச்சனைகளை பற்றி பதிவு எழுத வரவும் ! நீங்கள் ஈழதமிழர் என்றே நினைகிறேன் நீங்கள் எல்லாம் செத்தபோது இந்து என்ற முறையில் உங்களுக்கு யார் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்! இன்று வரை இந்தியாவில் உள்ள நீங்கள் இந்து என்று கருதும் ஒரு பார்பான் கூட ஆதரவு தெரிவிக்க வில்லை என்பதை அறிவீர்களா?..... உங்களுக்காக தமிழ்நாட்டில் போராடி தீ குளித்து உயிர் நீத்த எல்லோரும் {ஒரு இஸ்லாமியன் உட்பட } தமிழன் என்ற உணர்வில் தானே அன்றி இந்து என்ற உணர்வில் அல்ல நீங்கள் இந்து என்று கருதுபவர்கள் இந்தியா முழுவதும் தான் இருந்தார்கள் இருக்கிறார்கள்..... அவர்களிடம் ஈழ தமிழன் என்று சொன்னால் தீவிரவாதி என்று சொல்லி விரட்டி அடிப்பான் அல்லது காவல்துறையிடம் ஒப்படைப்பான். தமிழ்நாட்டில் மட்டும் தான் அதுவும் தமிழன் என்ற முறையில் தான் எங்கள்ஆதரவு.................... நீங்கள் இந்து என்றோ கிறிஸ்துவன் என்றோ இஸ்லாமியன் என்றோ அல்ல என்பதை தெளிவாக புரிந்து நடந்து கொள்ளுங்கள் இங்குள்ள பார்பனிய ஒடுக்கு முறை 1 சாதிய ஒடுக்குமுறை 2 தேசிய ஒடுக்குமுறை என்ற முறைகளில் ஒடுக்கி வருகிறது இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம் நம் இனம் இவ்வாறு தலைமை இல்லாமல் வீழ்ச்சியுற்று இர்ருக்கும் வேளையில் அதன் விடியலுக்காக வேலை செய்யுங்கள் இஸ்லாமியநிடமும் மற்றவரகொளுடும் சும்மா வெட்டி சண்டை எதற்கு? அதை செய்வதற்கு உண்டுகொழுத்த பார்ப்பான் நிறைய பேர் இருக்கிறர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க karutha :),
   //பிச்சைக்காரன் பணக்காரன் ஆகி விட்டால் மேற்கண்ட எல்லாம் நடக்கும் ! .....ஆனால் கீழ்சாதிக்காரன் பணக்காரன் ஆனாலும் மேற்கண்ட எதுவும் நடக்காது//

   இது ஒரு தவறான புரிதல். தாழ்த்தப்பட்டவருக்கும் உயர்த்தப்பட்டவருக்கும் இடையே பல திருமணங்கள் நடந்துள்ளன, நடக்கின்றது, நடக்கும்.
   அம்பேத்கர் மணந்தது ஒரு பிராமணப்பெண்ணை. இது எப்படி சாத்தியமானது. அவர் கல்வி கற்றதனால். நல்ல கல்வி, பணத்தையும். பெயரையும் , புகழையும் பெற்றுத்தரும்.

   பிரமாணர்கள் வரலாற்றில் செய்ததை நான் சரி என்று வாதிடவில்லை. தீண்டாமைக்கு எதிரான போராட்டம் காலத்திற்கு தகுந்தார் போல் மாற வேண்டும். தீண்டாமைக்கு இன்றும் ஒட்டு மொத்த பிராமணர்களையும் குற்றம் சொல்வது முட்டாள் தனமாகும். எப்படி ஒரு இசுலாமியன் தீவிரவாத வேளைகளில் ஈடுபடும்பொழுது ஒட்டுமொத்த இசுலாமியர்களும் தீவிரவாதிகள் என்று கூறுவது தவறோ அவ்வாறே அன்று சில பிராமணர்கள் செய்த தவறுக்காக இன்று ஒட்டுமொத்த பிராமணர்களையும் குறை சொல்வது தவறாகும். இதை கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள்.

   ஈழப்பிரச்சனைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தமிழர்கள்தான். அவர்களுக்கு மதம் சாயம் பூசுவது தவறாகும். ஆனால் என்ன ஒரு வேதனையான விடயம் எனில்....சரி விடுங்க. ஈழத்திற்கு இசுலாமியர்கள் ஆதரவு எந்த அளவிற்கு என்பது ஈழத்தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்குமே நன்கு தெரியும்.

   //இங்குள்ள பார்பனிய ஒடுக்கு முறை 1 சாதிய ஒடுக்குமுறை 2 தேசிய ஒடுக்குமுறை என்ற முறைகளில் ஒடுக்கி வருகிறது இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம் நம் இனம் இவ்வாறு தலைமை இல்லாமல் வீழ்ச்சியுற்று இர்ருக்கும் வேளையில் அதன் விடியலுக்காக வேலை செய்யுங்கள்//

   நிச்சயமாக. எந்தவித ஒடுக்குமுறையையும் கண்டிப்பாக எதிர்த்தே ஆக வேண்டும். இதுபற்றி விரிவாக பிறகு அலசுவோம்.

   //இஸ்லாமியநிடமும் மற்றவரகொளுடும் சும்மா வெட்டி சண்டை எதற்கு? //
   இந்தியா அன்றைய பார்ப்பனர்களால் சீரழிக்கப்பட்டது உண்மையானால் நாளைய இந்தியா சவூதி அராபியாவாலும் வாடிகனாலும் அடிமையாக்க்ப்படலாம். இதை எந்த விதத்திலும் ஏற்க்க இயலாது. இந்து மதம் அடிமைத்தனத்திற்கு விட்டது என்றால் நாளை இசுலாமும், கிருத்துவமும் அடிமைத்தனத்திற்கு வித்திடாது என்பதை உங்களால் கூற இயலுமா? எனவே தான் சொல்கிறேன் அனைத்து மதங்களும் மனிதர்களை அடிமையாக்காமல் காலத்திற்கு ஏற்றார்போல தம்மை சீர்திருத்த்க்கொள்ள வேண்டும்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 9. நண்பர் புரட்சிமணி,
  karutha என்ற பெயரில் வந்த அரபிய ஆக்கிரப்பு மூளை கழுவதினால் ஏற்பட்ட வாந்தியை அகற்றி உங்கள் இணைய தளத்தை சுத்த படுத்துங்கள்.

  நான்வழக்ககமாக எனக்கு பிடித்த தமிழ் பதிவுகளை எனக்கு தெரிந்த வட்டத்துக்கு அனுப்புவேன். இப்போ உங்க பதிவை அனுப்பிய போது ஆமோக வரவேற்பு. ஆனா அவங்களுக்கு பதில் எழுதும் பழக்கமில்ல.ஒரு போதும் இணைய தளங்களில் கருத்து தெரிவித்ததுமில்ல.ஒரு வரி உங்க கருத்தை ஆதரவு தெரிவியுங்க என்றால் ஏதோ மிக பெரிகடினமான காரியம் மாதிரி கோகிளில் தமிழ் அடிப்பது கடினம் என்பார்கள். உங்க கருத்தின் நியாயத்தை ஏற்று கொண்ட பலர் எனக்கு தெரிந்தே பலர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்க கருத்தின் நியாயத்தை ஏற்று கொண்ட இணைய தளங்களில் எழுதுபவர்கள் சிலர் கூடஇங்கே ஏதாவது உண்மையை சொல்ல போய் தங்களது முற்போக்கு இமேச்சுக்கு டமேச் வந்திடுமோ என்று பயந்திருப்பார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா வேகநரி,
   //நண்பர் புரட்சிமணி,
   karutha என்ற பெயரில் வந்த அரபிய ஆக்கிரப்பு மூளை கழுவதினால் ஏற்பட்ட வாந்தியை அகற்றி உங்கள் இணைய தளத்தை சுத்த படுத்துங்கள்.
   //
   அவரின் கருத்து தவறான கருத்தாக இருந்தால், அவரின் கருத்தாக்கம் தவறு என்று நாம்தான் புரிய வைக்க வேண்டும்.
   நாம் முடிந்த வரை முயலுவோம். நான் அவருக்கு அளித்த பதில் ஏற்ப்புடையது அல்ல என்று நீங்கள் நினைத்தால், உங்களின் கருத்தை அவர் ஏற்கும் படி கூறுங்கள். அவர் ஏற்கலாம், அல்லது அவரைப்போன்ற கருத்தாக்கம் உடையவர்கள் தங்களது கருத்தை மாற்றிக்கொள்ளலாம். நான் சொல்வது சரிதானே நண்பா...

   என்னுடைய கருத்து உங்களால் ஏற்கப்பட்ட பொழுது அது நம்முடைய கருத்து...நம்முடைய கருத்து பிறாரால் ஏற்க்கும்போழுது அது பெரும்பாலான் மக்களின் கருத்து. ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் வெளிப்படையாக கூறாமல் இருக்கலாம், புரிதல் மனதளவில் இருந்தாலே முதலில் போதுமானது.

   இந்த பதிவை பிறரிடம் பகிர்ந்து கொண்டமைக்கும் தங்களது கருத்தை தொடர்ந்து கூறுவதற்கும் மிக்க நன்றி நண்பா...நாம் தொடர்ந்து மனிதத்திற்காக பயணிப்போம் :)

   நீக்கு
 10. அருமையான கருத்துக்கள் நண்பரே. பார்ப்பன எதிர்ப்பு என்ற காலியாகிப்போன சட்டியை வைத்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் ஏச்சுக்களை புறந்தள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க M.Mani :),
   தவறான கருத்து எங்கிருந்தாலும் எதிர்க்க வேண்டும். அது காலத்திற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும்.
   இரட்டை குவளை முறைக்கு பார்ப்பனர்களை குறை சொல்வது அறிவுடமையாகாது. அதே நேரத்தில் கோயிலில் பிராமணர்கள் மட்டுமே பூசாரி என்பதும் ஏற்க்க இயலாது. விருப்பம் உடைய பிற ஜாதியினருக்கும் தகுதி ஏற்ப்படுத்தி வாய்ப்பளிக்க வேண்டும். வட மொழியில் தான் மந்திரம் தமிழில் அல்ல என்பதையும் ஏற்க்க இயலாது.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 11. மணி லைட்டா சறிக்கி இருக்கீங்க . என்ன சொல்ல வறீங்க என்பது தெளிவாக புரிந்தாலும் . சொன்ன விதத்தில்தான் கொஞ்சம் தப்பு . மற்றபடி நிறைய யோசிங்க சிந்தியுங்கள் ............................ஆனால் எந்த மைத்தாலாஜி . மண்ணாங்கட்டி என்று முன்னேருதி இல்லாமல் சிந்தியுங்கள் ..........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க செல்வின் :),

   //மணி லைட்டா சறிக்கி இருக்கீங்க . என்ன சொல்ல வறீங்க என்பது தெளிவாக புரிந்தாலும் . சொன்ன விதத்தில்தான் கொஞ்சம் தப்பு . //
   உண்மைதான். தீண்டாமை என்பது ஒரு மிகப்பெரிய கொடுமை. அதை ஒரு பதிவில் கூற நினைத்தாலும் கொஞ்சம் சறுக்கி யுள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை. உண்மையில் நான் இதை முதல் முறை எழுதியபொழுது பல உண்மைகளை பச்சையாக எழுதி இருந்தேன். அது பலரது மனதை புண்படுத்தும் என்று எண்ணி பலவற்றை நீக்கி, கொஞ்ச சேர்த்து இப்படி வந்துவிட்டது.

   //மற்றபடி நிறைய யோசிங்க சிந்தியுங்கள் ............................ஆனால் எந்த மைத்தாலாஜி . மண்ணாங்கட்டி என்று முன்னேருதி இல்லாமல் சிந்தியுங்கள் ..........//

   நிச்சயமாக நண்பா. பழையவற்றை தொட்டால் ஏதோ இந்து மதத்தை ஆதரிப்பது போன்ற தோற்றம் வந்துவிடுகிறது. உண்மையில் மதத்தை கடந்து செயல்படவே நான் விரும்புகிறேன்.(நீங்களும் அவ்வாறு இருப்பதில் மகிழ்ச்சி. )அதே நேரத்தில் ஒரு மதத்தின் பெயரால் ஒட்டுமொத்த மக்களையும் குற்றம் சொல்வது எனக்கு ஏற்ப்புடையத்தல்ல. இது அனைத்து மதத்திற்கும் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 12. மனிதர்கள் அடிப்படையில் சமமானவர்கள் என்பது ஒரு நியாயமான கோட்பாடு. ஆனால், நடைமுறையில் சமமான இரண்டு நபர்கள் உலகில் இல்லை. ஒவ்வொருவரும் எதோ ஒரு விடயத்தில் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தோ தாழ்ந்தோ இருக்கிறார்கள்.

  இந்த இடத்தில் இயற்கையான குறைபாடு, செயற்கையான குறைபாடு என ஏற்றத்தாழ்வுக்கான காரணங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  ஒருவருக்கு காது கேட்கவில்லை, அல்லது கண்பார்வை இல்லை என்பது இயற்கையான குறைபாடு. இதனை மாற்ற முடியாது.

  ஆனால், செயற்கையான குறைபாடுகள் இதிலிருந்து மாறுபடுகின்றன. பணம், பதவி, படிப்பு எல்லாம் செயற்கைதான். செயற்கையான குறைபாடுகளில் மிகக் கொடுமையானது தீண்டாமைதான்.

  ஏனெனில், மற்ற எல்லா குறைபாடுகளையும் ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக, படித்தவனைவிட படிக்காதவன் தாழ்ந்தவன்தான். இந்தக் குறைபாடு கல்வியால் மாற்றப்படக்கூடியது. பணக்காரனைவிட ஏழை வசதியில் தாழ்ந்தவன்தான். இதனை பணத்தால் மாற்ற முடியும்.

  ஆனால், தீண்டாமையும் சாதியும் பிறப்பின் அடிப்படையில் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. இதனை ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற வழி உண்டா? சொல்லுங்கள் புரட்சி மணி

  இந்தக் கொடுமையை இந்து மதம் கட்டிக்காப்பாற்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அருள் :)
   //ஒருவருக்கு காது கேட்கவில்லை, அல்லது கண்பார்வை இல்லை என்பது இயற்கையான குறைபாடு. இதனை மாற்ற முடியாது.//
   மருத்துவத்தினால் இதை மாற்ற முடியும்.அதை விடுங்கள். குறைபாடை குறைபாடாக பார்பதுதான் தவறு. தவறு நம் மனதில் தான் உள்ளது.
   இதை கண்டிப்பாக மாற்ற முடியும்.
   //ஆனால், தீண்டாமையும் சாதியும் பிறப்பின் அடிப்படையில் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. இதனை ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற வழி உண்டா? சொல்லுங்கள் புரட்சி மணி //

   சொந்த முயற்சியாளும் மாற்ற முடியும் கூட்டு முயற்சியாலும் மாற்ற முடியும்.
   ஆனால் நிச்சயமாக மாற்ற முடியும். செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்றை செயற்கையாக ஒழிப்பது சாத்தியமே. அதுபோல் ஜாதியை கண்டிப்பாக ஒழிக்க முடியும். சற்று காலம் ஆகலாம். இதுபற்றி வரும் பதிவில் அலசுவோம் தொடர்ந்து உங்களது கருத்தை கூறுங்கள்.
   //இந்தக் கொடுமையை இந்து மதம் கட்டிக்காப்பாற்றுகிறது.//
   உங்கள் கண்ணுக்கு இந்து மதம் மட்டுமே தெரிகிறது....பார்வையை விசாலாமாக்குங்கள் எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும் இது உண்டு.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 13. நாய் இல்லாத வீட்டில் நரி அம்பலம் பண்ணிச்சாம் எலே வேகநரி நீ வேகநரியா இல்ல வேதநரியா தெரியாது ஆனா நான் கறுத்தபாண்டி என் அப்பன் பேரு சுடலை யார்லே வாந்தி எடுத்தது நானா அரபியன் நீவேனும்னா ஆரியனா இர்ருகலாம் /அருமையான கருத்துக்கள் நண்பரே. பார்ப்பன எதிர்ப்பு என்ற காலியாகிப்போன சட்டியை வைத்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் ஏச்சுக்களை புறந்தள்ளுங்கள்.// இன்றும் பார்பானை தவிர இந்து கோவிலுக்குள் ஒருத்தனும் மணி ஆட்டமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் வரை போய்உத்தரவு வாங்கி வைத்திருப்பது யாரு ? சங்கராச்சாரி லே நாணலே பிச்சைகாரன் நான் விவசாய் லே என் இனத்தின் ஒரு பகுதி யான ஈழத்தமிழ் நண்பர்களே உங்களுக்காக நாங்கள் பள்ளனும் பறையனும் மற்றும் உள்ள தமிழ் சாதிகளும் தான் நீங்கள் சாகும் போது கத்தினோம் கதறினோம் நாங்களும் இந்தியனுக்கு அடிமை என்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் தீ குளித்து செத்தோம் இது எங்களுக்கு புதிது அல்ல நாங்கள் மூவாயிரம் ஆண்டுகளாக இப்படி தான் இருக்கிறோம் ஆனாலும் போராடுவோம் ஏன் என்றால் நாங்களும் மனிதர்கள் தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்றும் பார்பானை தவிர இந்து கோவிலுக்குள் ஒருத்தனும் மணி ஆட்டமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் வரை போய்உத்தரவு வாங்கி வைத்திருப்பது யாரு ?//

   எனக்கு தெரிந்து பல கிராமத்து கோயில்களில் பூசாரிகள் என்பவர்கள் பிராமணர்கள் அல்ல.மேலும் கருவறைக்குள் பிராமணர்களைத்தவிர
   பிற ஜாதியினருக்கு அனுமதியில்லை என்பதும் தவறான வாதம்.பல கோயில்களில் பிராமணர் அல்லாதோரும் செல்கின்றனர்.
   ஆனால் சில கோயில்களில்(வருமானம் அதிகம் வரும் கோயில்களில், பெரிய கோயில்களில்,கூட்டம் அதிகம் வரும் கோயில்களில்) நீங்கள் கூறும் நிலைமை உண்டு என்பதை ஏற்கிறேன்.

   உச்ச நீதிமன்றம் எதன் அடிப்படையில் இந்த உத்தரவை தந்தது என்பது எனக்கு பெரிய கேள்வியாக உள்ளது. இந்த உத்தரவை கண்டிப்பாக நீக்கியே ஆக வேண்டும். எந்த ஜாதியானாலும் விருப்பம் உள்ளவனுக்கு, உரிய தகுதியை ஏற்ப்படுத்தி வாய்ப்பு தரவேண்டும்.
   karutha,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 14. அய்யா ! குறிபிட்ட மக்கள் கூட்டம் எதுவும் இன்னொரு மக்கள் கூட்டத்திற்குஎதிரானது அல்ல........ அது மற்ற கூட்டத்துடன் எவ்வாறு உறவாடுகிறது என்பதை பொறுத்தே அதை பற்றி மதிப்பிட முடியும் பார்பனியம் என்ற த்த்துவம் தான் மக்களுக்கு எதிர் ஆன ஆதிக்க த்த்துவம் ஆகும் அதை நியாய படுத்துவது வேதம் மனுஸ்மிர்தி புராணங்கள் ஆகும் இதன் அடிபடையில் ஆனதே இந்து மதம் இதனை தலைமை ஏற்று நடத்துபவனே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் இன்றும் நாம் போராடி சில உரிமைகளை பெற முயன்றாலும் அதை தடுப்பது யார் என்று யோசியுங்கள்! மேலும் கிராமகோயில் என்பது பூர்வகுடி மக்களின் வழிபாட்டு முறையாகும் அது எந்த விதத்திலும் இந்து மதத்துடன் தொடர்பு உடையது அல்ல அவைகள் சுதந்திரமானவை சுயட்சை ஆனவை முதலில் அதனை பேய் கோயில்கள் என்று கீழ்மை படுத்திய பார்ப்பனீயம் இன்று அதனையும் தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்து வெற்றியும் பெற்று வருகிறது மேலும் மக்களின் வழிபாடு முறைகள் எந்த விதத்திலும் ஆதிக்க நோக்கம் கொண்டது அல்ல ஆனால் ஆதிக்கமதங்கள் ஆன பெரு மதங்கள் தான் இயல்பான மக்கள் வழிபாடுகளை இஸ்லாம் காபிர்கள் என்றும் கிறிஸ்துவம் சாத்தான்கள் என்றும் இந்துமதம் பேய் கோயில்கள் என்றும் கொச்சை படுத்துகின்றன என்னை பொறுத்த வரை அமைப்பாகக பட்ட எந்த மதமும் மக்களுக்கு எதிர் ஆனதே

  பதிலளிநீக்கு
 15. அய்யா ! குறிபிட்ட மக்கள் கூட்டம் எதுவும் இன்னொரு மக்கள் கூட்டத்திற்குஎதிரானது அல்ல........ அது மற்ற கூட்டத்துடன் எவ்வாறு உறவாடுகிறது என்பதை பொறுத்தே அதை பற்றி மதிப்பிட முடியும் பார்பனியம் என்ற த்த்துவம் தான் மக்களுக்கு எதிர் ஆன ஆதிக்க த்த்துவம் ஆகும் அதை நியாய படுத்துவது வேதம் மனுஸ்மிர்தி புராணங்கள் ஆகும் இதன் அடிபடையில் ஆனதே இந்து மதம் இதனை தலைமை ஏற்று நடத்துபவனே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் இன்றும் நாம் போராடி சில உரிமைகளை பெற முயன்றாலும் அதை தடுப்பது யார் என்று யோசியுங்கள்! மேலும் கிராமகோயில் என்பது பூர்வகுடி மக்களின் வழிபாட்டு முறையாகும் அது எந்த விதத்திலும் இந்து மதத்துடன் தொடர்பு உடையது அல்ல அவைகள் சுதந்திரமானவை சுயட்சை ஆனவை முதலில் அதனை பேய் கோயில்கள் என்று கீழ்மை படுத்திய பார்ப்பனீயம் இன்று அதனையும் தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்து வெற்றியும் பெற்று வருகிறது மேலும் மக்களின் வழிபாடு முறைகள் எந்த விதத்திலும் ஆதிக்க நோக்கம் கொண்டது அல்ல ஆனால் ஆதிக்கமதங்கள் ஆன பெரு மதங்கள் தான் இயல்பான மக்கள் வழிபாடுகளை இஸ்லாம் காபிர்கள் என்றும் கிறிஸ்துவம் சாத்தான்கள் என்றும் இந்துமதம் பேய் கோயில்கள் என்றும் கொச்சை படுத்துகின்றன என்னை பொறுத்த வரை அமைப்பாகக பட்ட எந்த மதமும் மக்களுக்கு எதிர் ஆனதே

  பதிலளிநீக்கு
 16. //என்னை பொறுத்த வரை அமைப்பாகக பட்ட எந்த மதமும் மக்களுக்கு எதிர் ஆனதே//
  இதை நான் வழிமொழிகிறேன் :)

  பதிலளிநீக்கு
 17. என் அன்னையை இழந்ததிலிருந்து, நான் தொடர்ந்து கற்றது...


  மூவாறு வருடம் முடியா இளைமையிலும்,
  தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால்,
  மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை,
  காவாத கடவுள் எதற்கு?


  செங்கோடன் தந்தைத் திருத்தியபேர் மாணிக்கம்;
  அன்று மதம்மாறி ஆண்டவரே என்றிதயம்,
  விம்மதினம் செபித்தும் வெடித்தநோய் மாரடைப்பால்...
  தும்மிடும் நேரம் தொலைந்தார்!


  முப்பொழுதும் உன்னை முருகா எனத்தான்என்
  அப்பனின் அய்யன் அழைத்த அவர்வாயுள்
  புற்றுநோய் வந்து புழுத்துஅதில் செத்ததினால்,
  கற்றேன் கடவுளில்லை என்று!


  ஆண்டவனே! ஆண்டவனே! ஆண்டவனே! என்றில்லா
  ஆண்டவனைப் போற்றுகின்றீர் அன்றாடம்; வேண்டவனை
  அட்டை எனப்பற்றி அகிலம் அதிசயிக்க,
  முட்டையின்றி கோழி முளைக்க!


  கோயில் களுள்பதுக்கும் குப்பைஅன்ன செல்வங்களை
  வா!எடு தெய்வம் மறுக்காது; ஆய்.. அரசே!
  வேலையில்லாத் திண்டாட்டம், வீடில்லா ஏழ்மைநிலை
  ஆலைகள்காண் ஆட்சிகளால் தீரும்!

  Click: வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)


  1) Open Google Title bar -
  2) Type the address:
  http:willsindiaswillswords.blogspot.in
  and press ENTER. (or)
  3) Type 'Wills in Kavithai Chittu' >
  4) Select the typed title >
  5) Give Right Click - Enter into Web Page
  6) Type i.e., copy and paste the article title
  Either -
  “வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)”
  (or) Reservation on profession basis!
  [வகுப்பு பேத ஒழிப்புக்கு, தொழில்வாரி இடஒதுக்கீடு!]
  on the Search Tap.
  7) Press: ENTER.

  பதிலளிநீக்கு
 18. என் அன்னையை இழந்ததிலிருந்து, நான் தொடர்ந்து கற்றது...


  மூவாறு வருடம் முடியா இளைமையிலும்,
  தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால்,
  மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை,
  காவாத கடவுள் எதற்கு?


  செங்கோடன் தந்தைத் திருத்தியபேர் மாணிக்கம்;
  அன்று மதம்மாறி ஆண்டவரே என்றிதயம்,
  விம்மதினம் செபித்தும் வெடித்தநோய் மாரடைப்பால்...
  தும்மிடும் நேரம் தொலைந்தார்!


  முப்பொழுதும் உன்னை முருகா எனத்தான்என்
  அப்பனின் அய்யன் அழைத்த அவர்வாயுள்
  புற்றுநோய் வந்து புழுத்துஅதில் செத்ததினால்,
  கற்றேன் கடவுளில்லை என்று!


  ஆண்டவனே! ஆண்டவனே! ஆண்டவனே! என்றில்லா
  ஆண்டவனைப் போற்றுகின்றீர் அன்றாடம்; வேண்டவனை
  அட்டை எனப்பற்றி அகிலம் அதிசயிக்க,
  முட்டையின்றி கோழி முளைக்க!


  கோயில் களுள்பதுக்கும் குப்பைஅன்ன செல்வங்களை
  வா!எடு தெய்வம் மறுக்காது; ஆய்.. அரசே!
  வேலையில்லாத் திண்டாட்டம், வீடில்லா ஏழ்மைநிலை
  ஆலைகள்காண் ஆட்சிகளால் தீரும்!


  Click: வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)


  1) Open Google Title bar -
  2) Type the address:
  http:willsindiaswillswords.blogspot.in
  and press ENTER. (or)
  3) Type 'Wills in Kavithai Chittu' >
  4) Select the typed title >
  5) Give Right Click - Enter into Web Page
  6) Type i.e., copy and paste the article title
  Either -
  “வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)”
  (or) Reservation on profession basis!
  [வகுப்பு பேத ஒழிப்புக்கு, தொழில்வாரி இடஒதுக்கீடு!]
  on the Search Tap.
  7) Press: ENTER.

  பதிலளிநீக்கு
 19. ஒரு கழுதை பேசுமானால்... என்ன பாடும்?


  கடவுள்... கழுதையாகப் பிறக்க வேண்டும்! - அவன்
  மனிதபேத அழுக்குகளை சுமக்க வேண்டும்!
  தெருக்களிலே காகிதமே (பொறுக்கி?)
  தின்ன வேண்டும்! – அவன்…
  கழுதை என்றால் என்னவென்று அறிய வேண்டும்!


  எத்தனை உயிர்ப் படைத்தான்!
  எல்லோர்க்கும் தீனித் தந்தான்!
  அத்தனைத் தீனியிலும்
  காகிதமா கலந்திருந்தான்?


  சிங்கப்பூர்... சாலைகள் போல் - உலகில்
  குப்பையே (காகிதமே) இல்லை என்றால்,
  எங்கே என் காகிதமே! - என்று
  தெருத் தெருவாய் அலைந்திடுவான்!
  (கடவுள்... )

  அவனை இழுத்துவந்து...
  கால்களுக்குள் பனை ஓலை கட்டி,
  ஓடடா ஓடு என்று - தெருவில்
  ஓட விட்டு நான் பார்த்திடனும்!


  ஈரிருகால் இடிபடவே தாவித்
  தாவி ஓடிடுவான் …

  ஓடி ஓடி களைத்த பின்பு
  பாவி அவன் கழுததைச் சாதிப்
  படைக்காமல் நிறுத்திடுவான்!

  (கடவுள்... )


  Labels: வகுப்புபேதஒழிப்புக்கு(அறிக்கை)

  1) Open Google Title bar -
  2) Type the address:
  http:willsindiaswillswords.blogspot.in
  and press ENTER. (or)
  3) Type 'Wills in Kavithai Chittu' >
  4) Select the typed title >
  5) Give Right Click - Enter into Web Page
  6) Type i.e., copy and paste the article title
  Either -
  “வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)”
  (or) Reservation on profession basis!
  [வகுப்பு பேத ஒழிப்புக்கு, தொழில்வாரி இடஒதுக்கீடு!]
  on the Search Tap.
  7) Press: ENTER.

  பதிலளிநீக்கு
 20. பாவம்பேய் புண்ணியம் பல்லிகிளி சோதிடம்!
  காவுபலி பூசை கடவுள் விதிலீலை!
  தேவருல கம்நரகம் தீண்டாமை சொர்க்க(ம்) இவை
  யாவும் அயோக்கியர் கொல்கை!


  மேற்கொண்டும் தகவல்கள் அறியப்படுவதற்கு -
  இது இந்திய எதிர்கால வாரிசுகளின் அனைவரது
  முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும்...
  எழுதப்பட்டுள்ளது)


  1) Open Google Title bar -
  2) Type the address:
  http:willsindiaswillswords.blogspot.in
  and press ENTER. (or)
  3) Type 'Wills in Kavithai Chittu' >
  4) Select the typed title >
  5) Give Right Click - Enter into Web Page
  6) Type i.e., copy and paste the article title
  Either -
  “வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)”
  (or) Reservation on profession basis!
  [வகுப்பு பேத ஒழிப்புக்கு, தொழில்வாரி இடஒதுக்கீடு!]
  on the Search Tap.
  7) Press: ENTER.

  பதிலளிநீக்கு
 21. சூப்பர் கதை , விளக்கங்கள் அருமை எப்படி உங்களால் மட்டும் முடிகிறது , முதலில் இந்து மதம் என்பது ஒரு குடையின் கீழ் வரக்கூடிய மதமன்று , எத்தனை உயிர்கள் இந்த ஜாதிக்கொடுமயினால் மறுக்கமுடியுமா உங்களால் ? இன்னும் எவ்வளவு ? தடுக்கமுடியுமா உங்களால் ? யாரும் இந்து மதத்திற்கு எதிராளிகள் அல்ல அதிலிருக்கும் சாதி என்கிற கிளையை முறித்துவிட்டால் . முடியுமா ? இன்னும் எத்தனை தலைமுறைகளை இழக்கப் போகிறீர்கல் ? இன்னும் எத்தனை வருடங்கள் ? சகமனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டிய சம தர்மத்தை எப்பொழுது கொடுக்கப் போகிறீர்கள் தலித் என்றும் கீழ் ஜாதிக்காரன் என்று இழிவு படுத்தப் படும் மனிதர்களுக்கு ? அனைத்து இந்து சகோதரர்களும் நமக்கு சகோதர்கள் தான் என்கிற நிலைமைக்கு எப்பொழுது வருவீர்கள் , நண்பனாக இருக்கும் ஒரு தலித் சகோதரனால் ஒரு முஸ்லிம் வீட்டிற்கோ அல்லது ஒரு கிறிஸ்தவனின் வீட்டிற்குள் சென்று சாப்பிட்டு வரமுடியும் . இதே அந்த நபரால் உயர்ஜாதி என்றழைக்கப்படும் ஒரு பிராமணன் வீட்டில் உட்கார்ந்து உணவுண்ண முடியுமா ? கடவுளே கொடுத்த மனுதர்மத்தை உங்களால் மாற்றமுடியுமா ? அதற்க்கு உயர்சாதியினர் சம்மதிப்பார்கலா ? இப்பொழுது அடுத்த மதத்தைப் பற்றி தெளிவாக எழுதியவர்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் ! முடியுமா உங்களால் ?
  அன்று முதல் இன்று வரை இந்தியாவின் எந்த ஒரு கிராமத்திலும் வெற்றிலை பாக்கு கூட வாங்க உதவாத ஒரு அதிகார மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுதர்மம் மற்றும் அதன் பார்ப்பனிய வேத கருத்துக்களை கைபர் கனவாய் வழியாக வந்தவர்களான ஆரியர்கள் இந்த நிலத்தில் பூர்வகுடிகள் மீது திணித்தார்கள். அதன் படி சமுதாயத்தை பல அடுக்குகளாக பிரித்தார்கள். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவினரும் எப்படி வாழ வேண்டும் என உத்தரவிட்டது மனுதர்மம். இந்த மனுதர்மத்தின் கருத்துக்கள் அன்று முதல் இன்று வரை நம் எல்லோர் வாழ்வின்மீதும் கருநிழலாய்ப் படிந்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் rajamohamed,

   //கடவுளே கொடுத்த மனுதர்மத்தை உங்களால் மாற்றமுடியுமா ? அதற்க்கு உயர்சாதியினர் சம்மதிப்பார்கலா ? இப்பொழுது அடுத்த மதத்தைப் பற்றி தெளிவாக எழுதியவர்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் ! முடியுமா உங்களால் ?//
   கடவுள் கொடுத்தது என்பது மூடர்கள் கருத்து . எந்த வேதமும் கடவுளால் தரப்படவில்லை. குரான் உட்பட. சட்டங்கள் என்பது மனிதனால் மனிதனுக்காக ஏற்ப்படுத்தப்பட்டது. மனுதர்மும் அப்படித்தான். இன்று அது புழக்கத்தில் இல்லை. அதன் விளைவாக சாதி வர்ணாசிரம அமைப்பு ஏற்ப்பட்டிருக்கலாம் ஆனால் அதை மாற்றும் முழு சுதந்திரமும் இந்திய அரசியலமைப்பிற்கு உண்டு.
   இந்திய அரசியலமைப்புதான் இந்தியர்களின் வேதமாக இருக்க வேண்டுமே தவிர மனுதர்மமோ,கீதையோ,ஷரியாவோ குரானோ அல்ல
   நான் சொல்வது தங்களுக்கு புரியும் என நம்புகிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 22. புதிதாக ஒருவன் இந்து மதத்தில் நுழைகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவனை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வீர்கள் ? அல்லது தலித் ஆகா இருந்த ஒருவன் கிறிஸ்தவத்திற்கு மாறிய பின் மீண்டும் இந்துமதத்திற்கு வந்தால் எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள் பார்ப்பனீய சமுதாயத்திலா ?

  இந்த புவியில் உள்ள உயிர்கள் எல்லாவற்றையும் படைத்த பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணன் பிறந்தான், தோள்களிலிருந்து சத்திரியன் பிறந்தான் (ஆட்சி, அதிகாரம்), தொடையிலிருந்து வைசியன் பிறந்தான் (வியாபாரம்), கால்களிலிருந்து சூத்திரன் பிறந்தான். (அடிமைகள், இழி பிறவிகள்) என தெளிவாக கூறும் யஜூர் வேதம் தான் இன்றுவரை அதிகாரத்தை தன் சொத்தாகக் கருதும் பார்ப்பனர்களின் அடிப்படை சட்டம். தமிழகத்தின் பல கிராமங்களில் பிராமணன் என்கிற வார்த்தை அறவே இல்லை. மாறாக பார்ப்பனர், பார்ப்பான் என்றுதான் சாமானிய ஜனங்களால் அழைக்கபடுகிறார்கள். பார்ப்பனர் என்பதன் பொருள், இவர்கள் இந்த நிலப்பகுதி கடைசியாய் வந்தவர்கள், இளையவர்கள் என்பதே. வெள்ளைக்காரர்கள் இங்கு வந்த போது கூட அவர்கள் தங்களை ஐரோப்பிய பிராமணர்கள் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டனர் என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு சான்றளிக்கின்றன.

  சூத்திரர்களுக்கு மனு தர்மம் தரும் விளக்கத்தை பாருங்கள் - பார்ப்பானரின் வைப்பாட்டி மகன், அடிமை; வேதத்தையோ கல்வியையோ கற்க உரிமை இல்லாதவன் என்று விரிவாக கூறுகிறது. “வேதத்தை சூத்திரன் படித்தால் நாக்கை வெட்ட வேண்டும். காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்” என்று இந்த நிலத்தின் உழைக்கும் பூர்வகுடி மக்களை அவமதிக்கிறது. சுயமரியாதை வாலிபர் மாநாட்டில் தீர்மானம் போட்டு அதன் பின் இந்த நூலை பெரியார் 1927ல் ஒரு மாத காலம் தமிழகம் எங்கும் தீயிட்டு கொளுத்தினார், அதே காலத்தில் அம்பேத்கார் மஹத்தில் மனு தர்மத்தை கொளுத்தியதன் பின்னுள்ள நியாயத்தை இந்த வரிகளை ஒவ்வொரு முறையும் வாசிக்கையில் உணரமுடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //புதிதாக ஒருவன் இந்து மதத்தில் நுழைகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவனை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வீர்கள் ? அல்லது தலித் ஆகா இருந்த ஒருவன் கிறிஸ்தவத்திற்கு மாறிய பின் மீண்டும் இந்துமதத்திற்கு வந்தால் எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள் பார்ப்பனீய சமுதாயத்திலா ? //

   ஜாதியை இந்து மதம் கேட்கவில்லை இந்திய அரசாங்கம் தான் கேட்க்கிறது. இப்பொழுது" நான் எந்த ஜாதியையும் சேர்ந்தவனில்லை " என கூறலாம் என்று சாதி கணக்கெடுப்பில் சேர்த்துள்ளதாக கேள்வி.

   நீக்கு
 23. ஜாதி என்பது இல்லையென்ற உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன் , பின் ஏன் ஊறுகாய் வாங்கக் கூட உதவாத இந்த இழிச்சொல்லை பயன்படுத்த வேண்டும் ? நண்பர்களே !

  இந்துவோ முஸ்லிமோ அல்லது கிறிஸ்தவனோ இந்த ஜாதி மதம் என்கிற போர்வையில் இருந்து விடுபட்டு நல்ல நண்பர்களாக வாழ முடியும் தானே , ஆனால் அரசியல் பண்ணுபவர்களுக்கு இதை விட்டால் வேறு எந்த விஷயம் இருக்கிறது , நம்முடைய பிரிவில் தானே அவர்கள் லாபமே அடங்கியிருக்கிறது , எல்லோரும் ஓர் தாய் மக்கள் என்று கூறிக் கொள்ளும் அரசியல் வாதிதானே நம் பிளவுக்கும் காரனமாயிருக்கிறான் , (தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம் )நாம் தமிழர்கள் என்கிற ஒரு இனமாகத் தானே இன்றுவரை காட்டிக் கொண்டிருக்கிறோம் , நம் தேசப் பற்று எல்லாம் வேறு விளையாட்டு விஷயங்களுக்கு மட்டுமே உயிர் பெற்று விடுகிறது , பிரிவினைவாதத்திற்கு எதிராகவோ ஊழல்களுக்கு எதிராகவோ , வன்கொடுமைகளுக்கு எதிராகவோ , மத துவேஷத்திற்கு எதிராகவோ என்றாவது வெளிப் பட்டிருக்கிறதா ? நம்மையும் மற்ற மதத்தினரையும் விமர்சித்துக் கொண்டு நாமே நமக்குள் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் , சாதி மதம் இனம் மொழி பாராமல் நம் சகோதரத்துவம் நிலை பெற வேண்டும் மக்கள் அனைவரும் நம்மவர்களே நம் சகோதர சகோதரிகளே என்கிற நிலைமைக்கு நாம் வந்தால் நம்மை யார் பிரிக்க முடியும் ? , எந்த மததவரானாலும் இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் இந்தியர் என்கிற ஒற்றுமைக்கு வரவேண்டும் ,அப்பொழுது தான் சமத்துவம் மலரும் , யாரும் யாரையும் தாழ்ந்தவன் , உயர்ந்தவன் என்கிற பேதமல்லாத பார்வையுடன் பழக வேண்டும் , இந்த உயர்வு தாழ்வு என்கிற பேதம் எங்கிருந்தாலும் களையப்பட வேண்டியதே ,

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. ////ஜாதி என்பது இல்லையென்ற உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன் , பின் ஏன் ஊறுகாய் வாங்கக் கூட உதவாத இந்த இழிச்சொல்லை பயன்படுத்த வேண்டும் ?//
   ஜாதியும் மதமும் பிரிவினையை உண்டாக்குபவை இவற்றை அழிப்பதுதான் நமக்கு நல்லது.

   // எந்த மததவரானாலும் இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் இந்தியர் என்கிற ஒற்றுமைக்கு வரவேண்டும் ,அப்பொழுது தான் சமத்துவம் மலரும் , யாரும் யாரையும் தாழ்ந்தவன் , உயர்ந்தவன் என்கிற பேதமல்லாத பார்வையுடன் பழக வேண்டும் , இந்த உயர்வு தாழ்வு என்கிற பேதம் எங்கிருந்தாலும் களையப்பட வேண்டியதே ,//
   உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் வழிமொழிகிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...