வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

காதல் சரி... கள்ளக்காதல் சரியா தவறா?

பல பகுத்தறிவுப்புலிகள், பெண் விடுதலைக்கு பாடுபடுபவர்கள்,
சாதியை ஒழிப்பவர்கள், முற்ப்போக்குவாதிகள்  என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்    காதல் தவறு இல்லை என்று சமீபகாலமாக கூறி வருகிறார்கள்.

ஆணோ பெண்ணோ 18 வயதை அடைந்துவிட்டால் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம்  அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கின்றனர். 

எனக்கு ஒரு சந்தேகம் இதை அந்த போராளிகள் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஒருவன் ஏற்க்கனவே திருமணமான பெண்ணை துரத்தி துரத்தி 
காதலித்து அவள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறான். 
எனக்கு கணவனும் வேண்டாம் குழந்தையும் வேண்டாம் காதலன் தான் வேண்டும்  என்கிறாள் அந்தப்பெண்.இப்பொழுது அந்த பெண்ணின் கணவன் மற்றும் குழந்தைகள் கதி என்ன.? சம்பீபத்தில் இப்படி ஒரு செய்தியை படித்ததாக ஞாபகம். (இப்படி காதல்,கள்ளக்காதல் பற்றி பல கேள்விகளை நீங்களே கேட்டுப்பார்க்கலாம்)

சமூகப்போராளிகளே உங்கள் தீர்ப்பு என்ன?

காதல் சரி என்று பிரச்சாரம் செய்பவர்கள் கள்ளக்காதலுக்கும் நாளைக்கு பிரச்சாரம் செய்வார்களா?


நேற்று காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இன்று அதற்க்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள் .

கள்ளக்காதல் இன்று ஏற்றுக்கொள்ளப் படவில்லை நாளை ஆதரவு  தெரிவிப்பீர்களா?

ஆண்- ஆண் , பெண் - பெண் உறவு மக்களிடையே ஆதரவு இல்லாவிட்டாலும் அரசாங்கம் அங்கீகரித்து விட்டது. இதையும் நாளை ஆதரிப்பீர்களா?


மனிதர்கள் -மிருகங்கள் உறவையும் நீங்கள் நாளை  ஆதரிப்பீர்களா? 

நீங்கள் எந்த பாதையில் செல்கிறீர்கள் - மனித சமுதாயத்தை எப்படி வழி நடத்தி செல்கிறீர்கள்  என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இது நடந்தே தீரும்.இவை எல்லாமே முன்னொரு காலத்தில் நடந்தவைதான்.இவை அனைத்திற்கும் தாங்கள் தயாரா?

  
என்னுடைய நிலைப்பாடு.............?

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

உயிர் வேறு ஆன்மா வேறா?

சமீபத்தில் சகோ சார்வாகன் தளத்தில்  ஆன்மா வேறு உயிர் வேறு என்ற பொருளில் விவாதம் நடந்தது. இது பற்றி என்னுடைய கருத்தை பதிவு செய்யவே இப்பதிவு.

உயிர் வேறு ஆன்மா வேறு என்று சிலர் நினைக்கின்றார்கள். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. உயிர் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றையே குறிப்பதாக நான் நினைக்கின்றேன்.

உயிர் என்பது இன்றைய மருத்துவ ,அறிவியல்,நடைமுறை  சொல். ஆன்மா என்பது பண்டைய அறிவியல் சொல்.

ஆன்மிகம் என்பது ஆன்மாவை (உயிர்) பற்றிய  படிப்பு,அறிவியல்,தேடல்.

ஆன்மிகம் என்பது தான் யார் (அதாவது உயிர் =ஆன்மா,இறைவன்  என்பது என்ன)  என்று அறிய முற்ப்படும் ஒரு தேடல். பக்தி வேறு..ஆன்மிகம் வேறு. பக்தி ஆன்மீகத்திற்கு வழி வகுக்கலாம்.

ஆன்மாவை சிலர் மனதோடும்,நினைவுகளோடும் தொடர்பு  படுத்தி குழப்பிக்கொள்கின்றனர்.

ஆன்மா=உயிர் என்பதே பிரதானம். இதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பது மனம்...பிறகு புத்திசாலித்தனம்.

உயிர் என்பதும் மனம் என்பதும் புத்திசாலித்தனம் என்பதும் வேறு வேறானாவை.

 உயிர்=ஆன்மா இல்லாமல் மனம் இல்லை. மனம் இல்லாமல் அறிவுக்கூர்மை இல்லை.

ஆன்மா=உயிர் இல்லாமல் உடல் இயக்கம் பெறுவதில்லை.

பிணத்திற்கு இந்த மூன்றும்(ஆன்மா =உயிர்,மனம்,அறிவு) இருக்காது.எதுவும் இருக்காது...

உடல் இல்லாமல் இந்த மூன்றும் பிறருக்கு தெரிவதில்லை.


அறிவியலில் சூரியன் இல்லாமல் எந்த கோள்களும் இயங்க முடியாது,எந்த உயிரும் உயிர் வாழ முடியாது. 


அதுபோலத்தான் ஆன்மா =உயிர் இல்லாமல் யாரும் எதுவும் உயிர் வாழ்வதில்லை.

சந்திரன் சூரியனை சார்ந்தே ஒளி அளிக்கின்றது. அதுபோலத்தான் மனமும் ஆன்மாவை சார்ந்தே உள்ளது.

புத்தி=அறிவுக்கூர்மை என்பது  மனதோடும் ஆன்மாவோடும்  தொடர்புடையது.


உயிர் வாழ் உயிரினங்களுக்கு உயிர் உள்ளது என்பதும், எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உள்ளது என்பதும் ஒருவகையில் ஒரே சொற்றொடரே.

====================================================
எந்த உயிர்களையும் துன்புறுத்தாமல் வாழவேண்டும் என்ற கருத்தியலைத்தான்  வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றார். உலகில் இதை மிஞ்சிய சித்தாந்தம்  ஏதும் இல்லை.
இந்திய மதங்களின் ஆணிவேரே இந்த கொள்கைதான்.
----------------------------------------------------------------------------------------------------------
உங்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்?

ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.
சித்திரையில் குழந்தை பிறந்தால் சூரியன் ஜோதிடப்படி உச்சத்தில் இருப்பான்.

சூரியன் உச்சத்தில் இருந்தால் சீக்கிரம் தலைமை பதவி கிடைக்கும் என்பது ஒரு ஜோதிட விதி. ஒரு குடும்பத்தின் தலைவன் என்பவன் கணவன்/அப்பா . ஆனால் குழந்தை சீக்கிரம் தலைமை பதவி அடைய வேண்டும் எனில் என்ன நடக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டுமா?

சித்திரையில் "முதல்" குழந்தை பிறந்தால்  அப்பனை காவு வாங்கிவிடுவான்.அப்பனுக்கு விரைவான முன்னேற்றத்தையும் அளித்து அப்புறம் தூக்கிடுவான். குழந்தை விரைவில் குடும்பத் தலைவனாகிவிடும். இதனால் தான்ஆடியில் புதுமண  தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.
எல்லோருக்கும் இப்படி ஆகுமா என்றால் இல்லை என்பதே எனது பதில். 

மற்ற  அமைப்புகளை பொறுத்து  சிலருக்கு  உறவில்  அதீத சிக்கல், பிரிய நேரிடுதல் போன்றவை நடக்கும்.

 நான் பார்த்த ஒரு ஜாதகத்தோடு இது பொருந்தியது.

சனி, 27 ஜூலை, 2013

ஏன் இந்த ஆரிய திராவிட, இந்து இசுலாம், தலீத் சாதி இந்து அரசியல்?


நம்மில் பல பிரிவுகளை உண்டாக்கி நம்மை நாம் அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது கூட தெரியாத தலைவர்களையும் மக்களையும் எண்ணி எமக்கு வேதனையே மிஞ்சுகிறது.

ஆரிய  -திராவிட அரசியல் செய்து  பிராமணர்களின் மனதை புண்ணாக்கி விட்டோம், இன்றும் இது தொடர்கிறது .

இந்து- இசுலாம் அரசியல் செய்து இந்தியாவை உடைத்து விட்டோம், இப்பொழுது இது வேறு உருவம் எடுக்கின்றது.இந்து இசுலாம் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்து விட்டோம்.

தலீத் -சாதி இந்து அரசியல் செய்து இப்பொழுது இரு சமுதாயத்தினர் மனதிலும்  புண்ணை விதைக்கின்றோம்.

அடுத்து என்ன செய்யலாம்?
கவுண்டர்-உடையார் -படையாட்சி-கள்ளர்-மறவர்-தேவர்-பிள்ளை அரசியல் செய்வோமா?
தேவேந்திர குல வேளாளர்-பள்ளர்- பறையர்-அருந்ததியர் அரசியல் செய்வோமா?
சொல்லுங்கள் என் சொந்தங்களே எந்த மாதிரி அரசியல் அடுத்தது நாம் செய்யலாம்?
நம்மை நாமே அழித்துக்கொள்வோம் வாருங்கள்.

நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா?
ஒன்று: ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  ஒட்டு மொத்த சமுதாயத்தையும் நாம் தவறாக பார்க்கிறோம்.

இரண்டு:ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  அச்சமூகத்தை சார்ந்த பலரும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.

இதை மாற்றி மாற்றி நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
இது ஒரு கொடிய குற்றம். இதுவே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.
எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்  என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.


ஜாதி,மதங்கள் இருக்கும் வரை அதனால் நமக்கு பிரச்சனை இருக்கும்.
கேட்டால்  என் ஜாதிக்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள். 
என் மதத்திற்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள்.

இன்று ஜாதியை ஒழிக்கிறேன் பேர்வழிகள் சில மதங்களை ஆதரித்தும் சில மதங்களை எதிர்த்துமே செயல்படுகிறார்கள்.

ஜாதிக்கொரு சுடுகாட்டை எதிர்க்க தெரிந்தவர்களுக்கு மதத்திற்கு ஒரு சுடுகாடு ஏன்? என்ற பகுத்தறிவு கேள்வி எழாமல் போனது ஏன்?

ஜாதி கலப்பு திருமணம் பற்றி பேசுபவர்கள், மதங்களுக்குள் கலப்பு மணம் பற்றி பேச மறுப்பது ஏன்?

ஜாதியை விட மிகவும் கொடுமையான மதத்தை இவர்கள் எப்படி ஆதரிக்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.

ஜாதியை விட மதம் பன்மடங்கு கொடுமையானது என்ற தொலை நோக்கு பார்வை நம்மிடம் இல்லை .காரல் மார்க்ஸ் பெயரால் கட்சி  நடுத்துபவர்களுக்கு கூட இது தெரியாமல் போன மாயம் என்ன?

ஜாதியையும் மதத்தையும் ஒழிப்போம் என்று கூற இங்கே எந்த தலைவருக்கும் மனதில்லை. ஏன் என்றால் அப்படி கூறினால் அரசியல் செய்யமுடியாதே.

ஜாதியையும் மதத்தையும் காட்டாமல் இட ஒதுக்கீட்டிற்கு சரியான முறையை கண்டுபிடிக்க வேண்டும்.முடியாததில்லை... முயற்சிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு ஜாதி,மத  மக்களுக்காகவும் போராட நினைக்கும் தலைவர்களின்  எண்ணம் நல்லதுதான். ஆனால் ஒரு ஜாதி,மத  மக்கள் நலுனுக்கான போராட்டத்தில் பிற ஜாதி,மத மக்களை நாம் எதிரியாக்கி விடுகிறோம்  
என்பதை இவர்கள் மறந்துவிடக்  கூடாது.

நம் சமுதாய நலனும் பேண வேண்டும் அதை பிற   சமூதாயத்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களையும் இதில் ஈடுபடுத்தி செயலாற்ற வேண்டும். இது முடியாததல்ல முடியும்.

இதைவிட சிறப்பான வழி அனைவரயும் மனிதனாக பார்ப்பதுதான்.
மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர ஒருவனது ஜாதி மதத்தை பார்க்க கூடாது என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும்.என் ஜாதி,என் இனம்,என் மதம் என்று பாராமல் அனைவரயும் மக்கள் என்ற பொதுப் பார்வையில் பார்த்து  திட்டங்களை நாம் வகுக்க வேண்டும,.  ஜாதி மதங்கள்  இருந்ததற்கான தடம் கூட தெரியாமல்  இவற்றை அழித்தொழிக்க வேண்டும்.

ஜாதியை நேசிப்பவர்களும்,மதத்தை நேசிப்பவர்களும்,அறியாமையில் இருப்பவர்களும்  இதற்க்கு முட்டு கட்டை போடுவார்கள் தான். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.புரிதலே மனிதத்தின் ஆணிவேர்.

எல்லா ஜாதி மதங்களிலும் ஏழைகளும் உள்ளனர் பணக்காரர்களும் உள்ளனர். எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்.  அனைத்து ஜாதி மத ஏழை மக்களுக்காகவும் நாம் பாடுபடவேண்டும்.அனைத்து ஜாதி மத நல்லவர்களையும் நாம் கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.கெட்டவர்களை சீர்திருத்த வேண்டும்.  இதை செய்தால் இந்தியா,உலகம்  அமைதியாக இருக்கும் இல்லையேல்.................

ஞாயிறு, 2 ஜூன், 2013

எந்த ஜாதி உயர்ந்த ஜாதி?

 
எந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்பதை  ஒரு குட்டிக் கதையின் மூலம் விளக்கலாம் என  நினைக்கின்றேன்.இந்த கதையை எங்கோ எப்பொழுதோ படித்தது. அதை இங்கு பயன்படுத்துகிறேன். அந்தக் கதையை எழுதியவருக்கு நன்றி.

ஒரு  நாள் மனிதனின் உறுப்புகளுக்குள் சண்டை வந்தது. யார் உயர்ந்தவன் என்பதே அந்த சண்டை. 

இதயம்- நான் துடிப்பதை நிறுத்தி விட்டால் மனிதன் இறந்துவிடுவான் எனவே நானே உயர்ந்தவன் என்றது.

மூளை - நானே பல உறுப்புகளுக்கு கட்டளையிடுகிறேன் நான் செயலிழந்தால் மனிதன் பிணத்திற்கு ஒப்பானவன் எனவே  நானே உயர்ந்தவன் என்றது.

இவ்வாறே கண், காது, மூக்கு, வாய், கை, கால் என பல உறுப்புகளும் தங்கள் செயல்பாட்டை வைத்து நானே உயர்ந்தவன் என்று கூறிக்கொண்டன.ஒரு சில உறப்புகள் ஒரு சில உறுப்பின் பயன்பாட்டை அங்கீகரித்து ஏற்று கொண்டன. 

கடைசியில்  மலப்புழை  மலத்தை வெளியேற்ற மட்டுமே பயன்படுகிறது எனவே அதுவே தாழ்ந்தது என்று பிற உறுப்புகள் முடிவு செய்துவிட்டன.

இதனால் சினம் கொண்ட மலப்புழை மலத்தை வெளியேற்ற  அனுமதியாமல் இறுக்கி மூடிக்கொண்டது.

மலத்தை வெளியேற்ற  முடியாததால் உடல் உப்பி மனிதன் வெடித்து சிதற அனைத்து உறுப்புகளும் அழிந்துபோயின.

இப்ப சொல்லுங்க எந்த உறுப்பு உயர்ந்த உறுப்பு, சிறந்த உறுப்பு?
 எந்த உறுப்பு தாழ்ந்த உறுப்பு?

மனித உறுப்புகளைப் போல் தான் நாமும் உயர்வு தாழ்வு பேசிக்கொண்டு நம்மை நாமே அழித்துக்கொல்கிறோம்.

அந்த காலத்தில் ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலை செய்து மனித  குலம் தழைக்க உதவிக் கொண்டன.

 இதில் இந்த தொழிலை செய்தவன் உயர்ந்தவன் என்றோ இந்த தொழிலை செய்தவன் தாழ்ந்தவன் என்றோ கூறிக்கொள்ளுதல் சரியா?

 தொழிலை  வைத்து ஒரு ஜாதி உயர்ந்தது ஒரு ஜாதி தாழ்ந்தது என்பது அறிவுடமையாகாது.
 

என்றும் மனிதமுடன்
இராச.புரட்சிமணி 


ஞாயிறு, 26 மே, 2013

ஜாதிப் பெருமை பேசக்கூடாது என்பவர்கள் சந்தேகம் தீர்ப்பார்களா ?


 ஜாதிப்  பெருமை பேசுவது தவறு என்று சமீபத்தில் பலர்  எழுதுவதை  பேசுவதை காண  நேர்ந்தது.  இதுல எனக்கு ஒரு சந்தேகம். ஜாதிப்  பெருமை பேசக்கூடாது என்பவர்கள்  என்னுடைய சந்தேகத்தை தீர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

ஜாதிப்  பெருமை பேசக்கூடாது சரி

மொழிப்  பெருமை பேசலாமா?
தமிழ் மொழியே சிறந்த மொழி என்று  மாநாடு நடத்துகிறோம்,   செம்மொழி மாநாடு நடத்தினோம், தமிழன்னைக்கு சிலை கூட வைக்கப் போகிறோம்.

இனப் பெருமை பேசலாமா?
தமிழன் வீரப்பரம்பரையை சேர்ந்தவன்  என்று சிலர் எழுதவதை பேசுவதை  கேட்டுள்ளேன்.

நாட்டுப்  பெருமை பேசலாமா?
பாரத நாடு பழம்பெரும் நாடு என்று கூறிக்கொள்கிறோம்.

மதப்பெருமை பேசலாமா?

குடும்பப்  பெருமை பேசலாமா?

தலைவர்கள் பெருமை பேசலாமா?

தாய்தந்தை  பெருமை பேசலாமா?

பிள்ளைகள் பெருமை பேசலாமா?


உங்களின் விளக்கத்தை நான் எதிர்பார்க்கிறேன். இப்பதிவின் நோக்கம் சிந்தனையை  தூண்டுவதும் அதற்க்கான விளக்கத்தை பெறுவதும் மட்டுமே.

வெள்ளி, 17 மே, 2013

தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் ஒழிக்கப்படவேண்டும்?


தாழ்த்தப்பட்டவர்கள் நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்டுபவர்களை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தாழத்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை முதலில் நீக்க வேண்டும் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லாதவாறு அனைவரும் உயர்த்தப்படவேண்டும்,சமமாக மதிக்கப்படவேண்டும் என்று கூறுகிறேன். 

தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை தமிழ் அகராதியிலிருந்து நீக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தை மக்கள் மனதில் எந்த மாதிரி விளைவுகளை ஏற்ப்படுத்துகிறது என்பதை நாம் உணரவில்லை என நினைக்கின்றேன்.

ஒரு சில மக்கள் தாழ்த்தப்பட்டார்களா இல்லையா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் ஒரு சில மக்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அவர்கள் மனதில் எந்த மாதிரி எண்ணத்தை ஏற்ப்படுத்தும் என்பதை நாம் சிந்திக்காதது நம் மடமை என்றே நினைக்கின்றேன்.

ஒருவனை நீ தாழ்த்தப்பட்டவன் எனும்பொழுது அவனுக்கு இரண்டு விதமான எண்ணங்கள் உருவாகாலாம். 

ஒன்று: நம்மை இழிவானவர்கள் என்று பிறர் கருதுகின்றனர் என்ற எண்ணம் வரலாம்.
இரண்டு:நம்மை சிலர் தாழ்த்திவிட்டார்கள் என்று சிலர் மேல் அவர்களுக்கு கோபம் வரலாம்.

இது இரண்டுமே சமுதாய நலனிற்கும் தனிப்பட்ட முறையில் அவர்களின் நலனிற்கும் நல்லதல்ல என்றே நான் நினைக்கின்றேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு சமுதாயத்தை பிரித்து காட்டும்பொழுது பிற சமுதாயத்தை சார்ந்தவன் மனதில் இரண்டு விதமான எண்ணங்களை ஏற்ப்படுத்தலாம்.

ஒன்று: அச்சமுதாய மக்கள் நம்மை விட கீழானவர்கள். அவர்களை விட நாம் உயர்ந்தவர்கள்.

இரண்டு: அச்சமுதாய மக்களை சிலர் தாழ்த்திவிட்டார்கள் என்று சிலர் பரிதாபப்படலாம் 

முதலாம் நினைப்பு மிகவும் தவறானது. இரண்டாவது நினைப்பு சில நல்ல விளைவுகளையும் சில தீய விளைவுகளையும் ஏற்ப்படுத்தும்.

எப்படிப்  பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது உளவியல் ரீதியாக தவறான என்னத்தை ஏற்ப்படுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

எனவே தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக   பட்டியல் வகுப்பினர் என்று மட்டுமே கூறுவது சரியாக இருக்கும்.இதுவும் சில காலத்திற்கு மட்டும்....சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கும்வரை மட்டுமே. 

தலீத் என்ற வார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் எனில் இதுவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பொருளையே தருகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் என்பது உளவியல் ரீதியாக ஏற்ப்படுத்தும் பாதிப்புகளை மனதில் கொண்டு அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை கைவிடும்படி மிகவும்  பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.  மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவியுங்கள் 


என்றும் மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 

செவ்வாய், 12 மார்ச், 2013

ஈழப்பிரச்சனையில் இந்தியாவிற்கு என்ன தண்டனை? இனி போராட்டம் எப்படி இருக்க வேண்டும்?



 இந்தியா ஈழப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை  என்றே நான் கூறுவேன். இந்தியா  நடந்த போரில் இலங்கைக்கு உதவியது என்பது உண்மையானால் இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் போர்க் குற்றத்திற்கான  தண்டனையை பெற வேண்டும் அல்லவா? அதுதானே முறை?

கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கு  அதிக தண்டனை என்று கூறுவார்கள் அப்படி பார்க்கையில் இந்தியாவிற்கும்தானே தண்டனை தரவேண்டும்?

உண்மையில் இந்தியாவிற்கு தண்டனை தரவேண்டும். ஆனால் இந்தியா என்ன தவறு செய்தது? நாட்டு மக்கள் என்ன தவறு செய்தார்கள்? தவறை செய்ததெல்லாம் இந்தியாவை ஆண்டவர்கள் செய்தது.  

எனவே இந்தியாவிற்கு தண்டனை என நான் கூறுவது அப்பொழுது ஆட்சியில் இருந்த தலைவர்களுக்கு தண்டனை தரப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.

இந்த கருத்தை வழிமொழிய தமிழகத்தில் ஒரே ஒரு அரசியல் கட்சிக்காவது துணிவுண்டா?

இலங்கையை குற்றம் சொல்லும் அரசியல்கட்சிகள் ஏன் இந்திய தலைவர்களை குற்றம் சொல்ல தயங்குகின்றன? 

போராட்டம் செய்தால் உணமையாக போராடவேண்டும். மனிதத்திற்காக போராடவேண்டும்.  அதை விடுத்து ஒருபுறம் இந்திய அரசு போருக்கு உதவியது என்று கூறிக்கொண்டு மறுபுறம் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது என்னைப்பொருத்தவரை முட்டாள்தனம். 

மனிதத்திற்கு முன்பு நாடோ,மொழியோ,இனமோ எதுவும் முக்கியமல்ல. மனிதகுலத்திற்கு எது  நல்லதோ அது மட்டுமே முக்கியம்.

என்னைப் பொருத்தவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை தரவேண்டும் அதேபோல இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கும் தண்டனை தரவேண்டும். அதுமட்டுமா தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் இருந்து கொண்டு நாடகம் ஆடிய தலைவர்களுக்கும் தண்டனை தரப்பட வேண்டும் அல்லவா?

இந்த தண்டனையை வேறொரு அமைப்பு தரவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் மறுபுறம் மக்களான  நாமே இத்தண்டனையை தரவேண்டும்.  அரசியலில் உள்ளவர்களை அரசியலில் தனிமைப்படுத்தவேண்டும்.....அவர்கள் தவறை உணர்ந்து கதறி அழும் வரை....பிராயச்சித்தம் தேடும்வரை.

முதலில் ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தர முயல்வோம். 

சரி இப்பொழுது என்ன செய்யலாம்?
மாணவர்கள் போராட்டம் சூடுபிடித்து விட்டது. உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதமாக இருக்கவேண்டுமே  ஒழிய சாகும்வரை உண்ணாவிரதம் என்பது ஏற்ப்புடையதல்ல.  அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் தமிழகத்தில் இருக்க கூடாது. டெல்லியில் பாராளுமன்றத்திற்கு  முன்பு இருக்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் பொழுது அது ஒட்டுமொத்த இந்தியாவையும் சென்றடையும். 

காங்கிரஸ் அரசு இலங்கைக்கு உடந்தையாய் இருந்திருந்தாலும்  ஒட்டுமொத்த இந்தியர்களின் ஓட்டுக்கு,கேள்விக்கு பயந்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி அழுத்தத்தை ஏற்ப்படுத்த வேண்டும். இது நடக்க  ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நம்மால் முடிந்தவரை விரைவில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவேண்டும். அனைத்து ஊடகங்களின் உதவியை நாடுங்கள்.....உங்களை தேடிவரும்படி செய்யுங்கள். 

எனவே மாணவர்களே உங்களுக்கு உண்மையில் போராடவேண்டும் என்ற அக்கறை இருந்தால் பாராளுமன்றத்திற்கு முன்பும்,ஐநா சபை முன்பும், ஒவ்வொரு நாட்டு தூதரகத்தின் முன்பும் போராட்டம் நடத்துங்கள்.ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை தரவேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு சம உரிமை,நல்வாழ்வு கிடைக்க துரிதமாக நடவடிக்கை கிடைக்க வேண்டும் என்று போராடுங்கள். விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள். இதுவே எனக்கு தோன்றும் சிறு எண்ணம்.....சிந்தித்து செயல்படுங்கள்.....உங்கள் கருத்தையும் கூறுங்கள்.....

மாணவர்கள் மட்டும்தான் போராடவேண்டும் என்றும்  அல்ல பொதுமக்களும் போராடலாம். எங்கோ நடந்ததற்கு இங்கு ஏன் போராடாவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், இனி எங்கும் இதுபோல் நடக்ககூடாது என்பதை புரியவைக்க வேண்டும் எனபதை மனதில் வையுங்கள்.  போராட  அனைவரும் சாலையில் இறங்க வேண்டுமென்பது அல்ல...உங்களது கருத்தை முடிந்தவரை முடிந்த இடங்களில் பதிவு செய்யுங்கள்....இப்பிரச்சனையை உங்களால் முடிந்த சில பேருக்காவது கொண்டு சொல்ல முயலுங்கள்.

  சரி நான் என்ன செய்யப்போகிறேன் என்றால் இந்த பதிவை எழுதுவது மட்டுமே என்னால் இப்பொழுது இரவு இரண்டு மணிக்கு முடிந்தது....

நாம் போராடுவது இன்று  தமிழர்களுக்காக என்றாலும் இனி நாம் தமிழினத்தையும் தாண்டி  மனிதத்தை முன்னிறுத்தி போராடவேண்டும் எனபதையும் மனதில் வையுங்கள். 

என்றும் மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 

சனி, 9 மார்ச், 2013

ஏன் இந்த முஸ்லீமுக்கு இவ்வளவு பாராட்டு?


பலரும்  இந்த முஸ்லீமை பாராட்டுகின்றனர். அவர் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

சில  முஸ்லிம்கள் அச்சத்திலும்,சில முஸ்லிம்கள் ஆதரித்தும்,பல முஸ்லிம்கள் ஒன்றும் அறியாமலும் இருக்கின்ற பொழுது பாகிஸ்தான் ராணுவத்தினர்  இரண்டு இந்திய ராணுவ வீரர்களின் தலையை துண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் பிரதமர் அஜ்மீர் தர்காவிற்கு (இன்று) வரும் பொழுது வரவேற்ப்பு தரமாட்டேன் என்று தைரியமாக கூறியுள்ளார் அஜ்மீர் தர்காவின் தலைமை பொறுப்பில் உள்ள  திவான் சையத் ஜைனுல் அபெதீன் அலி கான்.

இவருக்குத்தான் இப்பொழுது பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். 

ராணுவ வீரரின்  தலையை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும், இந்தியர்களிடமும்,சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடமும் பாகிஸ்தான் பிரதம மந்திரி மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும், அதை செய்யாததால் அவரை நான் வரவேற்க போவதில்லை என்று சுபி வழியை பின்பற்றும் திவான் தெரிவித்துள்ளார்.  

திவான் தான் பிற நாட்டு தலைவர்களை வரவேற்ப்பது  வழக்கம். இவரின் இந்த முடிவு இசுலாம்  என்று சொல்லி இந்திய முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை பாக்கிஸ்தானிற்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.

இவர் இப்படி பேசியது  பொதுமக்கள் மத்தியில் இவருக்கு நற்பெயரை வாங்கிதந்துள்ளது. அமைதியாக இருக்கும் பல நல்ல முஸ்லிம்களின் குரலாகவே இதை பலரும் பார்க்கின்றனர். 

முஸ்லிம்கள் பலரும் தங்கள் மனிதநேய,மதச் சார்பற்ற  கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க வேண்டும்.மதத்தையே கட்டிக்கொண்டு அழாமல் மனித நேயத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

திவான் சையத் ஜைனுல் அபெதீன் அலி கான் அவர்களின் இந்த செயல் அவரின் தனிப்பட்ட எதிர்ப்பாக இருந்தாலும் இது பாரட்டுக்குரியது. நமது  பாராட்டையும் அவருக்கு  பதிவு செய்வோம்.

என்று மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 


வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஐயதராபாத்தில் குண்டு வைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகளா?


சிந்திக்கவும் என்ற வலைப்பதிவு ஐயதராபாத்தில் குண்டுவைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகளாக கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் எழுந்தது அதை பின்னூட்டமாக இட்டுள்ளேன்.
அந்த பின்னூட்டம் கீழே 

///
மிகவும் சரியான பதிவு. குண்டு வைத்தது மோடியாக கூட இருக்கலாம். அஜ்மல் கசாபும், அப்சலும் ஒன்றும் அறியாதவர்கள். இவர்களை தூண்டிவிட்ட காவி  தீவிரவாதிகளை உடனே அரசு கைது செய்யட்டும். 

வங்காள தேசத்தில் வலைப்பதிவரை கொன்றதும் இந்த காவித்தீவிரவாதமாக இருக்கலாம். 
பாகிஸ்தானில் கொத்து கொத்தாக ஷியா,சுபி முஸ்லிம்களை கொல்வதும், ஏன் தாலிபான் அமைப்பு கூட காவிதீவிரவாதிகளின் சதி செயலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

எனக்கு சில சமயம் ஒசாமா கூட காவி தீவிரவாதியோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. 

நான் இதுபற்றி எழுதவேண்டாம் என்று இருந்தேன்...என்னை எழுதவைத்து விட்டீர்கள்.///


உண்மையில் இந்த சம்பவம் பற்றி நான் எழுதவிரும்பவில்லை. ஆனால் சில கிறுக்குத்தனமான பதிவுகளை வாசித்தால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

மாலேகான்,சம்ஜோதா ரயில்,மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா  இந்த நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சில ஹிந்துத்துவாவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலே எனக்கு இதில் இசுலாமிய அமைப்புகளுக்கு  பங்கு இருக்க வாய்ப்பு இல்லை என்று பொறி தட்டியது.  ஏன் எனில் இந்த நான்கு இடங்களுமே முஸ்லிம்களோடு தொடர்புடைய பகுதிகள்.

நல்லவேளையாக காவல்துறையும் உண்மையை கண்டறிந்து விட்டது.இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை கூட தரலாம்.

இது ஒருபுறம் இருக்க இந்த சம்பவங்களை வைத்துக்கொண்டு அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம்  ஹிந்துத்துவாவாதிகள் என்று ஒருசாரார் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.உண்மையில் உண்மை வேறுவிதமாக இருக்க.

ஐதராபாத் குண்டுவெடிப்பு என்பது அங்குள்ள சாய்பாபா கோயிலில் முதலில் வெடிக்க செய்வதாக திட்டமிடப்பட்டு இறுதியில் இடம் சற்று மாற்றுப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன. 

இந்த குண்டுவெடிப்பை பொருத்தவரை எந்த அமைப்பையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. காவல்துறை ஆராய்ந்து முடிவை சொல்லட்டும் அதுவரை கிறுக்குத்தனமாக யாரும் எழுத வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

குற்றம் செய்தவன் எந்த மதமாக இருந்தாலும் அவனுக்கு கடமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். 

இந்த பதிவை எழுத காரணம் இந்து,இசுலாமிய வாதிகள்  அல்ல. போலி பகுத்தறிவுவாதிகள் தான்  இப்பதிவிற்கு காரணம்.

இதுபற்றி உணர்ச்சிவசப்பட்டு பதிவு எழுதாத இரண்டு மத மக்களுக்கும் எனது நன்றிகள். 

அடுத்த பதிவு பகுத்தறிவு குருடர்களை பற்றியதாக இருக்கலாம்...............
Related Posts Plugin for WordPress, Blogger...