வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 11 செப்டம்பர், 2014

திருமந்திர விநாயகர் காப்பை ஆறு சமயங்களை ஏற்ப்பதில் என்ன குழப்பம்?


சென்ற பதிவில் திருமந்திரத்தில் ஆறு சமயம் என்ற வரிகள் விநாயகரின் சமயத்தை உள்ளடக்கியது என்று எழுதி இருந்தேன். நண்பர் கோடாங்கி அது தவறானது  திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள்  சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று கூறி உள்ளார்.

திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள் எவை?
நண்பர் கூறுவது போல சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் தான் திருமந்திரம் ஆறு சமயங்களா என்றால் அதற்க்கு என்னுடைய பதில் இல்லை என்பதே.

திருமூலர் உட்சமயம் என்பதில் ஆறு சமயங்களும் புறச்சமயம் என்பதில் ஆறு சமயங்களும் கூறுகிறார். நண்பர் கூறும் ஆறு சமயங்கள் புற சமயங்களில் சிலவாக இருக்கலாம்.

 சரி அந்த ஆறு புற சமயங்கள் எவை என்று கேள்வி எழுகிறது. 

வைணவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனியவாதம் என்று ஒரு உரையாசிரியர் கூறுகிறார்.  இல்லை பைரவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனிய வாதம் அந்த ஆறு சமயங்கள் என்போரும் உளர்.

எனக்கு இவர்கள் கூறியதோடு உடன்பாடு இல்லை.இவைகள் முழுமையான உண்மை இல்லை.
ஏன் எனில் பைரவம் என்பதும் ஒரு வகையில் சிவ வழிபாடே. 

மேலும் வைணவம்,பாஞ்சராத்திரம் சமயங்களும் புறச்சமயங்கள் ஆகா என்றே நினைக்கின்றேன்.என்னைப்பொருத்த வரை சமணம், பௌத்தம் மற்றும் சில சமயங்களை புறச்சமயங்களாக திருமூலர் கூறி இருக்க  வேண்டும். அவை எவை என்பதை மேலும் தேடினால் தான் கண்டறிய முடியும்.

----------------------------------------------------------------------------------------------
திருமந்திரம் கூறும் உட்சமயங்கள் அல்லது அகச் சமயங்கள் எவை?

திருமந்திரம் கூறும் உட்சமயங்களாக  சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் ஆகியவை இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

திருமூலர் உட்சமயம் என்ற அத்தியாயத்தில் ஆறு   சமயங்களை பற்றி கூறுகிறார். இச்சமயங்களை ஒன்றோடொன்று தொடர்புடைய சமயங்களாக, சிவனோடு தொடர்புடைய சமயங்களாக  கூறுகிறார். இவற்றை அவர் அங்கீகரித்து உட்சமயம் என்கிறார்.  

"இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமையம் குழல் கின்ற ஆதி பிரானே"

மேலும் இந்த ஆறு  சமயங்களும்  ஒரே ஊருக்குத்தான் வழி காட்டுகிறது எனவே இந்த ஆறு சம்யங்களுக்குள் இது நல்லது இது  கெட்டது என்று சண்டை வேண்டாம் அவ்வாறு சண்டை இடுவது  நாய் குரைப்பதற்கு சமம்   என்று பின்வரும் பாட்டில் கூறுகிறார்.

ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச் சமயமும்
நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

இதன் மூலம் ஆறு உட்சம்யங்களுக்குள் பூசல் இருந்ததை அறிய முடிகிறது. சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் ஆகிய சம்யங்களுக்குள் பூசல்  இருந்ததா என தெரியவில்லை.  

மேலும் இவைகள் சமயங்கள் தானா என்ற சந்தேகமும் எனக்கு  எழுகிறது. இவையாவும் தத்துவங்களாக தெரிகிறதே தவிர சமயங்களாக அல்ல. சமயம் என்றால் ஒருவரை வணங்குவார்கள், அவர்களுக்கு கோயில் இருக்கும். யோகத்தை தந்த பதஞ்சலியை இன்றளவும் வணங்கும் வழக்கம் உண்டு. ஆனால் பிற தத்துவங்களை தந்தவர்களை வணங்கும் பழக்கம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. மேலும் இவைகளை பெரும்பாலான மக்கள் சமயங்களாக பின்பற்றியதாகவும் தெரியவில்லை.


"இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர்"

என்று திருமூலர் கூறுகிறார். இந்த ஆறு தேவர்கள் மேற்கூறிய தத்துவத்தை தந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அதற்க்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. முற்றிலும் மறுப்பதற்கில்லை.

இந்த தேவர்கள் என்போர் ருத்ரன்,திருமால்,முருகன், கணபதி,சக்தி, ஐயப்பனாக  இருக்கவே வாய்ப்புகள் உண்டு. ஏன் எனில் இவர்களை வணங்கும் சமயங்கள் சிவனை ஏற்றுக்கொள்கின்றன. இவர்கள் சிவனோடு தொடர்புடையவர்கள்.இவர்களை வணங்குபவர்கள் முன்பு இவர் தான் பெரியவர் அவர் தான் பெரியவர் என்று சண்டையிட்டதுமுண்டு.


திருமந்திரம் கூறும் ஆறு அகச்சமயங்கள்
பாசுபதம், மாவிரதம், வைரவம்,சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்று சிலரும் 

சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` என்று சிலரும்

வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்,சௌமியம் என்று சிலரும் கூறுகின்றனர். 

ஆதிப் பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக் கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

என்ற உட்சமய  பாடலின் மூலம் ஹரியையும், சக்தியையும் அங்கீகரிக்கிறார் என்பது புரியும். இதன் மூலம் வைணவமும், சாக்தமும் நிச்சயமாக உட்சமயங்கள் என்ற முடிவிற்கு வரலாம்.

இவற்றோடு தொடர்புடைய பிற சமயங்கள் எவை எனும் பொழுதுதான் கௌமாரம்- கந்தன், காணாபத்தியம்-கணபதி, சௌரம்- சூரியன், சௌமியம்- ஐயப்பன்  என்பவைகளாக இருக்க கூடும் என்ற முடிவிற்கு வரமுடிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------
சரி விநாயகரை வணங்கும் பழக்கம் தமிழகத்தில் திருமந்திர காலத்தில் இருந்ததா என்றால் இல்லை என்பதற்கு வலுவான கரணங்கள் இல்லை.   ஆறு சமயங்களில் விநாயகருடையதும்  நிச்சயமாக ஒன்றா என்றால் வாய்புகள் நிறைய உண்டு.இருக்கு என்பதற்கு நான் ஆறு சமயங்களை உதாரணமாக காட்டியுள்ளேன்.

மேலும் திருமந்திரமானது 

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

என்ற பாடலை முதலில் கொண்டு துவங்குகிறது. சிலர் இப்பாடலை இடைச்சொருகல் எனலாம். இடைச்சொருகல் என்பதற்கு தகுந்த ஆதாரம் என்ன?


திருமந்திர காலத்தில் விநாயகர் வழிபாடு தமிழத்தில் இருக்கவில்லை என்று கூறுவோர்கள் 

1. விநாயகர் காப்பு இடைச்சொருகல் என்று நிரூபிக்க வேண்டும்.
2. ஆறு சமயங்களுள் விநாயகர் இல்லை என்றும் நிரூபிக்க வேண்டும். செய்வார்களா?

இது இரண்டிற்கும் விடை கிடைக்காதவரை திருமந்திர காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது என்று கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

மாற்றுக்கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
-----------------------------------------------------

கொசுறு1:அகத்தியர் தன்னுடைய "அகத்திய வாத சௌமியம்" என்ற நூலில் கணபதியை பற்றி குறிப்பிடுகிறார்.இவர் எக்கால அகத்தியர் என்று அறிய வேண்டும்.

கொசுறு2:சேயோன்-முருகன், மாயோன்-திருமால் என்ற தமிழ் பெயர்களை ஒரு பெருத்த சந்தேகத்தினால்  ஆறு சமயங்களோடு வேண்டும் என்றே நான் இணைக்கவில்லை.   

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

விநாயகர் பற்றி திருமந்திரத்தில் உள்ளது ஆதாரம் வேண்டுமா?


சில நாட்களாக   சில பதிவர்கள் விநாயகர் பற்றி சங்க இலக்கியங்களில் இல்லை அதனால் அவர் தமிழர்களின் கடவுள் அல்ல என்று கூறினர். சங்க இலக்கியங்களில் விநாயகர் இருக்கிறா இல்லையா என்பது எனக்கும் தெரியாது.

அந்த பதிவர்கள்  திருமந்திரத்தில்  விநாயகர் பற்றி எந்த குறிப்பும் இல்லை என்றனர். திருமந்திரத்தின் காலம் சர்ச்சைக்குரியது. ஆனால் அதில் விநாயகர் பற்றி எந்த குறிப்பும் இல்லை என்பது அவர்களின் அறியாமை எனலாம். எல்லோரும் எல்லாமும் கற்க இயலாது. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. அதனால் நான்  அவர்களை குறை கூறவில்லை. தவறான செய்தி நிலைநிறுத்தப்படக் கூடாது. வாய்மையே வெல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

சரி திருமந்திரத்தில் விநாயகர் பற்றி எங்கே உள்ளது?
உண்மையில் விநாயகர் பற்றி திருமந்திரத்தில் பாடல்கள் உண்டா இல்லையா என்பது எனக்கும் தெரியாது :)

பின்பு ஏன் இந்த பதிவு எனலாம்...சற்று பொறுங்கள்...


விநாயகர் பற்றி நேரடியாக  திருமந்திரத்தில் உள்ளதா இல்லையா என்பது எனக்கும் தெரியாது.
ஆனால் விநாயகரின் சமயம் பற்றி திருமந்திரம் கூறுகிறது என்றே நான் நினைக்கின்றேன்.

சில  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆறு  முக்கிய சமயங்கள் இந்தியாவில் இருந்ததாக செய்திகள் உள்ளன. திருமந்திரப் பாடல்கள் சில இந்த ஆறு சமயங்களை தொட்டு செல்கிறது.அந்த ஆறு சமயங்களில் ஒன்று விநயாகரை அல்லது கணபதியை  தெய்வமாக கொண்ட காணபத்தியம் என்பர்.

பின்வரும் பாடல் வரிகளை காண்க

"சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட"
"ஆம் ஆறு உரைக்கும் அறு சமய ஆதிக்குப்"

என்ற இப்பாடல்கள் மூலம்......திருமந்திர காலத்திற்கு முன்பு ஆறு முக்கிய சமயங்கள்இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. ஆறு சமயங்களில் ஒன்று  விநயாகரை வணங்கும்  சமயம் என்று பிற நூல்கள் மூலம் தெரியவருகிறது. எனவே விநயாகரை வணங்கும் வழக்கம் திருமந்திர காலத்திற்கு முன்பே தமிழகத்தில் இருந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்பர் என்றே நம்புகிறேன். மாற்று கருத்து  உள்ளவர்கள் தெரிவிக்கவும்.


விநாயகர் சங்க இலக்கியங்களில் இருக்கலாம் அது நமக்கு தெரியாமால் இருக்கலாம். விநாயகர் சங்க இலக்கியங்களில் இல்லை  என்பதால் அவர் தமிழர் கடவுள் இல்லை என்று ஏளனம் செய்ய வேண்டாம்.

இந்திரன் பற்றி சங்க காலத்து சிலப்பதிகாரத்தில்  உண்டு என்பதால் அவரை தமிழர்  கடவுள் என்று இவர்கள் ஏற்ப்பார்களா என எனக்கு தெரியவில்லை.


என்னைப்பொருத்த வரை உலகில் யார் எந்த கடவுளை வணங்கினாலும் அவர்களது உரிமையை மதிக்க வேண்டும்.ஏளனம் செய்யக்கூடாது. தமிழர் கடவுள் எனபதற்கு எந்த ஒரு இலக்கணமும் இல்லை."தமிழர்  வணங்கும் எந்த கடவுளும் தமிழர் கடவுளே" என்று நாம்   இலக்கணம்  வகுத்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இவ்விலக்கனத்தின் படி ஏசுவும் அல்லாவும் கூட தமிழர் கடவுள்களே.


தமிழ் வளர்த்ததால் முருகனை தமிழ் கடவுள் என்கிறோம் தவறில்லை. (சிவனும் தமிழ் வளர்த்ததாக கூறுகின்றனர்.)

தமிழ் கடவுள் வேறு தமிழர் கடவுள் வேறு இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

ஜிகர்தண்டா செம தண்டம்?

 நான் ஒரு சாதாரண ரசிகன். படங்களுக்கு நான் செல்ல இரண்டு  காரணங்கள். ஒன்று பொழுது போக்கு, இரண்டாவது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில். நான் திரைப்படங்களை இந்த இரண்டு அளவுகோலின்படிதான் மதிப்பீடு செய்வேன். கூடவே சமுதாய அக்கறையும் சேர்ந்துகொள்ளும்.

படம் ஆரம்பித்த கொஞ்ச  நேரத்தில்  படம் மரண மொக்கையாக இருக்குமோ என்று தோன்றியது. ஆங்காங்கே நகைச்சுவையோடும், மிரட்டலோடும், திருப்பங்களோடும் படம் செல்கிறது.ஒரு சில இடங்களில் நிச்சயமாக அட! போட  வைத்துள்ளார். படம் இடையில் கொஞ்சம் என்னடா இது :( என்றும் சொல்ல வைக்கிறது. இறுதியில்  சுபமாக முடிகிறது.

ஜிகர்தண்டா  ஒரு நல்ல பொழுதுபோக்கு படமா என்றால் சுமார் என்றுதான் சொல்வேன்.
ஜிகர்தண்டா  ஒரு வித்திய்சாமான முயற்சியா என்றால் எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.

சித்தார்த்- தவிர்த்திருக்க வேண்டிய படம்.
பாபி சிம்மா - இயக்குனருக்கு நிச்சயம் கடமைப்பட்டுள்ளார். இப்படத்தின் நாயகன் இவர்தான். இவரை திரையில் பார்த்த உடன் சிரிப்பு தான் வந்தது. இறுதியிலும் அவ்வாறே முடிந்தது.

விஜய் சேதுபதி - இந்த படத்தின் நடுவே ஏன் இவரை காட்டுகிறார் கள்  என்று புரியவில்லை. விளம்பரங்களிலும் இவருக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? என்ன அரசியலோ...ஏற்றுகொள்ளும்படி இல்லை.

 கார்த்திக் சுப்புராஜ் - இப்படத்தின் இயக்குனர். பிட்சா என்ற  படத்தை தந்தவர். இப்படத்திலும் பிட்சா போலவே  சில திருப்பங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.

ஜிகர்தண்டா  - கொஞ்சம் சுவை, கொஞ்சம் சலிப்பு.  

சனி, 26 ஜூலை, 2014

வேலையில்லா பட்டதாரியா? பொறுக்கியா?


திரையுலகில் பொறுக்கித்தனம் இன்று நாயகத்தனமாக(heroism) பார்க்கப்படுகிறது. திரையுலகம் நடைமுறையின் பிரதிபலிப்பா  அல்லது  நடைமுறை திரையுலகை பிரதிபலிக்கிறதா என்று சிந்தித்தால்  இரண்டுமே நடக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். 

இருப்பினும் ஆங்காங்கே நடக்கும் சில தீயசெயல்களை நாயகத்தனமாக காட்டும்பொழுது அது பெரும்பாலான மக்களின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்ப்பபடுத்துகிறது . திரைப்படங்கள் வெறும் பொழுது போக்காகவோ, நேர்மறை எண்ணங்களை விதைப்பதாகவோ இருந்தால் பரவாயில்லை ஆனால் இன்று  சிலபல திரைப்படங்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாகவே உள்ளது. பொறிக்கத்தனம் செய்பவன் நாயகனாகவும் அவனின் பொறிக்கத்தனங்கள் நாயகத்தனமாகவும் மக்களுக்கு காண்பிக்கப்படுகிறது, கற்ப்பிக்கப்படுகிறது. இது நமது சமுதாயத்திற்கு நல்லதல்ல. 


திரைப்படங்கள் பல காலாமக மக்கள் மனதில் விடத்தை விதைத்து வருகிறது. நல்ல படங்கலே வரவில்லை என்று நான் கூறவில்லை.சிலபல படங்கள் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பல படங்கள் தீயசெயல்களை நற்செயல்போல மக்கள் மனதில் விதைத்து விடுகிறது. 

ஒரு படத்தில் நாயகன் பள்ளிக்கு செல்லும்  பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். 

ஒரு படத்தில் நாயகன் பள்ளிக்கு செல்லும் பெண்ணிற்கு திருமணம் செய்யும் பொழுது அதை தடுத்து நிறுத்துகிறான். நல்ல விடயம். பிறகு அவனே அந்த பெண்ணை காதலிக்கிறான். பள்ளிக்கு செல்லும் பெண்ணுக்கு  கல்யாணம் பண்ணகூடாது ஆனா காதல் என்ற பெயரில் அங்கங்கே அழைத்து சென்று கசமுசா செய்யலாம் என்று கூறுகிறார்களோ?

ஒரு படத்தில் நாயகன் பேருந்தில் பெண்களை உரசி உல்லாசம் கொள்கிறான்.
ஒரு படத்தில் நாயகர்கள் கடைத்தெருக்களில் பெண்களை உரசி உல்லாசம் கொள்கின்றனர்.

 பல படங்களில் இளைங்கர்கள் புகைபிடிப்பதாகவும், மது அருந்துவதாகவும், பெண்கள் பின்னே சுற்றுவதாகவும் காண்பிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒரு சில இளைங்கர்கள் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் இவற்றை  நாயகத்தனமாக காட்டும்பொழுது பல இளைங்கர்களும் இவ்வாறன செயல்கள் சரி என்று எண்ணி இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள்...ஈடுபடுகின்றனர் என்பதுதான் உண்மை.

பல துறைகளில் பல ஒழுக்ககேடுகள்  உள்ளன. அவ்வாறுதான் திரைத்துறையிலும் சில ஒழுக்ககேடுகள் இருக்கின்றது..இருக்கலாம்...இதை நம்மால் என்ன செய்ய இயலும்? இருப்பினும் சமுதாய அக்கறையோடு இருக்க வேண்டும் என்று குரல் எழுப்ப முடியும். அதைத்தான் இங்கே  செய்கிறேன். 

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிர்பார்ப்புடன் சென்றேன். இளைங்கர்களுக்கு நல்ல கருத்தை முன்மொழிவார்கள் என்று எண்ணினேன். பெருத்த ஏமாற்றாம்.

இப்படத்தில் வேலையில்லா பட்டதாரி நாயகன் என்ன செய்கிறான்..... 
வீட்டிலே புகை பிடிக்கிறான் 
வீட்டிலே மொட்டை மாடியில் மது அருந்துகிறான் 
அடுத்த வீட்டு பெண்ணின் படுக்கைஅறைய பார்க்கிறான் 
தனது தம்பியை தெரியாமல் தாக்குவதுபோல வேண்டும் என்றே தாக்குகிறான்..வேண்டும் என்றே மதுவை கலந்து கொடுக்கிறான்  
இப்படத்தை பார்க்கும்  இளைங்கர்களுக்கு இவர்கள் இதைத்தான் கற்றுக்கொடுக்க விரும்புகிறார்களா?
அல்லது இப்படித்தான் இன்றைய வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனரா?

வேலையில்லா பட்டதாரிக்கு அவன் தாய் இறந்ததால் தான் வேலை கிடைக்கிறது....அவன் திறமையால் அல்ல.

இப்படத்தில் நாயகனின் இரண்டு பண்புகளை நான் வரவேற்கிறேன்.
ஒன்று....சட்டத்துக்கு புறம்பாக மேல்தளங்களை வடிவமைக்கும்படி வேலை தருபவர் கேட்டாலும்  வேலை  கிடைக்காவிட்டாளும்  சட்டத்துக்கு புறம்பாக நடக்க கூடாது என்று இருக்கும் பண்பு

 இரண்டு...தன் தாயின் உறுப்பை தானம் பெற்ற பெண்ணை தாய் போன்றே எண்ணும் பண்பு
இன்னும் ஒன்று இரண்டு நல்ல பண்புகளை கூட சொல்லலாம். ஆனால் படத்தில் நாயகனின் பல தீய பண்புகளே ஆங்காங்கே தெரிகிறது.

எங்க அம்மா புகை பிடிக்க கூடாது என்று சொல்லி கண்ணீர் விடும் நாயகன்....திருந்தாம  தொடர்ந்து புகைபிடிக்கிறார்.

நாயகனுக்கு வேலை கிடைத்த பிறகு வேலையில்லா  பட்டதாரி என்று பாட்டு வேற ...வேலை கிடைத்த பிறகு எப்படிடா அவன் வேலையில்லா பட்டதாரி?

படத்தின் இறுதியில் இது வேலையில்லா பட்டதாரிகளுக்கு சமர்ப்பணம் என்று போடுகிறார்கள். வேலையில்லா பட்டதாரிகளே  எங்களை மன்னியுங்கள் என்றுதான் போட்டிருக்க வேண்டும். ஏன் இனில் வேலையில்லா பட்டதாரிகளை இதற்க்கு மேல் அசிங்கப்படுத்த முடியாது.

இப்படத்திற்கு எந்த ஒரு தலைப்பு வைத்திருந்தாலும் பத்தோடு பதினொன்று அதோடு இது ஒன்று என்று விட்டிருக்கலாம்.  வேலையில்லா பட்டதாரி என்று பெயர் வைத்ததால்தான் இந்த விமர்சனம்.

திரைத்துறையினர்  கொஞ்சமாவது சமூக அக்கறையுடன் படம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.பொறுக்கித்தனத்தை நாயகத்தனமாக  காட்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

புதன், 11 ஜூன், 2014

அம்மா உப்பில் உப்புக்கு சப்பான் கூட தமிழ் இல்லையா?

தமிழக அரசே தமிழை புறக்கணித்துவிட்டு தமிழன்னைக்கு கோயில் கட்டுவதால் என்ன பயன்?

தமிழகத்தில் விற்கும் பொருட்களில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பெயர் இருந்தாலும் உப்புக்கு சப்பானுக்கு தமிழிலும் பெயர் எழுதுவார்கள். ஆனால் அம்மா உப்பில் உப்புக்கு சப்பான் கூட தமிழ் இருக்கின்றதா என தெரியவில்லை.

அரசு வெளியுட்டுள்ள விளம்பரத்தில் உப்பு பொட்டலங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் தெரிகிறது. ஒருவேளை மறுபுறம் தமிழ் இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படி தமிழில் பெயர் இருப்பின் அதை முன்னிருத்திதான் புகைப்படங்களை வெளியிடவேண்டுமே தவிர ஆங்கிலத்தை முன்னிறுத்தி அல்ல. தமிழை தமிழக அரசே புறக்கணிப்பதை எக்காலும் ஏற்க்க இயலாது. அரசு இத்தவறை உடனே  சரி செய்து கொள்ளவேண்டும்.

அம்மாவின் மலிவு விலை திட்டங்கள் மக்களுக்கு பயனளித்தாலும் தனியார் நிறுவனங்களே  மலிவு விலையில் தரமான பொருட்கள் தரும்படி ஊக்கமும் உறுதுணையும் அளித்தால் தொழில் வளம் பெருகும், மக்களும் பயன் பெறுவர். மலிவு விலை  திட்டங்கள் மூலமும் அரசு இலாபம் ஈட்டினால் அது அருமை. இருப்பினும் அம்மா உப்பு மக்களுக்கு பயன்  தருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெள்ளி, 9 மே, 2014

தாலிபானாகிறதா தமிழகம்? இந்து முசுலீம் கலவரம் வெடிக்கும் அபாயம்?


சில இசுலாமிய அமைப்புகளால் தமிழகம் தாலிபானாகி  வருகிறது. எதிர்காலத்தில் இது இந்து முசுலீம் கலவரத்திற்கு வித்துடுமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது.

-----------------------------
தமிழத்தின் வரலாற்றில் இதுவரை இந்து முசுலீம் கலவரம் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படி ஒன்று நிகழ்ந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டியதாக உள்ளது.  ஒரு சில இசுலாமிய அமைப்புகள் இந்துக்களை கலவரத்திற்கு தயார் செய்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழகத்தை பொருத்தவரை எந்த ஒரு இந்து மத அமைப்பும் இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சில இசுலாமிய அமைப்புகள் குண்டுவெடிப்புகளிலும், இந்து மத அமைப்பு தலைவர்களை கொலை செய்வதுமாக இருந்து வருகிறது.   அம்பு விட்டவர்களை பிடிக்காமல் அம்புகளை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. ஓட்டுக்களுக்கு பயந்தோ என்னமோ  இந்து மத அமைப்பு தலைவர்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர்களை  காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை.
---------------------------------------
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்பொழுது சில இசுலாமிய அமைப்புகள்  ஒட்டு கேட்ட வந்தவர்களை தடுத்துள்ளது, தாக்கியுள்ளது.  இதோ எதோ ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இதன் மூலமாக இசுலாமிய அமைப்புகள் மதத்தை ஒரு பொருட்டாக எண்ணாத  மக்களுக்கு  மதவெறியை ஊட்டுகிறது என்றே சொல்ல வேண்டும்.

பாமக, மதிமுக,தேமுதிக கட்சிய சார்ந்தவர்கள் யாரும் தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்தவில்லை.  ஒட்டுமொத்த தமிழகமுமே அப்படித்தான்.ஆனால்  ஒட்டு கேட்டு வந்த அக்கட்சி தொண்டர்களுக்கு இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தது எப்படிப்பட்ட ஒரு விளைவை ஏற்படுத்தும் என்று இசுலாமிய அமைப்புகள் சிந்திக்கவில்லை. வெவ்வேறு ஜாதிகளாக தங்களை அடையாளப் படுத்தி கொள்ளும் தமிழர்களை  இவ்வாறான செய்கைகள் இந்துக்களாக  ஒன்றிணைக்கும் அபாயம் உள்ளது.

-------------------------------
சமீபத்தில் தரமணியில் தங்களுக்கு தனிசுடுகாடு வேண்டும் என  இசுலாமிய அமைப்புகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பத்தட்டம் நிலவியது
என படித்ததாக ஞாபகம்.
--------------------------------
ராமாநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இசுலாமிய கிராமங்களுக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்று பதாகைகள் வைத்ததாக ஒரு செய்தி  வெளியானது. இதற்க்கு மறுப்பு தெரிவித்து ஜவஹருல்லா வெளியிட்டுள்ள கட்டுரையில் "பொதுவழியல்ல இது பெண்கள் நடமாடும் பகுதி" என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டுள்ளதாக ஒப்புக்கொள்கிறார். பெண்களை சிலர் கிண்டல் செய்வதால் அந்த குறுக்கு தெரு பெண்களுக்கான தெரு என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு எழுதப்பட்டது என்று அவர் கூறுகிறார். தனி பேருந்துகள் இருக்கும்பொழுது தனிதெரு இருக்க கூடாதா  என்று அவர் கேட்கிறார்.

எனக்கு தெரிந்து இந்தியாவில்  பெண்களுக்கு என்று தனி தெரு இருப்பது இங்கு மட்டுமே என்று நினைக்கின்றேன். தாலிபானில்  கூட இம்மாதிரி உண்டா என தெரியவில்லை.


http://www.dailypioneer.com/todays-newspaper/fatwas-ban-outsiders-entry-into-rameswaram-villages.html
http://twocircles.net/2013dec21/are_muslim_populated_villages_ramanathapuram_district_out_bounds_hindus.html#.U20yVIFdXIZ
---------------------------------------------------------------

இக்கட்டுரையின் மூலம் இசுலாமிய அமைப்புகளிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவு செய்து போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமே நடத்துங்கள்,பொதுமக்களை பாதிக்காமல். உங்கள் நலனுக்கு அரசாங்கம் உள்ளது. உங்கள் குறைகளை அரசாங்கத்த்திடம் கூறி அதை தீர்க்க பாருங்கள். வீணாக மதம் என்ற உணர்வே இல்லாத இந்துக்களுக்கு மத்தியில் உங்கள் எதிர்ப்பை காட்டி அவர்களுக்கு மதவெறியை ஊட்டாதீர்கள். இதன் மூலம் பாதிக்கப்படப்போவது அப்பாவி பொது மக்கள் மட்டுமே. நீங்கள் அல்ல.
 இசுலாமியர்களுக்கு மதவெறியை ஊட்டாமல், மத சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுங்கள்.


வெள்ளி, 18 ஏப்ரல், 2014

என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு உங்கள் ஓட்டு யாருக்கு?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான்  இரட்டை இலைக்கு வாக்களிக்கப் போகிறேன். இரட்டை இல்லை அந்த தகுதியை பெற்றுள்ளதா என பார்த்தால். இரட்டை இலை அந்த தகுதியை பெறுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரசுக்கும், தி மு க விற்கும் இனி  எக்காலத்திலும் நான் வாக்களிக்க மாட்டேன் என்றுதான் நினைக்கின்றேன்.  ராஜபக்சே கொத்து கொத்தாய் ஈழத்தமிழர்களை கொன்று  குவிக்க காரணமாக இருந்த இந்த இரண்டு கட்சிகளும் இனி ஆட்சிக்கே வரக்கூடாது என்பதே என்னுடைய ஆசை.

இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழனை தலைகுனிய வைத்த 2ஜி ஊழல் செய்த திமுகவுக்கும் பல ஊழல் புரிந்த காங்கிரசுக்கும் ஒட்டுபோடுபவர்களின் அறியாமயை என்னவென்று சொல்ல?

இன்று திமுகவிற்கும் காங்கிரசுக்கும் ஒட்டுப்போடுபவர்கள் சொல்லும் ஒரே காரணம். மதசார்பின்மை.  அது என்ன மண்ணாங்கட்டி மதசார்பின்மை என தெரியவில்லை. பாஜ கவிற்கு ஆதரவு தருவார்கள், மந்திரி பதவி பெற்றுக்கொள்வார்கள் ஆனால் மதசார்பின்மை என்று சொல்லி இப்பொழுது அவர்களுக்கு ஒட்டுபோடவேண்டாம் என்பார்கள்.

குஜராத் கலவரத்தின் போதும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் தான் இந்த் சிறுபான்மையினர் நலவாதிகள். ஆனால் அம்மா  பொடாவால் பயம் காட்டியவுடன்   உதவிக்கு பாஜக  வராததால் கூட்டணியை முறித்து  கொண்டு அடுத்து காங்கிரசுடன் கூட்டணி கண்டு ஊழல் புரிந்தவர்கள் தான் இவர்கள்.

இப்பொழுது கூட மோடி எனது நல்ல நண்பர், உழைப்பாளி என்று கூறி பாஜக கூட்டணிக்கு தயாராக இருந்த இவர்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டாம். கேட்டால் மதசார்ப்பின்மையாம்.

தமிழகத்தை பொருத்தவரை திமுக தரை மட்டமாக்கப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் திமுக வின் ரௌடிகளினால் மக்கள் பட்ட பாடு போதும்.

அம்மா ஆட்சியை பொருத்தவரை முதன் முதல் முதல்வரான பொழுது செய்த ஊழல்தான் அவர் செய்த ஒரே குற்றம்.

தன்னுடைய இரண்டாவது ஆட்சியில் எந்த  பிரச்சனையும் இல்லை. இன்று சென்னையில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்றால் அதற்க்கு அம்மாதான் காரணம்.

இன்றைய அம்மாவின் ஆட்சியில் பிரச்சனை இல்லையா என்றால் உண்டு. மின்வெட்டு தான் இந்த ஆட்சியின் மிகப்பெரும் குறை. 8000 மெகா வாட்டிலிருந்து  12000 மெகா வாட்டாக உற்பத்தியை பெருக்கி  இருந்தாலும் எத்தனை மணி நேரம் மின்சாரம் வீட்டிற்கு வருகிறது என்பதே பொது மக்களின் கணக்கு. அந்த விதத்தில் இது ஒரு குறையே.

மற்றபடி அம்மாவின் இந்த ஆட்சி திருப்தியாகவே உள்ளது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. மலிவு விலை உணவகம், மலிவு விலை குடி நீர்,சிற்றுந்து  என்பன மக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கின்றது. விலையில்லா மடிக்கணினி,வீட்டு உபயோக பொருட்கள், தானே புயல் நிவாரனத்தால் பலரும் பயன் அடைந்துள்ளனர்.

திமுகவின் ஆட்சியை போல மனஉலைச்சலை அம்மாவின் ஆட்சி தரவில்லை என்பதால் இரட்டை இலைக்கே  என்னுடைய ஓட்டு.

தமிழர்களை கொன்ற திமுகவிற்கா உங்கள் ஒட்டு?
பாஜக கூட்டணிக்கு நீங்கள் ஒட்டளித்தாலும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும். திமுக வெற்றி பெறவா உங்கள் ஓட்டு?

ஊழல் பற்றி கேள்வி கேட்டதினால்தான் எம்ஜிஆர்  வெளியேற்றப்பட்டார் அன்று முதல் இன்றவரை ஊழலில் திளைக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு?

சிந்தித்து வாக்களியுங்கள். திருடர்கள் கையில் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்.

என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு..உங்கள் ஓட்டு யாருக்கு?

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பறையர்கள் பூர்வகுடிகளா? வந்தேறிகளா?

சென்ற பதிவில் திராவிடர்கள் வந்தேறிகள் அவர்கள் பூர்வகுடிகளான பறையர்களை அடிமைபடுத்திவிட்டனர் என்ற ஸ்டான்லி கருத்தை பார்த்தோம். இந்த பதிவில் பறையர்களும் வந்தேறிகளாக இருப்பதற்கான காரணங்களை ஆய்வோம்.

தீண்டாமையை பற்றி பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன/மறைக்கபடுகின்றன. அதற்க்கு என்ன காரணம் என தெரியவில்லை. யாரையோ காப்பாற்ற இது நடக்கின்றது. சில நேரங்களில் உண்மை கசக்கும். அதனால் அதை மறைக்க முயலுகின்றனர்.  தீண்டாமை பற்றிய ஆதி காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்தால் அதை அழித்து விட வேண்டும் என்று  கல்வெட்டு துறைக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி காலம் காலமாக தீண்டாமை பற்றிய கல்வெட்டுக்கள் அழிக்கப்படுகின்றன.


இந்த பதிவில் ஒரு ஆதாரமற்ற கருத்தை முன் வைக்கிறேன். இதுவரை இவ்வாறு யாரும் சிந்தித்துள்ளார்களா இது சரியா தவறா என்றுகூட எனக்கு தெரியாது. ஆனால் இவ்வாறு இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதே அது.

மனுநீதியில் ஒரு வாசகம் வருகிறது. வர்ணங்கள் என்பது நான்குதான் ஐந்தாவது வர்ணத்திற்கு இடமில்லை என்பதுபோல ஒரு வாசகம்.

மனுநீதி இங்கு யாரோ சிலரை தன்னுடைய சட்ட புத்தகத்தில் அங்கீகரிக்க மறுக்கிறது. அது பறையர்களா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் இவர்கள் நான்கு வர்ணங்களுக்குள்ளும் வரவில்லை. எனவே இது அவர்களை பற்றியதாக இருக்கலாம் என்று யோசிக்க வேண்டியதுள்ளது.

மனுநீதி ஆரியர்களால் எழுதப்பட்டது எனில் அவர்கள்  வந்தேறிகளான திராவிடர்களை மட்டும்  அங்கீகரித்துவிட்டு  பூர்வகுடிகளான  பறையர்களை  அங்கீகரிக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த இடத்தில் இந்த நிலத்திற்கு அந்நியமானவர்களாக அவர்கள் இருக்க கூடும்.


இப்பொழுது சென்னையிலும் மேலும் பல பெரிய நகரங்களிலும்  நாம் காண்பது என்னவெனில் வேலைக்கு வெளியூரிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து பலரும் வருகின்றனர். இவர்களில் நிறைய பணம் உள்ளோர் வசதியாக நகரத்தின் மத்தியில் வாடகை வீட்டிலும்,பணம் இல்லாத ஏழைகள் தனியாக ஒதுக்குபுறமாக தங்கி அது ஒரு காலனியாக மாறிவிடுகிறது.

அந்த காலத்திலும் செழிப்புற்ற இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து மக்கள் பிழைப்புக்காக வந்திருக்க கூடும். அவர்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக தங்க வைத்திருக்கலாம். ஒவ்வொரு ஊரிலும் நீங்கள் பார்க்கலாம் பறையர்ககளுக்கு என்று தனியாக ஒதுக்குபுறமாக ஒரு தெரு இருக்கும். அங்குதான் அவர்கள் வசிப்பிடம்.

எனவே இன்றைய பறையர்கள் ஒரு காலத்தில் வெளிநாட்டிலிருந்து அல்லது வெளியிடங்களிலிருந்து வேலை செய்ய இங்கு வந்திருக்கலாம். இங்குள்ளவர்களுக்கு வேலை செய்ய ஒவ்வொரு ஊரிலும் அவர்களுக்கு என்று தங்க ஒதுக்குபுறமாக தங்க இடமளித்திருக்கலாம்.

இல்லை அவர்கள் பூர்வகுடிகள் தான் திராவிடர்கள்தான் அவர்களை அடிமைபடுத்திவிட்டனர் என்று ஸ்டான்லி என்னோடு வாதிடலாம். அடிமை படுத்தி இருந்தால் அவர்கள் ஒன்று திரண்டு திராவிடர்களுடன் சண்டையிட்டு இவர்களுக்கு என்று ஒரு நிலத்தை கைப்பற்றி இருக்கலாம். அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை (அல்லது ஆவணப்படுத்தப்படவில்லையா?).  மேலும்  பறையர்கள் ஏன்  இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கு புறத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு ஊரிலும் திராவிடர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர்களை சண்டையிட்டு ஒதுக்குபுறமாக தங்கவைத்து விட்டார்களா?


ஒவ்வொரு ஊரிலும் ஒரு பறையர் தெரு உள்ளது இது அடிமைப்படுத்தப்பட்டு ஏற்ப்பட்டிருக்க வாய்ப்புண்டா அல்லது அவர்களாகவே ஏற்றுக்கொண்டு அவ்வாறு தங்கிவிட்டார்களா என்று சிந்திக்க வேண்டும்.  அவர்கள் பூர்வகுடிகளாகவே இருந்தாலும் அடிமைபடுத்தித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமல்ல. மாறாக வசதியில்  ஒரு கூட்டத்தினர் முன்னேறும் மொழுது ஒரு சிலர் தானாகவே பின்தங்கிவிடுவதுண்டு. அவ்வாறு கூட அவர்கள் பின்தங்கி இருக்கலாம்.

இங்கு நான் கூற வருவது என்னவெனில் இன்று  பறையர் (தீண்டாமைக்கு உள்ளானவர்கள்) என்பவர்கள் அக்கால ஏழை மக்களே. அவர்களில் சிலர் பூர்வகுடிகளாகவும் சிலர் பிழைப்புக்காக வந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் அனைவரயும் அடிமைபடுத்தித்தான் வைத்திருந்தார்கள் என்பதைவிட அது ஏழை பணக்காரன் என்ற  வித்தியாசத்தால் உருவாகியிருக்கவேண்டும்.

இன்றும் பெரு  நகரங்களில் காலனி உருவாவது இந்த இரண்டுமுறையில் தான். அதாவது அந்த ஊரில் உள்ளவர்கள் கல்வியிலும் வசதியிலும் பின் தங்குவதால் தனித்து விடப்படுவது மறுபுறம் வெளியூரிலிருந்து வரும் ஏழைகளும் வசதியின்மையால் காலனியில் குடியேறுவது. இதில் மூன்றாவது ஒரு காரணமும் இருக்க வாய்ப்புண்டு. அது பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.


 வரலாற்றின் படியும் பரிணாமத்தின் அடிப்படையிலும் பூர்வகுடிகள் என்று யாரையும் கூற முடியாது. ஏன் ஏனில் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்துள்ளோம். எல்லோரும் ஒரே இடத்திலேதான் தோன்றியுள்ளோம். அது கிழக்கு ஆப்ரிக்கா என்று அறிவியலும் லெமூரியா கண்டம் என்று தமிழ்சார் அறிஞர்களும் கூறுகின்றனர்.

இவர்கள்  பூர்வகுடிகள் இவர்கள் வந்தேறிகள் என்பது என்னைப்பொருத்தவரை எந்த ஒரு இனத்திற்கும் எந்த ஒரு நிலப்பகுதிக்கும் பொருந்தாது. வேண்டும் என்றால் முதலில் குடியேறிவர்கள் என கூறி கொள்ளலாம். அப்படியே இருந்தாலும் ஒருவனுக்கு ஒருவன் சொந்தக்காரன் தானே? எந்த நிலப்பகுதியும் யாருக்கும் சொந்தம் இல்லையே?


குறிப்பு: இப்பதிவில் பறையர் என்பதை ஒரு சாதியை மட்டும் குறிக்காமல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த மக்களை குறிக்க பயன்படுத்தியுள்ளேன். தீண்டாமைக்கான சில காரணங்களை இப்பதிவில் தவிர்த்துள்ளேன்.  இப்பதிவின் நோக்கம் உண்மை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றுணர வேண்டும் என்பதே.  சாதியை ஒழிக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. எந்த ஒரு காரணத்திற்காகவும் சாதியை காட்டி காக்க அனுமதிக்க கூடாது, இட ஒதுக்கீடு உட்பட. அது  நம்மிடையே பிரிவினையையும் மோதலையும்  உண்டாக்குமே தவிர ஒற்றுமையை அல்ல.

வியாழன், 10 ஏப்ரல், 2014

மோடியின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா?


வதோதராவில் போட்டியிடும் மோடி தன்னுடைய மனைவியின் பெயர் jashodapen (யசோதாபென்?) என்ற குறிப்பிட்டுள்ளார்.  மனைவயின் சொத்து விவரங்களை அளிப்பது கட்டாயம் எனில் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். ஏன் எனில் தன்னுடைய மனைவியின்  சொத்து விவரம் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதுவரை வேட்புமனுவில் திருமணமானவரா இல்லையா என்ற இடத்தை வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி. ஆனால் இம்முறை அந்த இடத்தை பூர்த்தி செய்துள்ளார். இதற்க்கு கூட ஏதேனும் தேர்தல் விதிதான் காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பிரிந்து வாழ்வது அவரவர் தனிப்பட்ட உரிமை. மோடியும் அவரது மனைவியும் அவ்வாறுதான் பிரிந்து வாழ்கிறார்கள் . ஆனால் சட்டப்படி விவாகரத்து ஆகாததால் மோடிக்கு மனைவி உண்டு  அதை அவரும் ஒப்புக்கொண்டுளார். எனவே மனைவியின் சொத்தை கணக்கில் காட்டாததால் முறைப்படி அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். என்ன நடக்கின்றது என பார்ப்போம்.

குறிப்பு: மனைவியின் சொத்து விவரத்தையும் காட்ட வேண்டும் என்றே விதி உள்ளதாக அறிகிறேன். அப்படி ஒரு விதி இல்லையென்றால் மோடியின் வேட்புமனுவை நிராகரிக்க இயலாது என்பதை ஏற்கிறேன். இதற்க்கு சட்டம் பதில் சொல்லும் என நினைக்கின்றேன்.

புதன், 2 ஏப்ரல், 2014

நீங்கள் ஓட்டு போடும் கட்சி வெற்றி பெறுமா?

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பல முனை போட்டி நிலவுகின்றது. இதில் யாருக்கு எவ்வளவு தொகுதி  கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எந்த ஒரு கருத்து கணிப்பும் உண்மையாகாது என்றே தோன்றுகிறது.

அதிமுக அதிக ஒட்டு வங்கியை வைத்துள்ளது. அந்த தைரியத்தில் தான் அது தனியாக களத்தில் இறங்கியுள்ளது.   மோடி அலை அதிமுகவை கொஞ்சம் பாதிக்கவே செய்யும். அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருந்தால் நாற்பதும் இவர்களுக்கே கிடைத்திருக்க கூடும்.

திமுகவும் அதிமுகவிற்கு இணையாக ஒட்டு வங்கி வைத்துள்ளது. அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் பிரிவதால் அது நிச்சயமாக திமுகவிற்கு சாதகமாக அமையாது.

பாஜக கூட்டணியை குறைத்து மதிப்பிடுவதற்க்கில்லை. மோடி அலை என்பது நிஜம். ஆனால் அது எத்தனை ஓட்டுக்களை அல்லது தொகுதிகளை கைப்பற்றும் என்பது யாருக்கும் தெரியாது.

காங்,இடதுசாரி, ஆப் அனைத்துக்கும் பெரிய ஆப்புதான்.

இருப்பினும் நீங்கள் ஒட்டு போடும் கட்சி வெல்லுமா இல்லையா என்பதை நீங்களே தெரிந்து கொள்ள ஒரு சிறிய  கருத்து கணிப்பு இங்கே. மேலே வலது பக்கம் உங்களது வாக்கை தவறாமல் செலுத்துங்கள். சில நாட்களில் உங்கள் கட்சியின்  நிலைமை இங்கே உறுதி செய்யப்படலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...