வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 18 அக்டோபர், 2013

ஊடகங்கள் இசுலாமியத் தீவிரவாதம் என்றழைப்பது சரியா தவறா?

இசுலாமியத்  தீவிரவாதம் என்றழைப்பது  சரியா தவறா என்று உலகின் எந்த
மூலையில் விவாதம் நடந்தாலும்  அது சரியே என்று வாதிட்டு என்னால் வெல்ல முடியும். ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

உலகில் உயிரோடு இருப்பவர்கள் முஸ்லிம்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
அப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் மதம் மாற்றப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்று குண்டு வைப்பவர்கள் தீவிரவாதிகள்,மதப் பிரச்சாரம்
செய்பவர்கள் மதவாதிகள். இப்படி செய்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதனோடு எந்த விதத்திலும் தொடர்பு
கொள்ளாமல் அமைதியாக வாழ்கிறார்கள்,அமைதியை விரும்புகிறார்கள். ஊடகங்கள்
இசுலாமியத் தீவிரவாதம் எனும் பொழுது இந்த பெரும்பாலான முஸ்லிம்களையும்
இது கடுமையாக பாதிக்கும்.

என்னடா நம்ம மதத்தை தீவிரவாதம் என்கிறார்கள், நம்மையும் தீவிரவாதியை பார்ப்பது போல பார்க்கிறார்கள் என்று ஒருவனின் மனது  பல இன்னல்களுக்கு உள்ளாகும். ஒரு கட்டத்தில் ஏன் நான் தீவிரவாதி ஆக கூடாது என்று  எண்ண ஆரம்பிக்கலாம்.

எனவே இசுலாமியத்  தீவிரவாதம் என்ற சொல்லை இனி ஊடகங்களும், யாரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.

முஸ்லீம்களில் சிலர் தீவிரவாதிகளாக இருப்பது உண்மை. இவர்களை, இவர்கள் செய்யும் செயலை எவ்வாறு  அழைப்பது என்ற கேள்வி எழுகிறது. குரானில் ஜிகாத் என்று கூறப்படும் ஒரு விடயத்தை மனதில் வைத்துத்தான் இவர்கள் கொடிய செயல்களில்  டுபடுகிறார்கள். எனவே இந்த மாதிரி குற்றங்களை, குற்றம் புரிபவர்களை ஜிகாத் தீவிரவாதம்,ஜிகாத் தீவிரவாதி என்று  அழைக்கலாம். அல்லது வேறு ஒரு சொல்லை
பயன்படுத்தாலாம்.

தயவு செய்து மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் துன்புறுத்த வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

காங்கிரசுக்கும், திராவிட கட்சிகளுக்கும் ஞானி சொம்பு தூக்காமல் திருந்துவாரா?


தன்னுடைய சமீபத்திய கட்டுரையில் ராமதாசும் மணியனும் எப்பொழுது திருந்துவார்கள்  என்று ஞானி கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு என்ன சந்தேகம் எனில் இவர் காங்கிரசுக்கும் திராவிட கட்சிகளுக்கும், கம்யுநிச தோழர்களுக்கும் மறைமுகமாக சொம்பு தூக்காமல் திருந்துவாரா என்பதே.

ரமாதாசும் தமிழருவி மணியனும் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.ஞானி என்ன செய்கிறார் என்பதை முதலில் அவர் அறிகின்றாரா  என்பதே தெரியவில்லை.

சாதி ரீதியில் ராமதாசும் மத ரீதியில் மோடியும் வேண்டாம் என்கிறார் ஞானி. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

சரி இவர்களுக்கு மாற்றாக அவர் யாரை வழிமொழிகிறார் என்பதே இங்கே சிக்கல்.

மத்தியில் இமாலய ஊழலில் திளைக்கும் காங்கிரசை இவர் ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் தான் இவருடைய சிவப்பு சட்டை தோழர்களும் ஆட்சிக்கு வரமுடியும். இதனால் அவர் மோடியை எதிர்க்கிறாரா?

இல்லை தமது இடதுசாரி கட்சிகளுக்கு மூன்றாவது அணி அமைக்க முயல்கிறாரா என தெரியவில்லை.

ஆண்டவனுக்கு அடிமை என்பது மதங்களின் கூற்று. அரசாங்கத்திற்கு அடிமை என்பது இடதுசாரிகளின் மறைமுக கூற்று.
எனவே இடதுசாரிகளின் கொள்கைகளும் எனக்கு ஏற்ப்புடையது அல்ல.

தமிழகத்தில் சாதிக் கட்சி நடத்தும் ராமதாசு வேண்டாம் என்கிறார்.இவர் மட்டும்தான் இவர் கண்ணுக்கு தெரிவார். ஆனால் இன அரசியல் செய்த,செய்யும் திராவிட கட்சிகள் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சாதி,மத கட்சிகள் வேண்டாம் என்பதே என்னுடைய நிலைப்பாடும். இவைகளுக்கு  மாற்றாக யாருக்கு ஒட்டு போடுவது என்பதையும் ஞானி கூறினால் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஒருவேளை எல்லா மக்களும் நோட்டா என்ற தோட்டாவை  மட்டும்  பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ என்னவோ.

நடைமுறையில் இருக்கும் எந்த சித்தாந்தமும் தற்போதைய உலக  சூழலுக்கு ஏற்ப்புடையதல்ல.

சரி வேறு எந்த சித்தாந்தம் தேவை என்பதை நான் சொல்லியா தெரியவேண்டும்.


திங்கள், 7 அக்டோபர், 2013

பெரியாரும் ராமதாசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?


பெரியாரின் செய்கையும் ராமதாசின் செய்கையும் ஒன்று போலவே தெரிகிறது.பெரியார் என்ன முட்டாள்தனத்தை செய்தாரோ அதேபோல ஒரு முட்டாள்தனத்தைத் தான் ராமதாசும் செய்கிறார்.

பெரியார் பார்பனர்கள் எனும் இனத்திற்கு எதிராக செயல்பட்டார்.
ராமதாசு தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்.

இருவர் செய்கையிலும் சிலருக்கு நன்மை சிலருக்கு தீமை. இருவர் செய்கையையும் நான் ஆதரிக்கவில்லை.

பார்பனர்களிடம் தவறு இருந்திருந்தால் தவறு செய்யாத நல்ல பார்ப்பனர்களை அரவணைத்துக் கொண்டு அவர்களைக்கொண்டே பார்ப்பனர்களை திருத்த முயன்றிருக்க வேண்டும். மாறாக அவர் பார்ப்பன இனத்தையே அழிக்கும் எண்ணம்  கொண்டதாக தெரிகிறது.ஒட்டுமொத்த இனத்தையும் எதிரியாக சித்தரித்துள்ளார்.

இதேபோலத்தான் தலித்துகளில் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஒட்டுமொத்த தலித்துகளுமே தவறு செய்வதுபோல ஒரு பிம்பத்தை ராமதாசு ஏற்ப்படுத்துகிறார்.

எல்லா ஜாதிகளிலும் மதங்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றார்கள் அதே நேரத்தில் எல்லா ஜாதிகளிலும் மதங்களிலும் தவறு செய்யாதவர்களும் உள்ளார்கள். எனவே  ஒட்டுமொத்த இனத்திற்கு, ஜாதிக்கு,மதத்திற்கு எதிராக மக்களை திரட்டுவது என்பது மகா முட்டாள்தனம். அது மனிதத்திற்கு எதிரானது.

தவறை திருத்துவதுதான் சீர்திருத்தமே தவிர தவறு தவறு செய்பவர்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எதிரியாக பார்ப்பது அல்ல. சீர்திருத்தவாதிகளாக விரும்புபவர்கள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தவறு செய்பவர்களை எப்படி மனிதர்களாக மாற்றுவது என்று ஆராய்வதே,  சிந்திப்பதே, அந்த வழியில் செயல்படுவதே உண்மையான மனிதம்.

ராமதாசை எதிர்மறையாக நான் பெரியாருடன் ஒப்பிட்டேன் ஆனால் அவரை நேர்மறையாக ஒப்பிட்டதே பல தலித்துகள்தான். பெரியாருக்கு அடுத்தபடியான நல்ல தலைவராக ராமதாசு சிலபலரால் பார்க்கப்பட்டுள்ளார் எனபது மறுக்க முடியாத உண்மை.

 தன்னுடைய  தவறை உணர்ந்து ராமதாசு தலித்துகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்காமல் தவறு செய்பவர்களுக்கு எதிராக மட்டும் மக்களை ஒன்றிணைத்து தவறு செய்பவர்களை திருத்துவார் எனில் அவரை மனிதம் போற்றும். இல்லையேல் சிலர் அவரை ஜாதி தலைவராகவும் பலர் ஜாதி வெறியராகவும் பார்ப்பர். முடிவு அவர் கையில்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பகுத்தறிவுக் குருடர்கள் எங்கே?

சாதிக்கொரு சுடுகாடு ஏன் என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதிகள் மதத்திற்க்கொரு சுடுகாடு கேட்கப் படும் பொழுதும், ஒதுக்கப்படும் பொழுதும் அதையொட்டி பிரச்சனை நடக்கும் பொழுதும் ஒன்றுமே,நடக்காதது போல் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருப்பது ஏன்?

இந்துமதம் என்றால் மட்டும்தான் பகுத்தறிவு வேலை செய்யும் பிற மதங்கள் என்றால் மூளை மழுங்கிவிடுமோ.?
மதக்கலவரம் வரும்வரை காத்திருந்து அதைவைத்து ஒட்டு அறுவடை செய்ய பகுத்தறிவுவாத , கம்யூநிச, தலித்திய கட்சிகள் காத்திருப்பதாகவே தெரிகிறது.
ஜாதியை  ஒழிக்க பாடுபடுவதாக கூறும் இவர்கள் மதங்களுக்கு துணைபோவதன் மூலம் இவர்களின் உண்மையான முகத்திரை கிழிகிறது.

இவர்கள் அறியாமையில் இருந்தால் உண்மையில் மதங்களை ஒழிக்கவும் பாடுபடவேண்டும். செய்வார்களா?.

 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

நம்மை நாமே படைத்துக் கொண்டோமோ? பதிவு 2

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதில் இருந்து இப்பதிவை தொடங்குவோம்.

சூன்யம்    என்றும்  பரிபூரணம்       என்றும் அழைக்கப்படும்    ஒன்று    முதலில்  இருந்தது என்றும் சொல்லலாம்  அல்லது இல்லாமல் இருந்தது என்றும் சொல்லலாம்.

அந்த ஒன்றும் இல்லாத  அல்லது முழுமையான  ஒன்றுக்கு  ஆசை வருகிறது. அந்த ஆசையின் விளைவாக வானாகி, வாயுவாகி, நெருப்பாகி, நீராகி, மண்ணாகி, மனிதனாகி நிற்கிறோம்.

நாம் எந்த நிலையில் தொடங்கினோமோ    மீண்டும்    அந்த ஒன்றும் இல்லாத அல்லது  முழுமையான நிலையை அடைவதே நமது   இறுதி இலக்கு . நமது பிறப்பின் நோக்கமும் அதுதான். இடையிடையே சில இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம்  அவ்வளவே.

இதை புரிந்து கொண்டு பிறப்பறுக்க துணை புரிவதில் ஒன்று இன்று ஆன்மிகம் எனப்படுகிறது. நாளை இது அறிவியல் எனப்படும்.

துன்பப்படுவோம் என்று தெரிந்தே ஒரு செயலை நாம் செய்வோமா என்றால் செய்வோம் என்பது தான் உண்மை. ஏன் எனில் துன்பத்தில் இன்பமும் உண்டு...இன்பத்தில் துன்பமும் உண்டு.

ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள  விரும்புகிறாள்   , குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்காக தவமாய் தவமிருக்கிறாள்...கருத்தரித்த  நாள் முதல் அவளுக்கு இன்பம் மற்றும் துன்பம். குழந்தையை சுமக்கிறாள், பெற்றெடுக்கிறாள்.   உயிரையே பணையம் வைப்பது போல் தான் இது.
பிறகு   அந்த குழந்தை வளர்க்க   எவ்வளவு சிரமப்படுகிறாள். அவளுக்கு இது  எல்லாம்  தெரியாதது  அல்ல  இருப்பினும்  விரும்பியே  இதை செய்கிறாள்.

சிலர் உண்டு ஏற்க்கனவே பார்த்த  படங்களை திரும்பி பார்ப்பார்கள். அது அவர்கள் மனதை பாரமாக்கும் , கண்ணீர் ததும்பும் ஆனால் மீண்டும் அந்த காட்சியை காண்பார்கள். அதிலும் அவர்களுக்கு ஒரு ஆனந்தம்.

அட  அது வெறும் சினிமாதானே இதற்க்கு ஏன் அழ வேண்டும்? அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் பொழுது ஏன் நாமும் மகிழ்ச்சியாக இருக்க  வேண்டும்?. நகைச்சுவை  ஏற்ப்படுத்தினால்  ஏன் சிரிக்க வேண்டும்?

ஏன் எனில் அந்த சினிமாவோடு நாம் ஒன்றிவிடுகிறோம். சினிமா எனும் மாயையோடு ஐக்கியமாகிவிடுகிறோம்.

அதுபோலத்தான் சக்தி மிகுந்த நாம் பிறப்பெடுத்தாலும் இந்த உலக மாயையில் சிக்குண்டு இன்பப்படுகிறோம் துன்ப்படுகிறோம். நாம் யார் என்பதை  மாயையால் மறந்து விடுகிறோம். நாம் செல்ல வேண்டிய இடத்தை மறந்துவிட்டு  மாயையில், பிறவி சுழற்சியில் மாட்டிக் கொள்கிறோம்.

 நாம் மீண்டும் தொடக்கமான அந்த ஒன்றும் இல்லாத அல்லது முழுமையான் நிலையை அடையவேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் அடைகிறோமோ அவ்வளவு சீக்கிரம்  மாயையான இன்ப துன்பத்தில் இருந்து விடுதலை. இல்லை எனில் நாம் எதிலிருந்து வந்தோமோ அதுவே ஆட்டத்தை முடித்துக்கொள்வோம் என்று என்னும் வரை மாயை உலகம் உங்களுக்கு இன்பம் என்று நினைத்தால்  அப்படியே  இருந்து விடலாம்  :)

சென்ற பதிவில் நண்பர்கள் சிலர் பதிவு கொஞ்சம் புரிந்து கொஞ்சம் புரியாமல் உள்ளது என்றனர். முழுவதும் குழப்பிவிடலாம் என்று இந்த பதிவு :)

அடுத்த பதிவில் கொலை, கொள்ளை, வன்புணர்வுகளுக்கும்     ஒருவரின்  ஆசைக்கும் என்ன சம்பந்தம்  என்று அலசுவோம்.

பின்குறிப்பு: இந்த பதிவில் இருக்கும் கருத்துக்கள் அத்வைத சித்தாந்தத்தின்  தாக்கத்தாலும் எனது புரிதலாலும் ஏற்ப்பட்டவை.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நம்மை நாமே படைத்துக் கொண்டோமோ?

நம்மை வேறு யாரும் படைக்கவில்லை நாம்தான் படைத்துக்கொண்டோம் என்றால் உங்களில் எத்தனை பேர் நம்புவீர்கள்  என தெரியவில்லை.
ஆனால் உண்மை இதுவாக இருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

என்னை நான் படைத்துக்கொண்டால்,அவ்வளவு சக்தி எனக்கு இருந்தால்  நான் ஏன் இவ்வளவு துன்பங்களை  அனுபவிக்கின்றேன்/அனுபவிக்கப்போகிறேன்   என்று நீங்கள் கேட்கலாம்.

அதற்க்கான பதிலும் உங்களிடம்தான் உள்ளது.
பிறப்பு என்பது துன்பத்தை தரும்  என்று உணர்ந்தே தான் நாம் பிறப்பெடுத்தோம்.  நான் அப்படி இல்லை என்று உங்களால் மறுக்க முடியாது.

உங்கள்  வாழ்வின் துயரத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் இந்த கருத்தியலோடு நீங்கள் ஒத்துப்போகலாம். இல்லையென்றால் மறுப்பீர்கள்.

நீங்கள் சற்று ஆழமாக,பொறுமையாக   சிந்தித்து பாருங்கள். நீங்கள் எதை உங்களுக்கு பிடிக்கும் என்று செய்கிறீர்களோ/நினைக்கிறீர்களோ  அதனாலாயே உங்களுக்கு பிரச்சனையும் வரும்.

உங்களுக்கு இனிப்பு பிடிக்கும் நிறைய  உண்டால் பல வியாதிகள்.
வேலைக்கு சென்றால் உங்களது துன்பம் நீங்கிவிடும் என்று நினைக்கிறீர்கள்...ஆனால் அங்கேயும் துன்பம்.

பணம் நிறைய கிடைத்தால் இன்பம் என நினைக்கின்றீர்கள் ஆனால் உங்களின் பணத்தாலும் உங்களுக்கு துன்பம்.

காதலி கிடைத்தால், திருமணம் நடந்தால்  இன்பம் என நினைக்கின்றீர்கள் ஆனால் அதனாலும் துன்பம்.

குழந்தை பிறந்தால் இன்பம் என நினைக்கின்றீர்கள் பிறகு அதனாலும் துன்பம்.


எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும் இது உங்களுக்கு பொருந்தும்.

சிறு  வயதில் சீக்கிரம்  வளரவேண்டும்  என்று நினைப்பீர்கள்  வளர்ந்து விட்டால் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என்று நினைப்பீர்கள்.

வாலிபத்தில் ஆணவத்தில் திரிந்துவிட்டு வயதானவுடன்  தான் நடக்க,உபாதைகள் கழிக்க கூட பிறர் துணை தேவைப்படுகிறது....என்னே கொடுமை?

இன்பம் என்பது துன்பத்தில் தான் முடியும். இதனால் தான் புத்தன் ஆசையே அனைத்துக்கும் காரணம் என்றானோ?

ஆசைதான் நம் பிறப்புக்கு காரணம்.

உன் பிறப்புக்கு காரணம் உன் பெற்றோர்கள் ஆசை மட்டும் அல்ல உன் ஆசையும் தான். உன் குழந்தையின் பிறப்புக்கு காரணம் உன் ஆசை மட்டும் அல்ல அவன் ஆசையும் தான்.

நான்,நீ, நாம், அவன், அவள், அது என எல்லாவற்றின் மூலமும் ஒன்று என்று புரியும்பொழுது,உணரும்பொழுது  நம்மை படைத்தது நாமே என்பதும் புரியலாம்,உணரலாம். எனக்கும்தான்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

காதல் சரி... கள்ளக்காதல் சரியா தவறா?

பல பகுத்தறிவுப்புலிகள், பெண் விடுதலைக்கு பாடுபடுபவர்கள்,
சாதியை ஒழிப்பவர்கள், முற்ப்போக்குவாதிகள்  என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்    காதல் தவறு இல்லை என்று சமீபகாலமாக கூறி வருகிறார்கள்.

ஆணோ பெண்ணோ 18 வயதை அடைந்துவிட்டால் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம்  அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கின்றனர். 

எனக்கு ஒரு சந்தேகம் இதை அந்த போராளிகள் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஒருவன் ஏற்க்கனவே திருமணமான பெண்ணை துரத்தி துரத்தி 
காதலித்து அவள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறான். 
எனக்கு கணவனும் வேண்டாம் குழந்தையும் வேண்டாம் காதலன் தான் வேண்டும்  என்கிறாள் அந்தப்பெண்.இப்பொழுது அந்த பெண்ணின் கணவன் மற்றும் குழந்தைகள் கதி என்ன.? சம்பீபத்தில் இப்படி ஒரு செய்தியை படித்ததாக ஞாபகம். (இப்படி காதல்,கள்ளக்காதல் பற்றி பல கேள்விகளை நீங்களே கேட்டுப்பார்க்கலாம்)

சமூகப்போராளிகளே உங்கள் தீர்ப்பு என்ன?

காதல் சரி என்று பிரச்சாரம் செய்பவர்கள் கள்ளக்காதலுக்கும் நாளைக்கு பிரச்சாரம் செய்வார்களா?


நேற்று காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இன்று அதற்க்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள் .

கள்ளக்காதல் இன்று ஏற்றுக்கொள்ளப் படவில்லை நாளை ஆதரவு  தெரிவிப்பீர்களா?

ஆண்- ஆண் , பெண் - பெண் உறவு மக்களிடையே ஆதரவு இல்லாவிட்டாலும் அரசாங்கம் அங்கீகரித்து விட்டது. இதையும் நாளை ஆதரிப்பீர்களா?


மனிதர்கள் -மிருகங்கள் உறவையும் நீங்கள் நாளை  ஆதரிப்பீர்களா? 

நீங்கள் எந்த பாதையில் செல்கிறீர்கள் - மனித சமுதாயத்தை எப்படி வழி நடத்தி செல்கிறீர்கள்  என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இது நடந்தே தீரும்.இவை எல்லாமே முன்னொரு காலத்தில் நடந்தவைதான்.இவை அனைத்திற்கும் தாங்கள் தயாரா?

  
என்னுடைய நிலைப்பாடு.............?

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

உயிர் வேறு ஆன்மா வேறா?

சமீபத்தில் சகோ சார்வாகன் தளத்தில்  ஆன்மா வேறு உயிர் வேறு என்ற பொருளில் விவாதம் நடந்தது. இது பற்றி என்னுடைய கருத்தை பதிவு செய்யவே இப்பதிவு.

உயிர் வேறு ஆன்மா வேறு என்று சிலர் நினைக்கின்றார்கள். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. உயிர் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றையே குறிப்பதாக நான் நினைக்கின்றேன்.

உயிர் என்பது இன்றைய மருத்துவ ,அறிவியல்,நடைமுறை  சொல். ஆன்மா என்பது பண்டைய அறிவியல் சொல்.

ஆன்மிகம் என்பது ஆன்மாவை (உயிர்) பற்றிய  படிப்பு,அறிவியல்,தேடல்.

ஆன்மிகம் என்பது தான் யார் (அதாவது உயிர் =ஆன்மா,இறைவன்  என்பது என்ன)  என்று அறிய முற்ப்படும் ஒரு தேடல். பக்தி வேறு..ஆன்மிகம் வேறு. பக்தி ஆன்மீகத்திற்கு வழி வகுக்கலாம்.

ஆன்மாவை சிலர் மனதோடும்,நினைவுகளோடும் தொடர்பு  படுத்தி குழப்பிக்கொள்கின்றனர்.

ஆன்மா=உயிர் என்பதே பிரதானம். இதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பது மனம்...பிறகு புத்திசாலித்தனம்.

உயிர் என்பதும் மனம் என்பதும் புத்திசாலித்தனம் என்பதும் வேறு வேறானாவை.

 உயிர்=ஆன்மா இல்லாமல் மனம் இல்லை. மனம் இல்லாமல் அறிவுக்கூர்மை இல்லை.

ஆன்மா=உயிர் இல்லாமல் உடல் இயக்கம் பெறுவதில்லை.

பிணத்திற்கு இந்த மூன்றும்(ஆன்மா =உயிர்,மனம்,அறிவு) இருக்காது.எதுவும் இருக்காது...

உடல் இல்லாமல் இந்த மூன்றும் பிறருக்கு தெரிவதில்லை.


அறிவியலில் சூரியன் இல்லாமல் எந்த கோள்களும் இயங்க முடியாது,எந்த உயிரும் உயிர் வாழ முடியாது. 


அதுபோலத்தான் ஆன்மா =உயிர் இல்லாமல் யாரும் எதுவும் உயிர் வாழ்வதில்லை.

சந்திரன் சூரியனை சார்ந்தே ஒளி அளிக்கின்றது. அதுபோலத்தான் மனமும் ஆன்மாவை சார்ந்தே உள்ளது.

புத்தி=அறிவுக்கூர்மை என்பது  மனதோடும் ஆன்மாவோடும்  தொடர்புடையது.


உயிர் வாழ் உயிரினங்களுக்கு உயிர் உள்ளது என்பதும், எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உள்ளது என்பதும் ஒருவகையில் ஒரே சொற்றொடரே.

====================================================
எந்த உயிர்களையும் துன்புறுத்தாமல் வாழவேண்டும் என்ற கருத்தியலைத்தான்  வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றார். உலகில் இதை மிஞ்சிய சித்தாந்தம்  ஏதும் இல்லை.
இந்திய மதங்களின் ஆணிவேரே இந்த கொள்கைதான்.
----------------------------------------------------------------------------------------------------------
உங்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்?

ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.
சித்திரையில் குழந்தை பிறந்தால் சூரியன் ஜோதிடப்படி உச்சத்தில் இருப்பான்.

சூரியன் உச்சத்தில் இருந்தால் சீக்கிரம் தலைமை பதவி கிடைக்கும் என்பது ஒரு ஜோதிட விதி. ஒரு குடும்பத்தின் தலைவன் என்பவன் கணவன்/அப்பா . ஆனால் குழந்தை சீக்கிரம் தலைமை பதவி அடைய வேண்டும் எனில் என்ன நடக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டுமா?

சித்திரையில் "முதல்" குழந்தை பிறந்தால்  அப்பனை காவு வாங்கிவிடுவான்.அப்பனுக்கு விரைவான முன்னேற்றத்தையும் அளித்து அப்புறம் தூக்கிடுவான். குழந்தை விரைவில் குடும்பத் தலைவனாகிவிடும். இதனால் தான்ஆடியில் புதுமண  தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.
எல்லோருக்கும் இப்படி ஆகுமா என்றால் இல்லை என்பதே எனது பதில். 

மற்ற  அமைப்புகளை பொறுத்து  சிலருக்கு  உறவில்  தீத சிக்கல், பிரிய நேரிடுதல் போன்றவை நடக்கும்.

 நான் பார்த்த ஒரு ஜாதகத்தோடு இது பொருந்தியது.

சனி, 27 ஜூலை, 2013

ஏன் இந்த ஆரிய திராவிட, இந்து இசுலாம், தலீத் சாதி இந்து அரசியல்?


நம்மில் பல பிரிவுகளை உண்டாக்கி நம்மை நாம் அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது கூட தெரியாத தலைவர்களையும் மக்களையும் எண்ணி எமக்கு வேதனையே மிஞ்சுகிறது.

ஆரிய  -திராவிட அரசியல் செய்து  பிராமணர்களின் மனதை புண்ணாக்கி விட்டோம், இன்றும் இது தொடர்கிறது .

இந்து- இசுலாம் அரசியல் செய்து இந்தியாவை உடைத்து விட்டோம், இப்பொழுது இது வேறு உருவம் எடுக்கின்றது.இந்து இசுலாம் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்து விட்டோம்.

தலீத் -சாதி இந்து அரசியல் செய்து இப்பொழுது இரு சமுதாயத்தினர் மனதிலும்  புண்ணை விதைக்கின்றோம்.

அடுத்து என்ன செய்யலாம்?
கவுண்டர்-உடையார் -படையாட்சி-கள்ளர்-மறவர்-தேவர்-பிள்ளை அரசியல் செய்வோமா?
தேவேந்திர குல வேளாளர்-பள்ளர்- பறையர்-அருந்ததியர் அரசியல் செய்வோமா?
சொல்லுங்கள் என் சொந்தங்களே எந்த மாதிரி அரசியல் அடுத்தது நாம் செய்யலாம்?
நம்மை நாமே அழித்துக்கொள்வோம் வாருங்கள்.

நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா?
ஒன்று: ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  ஒட்டு மொத்த சமுதாயத்தையும் நாம் தவறாக பார்க்கிறோம்.

இரண்டு:ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  அச்சமூகத்தை சார்ந்த பலரும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.

இதை மாற்றி மாற்றி நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
இது ஒரு கொடிய குற்றம். இதுவே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.
எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்  என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.


ஜாதி,மதங்கள் இருக்கும் வரை அதனால் நமக்கு பிரச்சனை இருக்கும்.
கேட்டால்  என் ஜாதிக்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள். 
என் மதத்திற்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள்.

இன்று ஜாதியை ஒழிக்கிறேன் பேர்வழிகள் சில மதங்களை ஆதரித்தும் சில மதங்களை எதிர்த்துமே செயல்படுகிறார்கள்.

ஜாதிக்கொரு சுடுகாட்டை எதிர்க்க தெரிந்தவர்களுக்கு மதத்திற்கு ஒரு சுடுகாடு ஏன்? என்ற பகுத்தறிவு கேள்வி எழாமல் போனது ஏன்?

ஜாதி கலப்பு திருமணம் பற்றி பேசுபவர்கள், மதங்களுக்குள் கலப்பு மணம் பற்றி பேச மறுப்பது ஏன்?

ஜாதியை விட மிகவும் கொடுமையான மதத்தை இவர்கள் எப்படி ஆதரிக்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.

ஜாதியை விட மதம் பன்மடங்கு கொடுமையானது என்ற தொலை நோக்கு பார்வை நம்மிடம் இல்லை .காரல் மார்க்ஸ் பெயரால் கட்சி  நடுத்துபவர்களுக்கு கூட இது தெரியாமல் போன மாயம் என்ன?

ஜாதியையும் மதத்தையும் ஒழிப்போம் என்று கூற இங்கே எந்த தலைவருக்கும் மனதில்லை. ஏன் என்றால் அப்படி கூறினால் அரசியல் செய்யமுடியாதே.

ஜாதியையும் மதத்தையும் காட்டாமல் இட ஒதுக்கீட்டிற்கு சரியான முறையை கண்டுபிடிக்க வேண்டும்.முடியாததில்லை... முயற்சிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு ஜாதி,மத  மக்களுக்காகவும் போராட நினைக்கும் தலைவர்களின்  எண்ணம் நல்லதுதான். ஆனால் ஒரு ஜாதி,மத  மக்கள் நலுனுக்கான போராட்டத்தில் பிற ஜாதி,மத மக்களை நாம் எதிரியாக்கி விடுகிறோம்  
என்பதை இவர்கள் மறந்துவிடக்  கூடாது.

நம் சமுதாய நலனும் பேண வேண்டும் அதை பிற   சமூதாயத்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களையும் இதில் ஈடுபடுத்தி செயலாற்ற வேண்டும். இது முடியாததல்ல முடியும்.

இதைவிட சிறப்பான வழி அனைவரயும் மனிதனாக பார்ப்பதுதான்.
மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர ஒருவனது ஜாதி மதத்தை பார்க்க கூடாது என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும்.என் ஜாதி,என் இனம்,என் மதம் என்று பாராமல் அனைவரயும் மக்கள் என்ற பொதுப் பார்வையில் பார்த்து  திட்டங்களை நாம் வகுக்க வேண்டும,.  ஜாதி மதங்கள்  இருந்ததற்கான தடம் கூட தெரியாமல்  இவற்றை அழித்தொழிக்க வேண்டும்.

ஜாதியை நேசிப்பவர்களும்,மதத்தை நேசிப்பவர்களும்,அறியாமையில் இருப்பவர்களும்  இதற்க்கு முட்டு கட்டை போடுவார்கள் தான். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.புரிதலே மனிதத்தின் ஆணிவேர்.

எல்லா ஜாதி மதங்களிலும் ஏழைகளும் உள்ளனர் பணக்காரர்களும் உள்ளனர். எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்.  அனைத்து ஜாதி மத ஏழை மக்களுக்காகவும் நாம் பாடுபடவேண்டும்.அனைத்து ஜாதி மத நல்லவர்களையும் நாம் கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.கெட்டவர்களை சீர்திருத்த வேண்டும்.  இதை செய்தால் இந்தியா,உலகம்  அமைதியாக இருக்கும் இல்லையேல்.................
Related Posts Plugin for WordPress, Blogger...