வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 2 ஜனவரி, 2013

இறைவனுக்கும் ஒளிக்கும் என்ன சம்பந்தம்?


எல்லா மதங்களிலும் ஒளியை இறைவனோடு தொடர்பு படுத்தியிருப்பார்கள். இந்து,கிருத்துவம், இசுலாம் என்று எதுவும் விதிவிலக்கல்ல.

இறைமறுப்பாளராக கருதப்படும் புத்தர்,ஓஷோ  போன்றவர்களும் ஒளியை பற்றி குறிப்பிடுகின்றனர். புத்தரின் இறுதி செய்தியே ஒளி பற்றித்தான். வள்ளலாரும்  'அருட்பெருஞ்சோதி' என்று ஒளியைப்பற்றித்தான் கூறுகிறார்.

இந்த ஒளி என்பவற்றை பலரும் புற ஒளியாக கருதுகின்றனர் அல்லது அறியாமை எனும் இருளை அகற்றும் அறிவாக  பார்க்கின்றனர் அல்லது இந்த இறைவன்கள்,மதங்கள்,தூதர்கள்,யோகிகள் -சித்தர்கள் உலகிற்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்ற பொருளிலே ஒளியை பார்க்கின்றனர். 

ஆனால் இங்கே ஒளி என்பது அக ஒளியையே குறிக்கும்.  அதாவது புருவமத்தி வழியாகவோ தலை உச்சியின் வழியாகவோ காணும் ஒளியைத்தான் குறிக்கின்றது. இந்த ஒளி தரும் அறிவே உண்மையான அறிவு. அதுவே மெய்ஞானம். மெய்யில்  (உடலில்) இருந்து இந்த அறிவை பெறுவதால் இது மெய்ஞானம் எனப்படுகிறது.

கண்களால்தானே ஒளியை காண முடியும் அது எப்படி புருவமத்தியில் ஒளியைக்கான முடியும் என்று பலர் கேட்கலாம். ஆனால் தியானத்தின் மூலம் இது சாத்தியமே.

கண் தெரியாதவர்கள் புற ஒளியைக்கான முடியாது. அவர்களுக்கு ஒளியை பற்றி புரிய வைக்கவும் முடியாது. அதுபோலத்தான் தியானம் செய்யாமல் அக ஒளியைக்கானமுடியாது. பிறருக்கு இதை சொல்லி புரிய வைப்பதும் கடினமாகிறது. 

இந்த அகஒளியை காணும் நிலையைத்தான் நெற்றிக்கண் திறத்தல் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஏன் நெற்றியில் விபூதி இடுகிறார்கள், ஏன் நெற்றியில் சிலுவை இடுகின்றனர்,ஏன் தொழுகையில்  நெற்றியை   அடிக்கடி தரையில் தொடுகின்றனர்  என்று சிந்தித்து பார்த்தால் இதன் பின்னணியில் இருக்கும் உண்மை புரியும்.

நமது சித்தர்கள், ஏசு, முகமது நபி, ஓஷோ, வள்ளலார்,அரவிந்தர், அன்னை  பார்த்த ஒளியை நீங்களும் பார்க்கவேண்டுமா?
தியானம் செய்யுங்கள். 

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.  –  (திருமந்திரம் – 619)

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

மதம் மனிதனுக்கா யானைக்கா? கும்கி


யானைக்கு பிடிக்கும் மதத்தைவிட மனிதனுக்கு பிடிக்கும் மதமே மிகவும் அபாயமானது என்று சொல்வதுதான் கும்கி.

காட்டு யானையை விரட்ட தயார்படுத்தப்படும் சிறப்பு யானைக்கு  பெயர் தான் கும்கி. காடுகளை நாம் அழித்து கொண்டிருந்தாள் காட்டு யானைகள் வீட்டிற்கு வரமால் எங்கு போகும்?

 ஒரு யானை (கொம்பன்) அப்படித்தான் அடிக்கடி ஊர் வயல்வெளிகளில் வந்து மக்களை துவம்சம் செய்து காட்டுக்கு சென்று விடும். அதை விரட்ட கும்கி யானை தேவைப்படுகிறது. கும்கி யானை நேரத்திற்கு கிடைக்காததால் சாதா யானையுடன் நாயகன் சும்மா அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரே இவரை தெய்வமாக பார்க்கிறது. இவருக்கு வேறு மதம் பிடிக்கிறது. கடைசியில் யானை மதம் வென்றதா? நாயகன் மதம் வென்றதா? கொம்பன் அழிக்கப்பட்டானா?  என்பதை திரையில் பார்க்கவும்.

படம் எனக்கு பிடித்திருந்தது. படம் முழுக்க இயற்க்கை காட்சிகள். தம்பி ராமையா பாதி படத்தை தாங்கி நிற்கிறார்.நல்ல நடிப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட நகைச்சுவை வசனங்களும் அருமை.
நாயகன் பிரபுவின் மகன். பாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார். தந்தங்களை பிடித்து அந்தரத்தில் நின்று யானையின் நெற்றியில் முத்தமிடும் காட்சி அருமையானது. அதில் உடற்பயற்சி கூட செய்யாலாமா? :)
 நாயகி கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா என்று சொல்ற மாதிரி. யானையை பார்த்து அவர் மிரளும் காட்சிகள் அருமை. 

பாடல்கள் படத்தோடு பொருத்தமாக உள்ளது.அதனால் தம் அடிக்க யாரும் போகவில்லை.

பிரபு சாலமன் இயக்கம் நன்று.  நாயகனை யானையில்  அமர்த்தி பின்புறத்திலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்களுடன் தன்னுடைய பெயரை போட்டுக்கொண்டுள்ளார். சினிமாத்தனம் என்றாலும் இயற்கையாக அது நன்றாகவே உள்ளது.யானை சண்டை நல்ல முயற்சி. இன்னும் சிறப்பாக எடுத்திருந்திருக்கலாம்.

இயல்பான,அருமையான  படத்தை கொடுத்ததற்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

மனிதனுக்கு எந்த மதம்  பிடித்திருந்தாலும் அது பெரும்பாலும் அனைவருக்கும்  தீமையையே தருகிறது.

பிற்சேர்க்கை: ஒரு தலைவனின் மனதில் ஏற்படுகின்ற மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது.அதற்க்கு ஒரு வலுவான காரணமும் தேவைப்படுகிறது. இந்தப்படத்தில் சமுதாயத்  தலைவனுக்கு அதற்க்கான காரணம் இருக்கின்றது. எனவே அவர் மனதில் மாற்றம் ஏற்ப்படுகிறது என்பதுபோல காட்சியை அமைத்திருக்கலாம். அது காலத்திற்கு ஏற்றார்போல இருந்திருக்கும்.

திங்கள், 10 டிசம்பர், 2012

கமல் என்ன முட்டாளா?

திரைத்துறையில் புத்திசாலியாக கருதப்படும் கமலின் அடுத்த திட்டம் வீட்டுக்குள் திரைப்படம். கமலின் திரைப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் திரையிடும் திட்டம் சில பல   எதிர்ப்புகளையும்,ஆதரவையும் பெற்றுள்ளது.


திட்டம்: திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு DTH (நேரடி தொலைகாட்சி?)  யில் படத்தை வெளியிடுவது.

நன்மைகள்:
1. ஒரே நேரத்தில் பலரையும் படம் பார்க்க வைக்கலாம்.
2. வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் உள்ளவர்கள் தமிழ் படத்தை உடனடியாக பார்க்கலாம்.
3. பலரும் ஒரே நேரத்தில் படம் பார்ப்பதால் படம் நன்றாக இல்லையென்றாலும் லாபத்தை ஈட்டிவிடும். (எதிர்காலத்தில்) இதுதான் இந்தத்தொழில்நுட்ப்பத்தின் மிகச்சிறந்த  வரப்பிரசாதம்,குர்பானி,அப்பம் :)
4.முதல் காட்சியை பெரும்பாலும் பெண்களால் பார்க்கமுடிவதில்லை. இனி பெண்களும் முதல் காட்சியை பார்க்கலாம்.

தீமைகள்:
1.எதிர்காலத்தில் திரையரங்கத்தொழில் பாதிக்கப்படும். நேரடி தொலைக்காட்சியில் முதலில் படம் பார்க்கலாம் என்றால் நமது தீவிர ரசிகர்கள் இதைத்தான் விரும்புவார்கள்.
2.திருட்டு vcdக்கள் நிறைய உருவாகும். தொலைக்காட்சியில் படம் பார்க்கும் வசதி உள்ளவர்கள் இதை வாங்க மாட்டார்கள்.
3. சிலர்  படத்தை பதிவு செய்து youtube இல் ஏற்ற வாய்ப்புகள் உண்டு. (பதிவு செய்ய முடியாத மாதிரி படத்தை ஒளிபரப்பினால் திருட்டு vcd,youtube பிரச்சனைகளை தவிர்க்கலாம்)

நன்மையா தீமையா?
1. (எதிர்காலத்தில்)இனி நடிகர்களுக்கு பாலபிஷேகம்,பீரபிஷேகம் இருக்காது :)
2.ரசிகர் மன்றம் கலையிழக்கும்.


திரையரங்கு உரிமையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டியது:
எந்த ஒரு தொழில்நுட்பமும் ஒரு தொழிலை பாதிக்கவே செய்யும். தொழில்நுட்பத்திற்கு தகுந்த மாதிரி தொழிலை மேம்படுத்திக்கொள்வது அல்லது மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இன்று தெருக்கூத்து என்பது அழிந்துவிட்டது. இதற்க்கு காரணம்  திரைப்படங்களும் திரையரங்குகளும் தான். அதுபோலத்தான் இதுவும். 
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனதில் வையுங்கள்.

திரையரங்குகளும் பாதிக்காமல்,இம்முறையையும் செயல்படுத்த கமல் என்ன செய்யலாம்?
எட்டு மணி நேரத்திற்கு முன்பு தொலைக்கட்சியில் ஒளிபரப்புவதற்கு பதிலாக ஒரே நேரத்தில் திரையரங்கிலும் நேரடித்தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப வேண்டும்.
 இதானால் இருதரப்பும் பயனடையும். இந்த நிலையில் நமது ரசிகர்கள் திரையரங்கிலும், பொது மக்கள் (பெண்கள்,குழந்தைகள்,வயதானவர்கள்) நேரடித் தொலைக்காட்சியிலும்  படம் பார்பார்கள். 
நேரடித்தொலைக்கட்சி கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பொதுமக்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.நேரடித்தொலைகாட்சி வசதியில்லாதவர்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.

இந்த முறையால் திரைத்துறை மேலும் வளர்ச்சியை சந்திக்கும்.

நேரடித் தொலைக்காட்சியின் மூலம் இனி நேரடித் திரைப்படம்  கண்டுமகிழுங்கள் :)

இது ஒரு சோதனை மறுபதிவு 

வியாழன், 29 நவம்பர், 2012

மாயன்கள் தமிழர்களா? அவர்கள் விண்வெளிக்கு சென்றனரா??


இன்றைய  நிலையில் உலகில் பேரழிவு ஏற்பட்டு பெரும்பாலான மக்களும் கண்டுபிடிப்புகளும் அழிந்துவிட்டால் என்னவாகும்? மிச்சம் மீதி இருப்பவர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை, பயன்படுத்திய பொருட்களை பற்றி எழுதியோ,சித்திரம்  வடித்தோ,கதைகளாகவோ கூறி வைப்பார்கள். 

பல நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் சந்ததியினர் அந்த கதைகளை கேட்கும்பொழுது  பாருடா கூகிள் என்ற ஒன்ற வைத்து இவர்கள் பல தகவல்களை  நொடிகளில் பெற்றனராம், இடம் விட்டு இடம் செல்ல வானத்தில் பறந்து சென்றனராம், ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வை மற்றொரு இடத்தில் இருந்து கண்டார்களாம்,செல் என்னும் ஒன்றை பயன்படுத்தி பல மைல் தொலைவில் உள்ளவர்களுடன் பேசினார்களாம்   என்னமா கதை விடுகின்றனர் இவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்பார்கள்.

நமது மூதாதையர்கள்  வாழ்ந்த வாழ்க்கையை  நாம் இப்படித்தான் கூறுகின்றோம் என்றே நான் நினைக்கின்றேன்.

ஆன்மீக வாழ்வை விரும்பாமல் அறிவியலிலும் கண்டுபிடிப்புகளிலும், உலக இச்சைகளிலும் மட்டும் கவனம் செலுத்தியவர்களை மாயன்கள்  என்று ஆன்மீக இந்தியர்கள் அழைத்திருப்பார்களோ?


மெய்ப்பொருள் காண்பதறிவு 

வெள்ளி, 23 நவம்பர், 2012

உலக நாடுகளை ஏன்,எப்படி அழிக்க வேண்டும்?


என் அருமை சகோதரர்களே,நண்பர்களே  நாம் உலக நாடுகளை அழிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாடுகளை அழிக்க நாம்  பரிந்துரைப்பது மனித வெடிகுண்டு  அல்ல, மனிதம்.

ஜாதி,மதம்,இனம்,மொழி, நாடு  என நாம் பல பிரிவுகளால் பிரிந்து நிற்கின்றோம். இவற்றை நாம் அழிக்காவிட்டால் இவற்றால் மனிதகுலம் அழிவதை நம்மால் தடுக்க இயலாது. இவைகள் வெறும் அடையாளங்களாக இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் இந்த அடையாளங்களால் நமக்கு வெறி உண்டாகிறது . ஜாதி வெறி,மத வெறி,இன வெறி,தேச வெறி  என்று பல வெறிகளை உண்டாக்க நாம் வழிவகுத்து தந்துள்ளோம்.

ஜாதி பிரச்சனை ஊருக்குள், இந்தியாவிற்குள் பிரச்சனையை உண்டாக்குகின்றது. மதம்,இனம்,நாடு போன்றவை உலக அளவில் பிரச்சனையை உண்டாக்குகின்றது.

வரலாற்றை புரட்டி பார்த்ததால் இனத்திற்காகவும், மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் தான் பல மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.என் இனம்,என் மதம், என் நாடு என்ற உணர்வு வெறியாக மாறியதே இதற்க்கு காரணம்.

நாம் அனைவரும் மனிதர்கள் எனும்பொழுது நமக்கு ஏன் இந்த இனம்,மதம்,  நாடு சார்ந்த வெறிகள்?நமக்கு ஏன் இந்த அடயாளங்கள்? 

இனம்,மதம் என்ற அடையாளங்களை  மனிதகுலத்தின் நலனுக்காக நாம் அழிக்கவேண்டும்.நாம் அனைவரும் மனிதர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு போதிக்க வேண்டும்.

இனம்,மதம் ஆகியவற்றை அழித்த பிறகு  இன்றைய நிலையில் உள்ள நாடு என்பதையும் நாம் அழிக்க வேண்டும்.

அதாவது இந்தியா என்ற  ஒரு நாடு பல மாநிலங்களால் ஆனவை அதுபோல இந்த பூமியும் பல நாடுகளால் ஆனவை. பல மாநிலங்களுக்கும் எவ்வாறு தனித்தனி அதிகாரமும், மத்திய அரசுக்கென்று தனி அதிகாரமும் உள்ளதோ அதைப்போல நாம் உலக அளவில் ஒரு நிர்வாகத்தை உருவாக்கவேண்டும் .

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களுடைய வருமானத்தை மத்திய அரசாங்கத்தோடு  பகிர்ந்துகொள்கின்றது. அதுபோல இப்புவியில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய வருமானத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும். இப்படி பகிர்ந்துகொள்ளும்போழுது உலகில் ஒவ்வொரு வருடமும் பசியால் இறக்கும் ஆறு மில்லியன் குழந்தைகளின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தோடு சண்டையிடுவதில்லை, அந்த மாநிலம் நம்மை தாக்குமோ என்ற அச்சம் கொள்வதில்லை . அதுபோல   உலக நாடுகள் அனைத்தும்  அச்ச உணர்வைவிடும்படி நாம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது  $2,157,172,000,000 பணத்தை நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பயன்படுத்தலாம்.  நான் கூறிய அந்த தொகை சென்ற  ஆண்டு  உலக நாடுகளால் ராணுவத்திற்காக செலவிடப்பட்டதாகும். 

உலகத்தை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்போழுது எல்லை 

பிரச்சனைகளையும்  நம்மால் குறைக்க முடியும். ஒரு நாடு மற்றொரு 

நாட்டினை தாக்குவதை நம்மால்  கட்டுப்படுத்த முடியும்.


இந்தியாவில் உள்ளவர்கள் எப்படி பிற மாநிலங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடிகிறதோ அவ்வாறு உலகின் எந்த மூலைக்கும் கடவுச்சீட்டு இல்லாமல் செல்ல முடியும்.

இனம்,மதம் என்ற அடையாளங்களை அழித்து நாடுகளையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும்பொழுது இவை இருப்பவைகளால் கொல்லப்படும் பல பில்லியன் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

உலக நாடுகளை ஒன்றினைக்கும்போழுது சில சிறிய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.  எதிர்ப்புகளை தாண்டி அவ்வாறு ஒரு நிர்வாகத்தை நாம் அமைக்கும்பொழுது மனிதகுலம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்,பல நன்மைகளை அடைய முடியும்.

இது நடக்குமா என்பது தெரியவில்லை...ஆனால் இது நடக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நாம் மனிதம் என்ற ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும். 

செவ்வாய், 20 நவம்பர், 2012

இணையத்தை உபயோகிப்பவர்களே இந்த ஆப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு சொல். IT Act Sec 66(a) வை பயன்படுத்தி இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முகநூலில் பால் தாக்கரே பற்றி எழுதியதற்காக ஒரு பெண்ணும் அதை  'லைக்' செய்ததற்காக ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பிறகு பெயிலில் விடப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில் இந்த சட்டத்தை பயன்படுத்தி  இது எத்தனையாவது கைது என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகின்றேன்.

நம்மில் சிலர் வழக்கம்போல  ஒரு பதிவு போட்டுவிட்டு அமைதியாக இருப்போம் சரியா? 

 IT Act Sec 66 a  க்கு  எதிராக சிலர் வழக்கு தொடர்ந்தததாக கேள்வி. அந்த வழக்கிற்கு  என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நம்முடைய எதிர்ப்பை ஆர்ப்பாட்டம், பேரணி மூலம் காட்டினால்தான் நம்முடைய குமுறல் சட்டத்தை இயற்றுபவர்களின் காதுகளுக்கு செல்லும் என நினைக்கின்றேன்.
விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் காந்தி சிலைக்கு அருகில் ஒன்று கூடி  IT ACT 66 (a) க்கு  எதிராக குரல் கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.

விருப்பம் உள்ளவர்கள் எந்த நாளில், எந்த நேரத்தில் இதை செய்யலாம், இதை எப்படி ஒருங்கிணைக்கலாம்  என்ற உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.அனுபவம்  உள்ளவர்கள் வழிகாட்டுங்கள்.

மின்னஞ்சல்:puratchimanidham@gmail.com

நீங்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை, வரவில்லை என்றால் நான் மட்டும் சென்று  சுண்டல் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவேன் :)


இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்!


ஞாயிறு, 18 நவம்பர், 2012

சுவனப்பிரியனின் பெண்கல்வி முறையை பின்பற்றி உலத்தையே இசுலாமை ஏற்க செய்வோமா?



 சுவனப்பிரியன் என்பவர்   இசுலாமில் பெண்கல்விக்கு ஆதரவாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர்  தந்துள்ள முக்கியமான கருத்து.
//மூட்டைப் பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டை கொளுத்துவோமா! மாட்டோம். எனவே வயதுக்கு வந்த பெண்கள் தனியே பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் கல்வி அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!//

அதற்க்கு நாகூர் மீரான் என்பவரின் பின்னூட்டம் 

// பெண்கள் வீதியில் விற்கப்படும் கருவாடு அல்ல..அவர்கள் வைரங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்..அவர்கள் பாதுகாப்புக்கு செய்யவேண்டிய அணைத்து வேலைகளும் செய்வது எமது கடமை..அதில் ஒன்று அவர்களுக்கு பாதுகாப்பான கல்வி வழங்குவது..தனியான பெண்கள் கல்லூரி அமைப்பது ..அதில் அணைத்து மத பெண்களுக்கும் இடமளித்து ஆண் பெண் கலப்பு எனும் சமுதாய ஒழுக்க கேடு ஏற்படாமல் தடை ஏற்படுத்துவது ...//

இனி என்னுடைய கருத்து .....
அருமையான  முடிவு 

இனி  வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுக்காக பெண்களால் இயக்கப்படும் பேருந்தில்,ஆட்டோவில்   மட்டுமே செல்லட்டும் 

இனி  வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் நிறுவனத்திற்கு  மட்டுமே வேலைக்கு செல்லட்டும் 

பெண்களுக்கென சவூதி அரேபியாவில் ஒரு நகரம் கட்டுவது  போல தமிழகத்தில் வாகாபிச  இசுலாம்  உள்ள  ஊர்களில் பெண்களுக்காக ஒரு தெருவை ஏற்ப்படுத்துவோம் 

ஆம்  உரக்கச்சொல்வோம் 
(கீழே உள்ளவை UNMAIKAL என்பவர் கூறியது )
//• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.

• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.

• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க தடையில்லை//

கீழே உள்ளவை என்னுடைய கருத்து 

வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுடனே மட்டுமே பேச வேண்டும் என்று மறக்காமல் சொல்லுவோம் 

வாகாபிச பெண்களுக்கு இசுலாமியர்கள் தரும் சுதத்திரந்தை பார்த்து பிற மதத்தில் உள்ள பெண்கள் உடனே இசுலாமில் சேரட்டும்.

பெண்கள் இல்லாமல் ஆண்கள் என்ன செய்வார்கள் எனவே உலக ஆண்கள் அனைவரும்  இசுலாமில் சேருவார்கள் .

பின்பு நாம் இறந்து பல கோடி  ஆண்டுகள் கழித்து, அல்லா  நம்மை எழுப்பி அனைவருக்கும் சுவனத்தில் மாளிகைகள் ,பட்டாடைகள் ,மது, பெண்கள் தந்து நம்மை மகிழ்விப்பார்.

உடனே வாகாபிச இசுலாமில் சேர்ந்திடுங்கள் இறந்து பல கோடி  ஆண்டுகள் கழித்து சுவனத்தை அடைந்திடுங்கள்.

பின்குறிப்பு : இந்த பதிவில் இசுலாம் என்பது வாகாபிச  இசுலாமையே குறிக்கும் என கூற காரணம் என்னவெனில்  சம்பந்தப்பட்ட பதிவை எழுதியவரும் அதை ஆதரிப்பவர்களும் வாகாபிய இசுலாமியர்களே.பெண்கல்விக்கு தடை விதித்த அமைப்பு எந்த பிரிவை சார்ந்தது என்று யாராவது  விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி 

செவ்வாய், 6 நவம்பர், 2012

நமக்கு சங்கம் வேண்டும் என்று இன்னுமா உங்களுக்கு உரைக்கவில்லை?

சின்மயி- ராஜன், கார்த்திக் சிதம்பரம் - ரவி சங்கரன்  இந்த பிரச்சனைகளை
பார்த்தும் நாம் திருந்தவில்லை என்றால்  நாம் கல்வி கற்று என்ன பயன்? எழுதி  என்னத்தை கிழித்து விடப்போகிறோம்?

நமக்கென்று ஒரு சங்கம் இருந்திருந்தால் சின்மயி-ராஜன் மற்றும் பிறர் 
பிரச்சனையை இந்த அளவிற்கு வளர விடாமல் தவிர்த்திருக்கலாம். சங்கத்தின் மூலமாக  சின்மயி -ராஜன் மற்றும் பிறர்கள் மத்தியில்   நாம் சமாதானத்தை ஏற்ப்படுத்தி  இருக்கலாம்.இங்கே இருவரது நலனையும் நம்மால் காப்பாற்றி இருக்க முடியும்.

சங்கம் இல்லாததால் நாம் அதை செய்யவில்லை  அதனால் ராஜன், சரவணன் ஆகியோர் இன்று  சிறையில். சின்மயியும் மன உளைச்சலில்.

சின்மயி பிரபலம் என்பதால் இதற்க்கு முன்பு  புகார் கொடுத்தவர்களுக்காக எந்த  வித நடவடிக்கையையும் எடுக்காமல் இவருக்காக காவல் துறை 
நடவடிக்கை எடுத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். சங்கம் இருந்திருந்தால் முன்பு  புகார் கொடுத்தவர்களின் பிரச்சனைகளையும் நம்மால் தீர்த்து வைத்திருக்க  முடியும்.

'ராபர்ட் வதோராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளதாக  செய்தி  வந்துள்ளது' என்று கூறியதற்காக ரவி சீனிவாசன் என்பவர் கைது
செய்யப்பட்டுள்ளார். ஆங்கிலேயன்  ஆட்சி காலத்தில்  இருந்ததைவிட இன்று நாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றோம் என்பதையே இவைகள்
காட்டுகின்றன.

நம்மிடம் சங்கம் இருந்தால்  நாம் இவர்களுக்காக போராடலாம். ஏன் சட்டத்தை கூட  நம்மால் திருத்த முடியும்.

நடிகர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் என்று இருக்கும்பொழுது ஏன் இணைய  எழுத்தாளர்கள்  சங்கம் ஒன்றை ஏற்ப்படுத்த கூடாது?

பிளாக்கர்,டிவிட்டர்,முகநூல் மற்றும் மின்னஞ்சல் இவைகளில்  கருத்து
சுதந்திரத்தை காப்பாற்ற, நாம் சிறைக்கு செல்லாமல் இருக்க சங்கம் தேவை.

சங்கம் என்பது கைது நடவடிக்கைகளுக்காக மட்டுமல்ல, சமூக நலனுக்காகவும் நாம் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்க  பயன்படுத்தலாம்.

நமக்கு நாமே சில சட்டங்களை வகுத்துக்கொண்டு ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாம், தமிழ் மொழியில் மொழி பெயர்ப்புகளை கொண்டுவரலாம்,
 பதிவர் சந்திப்பு போன்ற நிகழ்சிகளில் நமது நூல்களை வெளியிடலாம்,
நூல் வெளியிட ஆர்வம் இருந்தும்  பதிப்பகத்தை தொடர்பு கொள்ள இயலாவதருக்காக நாம்  வழிகாட்டலாம், விளம்பரங்களை  கூட நாம் பதிவுகளில் இட மொத்தமாக வாங்கலாம் - பலருக்கும்
பங்கிட்டு தரலாம்.

சங்கத்தினால் நாம் நன்மைகளை அடைகிறோமோ இல்லையோ துன்பத்தையாவது அடையாமல்  தவிர்க்கலாம்.


 சங்கத்தை  மனதில் வையுங்கள்.

நாம் உடனடியாக என்ன செய்யவேண்டுமெனில் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A வில்  மாற்றங்களை கொண்டு வரவேண்டும் .  அதிகாரம் உள்ளவர்கள்  தவறாக பயன்படுத்தும்  வகையில்  இந்த சட்டம் உள்ளது.
அந்த சட்டம் அப்படி என்ன சொல்கிறது?

------------------------------------------------------------------------------------------------------------------------------


**[ 66A. Punishment for sending offensive messages through communication
service, etc..-* Any person who sends, by means of a computer resource or a
communication device,-

(a) any information that is grossly offensive or has menacing character; or

(b) any information which he knows to be false, but for the purpose of
causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury,
criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by
making use of such computer resource or a communication device,

(c) any electronic mail or electronic mail message for the purpose of
causing annoyance or inconvenience or to deceive or to mislead the
addressee or recipient about the origin of such messages

shall be punishable with imprisonment for a term which may extend to three
years and with fine.


Explanation: For the purposes of this section, terms "Electronic mail" and
"Electronic Mail Message" means a message or information created or
transmitted or received on a computer, computer system, computer resource
or communication device including attachments in text, image, audio, video
and any other electronic record, which may be transmitted with the message.


[* Inserted vide Information Technology Amendment Act, 2008]

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த சட்டப்படி நம் கருத்தால் பிறர் கோபமடைந்தாள் கூட நம்மீது வழக்கு தொடுக்க  முடியும்.  நாம்  அரசியல் பற்றி எழுத முடியாது. திரை  விமர்சனங்கள் கூட எழுத முடியாது.

அதாவது நாம் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது என்றே இந்த அதிகாரவர்க்கம் இந்த  மாதிரி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அவர்கள் நினைத்தால் நம் அனைவரையும்  இன்றே   சிறையில் அடைக்க முடியும்.

டிவிட்டரில் கருத்து சொன்னவர்களே இதுவரை  கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே சங்கத்தை மனதில் வையுங்கள் போராட்டத்தை டிவிட்டரில் இருந்தே தொடங்குவோம்.

அனைத்து  டிவிட்டர் உபயோகிப்பாளர்களும்  #ModifyIndianITAct66A என்று தங்களுடைய பெரும்பாலான டிவிட்டுகளில் பயன்படுத்தவேண்டும்.  நாளை  முதல்  இச்சட்டம் மாற்றியமைக்கப்படும் வரை நாம்   இதை செய்ய வேண்டும். நமக்கு தெரிந்த தெரியாத    பலரையும் இதை நாம் செய்ய
சொல்ல   வேண்டும்.   நமது குரல் நிச்சயம்  மாற்றத்தை  கொண்டு வரும்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள.

பதிவுலகிலும் நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரே பதிவை இடலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம். அதுபற்றி பின்வரும் கட்டுரைகளை படித்து உங்களது கருத்தையும்  ஆதரவையும் தாருங்கள்.
http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  நம்மில்   ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும்  சிறையே.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

சின்மயி கைது செய்யப்படுவாரா?

சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் யாரோ புகார் தெரிவித்துள்ளார். அது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சின்மயி புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம். இப்பொழுது சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் யாரோ புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா அல்லது வெறும் விசாரணையோடு நின்று விடுமா என்று தெரியவில்லை.

சின்மயி செய்த தவறுதான் என்ன?
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ப்படையினரால்  சுடப்படுவது சம்பந்தமாக  அவரிடம்  சிலர் தொடர்ந்து ஆதரவு  கோரியபோது சின்மயி   "பைத வே மீனவர்கள் மீன்களை கொல்வது  பாவம் இல்லையா? " என்று டுவிட்டியதாக  தெரிகிறது.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக டுவிட்டும் பொழுது "சோ கால்டு தாழ்த்தப்பட்டவர்கள்"  என்றும் டுவிட்டியுள்ளார் என்றும் தெரிய வருகிறது. தாழ்த்தப்பட்ட சமுதாய  மக்கள் மனதும் மீனவ சமுதாய மக்கள் மனதும் புண்படும்படி அவர் கூறியுள்ளார் என  அவர் பேரில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

இணையத்தில் ஆபாச கருத்து மட்டுமல்ல நல்ல வார்த்தையில் மோசமான சிந்தனையை வெளிப்படுத்தினாலும் பிரச்சனை தான் எனபது இதன் மூலம் தெரியவருகிறது.

எனவே இணையத்தை உபயோகிப்பவர்கள் தங்கள் கருத்தில் கண்ணியத்தை கடைபிடிப்பது  நல்லது.

சின்மயி என்ன செய்யலாம்?
நான் ஏதோ ஒரு ஆவேசத்தில் அறியாமல் செய்துவிட்டேன் எனவே மக்கள் என்னை மன்னிக்கவும் என்பதுபோல பொது மன்னிப்பு கேட்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
அதேபோல சின்மயி பற்றி ஆபாசமாக பேசியது உண்மை எனும் பட்சத்தில் கைதானவர்களும்  மன்னிப்பு கேட்க வேண்டும்.

இருவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மனிப்பு வழங்கிக்கொண்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கும் என நினைக்கின்றேன். அவர்களை தெரிந்தவர்கள் அதை செய்ய அறிவுறுத்த வேண்டுகிறேன்.



புதன், 24 அக்டோபர், 2012

சின்மயி விவகாரம் சின்மயி, பதிவர்கள், காவல்துறையினர் செய்ய வேண்டியது என்ன?



இது சற்று கவனத்துடன் கையாள வேண்டிய சிக்கலான  பிரச்சனை. எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டியது இங்கே அவசியம் என கருதுகிறேன்.

ஆபாசமான வார்த்தைகள் என்பது தமிழகத்தில் சில இடங்களில் மிகவும் சர்வ சாதரணமாக பேசக்கூடிய ஒன்று.

சில நண்பர்களுக்கு மத்தியில் இவைகள் சர்வ சாதாரணம். நண்பர்களுக்கு மத்தியில்  எந்த ஒரு பிரபலத்தை பற்றியும் எப்படியும் பேசுவார்கள்.இவர்களை எல்லாம் தண்டிக்க நினைத்தால் அது சாத்தியம்  இல்லை. அப்படி ஒரு சட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 

இப்படி நண்பர்களுக்கு மத்தியில் ஆபாசமாக பேசிக்கொள்பவர்கள் இணையத்தில் கருத்து பரிமாறிக்கொள்ளும் பொழுதும்  அதே சொல்லாடல்களை அவர்களுக்குள்  பயன்படுத்துகின்றனர். இது தவறுதான்.

சின்மயி: தன்னை நேரிடையாக ஆபாசமாக பேசியவர்களை காவல் துறையின்  உதவியுடன் தண்டிக்கும் உரிமை அவருக்கு  உண்டு. ஆனால் பல பிரபலங்களை பற்றி ஆபாசமாக பேசியதை அவர்கள் படம்  எடுத்து காட்டுவது என்பது தங்களுக்கு சாதகமாக பலரை திரட்ட வேண்டும், அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற  உள்  நோக்கத்தில் செய்யப்படுவதாக எனக்கு தோன்றுகிறது. . இதை செய்தது சின்மயியா அல்லது அவர்களது ஆதரவாளர்களா எனபது தெரியவில்லை.  
யார் செய்திருந்தாலும் இது சரியான செயல் அல்ல. ஏன் எனில் பல பிரபலங்களை பற்றி பலரும் ஆபாசமாக எழுதியுள்ளனர். எனவே அது பற்றி இவர்கள் தற்பொழுது  கவலைப்பட வேண்டாம். 

இங்கே சின்மயியும் சரி காவல் துறையினரும் சரி சிந்திக்க விடயம் ஒன்று உள்ளது.

அதாவது சின்மயியை  நேரிடையாக தாக்கியதற்கு உரியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கலாம் தவறில்லை ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் ஆபாசமாக  சின்மயியை  பற்றி  பேசியதற்கு நடவடிக்கை எடுக்கலாமா எனபது தெரியவில்லை.ஏன் எனில் இது சில நண்பர்களுக்குள் பேசிக்கொண்டது.  

இங்கே அடுத்து வைக்கப்படும் வாதம் என்னவெனில் இணையம் என்பது பொது அங்கே பேசினால் அதை பலரும் அல்லது அவர்களில் நண்பர்கள் பலரும் படிக்க நேரிடும். இது தவறில்லையா? 

இது சரியான கேள்விதான்.

இங்கே ஒரு கேள்வி கேட்கிறேன் (சிந்திக்க மட்டுமே :) )
இணையம் அல்லாமல் தனியில் வெளியே  
இரண்டு நண்பர்கள் ஒரு பிரபலத்தை  பற்றி ஆபாசமாக பேசிக்கொள்கின்றனர். அங்கே இருக்கும் மூன்றாவது நண்பர் இவர்கள்  பேசியதை ஒலி /ஒளி  பதிவு செய்து அந்த பிரபலத்திடம் கொடுத்து விடுகிறார் அல்லது அதை இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.. இப்பொழுது அந்த பிரபலத்தின் மனம் புண்படும் தான் மறுப்பதற்கில்லை.ஆனால் இதை ஆதாரமாக வைத்து அந்த இருவரின் மீதும் நடவடிக்கை எடுப்பது சரியா?

சட்டத்தை உருவாக்குபவர்களும் நடைமுறை படுத்துபவர்களும்,பாதிக்கப்படுபவர்களும்  இதை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது எதிர்காலத்தில் பல வழக்குகளுக்கு தீர்ப்பாக அமையும். 

மீண்டும் சொல்கிறேன் சின்மயியை  நேரிடையாக ஆபாசமாக பேசிய ஆதாரங்கள் இருக்குமானால் சம்பந்தப்பட்டவர்களின்  மீது நடவடிக்கை எடுக்க சின்மயிக்கு சகல உரிமையும் உண்டு. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கருணையின் அடிப்படையில் 
அவர்களை மன்னித்து விடவும் உரிமை உண்டு. எந்த முடிவையும் அவர்தான் எடுக்க வேண்டும். 

சின்மயி  மனம் எந்த அளவிற்கு  புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  சம்பந்தப்பட்டவர்கள் தங்களது தவறை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அவர்களின் செயல் இவ்வுலகிற்க்கே தெரிந்து விட்டது. இந்த கறை  அவர்களை விட்டு சீக்கிரம் மறையப்போவதில்லை. எனவே இதுவரை எடுத்த நடவடிக்கையே பெருமளவு தண்டனையை கொடுத்தது விட்டது. இனியும் அவர்களுக்கு தண்டனை வேண்டுமா எனபதை சின்மயிதான்  தீர்மானிக்க வேண்டும்.அவர் நல்ல முடிவை எடுக்கட்டும்.

காவல்துறையினர்,நீதிபதிகள்  செய்ய வேண்டியது: 
நான் முன்பே கூறியது போலநேரிடையாக பேசியதற்கு தண்டனை அளிப்பது  தவறல்ல. ஆனால் பல பிரபலங்களை பற்றி பேசியதற்கும், நண்பர்களுக்குள் சினமயியை பற்றி ஆபாசமாக பேசியதற்கும் நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா எனபதை ஆழ்ந்து சிந்தித்து செயல் படவேண்டும்.

மிக முக்கியமாக இணையத்தில் எந்த மாதிரியான வார்த்தைகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று ஒரு குழு அமைத்து, கலந்தாலோசித்து அதை வெளியிட வேண்டும். அதை பின்பற்றி பலரும்  ஆபாசமான  வார்த்தைகளை தவிர்க்க இயலும். 

கைதானவர்கள் செய்ய வேண்டியது: அவர்கள்  உண்மையாக தவறு செய்திருப்பின் சின்மயிடம் மன்னிப்பு கோர வேண்டும்.இந்த மன்னிப்பு சின்மயி  இவர்களை மன்னிக்க உதவும்.  தவறு செய்யவில்லை என்று நினைத்தால் துணிந்து போராடலாம்.

கலைத்துறையினர் செய்யவேண்டியது: ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவதையும், ஆபாசமான காட்சிகளை வைப்பதையும் தவிர்க்க  ேண்டும். ஆபாசம் சமுதாயத்தில் பல பிரச்சனைகளை ஏற்ப்படுத்துகிறது. இதற்க்கு கலைத்துறையும் ஒரு காரணம் என்பதை இவர்கள் உணரவேண்டும். 

அரசியல்வாதிகள் செய்யவேண்டியது: மேடைக்கு மேடை நீங்கள் எதிர் கட்சியினரை ஆபாசமாக பேசிவிட்டு இணையத்தில் ஆபாசமாக பேசுபவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வருதல் சரியாகுமா?  மேடையில் என்ன பேச வேண்டும் என்று  ஒரு நாகரிகம் தெரிய வேண்டாமா?  ஒரு தலைவன் எப்படி செயல்படுகிறானோ அப்படியே தொண்டனும். நல்லொழுக்கங்களை கடைபிடிக்க முயலுங்கள். 

பதிவர்கள் செய்ய வேண்டியது: எந்நேரத்திலும் எங்கும்  எப்பொழுதும் யாரை பற்றியும் ஆபாசமாக பேசுவதை தவிர்த்தல் நல்லது. இணையத்தில் மட்டுமல்ல தங்கள் வாழ்விலும் இதை கடைபிடித்தல்  நல்லது.. 

சிறு விமர்சனம்: ஏற்க்கனவே இணையத்தில் ஆபாசமாக எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு கைதானவர்களை விமர்சிக்க என்ன உரிமை உள்ளது?

குறிப்பு: எனக்கு சின்மயியையும் தெரியாது, கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் தெரியாது. ஒரு பதிவராக எனது கருத்தை பதிவு செய்கிறேன் அவ்வளவே. இதில் தவறான கருத்துக்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

ஆபாசமான வார்த்தைகளை அனைவரும் அறவே தவிர்க்க வேண்டும். இணையத்திலும் சரி, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி. இதுவே நாட்டிற்கும், வீட்டிற்கும், தமிழிற்கும் நல்லது. 
என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 
Related Posts Plugin for WordPress, Blogger...