வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 25 ஜனவரி, 2013

கமல் இசுலாம் எதிரியா? இந்து எதிரியா?


கமல் இசுலாம் எதிரியா? இந்து எதிரியா?
கமலை முஸ்லிம்கள் இசுலாம் எதிரியாக கூறுகின்றனர். ஒரு இந்து கூறினார் அன்பே சிவம் இந்துக்களுக்கு எதிரான படம் என்று. இதையொட்டி அரைத்தூக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனையே இந்த பதிவு.

கமலை இசுலாமின் எதிரியாக சித்தரித்து பலரும் இணையத்தில் எழுதி வருகின்றனர். ஆனால் அவர் ஒரு இசுலாமிய அனுதாபி என்பதை ஏன் யாரும் கூறவில்லை? ஆம் கமல் ஒரு இசுலாமிய அனுதாபி.

1.சிறு வயதில் பொதிகை தொலைகாட்சி என நினைக்கின்றேன் அதில் குரானை தான் படித்ததாக சிலாகித்து கூறி இருந்தார். இவர் கீதையை பற்றி இப்படி கூறியதாக எனக்கு தெரியவில்லை.

2.உன்னைப்போல் ஒருவன் இசுலாமியர்களுக்கு எதிரான படம் என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றனர். உண்மையில் அந்த படத்தில் கமல் ஒரு முஸ்லிம். அவர் அதை மறைமுகமாக கூறியிருப்பார்.அதை புரிந்துகொள்ளும் 
சக்தி நமது மக்களிடம் இல்லை. அந்தப் படத்தில்  அவர் தனது மனைவியுடன் பேசும்பொழுது "இன்ஷா அல்லா" வேலை என்று கூறுவார். அரபி மொழியிலோ உருது மொழியிலோ  கூட சில வசனங்கள்பேசுவார். கர்ப்பிணிப்பெண் கருவருக்கப் பட்டதை பற்றி அந்த படத்தில் பேசுவார் உண்மையில் அது குஜராத் கலவரத்தின் போது   முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்தான்.  இந்த படத்தில் கமல் வெளிப்படையாக தன்னை முஸ்லிம் என்று கூறியிருக்க வேண்டும். மறைமுகமாக கூறப்போயி அது பலருக்கும் புரியாமல் போய்விட்டது.

3.ஹேராம் -படத்தில்  முஸ்லிம் ஷாருக்கானை நல்லவனாகவும்,படத்தில் இந்துவாகிய தன்னை கெட்டவனாகவும் தான் காட்டி இருப்பார்.

3. அன்பே சிவம் இந்து மதத்தை ஆதரிக்கும்  படம் என்று ஒரு முஸ்லிம் எழுதிருந்தார். நேற்று ஒருவர் அன்பே சிவம் இந்து மதத்திற்கு எதிரான படம் என்றார். சிந்தித்து பார்த்தால் அந்த படத்தில் வரும் வில்லன்  ஒரு சைவ இந்து.சிவபக்தன். ஒவ்வொரு முறை தவறு செய்ய முடிவு எடுத்த பின்பும் "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று கூறுவார். கமலை மருத்துவமனையில் கொல்ல முயற்சிக்கும் காட்சியிலும் இப்படித்தான்.
எப்படிடா ஒரு சிவ பக்தனை கெட்டவனாக காட்டலாம் என்று எந்த இந்துவும் கேட்டமாதிரி தெரியவில்லை.

அதுமட்டுமல்ல அந்த படத்தில் தேவையே இல்லாமல் அந்த கெட்டவன்   படையாட்சி என்ற சாதியை சார்ந்தவனாக காட்டப்ப்பட்டிருப்பான். பாபா திரைப்படத்தை எதிர்த்த பா.மா.க  இந்த படத்தை எதிர்த்த மாதிரி தெரியவில்லை.

4. தசாவதாரம் திரைப்படத்திலும் சிவபக்தர்களை கெட்டவர்களாக காட்டியிருப்பார்.

5. விசுவரூபம் திரைப்படம் தலைப்பே அரபி மொழியை குறிப்பது போல இருக்கும். இது முஸ்லிம் ஆதரவு. தமிழ் மொழியை வட மொழியிடமிருந்து  காப்பாற்றிய பகுத்தறிவாதிகள், தமிழ் மொழியை அரபி மொழி அழிப்பதை, அழிக்கப்போவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 
சமஸ்கிருதத்தில் பூஜை செய்யகூடாது என சொல்லத் தெரிந்தவர்களுக்கு, அரபி மொழியில் தொழுகை அழைப்பு கூடாது என சொல்லத்தெரியவில்லை.

தமிழ் மொழியில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் அதற்க்கு சலுகை என்று கூறி  தமிழ் வளர்க்கும் அதிபுத்திசாலிகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைத்து  சலுகை பெற்று  தமிழ் வளருங்கள் முஸ்லிம்களே என  கூற அறிவில்லாதது ஏனோ? ( அதேபோல கிருத்துவ மதத்திலும் தமிழ் பெயர்கள் குறைந்து வருகிறது. இந்து மத மக்களிடமும் ஒருசில அந்நிய மொழி பெயர்கள் வளர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை )

 விசுவரூபம் படமும் இசுலாமியர்கள் ஆதரவு படமாகத்தான் கமல் எடுத்திருப்பார். ஆனால் என்ன அதை  இசுலாமிய அமைப்பு தலைவர்கள் சரியாக புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். 


ஒரு மதத்தை,அந்த மக்களை  புண்படுத்துகிறது என தடை செய்ய ஆரம்பித்தால் ஒரு மத புத்தகத்தையே தடை செய்யலாம்.
மத பிரச்சாரங்களை தடை செய்யலாம்.
 பெரியார் இந்து மதத்திற்கு எதிராக எழுதிய எழுத்துக்களை கூட தடை செய்யலாம். 
 நாங்கள் போராட்டம் செய்வோம் என்று சிலர்  மிரட்டினால் தான் அரசாங்கம் இவற்றை செய்யும் என நினைக்கின்றேன்.
எம்மதமும் சம்மதம்,பகுத்தறிவு,நாத்திகம்,மத சகிப்புத்தன்மை  என்று  வாழும்  தமிழ் இந்து மக்களுக்கு இது தெரியாது..புரியாது. விசுவரூபம் பட எதிர்ப்பை பார்த்து,எதிர்காலத்தில் இந்த மாதிரி நிகழ்வுகளை பார்த்து  இந்துக்களும்  மத சகிப்புத்தன்மையை விட்டால் அது தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.

என்னைப்பொருத்தவரை இதுநாள் வரை நான் கமலை இசுலாம் அனுதாபியாகத்தான் பார்க்கிறேன். அதே நேரத்தில் இந்து மத எதிரியாக அவரை  பார்க்கவில்லை என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
எனது கவலை எல்லாம் இசுலாமியர்களுக்கு மத சகிப்புத்தன்மை குறைந்துவருவதுபோல தெரிகிறது.
இதற்க்கு இசுலாமிய சகோதரர்களை குறை சொல்வதைவிட நமது திராவிட அரசியல்வாதிகளையே நான் குறை கூறுவேன்.

ஒசாமா பின்லேடனையும்,அஜ்மல் கசாபையும்,தாலிபான்கள் செயல்களையும்  சில முஸ்லிம்கள் ஆதரிப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு மதவெறி அதிகமாகிறதா என என்னைக்கேட்டால் அதற்க்கு விடையாக நான் முகமது நபி
 வார்த்தைகளைத்தான் விடையாக கொடுப்பேன். 

ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்).

குறிப்பு:இந்த பதிவு கமலுக்கோ ,இந்துக்களுக்கோ,முஸ்லிம்களுக்கோ  ஆதரவானதும் அல்ல  எதிரானதும் அல்ல. நான் உண்மையாக நினைப்பவற்றை பகிர்ந்துள்ளேன் அவ்வளவே. 
தவறுகளை சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

பிற்சேர்க்கை: விசுவரூபம் திரைப்படத்தை இசுலாமிய அமைப்புகளுக்கு காட்ட வேண்டும் என்று சட்டப்படி எந்த அவசியமும் இல்லாதபொழுது அவர் முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளை மதித்து படம் காட்டி இருக்கிறார் எனும்பொழுது கமல் முஸ்லிம் மக்களுடன் நட்புறவை பேணவே விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

மிலாடி  நபி கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு  எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

முகமது நபி உண்மையில் அருளிய மார்க்கம் என்ன?


இசுலாம் என்பது மதம் அல்ல  அது மார்க்கம் என்று கூறும்  மார்க்க சகோக்களே 
  உண்மையில் அதன் பொருளை  நீங்கள்  அறிந்திருந்தால் இசுலாம் மட்டுமே இறைவனை அடையும் ஒரே வழி என்று கூறுவீர்களா என்பது சந்தேகமே. ஏதோ எனக்கு புரிந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

முகமது நபி இறைவனை அடைய இசுலாமியர்களுக்கு  மூன்று மார்க்கங்களை அதாவது வழிகளை  அளித்துள்ளார்.(இதை மூன்று வழியாகவும் பார்க்கலாம் அல்லது இறைவனை அடையும் 3 படி நிலைகளாகவும் பார்க்கலாம்.)
 அவை இசுலாம், ஈமான்,  இஹ்சான்.

சரி இசுலாம் என்பது என்ன?
முகமது நபியே சொலிகிறார்....
 "இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் "ஹஜ்' செய்வதும் ஆகும்'' 

.இது ஒரு அடிப்படை நிலை  அவ்வளவுதான். சரி அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் ? அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும்.

சரி ஈமான் என்பது என்ன?

 "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' 

அதாவது குரான் எனும் ஒரு வேதத்தை மட்டுமே ஏற்காமல்,கிருத்துவம்,யூதம் ஆகியவற்றில் உள்ள வேதத்தையும்,அவர்களின் தூதர்களையும் ஏற்க்க வேண்டும்.

ஆனால்  இசுலாமை ஏற்காமலும்,ஈமான் கொள்ளாமலும் யூதர்களும், கிருத்துவர்களும் இருக்கலாம் என்று குரான் கூறுகிறது.

2:62ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

 இசுலாம் என்பது அடிப்படை ஈமான் என்பது இரண்டாம் நிலை.
சரி அடுத்த நிலை? அதுதான் இஹ்ஸான்.

“(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.


இங்கே கூறப்படுவது என்னவெனில் தியானம். உண்மையில் பார்ப்பனன் என்பதன் பொருளும் இதுவே. பார்ப்பனன் என்பதற்கு சிலர் தன்னை பார்ப்பவனை பார்ப்பவன் என்று கூறுகிறார்கள். தன்னை பார்க்கும் இறைவனை தான் பார்த்தல். இந்த நிலைதான் இஹ்சான் நிலை. இதைத்தான் சுபிக்கள் செய்கின்றனர்.
வாகாபிய சகோக்களே,
இது  பற்றி நீங்கள் இதுவரை பதிவு எழுதியுள்ளீர்களா?
இஹ்சான்  நிலையை அடைய நீங்கள் முயற்சி செய்துள்ளீர்களா?
சுபிக்கள் இந்த நிலையை அடைய முயல்வதை தடுப்பது மடமை என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

இறைவனை பார்த்தலே வணங்குதல். நீ பார்க்க முயற்சி செய். நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதே அந்த ஹதீஸின் பொருள்.இதைத்தான் வள்ளலார் இறைவழிபாடு,ஒளிவழிபாடு என்கிறார்.

யூதர்களும்,கிருத்துவர்களும் இசுலாமை ஏற்காமல் நன்மை பெறலாம் என்றேன்.  சிலை வணங்கிகளுக்கு  அப்படி ஏதும் இல்லையா என்றால் நிச்சயம் உண்டு.

முகமது நபியும் ஒரு சிலை வணங்கியாக இருந்தவர்தான் என்பதை யாரும் மறக்க கூடாது. அவர் வஹி எனும் இறை தரிசனம் பெற காரணம் அவர் தியானம் செய்ததுதான். அவர் அடிக்கடி ஹிரா மலையில் தியானம் செய்துள்ளார். எனவே இங்கே இசுலாமை ஏற்க்க வேண்டும் என்று சிலை வணங்கிகளுக்கு (இந்துக்களுக்கு) எந்த அவசியமும் இல்லை. எது முக்கியம் எனில் தியானம் செய்தல்.


இசுலாமியர்கள் இசுலாம் எனும் அடிப்படையிலே நின்று விடாமல், அவர்கள் ஈமான் கொண்டவர்களாக மாறவேண்டும். தற்பொழுது ஈமான் கொண்டவர்கள் இஹ்சான் நிலையை அடைய வேண்டும். 

பிறரை எதிரியாக பாருங்கள், வெட்டுங்கள், குத்துங்கள் என்ற வசனங்களை புறந்தள்ளிவிட்டு, இசுலாமை நாம் காப்பாற்ற வேண்டும் அதற்க்கு பிரச்சாரம்  செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டு நாம் எப்படி இஹ்சான் நிலையை அடையலாம் என்று சிந்தியுங்கள். அதை நோக்கி செல்லுங்கள். 

யூதர்களையும்,கிருத்துவர்களையும்,இந்துக்களையும் மதம் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை குரான் மூலமாகவும் ஹதீஸின் துணை கொண்டும் விளக்கியுள்ளேன் என்று நம்புகிறேன். மேலும் இசுலாமியர்கள் அடையவேண்டிய உயர்நிலை இஹ்சான் எனும் தியான நிலை என்பதும் விளங்கும் என்று நம்புகிறேன்.

 இடைச்சொருகல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மார்க்கத்தை காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தி கொள்வதே நல்லது.முன்னுக்குப்பின் முரணான பல விடயங்களை ஆராய்ந்தாலே உங்களுக்கு உண்மை புரியும்.

வஹி என்பது முகமதுவிற்கு மட்டுமே அளிக்கப்பட்டதல்ல ஒவ்வொரு மனிதனும் அவர் கண்டதை காணலாம். உணர்ந்ததை உணரலாம்.  இஹ்சான் எனும் உயர் நிலையை அடைய  முயலுங்கள்.

என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

இதை எழுத உதவிய பதிவு: http://onameen.blogspot.in/2011/08/blog-post_27.html
இஹ்சான் நிலையுடன் (மறைமுக) தொடர்புடைய பதிவு: http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post.html

புதன், 9 ஜனவரி, 2013

இந்த முஸ்லிம் வெறியனை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?


காவல்துறை அகற்றப்பட்டால் நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் 15 நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவோம் என்று கூறிய இந்த முஸ்லிம் வெறியனை பதிவுலகில்  யாரும் கண்டித்த மாதிரி  எனக்கு தெரியவில்லை. 

இவனது பேச்சை சில  பல முஸ்லிம்கள் வழிமொழியமாட்டார்கள் என எனக்கு தெரியும் . ஆனால் சில  முஸ்லிம்கள் இதை வழிமொழிகிறார்கள் எனபது வேதனையான செய்தி.

நமது திராவிட,பகுத்தறிவு,கம்யுனிஸ்டு,தலித் தலைவர்கள் இதை ரசித்தார்களா என தெரியவில்லை. அவன் கூறிய அந்த 100 கோடி இந்துக்களில் தான் இவர்களும் உள்ளனனர் என்பதை அறிய இன்னும் கொஞ்சம் காலம் தான் இவர்களுக்கு தேவைப்படப் போகிறது.

பார்பனீயத்தை விட பல மடங்கு அபாயகரமானது இந்த வாகாபிய இசுலாமியம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும்பொழுது நிலைமை கை மீறியிருக்கும். வாகாபியம் பிற மத மக்களுக்கு  மட்டுமல்ல பல பிரிவு முஸ்லிம்களுக்கும் கூட அச்சுறுத்தல் தான்.

100 கோடி இந்துக்களை கொல்ல வேண்டும்,  கடந்த ஆயிரம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட இந்துக்களை விட நிறைய இந்துக்களை நாம் கொல்வோம்  என்று கூறிய அக்பருதீன் ஒவைசி ஒன்னும் சாதாரண ஆள் அல்ல.
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்,முஸ்லிம் மக்களின் பிரதிநிதி. அவரின் கட்சி மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன். அவரை(னை) உடனடியாக கைது செய்யாமல் அரசு காலம் கடத்தியது. தமிழ் படத்தில் வருவது போல உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டான். இன்று இவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இவன் இப்படி பேசியது திசம்பர் 24 அன்று. ஆனால் கைது செய்யப்படுவதோ இன்றுதான். சமுதாய வலைத்தளத்தில் கருத்து சொன்ன இரண்டு பெண்களை உடனடியாக கைது செய்ததது (அதில் ஒரு முஸ்லிம் பெண் ,ஒரு இந்துப்பெண்), கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளார் என்று கூறியதற்கு நள்ளிரவில் ஒருவரை கைது செய்தது அரசு.  இந்த இந்தியாவில் என்ன நடக்கின்றது?

சில முஸ்லிம்கள் உடனடியாக கேட்பது குஜராஜ் கலவரம் மட்டும் சரியா என்று. உண்மையில் அது நியாயம் இல்லைதான்.  அது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.அதில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனைக்குஉள்ளாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த மாதிரி பேச்சு, சிந்தனை சரியா என்று சிந்தியுங்கள்.

இசுலாம் மதத்திற்காகவும்,நபிக்காகவும் உயிரை கொடுக்கலாம் என்ற மூளைச்சலவையை தயவு செய்து ஏற்காதீர்கள்.

இன்று பல ஹதீசுகளை இடைச்செருகல் என்று  கூறுகிறார்கள். அதுபோல யூதர்களையும், சிலை வணங்கிகளையும் பற்றிய 
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;
கருத்துக்களும் இடைச்செருகலாக இருக்கலாம் அல்லவா?  அப்படியே இல்லை என்றாலும். இந்த கருத்துக்கள் அந்த காலத்திற்கு மட்டுமே அவர் கூறினார் இந்த காலத்திற்கு அல்ல என்று ஒதுக்கி தள்ளுதல் தான் நியாயம் இல்லையா?

மனித குலத்திற்கு விரோதமான எந்த கருத்தையும் எக்காலத்திற்கும் பொருந்தும்படி எந்த இறைதூதணும் கூறி இருக்க முடியாது. அப்படி கூறி இருந்தால் அவர் இறைதூதானே அல்ல என்பதை மனதில் வையுங்கள்.

நான் முகமது நபியை பற்றி படித்த வரை அவர் யோக வழியில் சென்றுள்ளார் என்பது நன்கு விளங்குகிறது. ஆனால் அவர்  கூறியதாக கூறப்படும் சில கருத்துக்களை என்னால் ஏற்க்க இயலவில்லை. அவைகள்  இடைச்செருகலாக இருக்க வாய்ப்புள்ளது. 

மனித குலத்திற்கு நன்மை பயக்க கூடிய கருத்துக்களை எடுத்துக்கொண்டு பிற கருத்துக்களை நீக்கினால் தான் மனிதகுலம் செழிக்கும். எனவே எல்லாவற்றையும் இறைவேதம் என்று ஏற்காமல் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவு நல்ல முஸ்லிம்கள் மனதை எந்தவிதத்திலும் புண்படுத்தாது என்று நம்புகிறேன்.  அக்பருதீன் ஒவைசி பேச்சை கண்டித்த சில முஸ்லிம் சகோதரர்களை நான் பாராட்டுகிறேன். இதை கண்டிக்காத போலி மதச் சார்பின்மை வாதிகளுக்கு என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

முகமது நபி உண்மையில் தந்த மார்க்கம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

இதை எழுத உதவிய கட்டுரைகள்:
http://www.4tamilmedia.com/newses/india/10861-2013-01-03-08-25-22
http://indianfusion.aglasem.com/akbaruddin-owaisi-hate-speech-video/

பதிவிட்டவுடன் படித்தது:

விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.
ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம்தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:
"பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "

இப்படி கூறிய  இந்து மத வெறி பிடித்தவனுக்கும் கடும் கண்டனங்கள்.இவனையும் அரசு உடனடியாக கைது செய்யட்டும்.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

வன்புணர்வுகளுக்கு உண்மையில் என்ன காரணம்? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?


இந்த பதிவு சிலருக்கு முட்டாள்தனமாக இருக்கலாம். இருப்பினும் சொல்லவேண்டியது என் கடமை.

வன்புணர்வுகள் சமீபகாலமாக அதிகரிப்பதாக தெரிந்தாலும் அது உண்மையல்ல. ஊடகத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதால் நமக்கு அவ்வாறு தெரிகின்றது.

காலம் காலமாக வன்புணர்வுகள் என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் மனிதர்கள் மிருகங்கள் என்ற ஒரு விடைதான் கிடைக்கும். மிருகத்திலிருந்து பரிணமித்த மனிதர்களுக்கு இன்னும் மிருகக்குணம் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். (இல்லை இறைவன் நம்மை படைத்து சோதனை செய்கிறான்,இறுதி நாளில் தீர்ப்பு, தண்டனை உண்டு  என்று உளறினால் கற்பழிப்புகள் என்ன மாதிரி சோதனை என்று  விளக்குங்கள்)

உணவு,உறைவிடம் இவைகள் மனிதனுக்கு அடிப்படைத்  தேவைகள்.மனிதனுக்கு மட்டுமல்ல மிருகத்திற்கும் இவை அடிப்படைத்தேவைதான்.( மனிதனுக்கு இதனுடன் உடை என்பதும்  அவசியமாகிறது.) மனிதனுக்கும் மிருகத்திற்கும் மற்றும் ஒரு அடிப்படை தேவை உள்ளது. அது உடல் உறவு.

உணவுப்பசியையும் உடல்பசியையும் கட்டுப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லை. எனவே இவைகள் மனித வாழ்வில் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. மனிதன் தன்னுடைய வாழ்வை இது இரண்டிற்காகத்தான் வாழ்கிறான். 


ஒருவன்  உணவுக்காக என்ன செய்வான்?
உழைத்து சம்பாதித்து உணவு பெற்றுக்கொள்வான். இதைத்தான் நாம் இன்றைய சூழ்நிலையில் வரவேற்கிறோம்.
அல்லது
திருடுவான். இது ஒழுங்கீனமான செயல்.  இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அல்லது
பிச்சை எடுப்பான். உழைக்காமல் பிச்சையெடுப்பது என்பதை நாம் வரவேற்க கூடாது.


உணவுப்பசிக்கு மனிதர்கள் என்ன செய்கிறார்களோ அதுபோலத்தான் உடல் பசிக்காகவும் செய்கிறார்கள்.

சிலர்  ஒழுக்கத்துடன் இருந்து காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

சிலர் ஒழுக்கத்துடன் இருக்க முடியாமல் சிறு வயதில் காதல் என்ற திருட்டில் ஈடுபடுகின்றனர். (இந்த திருட்டை நாம் அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டோம்.)
அல்லது

சிலர்  தகாத உறவில் ஈடுபடுன்றனர். (கள்ளக்காதல்)இதை சட்டம் தண்டிக்கிறதா என தெரியவில்லை. இருப்பினும் இதை நாம் வரவேற்க கூடாது. (நாளைய சமுதாயம் இதையும் அங்கீகரிக்கும் என்பது வேறு விடயம்)


சிலர் வன்புணர்வில் ஈடுபடுன்றனர். பசிக்கு சிலர் வழிப்பறிகளில் ஈடுபடு- வதைப்போலத்தான் இதுவும். திருட்டும் வழிப்பறியும்  ஒன்றல்ல. இருப்பினும் ஒரு விதத்தில் இதற்க்கான அடிப்படை காரணம் ஒன்றுதான்.

பசிக்கு ஒரு சிறுவன் திருடினால் மன்னிப்பதைபோல இன்று காதல் திருட்டை சில நேரங்களில் சிலர் ஏற்கிறார்கள் சில நேரங்களில் சிலர் எதிர்க்கின்றனர்.

உடல்பசி வன்புணர்வுக்கு வழிவகுக்குமா என்றால் அதற்க்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
உடல்பசியை சிலர் சுய இன்பம் மூலம் போக்கி கொள்கின்றனர். சிலர் மஞ்சள் பத்திரிகை, நீலப்படம் என்பவை மூலம் தீர்த்து கொள்கின்றனர்.(சிலருக்கு இவை வடிகால், சிலருக்கு இவைகளால் பிரச்சனையும் உண்டு )


சிலருக்கு காதலிக்க பெண் கிடைக்கிறாள் அதனால் சிலர் தங்களது உடல் தேவைகளை அவர்கள் மூலம் தீர்த்து கொள்கின்றனர். இவ்வாறு சிலர் கடற்க்கரையிலும், பூங்காக்களிலும்,தோப்புகளிலும்  காம லீலைகளில் ஈடுபடும்பொழுது காதலிக்க பெண் கிடைக்காதவன் என்ன செய்வான்?
பெண்ணுக்கு வலை விர்ரிக்கிறான் ,பெண்ணை இடிக்கிறான், கையை பிடித்து இழுக்கிறான், கற்பழிக்க முயற்சி செய்கிறான். கற்பழிக்கிறான்.

இப்பொழுதெல்லாம் ஒரு பெண் ஒரு ஆண் கூட மட்டும்தான் சுற்றுகிறாள் என்று சொல்வதற்கில்லை சில பெண்கள் பல ஆண்களுடன் சுற்றுகின்றனர். (பசங்கள் அதுக்கு மேல )இதை பார்க்கும் ஒருவன் அவர்களிடம் மட்டும் போகிறாய் என்னிடம் வரமாட்டாயா என்று  கேட்கமாட்டான் என்று சொல்லமுடியுமா?
சில இளைஞர்கள் பாலியல் குற்றங்களில்  ஈடுபட  இவைகளும் காரணிகளாக இருக்கலாம் என்றுதான்  கூறுகிறேனே தவிர வன்புணர்வை நான் ஆதரிப்பதாக யாரும் எண்ணவேண்டாம்.


ஒரு மனிதனின் உணவு,உடை, உறைவிட தேவைகளை நிறைவேற்றுவது எப்படி அரசாங்கத்தின் கடமையோ அவ்வாறே ஒரு மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுமாறு அரசாங்கம் பார்த்துக்கொள வேண்டும்.

இதுவரை நாம் இளைஞர்கள் பார்வையில் வன்புணர்வை அலசினோம்.


உடல்தேவைக்கு மனைவி இருந்தாலும் சிலர் தகாத உறவுகளிலும்,வன்புணர்விலும்  ஈடுபடத்தான் செய்கின்றனர்.
இவர்களை கொலை கொள்ளை செய்பவர்களோடு ஒப்பிடலாம். அதாவது தேவைக்கு  அதிகமான பணம் இருந்தாலும் அதீத ஆசையால் ஊழல், கொள்ளைகளில் ஈடுபடுபவனும் உடல் தேவைக்கு மனைவி இருந்தும் தகாத உறவில், வன்புணர்வில் ஈடுபடுபவன் மனநிலையும் ஒன்றுதான்.இருப்பினும் கொடுமைகளின், குற்றங்களின் வீரியம் வேறு என்பதை மறுப்பதற்கில்லை.


இப்படிப்பட்டவர்கள் செய்யும்  குற்றங்களையும் சரி இளைஞர்கள் செய்யும் குற்றங்களையும் சரி தடுக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.

மனிதத்தை பற்றிய கல்வியும் அதில் ஒழுக்கத்தின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.பிறந்ததிலிருந்து இவற்றை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.

ஒழுக்கம் தவறுவது குற்றம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று  காதல் எனும் ஒழுங்கீனத்தை நாம் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டோம். தமிழ் நாட்டில் சில அரசியல் கட்சிகள் கடற்கரையில் காதலிப்பவர்களுக்கு (? :) )குடை கொடுத்தாலும் கொடுப்பார்கள் போல. (ஒரு ஆணும் பெண்ணும் ஊர் சுற்றாமல் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யலாம் என்பதே என்னுடைய நிலைப்பாடு)

நாளை கள்ளக்காதலையும் சிலர் ஆதரிப்பார்கள்.

ஆண் ஆண்,பெண் பெண் உறவு ஒழுங்கீனத்தையும் பல நாடுகள் அங்கீகரிக்க  ஆரம்பித்துவிட்டன.
மனிதன் மிருகம் உறவை  கூட இந்த மானிட சமூகம் நாளை அங்கீகரிக்கும். இவற்றை எல்லாம் இப்பொழுதே தடுத்து நிறுத்துவதுதான் சரி. அதற்க்கான முயற்சியை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உண்மை,நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம் போன்றவற்றை பின்பற்றும்படி கலை,கல்வியை அமைக்க வேண்டும்.

என்னதான் ஒழுக்கம் என்று சொல்லி கொடுத்தாலும் ஒருவனால் உடல்  பசியினால் எத்தனை வருடங்கள் தான்  காலத்தை ஓட்ட முடியும்?

எனவே திருமண வயதை அரசாங்கம் குறைக்க வேண்டும்.தற்ப்பொழுதைய சூழ்நிலையில் 16 என்பது சரியான வயதாக இருக்கும் என எண்ணுகிறேன்.  இது பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனையாகத்தான் தோன்றும். ஆனால் இதனால்  இளைஞர்கள் செய்யும்  பாலியல் குற்றங்கள் குறையும்.(வன்புணர்ச்சி குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்களில் பலரின் வயது 16 முதல் 18 வரை என்பதை நினைவில் வைக்க வேண்டும் .)  இன்று இது சாத்தியமா என்றால் அதுவும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. (ஆனால் கிராமப்புறங்களில், இவை சாத்தியம்.)

இன்றைய வாழ்க்கைமுறை பொருளாதாரத்தை மையாமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒருவன் தன்னிச்சையாக சம்பாதித்து சொத்து சேர்க்காமல் (அல்லது பாட்டன் சொத்து இல்லாமல்) கல்யாணம் என்பது சாத்தியமல்ல.
கூட்டு குடும்பமாக வாழும்பொழுது இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். யாருக்கு இது சாத்தியமோ அவர்கள் இதை செயல்படுத்தலாம்.


பெண்ணின் ஆடை வன்புணர்வுக்கு காரணமா?: பெண்ணின் ஆடை ஈர்ப்பை   தூண்டலாமேயோழிய அது வன்புணர்வுக்கு காரணம் அல்ல.இருப்பினும் ஆபாசமான உடைகளை தவிர்த்தல் நல்லது.மூன்று வயது குழந்தை  முதல் அறுபது வயது கிழவி வரை கற்ப்பழிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்த ஆடை கொடுப்பது?  காம கொடூரர்களுக்கு ஆடை ஒரு தடை அல்ல.

சினிமா காரணமா?
இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை அதிலும் பாடல் அலைவரிசைகளை பார்த்தால் அதில் பெரும்பாலான பாடல்கள் பாலியல் உணர்ச்சியை தூண்டுவதாகவே உள்ளன. மிட்நைட் மசாலா விருப்பம் உள்ளவர்கள் பார்க்கட்டும் ஏன் அந்த மாதிரி பாடல்களை பகல் பொழுதில் போட வேண்டும்,சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்க வேண்டும்?

ஆடை ,சினிமா இவற்றால் வன்புணர்வுகள் அதிகரிக்கின்றன என்பதை நான் ஏற்கவில்லை. அவனவனுக்கு ஒரு பெண் இருந்தால் அவன் ஏன் இந்த மாதிரி செயல்களில் ஈடுபட போகிறான்?. அப்படி இருந்தும் ஈடுபடுபவர்கள் மிருகங்கள். 

பெண்களுக்கு தனியாக பேருந்துகள், பள்ளிகள்?
இது தவறில்லை. ஆனால்  இவைகள் வன்புணர்வை குறைக்காது. தவறு செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பிறகு யாராலும்,எதனாலும் தடுக்க முடியாது.  பெண்-பெண் உறவும் அதிகரித்து வரும் வேளையில் இதுவும் சரியான தீர்வல்ல. 


உடனடித்தீர்வு:
காதலர்கள் பூங்காக்களிலும்,கடற்க்கரைகளிலும்  காமலீலைகளில் ஈடுபடுவதை தடை செய்யவேண்டும். 
பெண்கள் குறைவான ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தனியாக செல்வதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிலும் தனியாக இருக்கும்பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. 
வன்புணர்வை ஒரு விபத்தாக பார்க்கும்படி சமுதாயத்தை மாற்றவேண்டும்.



என்ன தண்டனை?
குற்றத்தின் கொடுமையையும், குற்றவாளியின்  வயதையும், சந்தர்ப்ப சூழ்நிலையையும் பொறுத்து  கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும்.


நிரந்தரத் தீர்வு ?
மனிதத்தை,ஒழுக்கத்தை  பற்றிய கல்வி.புறக் கட்டுப்பாட்டை விட அகக் கட்டுப்பாடே நீடித்த தீர்வு தரும்.
குறிப்பிட்ட காலத்தில் அனைவருக்கும் திருமணம்  நடைபெறுமாறு பார்த்துகொள்ளுதல்.


இதை செய்யாத பட்சத்தில் முதலில் காதல் திருமணங்கள் அதிகரிக்கும்,பிறகு கள்ளக் காதல் உறவுகள்-திருமணங்கள் அதிகரிக்கும்பிறகு ஆண் -ஆண், பெண்-பெண் திருமணங்கள் அதிகரிக்கும், பிறகு மனிதன்-மிருக உறவுகள் அதிகரிக்கும், பிறகு மனித இனம் சின்னப்பட்டு சீரழிந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற புதிய  கருத்தை முன்மொழியும். 


புதன், 2 ஜனவரி, 2013

இறைவனுக்கும் ஒளிக்கும் என்ன சம்பந்தம்?


எல்லா மதங்களிலும் ஒளியை இறைவனோடு தொடர்பு படுத்தியிருப்பார்கள். இந்து,கிருத்துவம், இசுலாம் என்று எதுவும் விதிவிலக்கல்ல.

இறைமறுப்பாளராக கருதப்படும் புத்தர்,ஓஷோ  போன்றவர்களும் ஒளியை பற்றி குறிப்பிடுகின்றனர். புத்தரின் இறுதி செய்தியே ஒளி பற்றித்தான். வள்ளலாரும்  'அருட்பெருஞ்சோதி' என்று ஒளியைப்பற்றித்தான் கூறுகிறார்.

இந்த ஒளி என்பவற்றை பலரும் புற ஒளியாக கருதுகின்றனர் அல்லது அறியாமை எனும் இருளை அகற்றும் அறிவாக  பார்க்கின்றனர் அல்லது இந்த இறைவன்கள்,மதங்கள்,தூதர்கள்,யோகிகள் -சித்தர்கள் உலகிற்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்ற பொருளிலே ஒளியை பார்க்கின்றனர். 

ஆனால் இங்கே ஒளி என்பது அக ஒளியையே குறிக்கும்.  அதாவது புருவமத்தி வழியாகவோ தலை உச்சியின் வழியாகவோ காணும் ஒளியைத்தான் குறிக்கின்றது. இந்த ஒளி தரும் அறிவே உண்மையான அறிவு. அதுவே மெய்ஞானம். மெய்யில்  (உடலில்) இருந்து இந்த அறிவை பெறுவதால் இது மெய்ஞானம் எனப்படுகிறது.

கண்களால்தானே ஒளியை காண முடியும் அது எப்படி புருவமத்தியில் ஒளியைக்கான முடியும் என்று பலர் கேட்கலாம். ஆனால் தியானத்தின் மூலம் இது சாத்தியமே.

கண் தெரியாதவர்கள் புற ஒளியைக்கான முடியாது. அவர்களுக்கு ஒளியை பற்றி புரிய வைக்கவும் முடியாது. அதுபோலத்தான் தியானம் செய்யாமல் அக ஒளியைக்கானமுடியாது. பிறருக்கு இதை சொல்லி புரிய வைப்பதும் கடினமாகிறது. 

இந்த அகஒளியை காணும் நிலையைத்தான் நெற்றிக்கண் திறத்தல் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஏன் நெற்றியில் விபூதி இடுகிறார்கள், ஏன் நெற்றியில் சிலுவை இடுகின்றனர்,ஏன் தொழுகையில்  நெற்றியை   அடிக்கடி தரையில் தொடுகின்றனர்  என்று சிந்தித்து பார்த்தால் இதன் பின்னணியில் இருக்கும் உண்மை புரியும்.

நமது சித்தர்கள், ஏசு, முகமது நபி, ஓஷோ, வள்ளலார்,அரவிந்தர், அன்னை  பார்த்த ஒளியை நீங்களும் பார்க்கவேண்டுமா?
தியானம் செய்யுங்கள். 

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.  –  (திருமந்திரம் – 619)

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

மதம் மனிதனுக்கா யானைக்கா? கும்கி


யானைக்கு பிடிக்கும் மதத்தைவிட மனிதனுக்கு பிடிக்கும் மதமே மிகவும் அபாயமானது என்று சொல்வதுதான் கும்கி.

காட்டு யானையை விரட்ட தயார்படுத்தப்படும் சிறப்பு யானைக்கு  பெயர் தான் கும்கி. காடுகளை நாம் அழித்து கொண்டிருந்தாள் காட்டு யானைகள் வீட்டிற்கு வரமால் எங்கு போகும்?

 ஒரு யானை (கொம்பன்) அப்படித்தான் அடிக்கடி ஊர் வயல்வெளிகளில் வந்து மக்களை துவம்சம் செய்து காட்டுக்கு சென்று விடும். அதை விரட்ட கும்கி யானை தேவைப்படுகிறது. கும்கி யானை நேரத்திற்கு கிடைக்காததால் சாதா யானையுடன் நாயகன் சும்மா அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரே இவரை தெய்வமாக பார்க்கிறது. இவருக்கு வேறு மதம் பிடிக்கிறது. கடைசியில் யானை மதம் வென்றதா? நாயகன் மதம் வென்றதா? கொம்பன் அழிக்கப்பட்டானா?  என்பதை திரையில் பார்க்கவும்.

படம் எனக்கு பிடித்திருந்தது. படம் முழுக்க இயற்க்கை காட்சிகள். தம்பி ராமையா பாதி படத்தை தாங்கி நிற்கிறார்.நல்ல நடிப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட நகைச்சுவை வசனங்களும் அருமை.
நாயகன் பிரபுவின் மகன். பாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார். தந்தங்களை பிடித்து அந்தரத்தில் நின்று யானையின் நெற்றியில் முத்தமிடும் காட்சி அருமையானது. அதில் உடற்பயற்சி கூட செய்யாலாமா? :)
 நாயகி கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா என்று சொல்ற மாதிரி. யானையை பார்த்து அவர் மிரளும் காட்சிகள் அருமை. 

பாடல்கள் படத்தோடு பொருத்தமாக உள்ளது.அதனால் தம் அடிக்க யாரும் போகவில்லை.

பிரபு சாலமன் இயக்கம் நன்று.  நாயகனை யானையில்  அமர்த்தி பின்புறத்திலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்களுடன் தன்னுடைய பெயரை போட்டுக்கொண்டுள்ளார். சினிமாத்தனம் என்றாலும் இயற்கையாக அது நன்றாகவே உள்ளது.யானை சண்டை நல்ல முயற்சி. இன்னும் சிறப்பாக எடுத்திருந்திருக்கலாம்.

இயல்பான,அருமையான  படத்தை கொடுத்ததற்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

மனிதனுக்கு எந்த மதம்  பிடித்திருந்தாலும் அது பெரும்பாலும் அனைவருக்கும்  தீமையையே தருகிறது.

பிற்சேர்க்கை: ஒரு தலைவனின் மனதில் ஏற்படுகின்ற மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது.அதற்க்கு ஒரு வலுவான காரணமும் தேவைப்படுகிறது. இந்தப்படத்தில் சமுதாயத்  தலைவனுக்கு அதற்க்கான காரணம் இருக்கின்றது. எனவே அவர் மனதில் மாற்றம் ஏற்ப்படுகிறது என்பதுபோல காட்சியை அமைத்திருக்கலாம். அது காலத்திற்கு ஏற்றார்போல இருந்திருக்கும்.

திங்கள், 10 டிசம்பர், 2012

கமல் என்ன முட்டாளா?

திரைத்துறையில் புத்திசாலியாக கருதப்படும் கமலின் அடுத்த திட்டம் வீட்டுக்குள் திரைப்படம். கமலின் திரைப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் திரையிடும் திட்டம் சில பல   எதிர்ப்புகளையும்,ஆதரவையும் பெற்றுள்ளது.


திட்டம்: திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு DTH (நேரடி தொலைகாட்சி?)  யில் படத்தை வெளியிடுவது.

நன்மைகள்:
1. ஒரே நேரத்தில் பலரையும் படம் பார்க்க வைக்கலாம்.
2. வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் உள்ளவர்கள் தமிழ் படத்தை உடனடியாக பார்க்கலாம்.
3. பலரும் ஒரே நேரத்தில் படம் பார்ப்பதால் படம் நன்றாக இல்லையென்றாலும் லாபத்தை ஈட்டிவிடும். (எதிர்காலத்தில்) இதுதான் இந்தத்தொழில்நுட்ப்பத்தின் மிகச்சிறந்த  வரப்பிரசாதம்,குர்பானி,அப்பம் :)
4.முதல் காட்சியை பெரும்பாலும் பெண்களால் பார்க்கமுடிவதில்லை. இனி பெண்களும் முதல் காட்சியை பார்க்கலாம்.

தீமைகள்:
1.எதிர்காலத்தில் திரையரங்கத்தொழில் பாதிக்கப்படும். நேரடி தொலைக்காட்சியில் முதலில் படம் பார்க்கலாம் என்றால் நமது தீவிர ரசிகர்கள் இதைத்தான் விரும்புவார்கள்.
2.திருட்டு vcdக்கள் நிறைய உருவாகும். தொலைக்காட்சியில் படம் பார்க்கும் வசதி உள்ளவர்கள் இதை வாங்க மாட்டார்கள்.
3. சிலர்  படத்தை பதிவு செய்து youtube இல் ஏற்ற வாய்ப்புகள் உண்டு. (பதிவு செய்ய முடியாத மாதிரி படத்தை ஒளிபரப்பினால் திருட்டு vcd,youtube பிரச்சனைகளை தவிர்க்கலாம்)

நன்மையா தீமையா?
1. (எதிர்காலத்தில்)இனி நடிகர்களுக்கு பாலபிஷேகம்,பீரபிஷேகம் இருக்காது :)
2.ரசிகர் மன்றம் கலையிழக்கும்.


திரையரங்கு உரிமையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டியது:
எந்த ஒரு தொழில்நுட்பமும் ஒரு தொழிலை பாதிக்கவே செய்யும். தொழில்நுட்பத்திற்கு தகுந்த மாதிரி தொழிலை மேம்படுத்திக்கொள்வது அல்லது மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இன்று தெருக்கூத்து என்பது அழிந்துவிட்டது. இதற்க்கு காரணம்  திரைப்படங்களும் திரையரங்குகளும் தான். அதுபோலத்தான் இதுவும். 
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனதில் வையுங்கள்.

திரையரங்குகளும் பாதிக்காமல்,இம்முறையையும் செயல்படுத்த கமல் என்ன செய்யலாம்?
எட்டு மணி நேரத்திற்கு முன்பு தொலைக்கட்சியில் ஒளிபரப்புவதற்கு பதிலாக ஒரே நேரத்தில் திரையரங்கிலும் நேரடித்தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப வேண்டும்.
 இதானால் இருதரப்பும் பயனடையும். இந்த நிலையில் நமது ரசிகர்கள் திரையரங்கிலும், பொது மக்கள் (பெண்கள்,குழந்தைகள்,வயதானவர்கள்) நேரடித் தொலைக்காட்சியிலும்  படம் பார்பார்கள். 
நேரடித்தொலைக்கட்சி கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பொதுமக்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.நேரடித்தொலைகாட்சி வசதியில்லாதவர்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.

இந்த முறையால் திரைத்துறை மேலும் வளர்ச்சியை சந்திக்கும்.

நேரடித் தொலைக்காட்சியின் மூலம் இனி நேரடித் திரைப்படம்  கண்டுமகிழுங்கள் :)

இது ஒரு சோதனை மறுபதிவு 

வியாழன், 29 நவம்பர், 2012

மாயன்கள் தமிழர்களா? அவர்கள் விண்வெளிக்கு சென்றனரா??


இன்றைய  நிலையில் உலகில் பேரழிவு ஏற்பட்டு பெரும்பாலான மக்களும் கண்டுபிடிப்புகளும் அழிந்துவிட்டால் என்னவாகும்? மிச்சம் மீதி இருப்பவர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை, பயன்படுத்திய பொருட்களை பற்றி எழுதியோ,சித்திரம்  வடித்தோ,கதைகளாகவோ கூறி வைப்பார்கள். 

பல நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் சந்ததியினர் அந்த கதைகளை கேட்கும்பொழுது  பாருடா கூகிள் என்ற ஒன்ற வைத்து இவர்கள் பல தகவல்களை  நொடிகளில் பெற்றனராம், இடம் விட்டு இடம் செல்ல வானத்தில் பறந்து சென்றனராம், ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வை மற்றொரு இடத்தில் இருந்து கண்டார்களாம்,செல் என்னும் ஒன்றை பயன்படுத்தி பல மைல் தொலைவில் உள்ளவர்களுடன் பேசினார்களாம்   என்னமா கதை விடுகின்றனர் இவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்பார்கள்.

நமது மூதாதையர்கள்  வாழ்ந்த வாழ்க்கையை  நாம் இப்படித்தான் கூறுகின்றோம் என்றே நான் நினைக்கின்றேன்.

ஆன்மீக வாழ்வை விரும்பாமல் அறிவியலிலும் கண்டுபிடிப்புகளிலும், உலக இச்சைகளிலும் மட்டும் கவனம் செலுத்தியவர்களை மாயன்கள்  என்று ஆன்மீக இந்தியர்கள் அழைத்திருப்பார்களோ?


மெய்ப்பொருள் காண்பதறிவு 

வெள்ளி, 23 நவம்பர், 2012

உலக நாடுகளை ஏன்,எப்படி அழிக்க வேண்டும்?


என் அருமை சகோதரர்களே,நண்பர்களே  நாம் உலக நாடுகளை அழிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாடுகளை அழிக்க நாம்  பரிந்துரைப்பது மனித வெடிகுண்டு  அல்ல, மனிதம்.

ஜாதி,மதம்,இனம்,மொழி, நாடு  என நாம் பல பிரிவுகளால் பிரிந்து நிற்கின்றோம். இவற்றை நாம் அழிக்காவிட்டால் இவற்றால் மனிதகுலம் அழிவதை நம்மால் தடுக்க இயலாது. இவைகள் வெறும் அடையாளங்களாக இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் இந்த அடையாளங்களால் நமக்கு வெறி உண்டாகிறது . ஜாதி வெறி,மத வெறி,இன வெறி,தேச வெறி  என்று பல வெறிகளை உண்டாக்க நாம் வழிவகுத்து தந்துள்ளோம்.

ஜாதி பிரச்சனை ஊருக்குள், இந்தியாவிற்குள் பிரச்சனையை உண்டாக்குகின்றது. மதம்,இனம்,நாடு போன்றவை உலக அளவில் பிரச்சனையை உண்டாக்குகின்றது.

வரலாற்றை புரட்டி பார்த்ததால் இனத்திற்காகவும், மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் தான் பல மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.என் இனம்,என் மதம், என் நாடு என்ற உணர்வு வெறியாக மாறியதே இதற்க்கு காரணம்.

நாம் அனைவரும் மனிதர்கள் எனும்பொழுது நமக்கு ஏன் இந்த இனம்,மதம்,  நாடு சார்ந்த வெறிகள்?நமக்கு ஏன் இந்த அடயாளங்கள்? 

இனம்,மதம் என்ற அடையாளங்களை  மனிதகுலத்தின் நலனுக்காக நாம் அழிக்கவேண்டும்.நாம் அனைவரும் மனிதர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு போதிக்க வேண்டும்.

இனம்,மதம் ஆகியவற்றை அழித்த பிறகு  இன்றைய நிலையில் உள்ள நாடு என்பதையும் நாம் அழிக்க வேண்டும்.

அதாவது இந்தியா என்ற  ஒரு நாடு பல மாநிலங்களால் ஆனவை அதுபோல இந்த பூமியும் பல நாடுகளால் ஆனவை. பல மாநிலங்களுக்கும் எவ்வாறு தனித்தனி அதிகாரமும், மத்திய அரசுக்கென்று தனி அதிகாரமும் உள்ளதோ அதைப்போல நாம் உலக அளவில் ஒரு நிர்வாகத்தை உருவாக்கவேண்டும் .

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களுடைய வருமானத்தை மத்திய அரசாங்கத்தோடு  பகிர்ந்துகொள்கின்றது. அதுபோல இப்புவியில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய வருமானத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும். இப்படி பகிர்ந்துகொள்ளும்போழுது உலகில் ஒவ்வொரு வருடமும் பசியால் இறக்கும் ஆறு மில்லியன் குழந்தைகளின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தோடு சண்டையிடுவதில்லை, அந்த மாநிலம் நம்மை தாக்குமோ என்ற அச்சம் கொள்வதில்லை . அதுபோல   உலக நாடுகள் அனைத்தும்  அச்ச உணர்வைவிடும்படி நாம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது  $2,157,172,000,000 பணத்தை நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பயன்படுத்தலாம்.  நான் கூறிய அந்த தொகை சென்ற  ஆண்டு  உலக நாடுகளால் ராணுவத்திற்காக செலவிடப்பட்டதாகும். 

உலகத்தை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்போழுது எல்லை 

பிரச்சனைகளையும்  நம்மால் குறைக்க முடியும். ஒரு நாடு மற்றொரு 

நாட்டினை தாக்குவதை நம்மால்  கட்டுப்படுத்த முடியும்.


இந்தியாவில் உள்ளவர்கள் எப்படி பிற மாநிலங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடிகிறதோ அவ்வாறு உலகின் எந்த மூலைக்கும் கடவுச்சீட்டு இல்லாமல் செல்ல முடியும்.

இனம்,மதம் என்ற அடையாளங்களை அழித்து நாடுகளையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும்பொழுது இவை இருப்பவைகளால் கொல்லப்படும் பல பில்லியன் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

உலக நாடுகளை ஒன்றினைக்கும்போழுது சில சிறிய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.  எதிர்ப்புகளை தாண்டி அவ்வாறு ஒரு நிர்வாகத்தை நாம் அமைக்கும்பொழுது மனிதகுலம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்,பல நன்மைகளை அடைய முடியும்.

இது நடக்குமா என்பது தெரியவில்லை...ஆனால் இது நடக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நாம் மனிதம் என்ற ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும். 

செவ்வாய், 20 நவம்பர், 2012

இணையத்தை உபயோகிப்பவர்களே இந்த ஆப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு சொல். IT Act Sec 66(a) வை பயன்படுத்தி இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முகநூலில் பால் தாக்கரே பற்றி எழுதியதற்காக ஒரு பெண்ணும் அதை  'லைக்' செய்ததற்காக ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பிறகு பெயிலில் விடப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில் இந்த சட்டத்தை பயன்படுத்தி  இது எத்தனையாவது கைது என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகின்றேன்.

நம்மில் சிலர் வழக்கம்போல  ஒரு பதிவு போட்டுவிட்டு அமைதியாக இருப்போம் சரியா? 

 IT Act Sec 66 a  க்கு  எதிராக சிலர் வழக்கு தொடர்ந்தததாக கேள்வி. அந்த வழக்கிற்கு  என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நம்முடைய எதிர்ப்பை ஆர்ப்பாட்டம், பேரணி மூலம் காட்டினால்தான் நம்முடைய குமுறல் சட்டத்தை இயற்றுபவர்களின் காதுகளுக்கு செல்லும் என நினைக்கின்றேன்.
விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் காந்தி சிலைக்கு அருகில் ஒன்று கூடி  IT ACT 66 (a) க்கு  எதிராக குரல் கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.

விருப்பம் உள்ளவர்கள் எந்த நாளில், எந்த நேரத்தில் இதை செய்யலாம், இதை எப்படி ஒருங்கிணைக்கலாம்  என்ற உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.அனுபவம்  உள்ளவர்கள் வழிகாட்டுங்கள்.

மின்னஞ்சல்:puratchimanidham@gmail.com

நீங்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை, வரவில்லை என்றால் நான் மட்டும் சென்று  சுண்டல் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவேன் :)


இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்!


Related Posts Plugin for WordPress, Blogger...