வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 10 ஜனவரி, 2012

இனி பண்ருட்டி பலாப்பழம் , முந்திரி கிடைக்காது தெரியுமா?


பண்ருட்டி என்றால் பலாப்பழம் என்று பலரும் கூறுவார்கள். அதற்க்கு அடுத்த படியாக முந்திரியும் பண்ருட்டியின் சிறப்புதான். ஆனால் இவை இரண்டும் இனி இங்கே கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

தானே  புயலால் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று  வட்டாரத்தில் உள்ள முந்திரி மரங்கள் மற்றும் பலா மரங்கள் வேரோடு விழுந்துவிட்டன. விழுந்த மரங்கள் ஐம்பது சதவீதம் முதல் எழுபது சதவீதம் வரை இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மிஞ்சியிருக்கும் மரங்களிலும் கிளைகள் இல்லாமல் மொட்டையாகவே இருக்கின்றது.

புதிதாக செடி வைத்து உண்டாக்கினால் அவை வளர்ந்து பலன் கொடுக்க  மிக குறைந்த பட்சமாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆகும். அதுவரை இங்குள்ள மக்களின்  கதி? :(

பெரும்பாலான மக்கள் முந்திரி, பலாவை நம்பியே இந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். இதுதான்  அவர்களுக்கு சோறு போட்டது.  எந்த ஒரு நல்ல காரியம் ஆனாலும் அது முந்திரி விளைச்சலுக்கு பிறகு தான் இங்கு நடக்கும்.  முந்திரி பலாவில் வரும் பணத்தை வைத்து தான் தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்வார்கள், படிக்க பணம் கட்டுவார்கள். இனி இவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. 


முந்தரி  கொட்டை  உடைத்து, முந்திரி பயிர் உரித்துதான் இங்குள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர் இனி அவர்களுக்கு அந்த வருவாய் கிடைக்கப்போவதில்லை. 

தமிழக அரசு முந்திரி பலாவிற்கு ஹெக்டேருக்கு ஒன்பதாயிரம் ரூபாய் அளிப்பதாக கூறியுள்ளது. இப்பணம் விழுந்த மரங்களை  அப்புறப்படுத்த தரும் கூலிக்கு கூட போதாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

யாருக்கு சில மரங்கள் தப்பிபிழைத்துள்ளதோ  அவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவார்கள் என்றே நினைக்கின்றேன். முந்திரி மற்றும் பலாவின் விலை இனி விண்ணைத்தொட போகிறது.  

முக்கனியான பலா இனி தமிழனுக்கு எட்டாக்கனிதான்.


சனி, 7 ஜனவரி, 2012

சனி பகவானின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்?


சூரியக்கதிர்  எப்படி நம்மீது, புவி மீது படுகிறதோ அவ்வாறே சனியின் கதிர் வீச்சும்  நம்மீது படுகிறது.

சனி பகவான் இல்லையேல் நாம் இல்லை. நாம் உலகில் நிம்மதியாக அமைதியாக  வாழ முடியாது. அப்படி இருக்க ஏன் அவரை கண்டு பயப்பட வேண்டும்.
 ஆயுளை நீட்டிக்கும் சக்தி சனிபகவானுக்கு அதிகம் உண்டு அப்படிப்பட்ட சனிபகவானை பார்த்து மக்கள் பயப்பட தேவையில்லை. 

சனி பகவானின் அருளைப்பெற சில வழிகள்:
௧. உண்மை நேர்மை இவற்றை பின்பற்ற வேண்டும்
௨. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பேதம் பார்க்க கூடாது
௩. நிற பேதம் பார்க்க கூடாது.(கருப்பா அசிங்கமா என்ற வார்த்தைகளை மறந்து விடுதல் நன்று. சனியனே, சனியன் பிடித்தவேனே என்ற வார்த்தைகளையும் தவிர்ப்பது மிக நன்று )
௪ . ஏழை எளியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும்,விதவைகளுக்கும்   உங்களால் முடிந்த  உதவிகளை செய்யுங்கள். கண்டிப்பாக இவர்களை பார்த்து முகம் சுழித்தல் கூடாது. 
௫. சனிக்கிழமை தோறும் அல்லது மாதத்திற்கு ஒரு சனிக்கிழமையாவது  நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக நன்று. 
௬. உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வதும் நன்று 
௭ . இனிப்பால் ஆன எள்ளுரண்டை சாப்பிடலாம் - குழந்தைகளுக்கு கொடுங்கள் 
௮ . பாதங்களை  தூய்மையாக வைத்து கொள்ளுதல் அவசியம் 
௯. சனிக்கிழமைகளில் நீல நிற ஆடை அணியலாம் 
௧௦.வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபடுதல் நன்று.  இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனுமன் மற்றும் விநாயகரை வணங்கலாம் என்று சொல்கிறார்கள். 
௧௧. வயதில் மூத்தவர்களுக்கும் , வயதானவர்களுக்கும்   மரியாதை  தருதல்  நன்று (பெற்றோரை தவிக்க விட்டால் ஆப்புதான் )
௧௨. துப்புறவு தொழிலாளர்களையும் , சாக்கடை சுத்தம் செய்பவர்களையும் (அட எந்த தொழில் செய்பவர்களையும்) தாழ்வாக என்ன கூடாது. 
௧௩.நேரம் கிடைக்கும் பொழுது நெற்றி வேர்வை நிலத்தில் படும்படி உடல்  அழுக்காகும் படி   வேலை செய்வது (உபயம்:முருகேசன் சார்)அல்லது விளையாடுவது நல்லது. 

இவற்றை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும் . சனி திசை நடக்கும் பொழுதும் ஏழரை சனி நடக்கும் பொழுதும் இதை கடை பிடிப்பதும் நன்மையை தரும். 

உண்மையாக,  நேர்மையாக, தவறு செய்யாமல்  நடந்து கொள்பவர்களுக்கு சனி பகவான் நன்மையே செய்வார். தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக சனிபகவானால் தண்டனை  கிடைக்கும். ஆக முடிந்த வரை நல்லவனாக வாழ்வதே சனி பகவானின் அருளைப்பெற ஒரே வழி. 

புதன், 30 நவம்பர், 2011

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது வானம் அல்லது ஆகாயம் என்று ஒரு  பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் அதற்கு அடுத்து பிரபஞ்சத்தில் என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

நான் பல மத சமபந்தமான நூல்களை மேய்ந்த பொழுது அனைத்து நூல்களும் பிரபஞ்சத்தில் இரண்டாவது தோன்றியது நிலம் அல்லது பூமி என்றே கூறுகின்றது.  ஆனால் அறிவியலின் படியும் ஆன்மீக உள்ளுணர்வின் படியும் இதில் எனக்கு உடன்பாடில்லை. 

பிரபஞ்சத்தில் இரண்டாவது காற்றுதான் உருவாகியிருக்க வேண்டும்.(அந்த காற்று ஹைட்ரஜனாக இருக்கலாம்)  அந்த காற்றானது காலப்போக்கில் வெப்பமடைந்து சில இடங்களில்  நெருப்பு பிழம்பாக மாறியது. காலப்போக்கில் இந்த நெருப்பு பிழம்பே வெடித்து சிதறி இருக்கலாம். பிறகு சில காலம் கழித்து நீர்/மழை உண்டாகிறது(H2O- ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தது தான் நீர்). 

இந்த மழையானது நெருப்பு பிழம்பின் மீது படும்போழுது அது குளிர்ந்து நிலம் உருவானது. (அதாவது  பூமி போன்றவை). இப்படி உருவான பிரபஞ்சமானது விரிந்து கொண்டே செல்கிறது. பிறகு சில காலத்திற்கு பிறகு அது சுருங்குகிறது.  அனைத்தும் அணுவை விட மிகச்சிறிய புள்ளியாக சுருங்கிறது. அழுத்தம் காரணமாக அது வெடித்து சிதறுகிறது. அந்த  வெடிப்புதான் பெரு  வெடிப்பு எனும் "big bang".

மீண்டும்  பிரபஞ்சம்  விரிவடைகிறது  பல  காலத்திற்கு  பிறகு  மீண்டும்  சுருங்குகிறது  மீண்டும்  பெரு  வெடிப்பு . இவ்வாறு  இது  ஒரு  தொடர்  நிகழ்வாகவே  நடந்து  வருகிறது . என்பது ஒருவகையான பிரபஞ்ச தோற்றத்தை பற்றிய கருத்து.

இதைத்தான் கீதையில் கண்ணபிரான் நான் பிரபஞ்சத்தை  உருவாக்கி  அழித்து மீண்டும் உருவாக்குகிறேன் என்று சொல்வதாக வைத்துள்ளனர்.  


இப்பொழுது இந்த கருத்தின் படி பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், இரண்டாவது காற்று, மூன்றாவது நெருப்பு, நான்காவது நீர், ஐந்தாவது நிலம்.  இதைத்தான் ஐம்புதங்கள் என்பர்.

இவை ஐந்தும் இல்லையேல் யாரும் இல்லை. இவை ஐந்துமே அனைத்திற்கும் முதலானது. அனைத்திற்கும் ஆதாரம் இதுவே. ஆதலால் தான் என்னவோ இதை தெய்வமாக வழி பட ஆரம்பித்தனர் பண்டைய மக்கள். 

இந்த பிரபஞ்சத்திற்கு, இயற்கை சக்திக்கு சிவம் என்று பெயரிட்டனர். அதுதான் இன்றைய முக்கியமான ஐந்து சிவன் ஆலயங்கள். 
அவற்றை பஞ்சபூத ஆலயங்கள் என்பர்

சிதம்பரம் எனும் திருச்சிற்றம்பலம் - ஆகாயம் 
 காலஹஸ்தி எனும் திருக்காளத்தி - காற்று
திருவண்ணாமலை- நெருப்பு 
திருவானைக்காவல் -  நீர் 
காஞ்சிபுர ம் எனும் திருக்காஞ்சிபுரம் - நிலம் 

இங்கே இந்த முதலில் உருவான எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற  ஐந்து இயற்க்கை சக்தியை  தான் மக்கள் சிவனாக வழிபடுகிறார்கள்.

எல்லாம் சிவமயம் என்பது இவற்றைத்தானோ? 

சனி, 5 நவம்பர், 2011

தமிழ் தமிழன் என்றால் ஏன் பலருக்கு எரிகிறது?


மிகவும் கசப்பான உண்மையை நான் இங்கே  சொல்லப்போகிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். 

தமிழ் தமிழன் என்று சொன்னாலே தமிழ் நாட்டில் உள்ள சிலருக்கு அல்லது பலருக்கு ஏன் எரிகிறது என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே உள்ளது. இதற்கான காரணமாக நான் கருதுவதை இங்கே  எழுதுகிறேன். இது எந்த அளவுக்கு சரி அல்லது தவறு என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

௧. தமிழ்நாட்டில் வசிக்கும்  சிலபலர்   தன்னை தமிழன் என்றே  நினைப்பது இல்லை. 
(தமிழன்  என்றால்   என்ன அதை எப்படி வரையறை செய்வது? இனிமேல் தான் வரையறுக்கப்படவேண்டும் என நினைக்கின்றேன்.) 
 தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களா?  இதற்கு பதில் இல்லை என்று தமிழ் பேசும் பலரே  கூறுவார்கள். காரணம் அவர்களின் தாய் மொழி வேறு ஒன்றாக இருக்கும். அப்படி தாய் மொழி தமிழாகவே சிலருக்கு இருந்தாலும் அவர்கள் மூதாதையர்களின் மொழி வேறு ஒன்றாக இருக்கும். 

தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு வழி வந்தவர்களும், மலையாள வழி வந்தவர்களும், கன்னட வழி வந்தவர்களும் தங்களை தமிழன் என்று சொல்லிக் கொள்வதில்லை.மேலும் தமிழ் மொழியை பற்றி பெருமைகள் பேசினால் இவர்களுக்கு எரிகிறது.தங்கள் மொழியை பற்றி பேசவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு காரணம். பாதுகாப்பின்மையாக கூட கருதலாம்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு. (இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழன் தமிழை  உயர்த்தி பேசுகிறானே தவிர மற்ற மொழிகளை தாழ்த்தி பேசவில்லை.) 

௨. கிருத்துவர்களும், இசுலாமியர்களும் தங்களை மதத்தின் பிரதிநிதியாக பார்க்கிறார்களே தவிர மொழியின் பிரதிநிதிகளாக பார்ப்பதில்லை. மதத்திற்கு  தரும் முக்கியத்துவத்தை தமிழுக்கு தருவதில்லை. இதற்கும் விதி விளக்குகள் உண்டு. (மதத்தை விட மொழிதான் பழமையானதும் போற்றத்தக்கதும் எனபதை இவர்கள் உணர வேண்டும். எப்பொழுது நினைத்தாலும் மதம் மாறலாம். ஆனால் மொழி மாற முடியாது.)

௩.பெரியார் தீண்டாமையை ஒழிக்கும் தன் பாதையில்  சில பல பிராமணர்களை நீங்கள் ஆரியர்கள் சமஸ்கிருதம்  தான் உங்கள் மொழி என்று  தமிழுக்கு எதிரியாக்கிவிட்டார்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு.

௪ தமிழ் தமிழன் என்று தமிழர்களை தன் சுய நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் சிலர் பயன் படுதிக்கொண்டதால் இன்று உண்மையாக தமிழ் தமிழன் என்பவனையும் சில பல  உண்மையான தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

௫. கடந்த பல வருடங்களாக பலரும்  ஆங்கில வழியில் கல்வி கற்று வருவதால் அவர்களுக்கு தமிழ் மொழியின் மீது பற்றில்லாமல் போய்விட்டது.  சிலர் தமிழில் அப்படி என்ன இருக்கிறது, நாம் ஆங்கிலத்தில் படித்து இன்று நன்றாகத்தானே இருக்கிறோம், பின்பு ஏன் இவர்கள் இன்னும் தமிழ் தமிழன் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு.

இந்த சில காரனங்களால் தான் இன்று தமிழ் தமிழன் என்றால் பலருக்கும் எரிகிறது. 

நான் அனைவரும் ஜாதி மதம் போல் மொழி என்ற வட்டத்தில் அனைவரும் தங்களை அடைத்து கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. மாறாக மொழிக்கு முக்கியத்துவம்  கொடுங்கள் என்று தான் கூறுகிறேன். (ஜாதி மதம் என்ற வட்டமே தேவையற்றது என்றே நான் நினைக்கின்றேன்) 

ஆனால் மொழியை அவ்வாறு ஒதுக்க முடியாது ஒதுக்கவும்  கூடாது.
மனிதன் கண்டுபிடிப்பில் நான் மிகவும் உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் கருதுவது மொழியைத்தான். மொழியின் பெயரால் சண்டை இடுங்கள் என்று நான் கூறவில்லை. அனைத்து மொழியையும் அன்போடு பாருங்கள் என்றுதான் கூறுகிறேன். அனைத்து மொழிகளையும் ஏற்றத்தாழ்வின்றி பார்க்க வேண்டும் 

தாஜ்மஹாலை முகமதியர்களின் சின்னமாக பார்க்காமல் எப்படி காதலின் சின்னமாக கொண்டாடுகிறோமோ அவ்வாறே தமிழின்  தொன்மையை நாம் பார்க்க வேண்டும். (இதற்கு சமஸ்கிருதம் விதிவிலக்கல்ல).

அதே நேரத்தில் அவர் அவர்களது தாய்மொழியை காப்பது தாய் தந்தையை காப்பது போல் அவர் அவர்களின் கடமை என்று உணர்ந்தால். மொழியின் பெயரால்  சண்டையும் வராது, அச்சமும் வராது, எரிச்சலும் வராது. 

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பிரபஞ்சத்தில் முதலில் உருவானது எது?


பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. 
பெருவெடிப்பின் அதாவது "big bang"  மூலம் தான் பிரபஞ்சம் உருவானது என்று பெரும்பாலான அறிவியலாளர்கள் சொல்கின்றனர். இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

இன்றைய பிரபஞ்சம் பெருவெடிப்பின் மூலமாக உருவாகி இருந்தாலும் அதுவே முழு முதல் தொடக்கம் அல்ல. அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வே.  அதாவது பெருவெடிப்புக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும். 

அப்படி பெருவெடிப்புக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றி இருந்தால் முதலில் என்ன தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வி.

சென்ற பதிவில் பிரபஞ்சம் தோன்றும்பொழுது எந்த வண்ணத்தில் இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினேன். அதற்க்கான பதில் "கருப்புக்கும் நீலத்திற்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்" அதை "நீலம்" என்றும் சொல்லலாம். . இப்பொழுது உங்களுக்கு தெரிய வந்திருக்கும் பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது எது என்று.
ஆம் அதுதான் வானம். 

இதை நீங்கள் உங்களின் அகத்தாய்வின்  மூலம் "காண" முடியும் ஆமாம் "காண" முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.  இது என்னுடைய கற்பனையா அல்லது உண்மையா என்பதை நீங்கள் அகத்தாய்வின் மூலம் மட்டுமே உணர முடியும்.

அகத்தாய்வில் இருப்பவர்களில் பலர்  முதன் முதலில் கிளிபச்சை நிறத்தை  காண்பதற்கான  வாய்ப்புகளே அதிகம். 
ஆதலால் சிலருக்கு கிளிப்பச்சை நிறம் தான் பிரபஞ்சத்தில் முதலில் 
 தோன்றி இருக்குமோ என்ற எண்ணம் வரலாம். அது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. வள்ளலாரின் கூற்றுப்படி இந்த கிளிப்பச்சை நிறம் தான் ஆன்மாவை மறைத்திருக்கும் முதல் திரை.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது?

உலகத்திலேயே விடைகான முடியாத மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்றாக  கருதப்படுவது பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்பது.  ஒரு பக்கம் பார்த்தல் இது ஒரு மிக சுலபமான கேள்வியாக தெரிகிறது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு செல்வது என்பது மிகவும்  சுலபமான ஒன்று.ஒவ்வொரு உயிரினமும் அந்த நிலைக்கு  தினமும் செல்கின்றது என்று சொன்னால்  நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மையாக இருக்குமோ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகின்றது.

அது என்ன நிலை?
நீங்கள் தினமும் தூங்குகின்றீர்கள் அல்லவா அந்த நிலை தான் பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்தது. (அல்லது இருந்திருக்க வேண்டும்).
அதவாது சிந்தனையற்ற ஒரு நிலை...வெளிச்சமும் அல்லாத இருளும் இல்லாத ஒரு நிலை.
அந்த நிலை எந்த வண்ணத்தில் இருந்தது என்று அறிய வேண்டுமா? இருளான ஒரு அறையில் உங்கள் கண்களை மூடி பாருங்கள் அந்த நிறத்தில் தான் உலகம் உருவாவதற்கு முன்பு இருந்தது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்று பார்த்தாயிற்று அடுத்த பதிவில் பிரபஞ்சம் உருவாகும்  பொழுது  எந்த வண்ணத்தில் இருந்தது என்று பார்ப்போம்.
இதனுடன்  தொடர்புடைய  சில  பதிவுகள்  தங்கள்  பார்வைக்கு 

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா?


பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா? பகுதி 2


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

லோக்பால் தேவையா? அன்ன ஹசாரே செய்வது சரியா தவறா?

என் சந்தேங்கத்திற்கு விடை தெரிந்தால் தீர்த்து வைப்பீர்களா?

அன்ன ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன் வைத்துள்ளார். இதற்க்கு மக்களின் ஆதரவு அமோகம். இல்லாமல்  போகுமா, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று இன்று. நேற்று மாடுத்தீவன ஊழல், பீரங்கி ஊழல். அட ஆயிரக்கணக்கான  ஊழல்கள்.  இது மட்டுமா அரசாங்க அதிகாரிகள் தங்களது வேலையை   செய்யவே  லஞ்சம் கேட்க்கிறார்கள்.

மக்களுக்காக மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் சரி அரசாங்க அதிகாரிகளும் சரி ஊழல் செய்வதிலும் லஞ்சம் வாங்குவதிலேயும்  தான் குறியாக உள்ளனர். இவர்களால் தினம் தினம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...பாதிக்கபடுகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் இவர்கள் மேல் கோபத்தில் உள்ளது என்பதே உண்மை. ஆதலால் தான் மக்களின் ஒரு பகுதி   இன்று போராட்டத்தில் குதித்துள்ளது.

அன்ன ஹசாரே மற்றும் இந்த லோக்பால் மசோதா  மூலம் ஊழலை முற்றிலும்  ஒழித்து விட முடியும்  என ஒரு பகுதி மக்கள் நம்புகின்றனர்.  ஆனால் இது சாத்தியமா என்றால் எனக்கு சந்தேகமாக உள்ளது.
லோக்பால் மசோதாவில் பல நல்ல அம்சங்கள் உள்ளது. எனக்கு அதில் ரொம்ப பிடித்தது ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது மட்டுமல்லாது  அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட  வேண்டும் என்பதுதான்.

எத்தனையோ சிறப்பம்சங்கள் இருப்பினும் லோக்பலின் ஒரு அம்சத்தில் எனக்கு மிகப்பெரிய குறை இருப்பதாக உணர்கிறேன். நான் எந்த அம்சத்தில் குறை இருப்பதாக கருதுகிறேனோ அதுதான் லோக்பாலின் ஆணிவேரே.
அந்த ஒரு குறையினால் லோக்பால் தேவையா? என்ற சந்தேகமே என்னுள் எழுந்துள்ளது. என் சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த சந்தேகங்கள்  சிறுபிள்ளைத்தனமானது  என்று கூட உங்களுக்கு தோன்றலாம். உங்கள் விடைய சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்தினை ஏற்று நானும் இந்த போராட்டத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன். (எப்பொழுதும் ஊழலுக்கு எதிராக மானசீக குரல் கொடுப்பவன் தான் நான்)

சரி..எந்த அம்சத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது என்றால் அது  லோக்பாலின் குழுவைபற்றியது தான் அந்த சந்தேகம்.

ஊழல் குற்றச்சாட்டை   விசாரிக்கப்போவது   யார் என்றால் ஒரு குழு. இந்த குழுவில் இருக்க போகிறவர்களும் மனிதர்கள் தான் மகான்கள் அல்ல.
உங்களுக்கே தெரியும் நாட்டில் எத்தனை உத்தமர்கள் உள்ளனர் என்று. இந்தியா முழுவுதும் லோக்பால் மசோதாவை கொண்டுவர எத்தனை உறுப்பினர்கள் வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள். எனக்கு தெரிந்து ஒரு மாநிலத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிக மிக குறைந்த பட்சம் முன்னூற்று  ஐம்பதிற்கு மேற்ப்பட்ட உத்தம உறுப்பினர்கள் தேவை.

இத்தனை உத்தமர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உத்தமர்கள் மட்டும்  தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா?
இந்த உறுப்பினர்களின் சேர்க்கையில் அரசியல்வாதிகளின் மறைமுக தலையீடு இல்லாமல் இருக்கும் என்று கூற முடியுமா?
இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு  சம்பளம் உண்டா எவ்வளவு? இதை யார் கொடுப்பார்கள்? 
இலவசமாக எத்தனை நாள் அவர்கள் கடமையாற்ற  முடியும்?
இந்த உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்று எதை வைத்து நம்புவது?

ஏற்க்கனவே சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் ஊழல் செய்கிறார்கள். இவர்களை கண்காணிக்க தண்டனை தர லோக்பால் கொண்டு வந்தால் நாளை லோக்பால் உறுப்பினர்களை யார் கண்காணிப்பது தண்டனை தரப்போவது யார்?

இருக்கின்ற சட்டங்களையே இன்னும் கடுமை படுத்த முடியாதா? ஒளிவு மறைவற்ற விசரானையை கொண்டுவர முடியாதா? புகார் தருபவர்களுக்கு  தைரியத்தையும்  பாதுகாப்பையும் அளிக்கும் சட்டத்தை கொண்டுவர முடியாதா?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். எப்படியாவது சம்பாதித்தால்  போதும் என்ற மனநிலைதான் இன்று பெரும்பாலான மக்களிடம் உள்ளது. நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையை பேச வேண்டும். என்று என்னும் மக்கள் அரிதிலும் அரிது.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் தான் அழிவு என்று எத்தனை தடவை சொன்னாலும் கதை என்று சொல்வதிலேய குறியாய் இருந்து கொண்டு கருத்தினை கோட்டை விட்டு விட்டோம். பகுத்தறிவு பேசியவர்கள் பணத்தை சுருட்டியதுதான்  மிச்சம். காவி கட்டியவனும் சளைத்தவன் இல்லை என்று இன்று சுருட்டிக்கொள்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் நேர்மையாக வாழவேண்டும். உண்மையை பேசவேண்டும்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்
என்றார் வள்ளுவர்.
அதாவது உண்மை பேசினால் தான் உள்ளம் தூயமையாகுமாம். உண்மையும் உயிர்களிடத்தில் அன்பும் என்று வருகின்றதோ அன்றுதான் அனைத்திற்கும் முடிவு பிறக்கும். அதுவரை எந்த பாலும் ஒன்றும் செய்ய முடியாது.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

சோதனைச்சாலையில் ஆன்மீக அனுபவங்களை பெற முடியுமா?

தியானத்தின் மூலம் மட்டும் தான் ஆன்மீக அனுபவத்தை பெற முடியுமா? வேறு வழிகள் கிடையாதா என்றால்  வேறு வழியும் உண்டு என்பதே பதில்.

உண்மையை சொல்லவேண்டுமானால் தியானத்தால் எதை எதையெல்லாம் சாதிக்க முடியுமோ அதை எல்லாம் வேறு வழிகளிலும் அடையலாம்.
என்னுடைய

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?


என்ற பதிவில் மதுவின் மூலம் அடையும் சில அனுபவங்களை தியானத்தின் மூலம் பெறலாம் என்று கூறியிருந்தேன்.அதுபோலவே பல ஆன்மீக அனுபவங்களையும்  தியானம் மூலம் மட்டும் அல்லாமல் சோதனை சாலையிலும்  பெறலாம் . ஆனால் அதற்கான இன்றைய அறிவியலின் வளச்சி போதாது.

மது அருந்தினால் எப்படி தீமை உண்டாகிறதோ அவ்வாறே சோதனை சாலை மூலம் அடையும் ஆன்மீக அனுபவங்களும் முதலில் தீமையையே உண்டாக்கும். அது முழுமையான அனுபவமாகவும் இருக்க முடியாது.  அறிவியலால் முழுமையான ஆன்மீகத்தை தர முடியாதா என்றால். தரமுடியலாம் ஆனால் அதற்க்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் நூற்றாண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.

எப்பொழுது அறிவியல் அகத்தவத்தினால் அடையமுடியும் அனுபவங்களை முழுமையாக சோதனைச்சாலையில் அடையவைக்கின்றதோ அதுவே அறிவியலின் உச்சம்.

அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்.


நேற்று  வெறும்   அகம்  (ஆன்மீகம்). நாளை  அகமும்  புறமும் (ஆன்மீகமும் அறிவியலும்)  இணையலாம் ....இணையும்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?


இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை.

அந்த ஒற்றுமை சொல்வது மிகப்பெரிய மிக சூட்சுமமான உண்மை. இது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

அது என்ன ஒற்றுமை?
அதுதான் அ உ ம். இது அனைத்து மதங்களிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இது இல்லையேல் உலகமும் இல்லை உயிரும் இல்லை
என்பது சிலரின் கருத்து. இது இந்து மதத்தில் ஓம் என்று அழைக்கப்படுகின்றது.
இது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தில் ஆமின் என்றழைக்கபடுகின்றது.

இந்த மதத்தில் ஓம் என்பது எதற்கும் முதிலில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இதேபோல் கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் ஆமின் என்பது எதற்கும் முடிவில் உபயோகப்படுத்தபடுகின்றது.

இந்த ஓம் என்பதன் முக்கியத்துவம் இந்து மதத்தில்  உள்ள பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் ஆமின் என்பது எப்படி ஏன் வந்தது என்பது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினருக்கு தெரியமா எனபது சந்தேகமே.

கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில் அவர்கள் பைபிள் மற்றும் குரானை  தாண்டி சிந்திப்பதே இல்லை. அப்படி சிந்தித்தாலும் அதை தன் மதத்திற்கு மட்டும் எப்படி சாதகமாக்குவதே என்று சிந்திக்கின்றனர். இதை எப்படி மனித சமுதயாத்திற்கு சாதகமாக்குவது என்று சிந்திப்பதே இல்லை.


அ உ ம் என்பது மிகப்பெரிய ரகசியம் பொருந்திய உண்மையான  ஒற்றுமை. இதை ஏன் அனைத்து மதங்களும் பயன் படுத்த வேண்டும்?
அனைத்தின் மூலம் இதுதான் எனபதை அவர்களின் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர் என்பதையே காட்டுகின்றது.

மூலமே ஒன்றாக இருக்கும் பொழுது
நான் வேறு நீ வேறு என்பது எப்படி சாத்தியம்?
என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு என்பது மூடத்தனம் அல்லவா?
அனைத்து மக்களும் ஒருவனின் படைப்பே எனும் பொழுது....
என் சமூகம் உனக்கு முன்பாக  செல்லும் எனபது மூடத்தனத்தின் உச்சம் அல்லவா?

சிந்தியுங்கள் மக்களே...சிந்தியுங்கள்.

இது சம்பந்தமான இரு  பதிவுகள் உங்கள் பார்வைக்கு 

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

 


திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

இஸ்லாமுக்கும் இந்து மதம் என்று அழைக்கபடுகின்ற மதத்திற்கும் இப்படி ஒரு  மிகப்பெரிய  ஒற்றுமை இருக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

இது  எத்தனை பேருக்கு தெரியும் என்பதும்  எனக்கு  தெரியாது. இந்த ஒற்றுமை எதை காட்டுகிறது என்றால்,உலகில் தற்போதுள்ள  அனைத்து மதங்களுக்கும் மூலம் பண்டைய இந்தியாவாகத் தான் இருக்கும் என்ற என் என்னத்தை உறுதி செய்வது போலவே உள்ளது.  இந்திய தத்துவங்களின் தாக்கத்திலிருந்து எந்த ஒரு மதமும் தப்பியதாக எனக்கு  தெரியவில்லை.

சரி இசுலாமுக்கும் இந்திய மதத்திற்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கின்றது?

என்னைப்பொருத்த வரை இசுலாமின் ஆணி வேறே இந்து மதம் தான்.
இசுலாமியர்கள் ஐந்து வேலை தொழுகை செய்வார்கள் என்பது பலருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இந்த ஐந்து வேலை தொழுகை எனபது இந்து மத கோயில்களில் செய்யப்படும் ஆறு கால பூஜையை ஒட்டியே அமைந்துள்ளது.

அதாவது இந்து கோயில்களில் ஒரு நாளைக்கு ஆறு வேளை பூஜை செய்வார்கள். இப்படி செய்ய காரணம்  ஆறுவேளையும்(அல்லது நாள் முழுவதும் ) இறைவனை நினைக்க வேண்டும் அவன் மேல் பக்தி செலுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம். இதைப்போலத்தான் இசுலாமியர்களும் ஐந்து வேளை தொழுகை செய்கின்றனர்.

இந்த ஐந்து வேளை தொழுகைக்கும் ஆணி வேர் இந்திய கோயில்களில் செய்யப்படும் ஆறுகால பூ செய் ,(பூசை,பூஜை) ஆகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.  இது ஏதேச்சையாக அமைந்ததா அல்லது இந்து மதத்தின் தாக்கம் தான் இதுவா என்பதெல்லாம் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே வெளிச்சம்.

நீங்கள் இப்பொழுது கேட்கலாம் ஏன் இசுலாமியர்கள்  ஐந்து  வேளை மட்டும் தொழுகை செய்கிறார்கள் ஏன் அவர்கள் ஆறாவது வேளை தொழுகை செய்வதில்லை என்று.

ஆறு வேளை தொழுகை செய்வது முக்கியம் என்று நபிக்கும் நன்றாக தெரிந்தே இருக்கின்றது. நபி அவர்களும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் தினமும் ஆறு வேளை தொழுகை செய்வார்கள். இருப்பினும் அவர் ஏன் அதை அனைத்து இசுலாமிய  மக்களுக்கும் பொதுவாக வைக்க வில்லை  எனபது தெரியவில்லை.

இந்து மதத்திலும் ஆறு கால பூ செய், இசுலாமியத்திலும் ஆறு கால தொழுகை இது பக்தி மார்க்கத்துக்கு மட்டுமா என்று கூட தோன்றலாம். உண்மையில் இது ஆன்மீக, யோக  மார்க்கத்துக்கும் பொருந்தும்.

வடலூர் வள்ளலார் அவர்களும்  ஒருவன் ஆறுவேளை தியானம் செய்யவேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆறுவேளை என்பது ஒருவேளை சீக்கிரம் ஆன்ம முன்னேற்றத்தை அளிக்கவள்ளதாக இருக்கலாம்.

இப்படி இந்து, இசுலாமிய மதங்கள் மிக ஒற்றுமையான கொள்கைகளை கொண்டுள்ள பொழுது (சில )இசுலாமிய இந்து மக்கள் தங்களுக்குள்  வெறுப்புடன் இருப்பது அறிவீனம் இல்லையா?

இறைவன் ஒருவனே என்று கூறிக்கொண்டு அவன் என் மதத்தை சார்ந்தவன் என்பது எவ்வளவு  மோசமான செயல்?.
இறைவன்  அனைத்து  உயிர்களுக்கும் பொதுவானவன். அவன் என்னுடைய  மதத்தை தழுவினால் மட்டும் தான் நன்மை செய்வான் எனபது சரியா? 

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்றுணர்ந்த பின்னும்

என் குலமே உயர்ந்தது என்பது எப்படி சரியாகும்?
 
சிந்தியுங்கள் மக்களே..... சிறப்பாக வாழுங்கள்



Related Posts Plugin for WordPress, Blogger...